வங்கத் தேர்தலையொட்டி திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டெரெக் ஓ’பிரையனுடனான உரையாடல் இது. புத்துயிர் பெற்ற பாஜக, திரிணமூல் காங்கிரஸ் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அந்தக் கட்சியிலிருந்து முக்கியமான தலைவர்கள் பாஜகவுக்கு இடம்பெயர்ந்தது போன்றவற்றைப் பற்றி அவர் பேசியதிலிருந்து...
கடந்த முறை வங்கத் தேர்தல் ஏழு கட்டமாகத்தானே நடந்தது. அப்படியிருக்க, இந்த முறை எட்டுக் கட்டத் தேர்தலை ஏன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது?
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து எந்த மாநிலத்திலாவது எட்டுக் கட்டத் தேர்தல் நடைபெற்றிருக்கிறதா? லாரி லாரியாகப் பணத்தை வைத்திருக்கும் கட்சியானது 33 நாட்கள் நீடிக்கும் தேர்தலை விரும்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்! எல்லா நிறுவனங்களும் பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நேர்மை என்பதெல்லாம் அடிபணிந்துவிட்டது. இந்தத் தேர்தல் திரிணமூல் காங்கிரஸுக்கான அல்லது மம்தா பானர்ஜிக்கான போராட்டம் மட்டுல்ல; இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்துக்கான போராட்டம். அரசமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தற்போது உறுதியுடன் எதிர்த்து நின்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
எப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நாங்கள் இருக்கிறோம் என்பதைப் பாருங்கள். 33 நாட்களில், எட்டுக் கட்டமாக நடைபெறும் தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் 24 பேர், ஆறு மாநிலங்களின் முதல்வர்கள், பாஜகவுக்கு உடந்தையாக இருக்கும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு, கூடுதலாகப் பணபலம், அரசு இயந்திரம், ஒன்றிய அரசுக்குப் பெரிதும் அடிபணிந்திருக்கும் ஊடகங்கள். இதற்கு எதிர்ப் பக்கத்தில் எங்களிடம் என்ன இருக்கிறது? வங்க மக்களுக்காக 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கும் ஒரு பெண்மணி மட்டும்தான் எங்களிடம் இருக்கிறார். முதல்வராக ஆவதற்கு முன்பே மூன்று தசாப்தங்களாக மக்கள் பிரச்சினைகளுக்காகப் பாடுபட்டவர் அவர். பணமதிப்பு நீக்கத்தைப் பேரழிவு என்று முதன்முதலில் அழைத்தவர் யார்? நில உரிமைகளுக்காகவும் விவசாயிகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடியவர் யார்? அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், உத்தர பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருக்கும்போது, அதன் முதல்வர் வங்கத்தில் பிரச்சாரம் செய்வது ஏன்? இந்த நாட்டைப் பிளவுபடுத்த பாஜக முயன்றுகொண்டிருக்கிறது. அவர்களை நாம் தடுத்து நிறுத்தவில்லையென்றால் அரசமைப்புச் சட்டத்தையே மாற்றி எழுதிவிடுவார்கள்.
இந்தத் தேர்தலைச் சமனற்ற ஒரு போர் என்றும், பணபலம் உள்ளிட்டவற்றில் திரிணமூல் காங்கிரஸைவிட பாஜக மேலோங்கியிருக்கிறது என்றும் கூறுகிறீர்கள். அதே நேரத்தில், உங்கள் பிரச்சார மேலாளர் பிரஷாந்த் கிஷோர் வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் என்று கூறுகிறார். இதுபோன்ற முடிவுகளுக்கு நீங்கள் எப்படி வருகிறீர்கள்?
வங்கத்தின் மக்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். வங்கத்துக்கு ‘சுற்றுலா வரும் பாஜக குழு’வுக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான போர் இது. அதுதான் மக்கள் முன்னுள்ள தெரிவு. எங்கள் எதிர்த் தரப்பில் உள்ளவர்களில் அரை டஜன் பேர் முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவினருக்கு வங்கத்தைப் பற்றி ஏதும் தெரியவில்லை. ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் பிறந்தார் என்கிறார்கள்; பிர்ஸா முண்டாவின் சிலை என்று நினைத்து வேறொருவர் சிலைக்கு மாலையிடுகிறார்கள்; சமூகச் சீர்திருத்தவாதி வித்யாசாகரின் நினைவை அவர்கள் களங்கப்படுத்துகிறார்கள். வங்கத்துக்கு இப்படிப்பட்ட ‘அந்நியர்கள்’ தேவை இல்லை. இங்கே வந்து வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் எல்லோரையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். நீங்கள் ஷர்மாவாகவோ அகமதுவாகவோ குப்தாவாகவோ டி’ஸோஸாவாகவோ மேனனாகவோ ராயாகவோ இருக்கலாம். நீங்களெல்லாம் ‘அந்நியர்கள்’ இல்லை. தேர்தல்களின்போது பொய் வாக்குறுதிகளை விற்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும், ரத்தம் உறிஞ்சுபவர்கள்தான் ‘அந்நியர்கள்’. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், சமூகத்தைப் பிளவுபடுத்துவார்கள், 2002-ல் செய்ததைப் போல கலவரங்களை ஏற்படுத்துவார்கள், இந்தியா என்ற கருத்தாக்கத்தை மாற்றி எழுதுவார்கள்.
உண்மை என்னவென்றால், மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் இங்கே மம்தா பானர்ஜி ஆற்றியிருக்கும் அசாதாரணமான பணிக்கு இணையாக அவர்களிடம் சொல்வதற்கு எதுவுமே இல்லை என்பதே. வெற்றுப் பேச்சல்ல, கண்ணால் கண்டுணரக்கூடிய தாக்கம். கூடவே நான் ஒன்று கேட்கிறேன், அவர்களின் முதல்வர் வேட்பாளர் யார்? கடைசியாக நான் பார்வையிட்டபோது அவர்களின் வேட்பாளர் பட்டியலில் மோடியின் பெயரும் அமித் ஷாவின் பெயரும் இல்லை.
கடந்த தசாப்தத்தில் அளித்திருக்கும் நல்ல நிர்வாகம் மம்தா பானர்ஜிக்கு மூன்றாவது முறையாக ஆட்சி வாய்ப்பைக் கொடுக்கும். எங்கள் முழக்கம் எளிதானது - வங்கத்துக்கு அதன் சொந்த மகள்தான் வேண்டும்.
தேர்தலுக்கு முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் அரசியல்ரீதியிலான வன்முறையை மாநிலத்தில் கட்டவிழ்த்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறதே. அந்தக் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
அபத்தம். மோடி - அமித் ஷாவின் பிரச்சார பீரங்கிகள் தங்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கடந்த ஆறு மாதங்களாகக் கட்டவிழ்த்துவந்த வடிகட்டிய பொய்தான் இது. அச்சுறுத்தல் மூலம் அவர்கள் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு அவர்கள் இந்தச் செய்திகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையான பத்திரிகையாளர்கள் இங்கு வந்து களத்திலிருந்து தகவல்களை மக்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டுமென்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சுகாதாரம், கல்வி, வேளாண்மை, வேலைவாய்ப்புகள், விளிம்புநிலையினருக்கான சமூகநலத் திட்டங்கள், பொருளாதாரம், அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை போன்ற உண்மையான பிரச்சினைகளைப் பற்றி எங்களுடன் விவாதிக்க பாஜகவுக்கு அழைப்புவிடுக்கிறேன்.
பாஜகவுக்கு வங்கத்தில் கதவு திறந்துவிட்டது திரிணமூல் காங்கிரஸ்தான் என்று இடதுசாரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்; ஏனெனில், திரிணமூலின் ஒட்டுமொத்தப் பிரச்சாரமும் பாஜகவைக் குறிவைத்தே இயங்குகிறது. ஆக, அவர்களுக்கு நீங்கள் உயரிய ஸ்தானத்தை வழங்கியிருக்கிறீர்கள் அல்லவா?
இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி வங்கத்தில் அரை டஜன் இடங்களில்கூட வெற்றிபெறாது. அவர்களும் வகுப்புவாத சக்திகளுடன் கைகோத்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், களத்தில் அவர்களுக்கும் பாஜகவுக்கும் சத்தமில்லாமல் ஓர் உடன்பாடு இருக்கிறது.
ஆனால், உங்கள் பிரச்சாரம் ஏன் பாஜகவை மையமிட்டே இயங்குகிறது?
எங்களுடைய பிரச்சாரம் மக்களை மையமிட்டே இயங்குகிறது - நல்ல நிர்வாகம், மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துதல், வங்கத்தைப் பற்றிய எங்கள் ஆழமான புரிதல்... இவையெல்லாம்தான் எங்கள் பிரச்சாரத்தின் மையம். ஆனால், வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக இருக்கப்போகிறது என்பது உண்மைதான். ஆகவே அவர்களை, மற்ற மாநிலங்களில் அவர்களின் செயல்பாட்டை நாங்கள் அம்பலப்படுத்தியாக வேண்டும். வேறு யாரை நாங்கள் தாக்கிப் பிரச்சாரம் செய்வது? அதிமுகவையா? தேசியவாத காங்கிரஸ் கட்சியையா? ராஷ்ட்ரீய ஜனதா தளத்தையா?
இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து, மக்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்று பல பொதுக் கூட்டங்களில் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டிருக்கிறார். இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணியானது வாக்குகளைப் பிரித்துவிடும் என்று கவலைப்படுகிறீர்களா?
நாங்கள் நிச்சயம் நம்பிக்கையுடன் இருக்கிறோம். நேர்மறையான பிரச்சாரத்தையே நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். திரிணமூல் காங்கிரஸின் 3.0 என்ற புது வடிவத்தை மே 2 அன்று நாம் காணப்போகிறோம். நாங்கள் இந்தத் தேர்தலை வெல்வோமா இல்லையா என்பதல்ல கேள்வி, எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெல்லப்போகிறோம் என்பதுதான் கேள்வி, அதற்காகத்தான் நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதில் திரிணமூல் காங்கிரஸ் முனைப்பாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறதே?
ஆமாம், நாங்கள் திருப்திப்படுத்துகிறோம்தான். பெண்கள், குழந்தைகள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றோரைத் திருப்திப்படுத்துகிறோம்தான். மக்கள் இங்கு வர வேண்டும், உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், குக்கிராமங்களிலெல்லாம் சென்றுபார்க்க வேண்டும். பாஜகவின் சுற்றுலா குழு இங்கே வாக்கு வேட்டைக்காக வருகிறார்கள். நாங்களோ பத்து ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.
திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குப் பலரும் கும்பல் கும்பலாக இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தினேஷ் திரிவேதி சென்றிருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியானது மம்தாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், ஒருசிலர்தான் அதை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?
மாமனிதர்கள் சித்தாந்தங்களைப் பற்றிப் பேசுவார்கள். நல்ல மனிதர்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவார்கள். அற்ப மனிதர்கள் பிறரைப் பற்றித்தான் பேசுவார்கள்.
© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago