செல்விகளின் கதை!

By சமஸ்

பத்து நாள் மழை அன்றைக்குத்தான் கொஞ்சம் விட்டிருந்தது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் சேறும் சகதியுமாக இருக்கின்றன. செல்லும் வழியெல்லாம் வீட்டு வாசல்களில் மக்கள் சாமான்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அடுப்பாங்கரைச் சாமான்கள், டிவி, ரேடியோ முதலிய எலெக்ட்ரானிக் சாமான்கள், பிள்ளைகளின் புத்தகங்கள், சான்றிதழ்கள்… எல்லாவற்றிலும் சேறு அப்பிக்கொண்டிருந்தது.

ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி சாலையோரமாகச் சென்றுகொண்டிருந்த விவசாயியிடம் விசாரித்தோம்.

“ஏங்க பெரியகாட்டுப்பாளையத்துக்கு எப்படிப் போகணும்?”

“பெரியகாட்டுப்பாளையத்துல எங்கெ போவணும், யாரு வூடு?”

சொல்கிறோம். வழிகாட்டுகிறார்.

அவர் சொன்ன இடத்தில் வண்டியை நிறுத்தினோம். அது ஒரு காலனி. பக்கத்திலேயே சிற்றாறு. ஆற்றுக்கு இந்தப் பக்கத்தில் காலனி இருந்தது. நாங்கள் பார்க்க வேண்டிய வீடு ஆற்றுக்கு அந்தப் பக்கத்தில் இருப்பதாக காலனிக்காரர்கள் சொன்னார்கள். அன்றைக்கு என்ன நடந்தது என்பதை சூர்யா என்ற பெண் சொன்னார்.

“தீவாளிக்கு முந்தின நாள்ண்ணே. காலைலேர்ந்தே நல்ல மழை. கொஞ்ச நேரத்துலேயே ஆறு நொம்பிடுச்சு. தண்ணி சரசரன்னு வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சிடுச்சு. கொஞ்சம் பெருமழ பெஞ்சாலே இங்கெ இந்தக் கஷ்டம் வந்துரும்ணே. முட்டிக்கால் அளவு தண்ணி வந்துச்சு பார்த்துக்குங்க, நாங்கல்லாம் வீட்டைப் பூட்டிட்டுக் கெளம்பிட்டோம். புள்ளைங்களைத் தூக்கிக்கிட்டு ஓடினோம். கொஞ்ச நாழிக்கெல்லாம் தண்ணி தெரண்டு வீட்டுக்கு மேல போயிருக்குண்ணே.”

ஓடிப்போய் வீட்டின் சுவரில் தண்ணீர் நின்ற தடத்தைக் காட்டுகிறார். வீட்டின் உச்சி வரை ஊறியிருக்கிறது. வீட்டின் கதவைத் திறந்து காட்டுகிறார். ஒரு பக்கம் இடிந்திருக்க, உள்ளே எல்லாம் சேறாக சகல பொருட்களும் நாசமாகி இருக்கின்றன. அழுகிறார்.

“எல்லாம் போச்சுண்ணே. வீட்டுச் சாமான், அரசாங்கம் கொடுத்த டிவி, மிக்ஸி, புள்ளைங்களோட புஸ்தகம் எல்லாம் போச்சு…”

“நா ஒரு முட்டாச்சிறுக்கி. நீங்க கேட்ட கதைய வுட்டுட்டு, எங் கதைய சொல்லிப் புலம்புறேன் பாருங்க.”

புடவைத் தலைப்பால் அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொள்பவர், ஆற்றுக்கு அந்தப் பக்கத்தைக் காட்டுகிறார்.

“அதோ, மரம் தெரியுது பார்த்தீங்களா, அதாம் செல்வி வூடு. எப்பவும் அந்தப் பக்கம் கரை ஒடையாதுண்ணே. ஆத்துல தூரே வாரலியா, ஆறும் ஊரும் ஒண்ணோட மண்ணா கெடந்துச்சா, அந்தப் பக்கம் ஒடைச்சுக்கிச்சு. அன்னைக்கின்னு பாத்து, பத்து உசுரு அங்கெ இருந்துச்சு. எல்லாம் போச்சுண்ணே…”

மீண்டும் அழுகிறார்.

“நாலு புள்ளைங்கண்ணே சிவா, மாரிமுத்து, பவானி, வீரமுத்துன்னு. சின்னச் சின்ன புள்ளைங்க. சிவா ஏழாவது படிச்சான், மாரிமுத்து ஆறாவது படிச்சான், பவானி, வீரமுத்து ரெண்டும் பொடுசுங்க. செல்வியோட சேர்த்து எல்லாம் போச்சு. அன்னைக்கு அதோட நாத்தனாவும் இங்கெதான் இருந்துச்சு. அதும் பேரும் செல்விதான். அதோட புள்ள தினேஷுன்னு. அப்புறம் ரெண்டு பேர் விருந்தாளியா வந்திருந்தாங்க. எல்லாம் போய்ட்டாங்க. ஒரு குடும்பமே நாசமாப்போச்சு.”

செல்வியின் வீட்டை நோக்கி அழைத்துச் செல்கிறார். “புள்ளைங்க மேல அப்படி உசுரா இருப்பாண்ணே. எப்படியாச்சும் கஷ்டப்பட்டு நல்லாப் படிக்க வெச்சிரணும்; இந்தக் கஷ்ட நெலைமையெல்லாம் நம்மளோட போயிரணும்னு நாளெல்லாம் உழைப்பா மவராசி. முந்திரிக்கொட்டை உடைக்கிறதுதாம் எங்களுக்குத் தெரிந்த ஒரே பொழைப்பு. கையெல்லாம் காய்ச்சிக்கெடக்கும். இதாம்ணே அவங்க இருந்த வூடு...”

சூர்யா காட்டிய இடத்தில் ஒரு வீடு இருந்ததற்கான கட்டுமானங்கள் எதுவுமே இல்லை. கிட்டத்தட்ட அது ஒரு கொல்லைபோல இருந்தது. தூரத்தில் கொஞ்சம் இற்றுப்போன கீற்றுகள். ஒரு மூலையில் துணிகள். ஆங்காங்கே சில தட்டுமுட்டுச் சாமான்கள் சிதறிக் கிடந்தன. ஆற்றை ஒட்டிய கொல்லையின் மூலையில் ஒரு இரும்பு பீரோ. வெள்ளத்தின் வேகத்துக்கும் நடந்த கொடூரங்களுக்கும் ஒரு சாட்சியம்போலச் சிதைந்து கிடந்தது.

ஒரு பெண் சூர்யாவைத் தேடி வருகிறார்.

“ஏடி, செல்வியோட பொணத்தை எடுக்க ஆள் வந்துருக் காங்கடி.”

சம்பவம் நடந்து அன்றைக்குப் பத்தாவது நாள். வீட்டிலிருந்து அரை கி.மீ. தூரத்துக்குள்ளாகத்தான் செல்வியின் பிணம் ஒதுங்கியிருந்தது. ஆனால், அதைத் தேட ஆள் இல்லை. அது சரி, தேடும் செல்வி யார்?

முள் மரத்தின் மேலே தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். பென்சிலில் கொஞ்சம் பால்பாயின்ட் பேனாவால் கொஞ்சம் என்று வரையப்பட்டிருந்த ஓவியங்கள். அதில் பாதி அழிந்து, பாதி சிதைந்து இருந்தன. வீடுகள், மரங்கள், ஆறு, மலை, கடல், கார், ரயில் என ஒரு குழந்தையின் கனவுகளைச் சுமந்திருந்தது அந்த நோட்டுப் புத்தகம். வரைந்தது யார் என்று தெரியவில்லை.

ஒரு குடும்பம். எத்தனை உயிர்கள்! எத்தனை கனவுகள்! எத்தனை உலகங்கள்! அரசாங்கத்தின் நோட்டுப் புத்தகங்களைப் பொறுத்த அளவில் ஒவ்வொரு உயிரும் ஒரு உருப்படி. ஒவ்வொரு உயிரும் ஒரு எண்ணிக்கை. தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. “கடலூரில் மீண்டும் கடுமையான மழை தொடங்கியிருக்கிறது. பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்திருக்கிறது...”

எத்தனை உயிர்கள்! எத்தனை கனவுகள்! எத்தனை உலகங்கள்! அரசாங்கத்தின் நோட்டுப் புத்தகங்களைப் பொறுத்த அளவில் ஒவ்வொரு உயிரும் ஒரு உருப்படி. ஒவ்வொரு உயிரும் ஒரு எண்ணிக்கை!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

வெளியே காய வைக்கப்பட்டுள்ள, அரசு தந்த பொருட்கள்.

வெள்ளத்தில் உருக்குலைந்த பீரோ

சூர்யா

வெள்ளம் அடித்துச் சென்ற செல்வியின் வீட்டின் எச்சம்

படங்கள் : இயக்குநர் தங்கர் பச்சான், சதீஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்