உள்ளூர்க்காரர்களுக்கே வேலை என்பது சரியா?

By செய்திப்பிரிவு

ஹரியாணா அரசு சமீபத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது, அதன்படி நிறுவனங்கள் ஆட்களை வேலைக்கு எடுக்கும்போது பிற மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிப் பதற்கான மையம் (சி.எம்.ஐ.ஈ.) அளித்த தரவுகள்படி வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்தியாவிலேயே ஹரியாணா மாநிலத்தில்தான் அதிகம். ஹரியாணாவில் மலைக்க வைக்கும் அளவில் 80% பெண்கள் வேலைவாய்ப்பில்லாமல் திண்டாடுகிறார்கள். அங்கே உள்ள பட்டதாரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல்தான் இருக்கிறார்கள். ஹரியாணாவில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாகக் காணப்படுகிறது.

பல காரணிகள்

ஹரியாணாவில் உள்ள 1.80 கோடி வாக்காளர்களில் 1.10 கோடி பேருக்கு நிரந்தர வேலை இல்லை. இதுபோன்று பெருமளவிலானோர் வேலையில்லாமல் இருக்கும்போது சமூகத்தில் புரட்சிகளும் அரசியல்ரீதியிலான கிளர்ச்சிகளும் தவிர்க்கவியலாத வகையில் ஏற்படும் என்பதை உலக வரலாறு நம்மை எச்சரிக்கிறது. ஆகவே, இருக்கும் ஒருசில வேலைகளையும் உள்ளூர் ஆட்களுக்கே ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹரியாணா அரசு ஒதுக்கியிருப்பது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியது.

இந்தப் பிரச்சினை ஹரியாணாவுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அதைப் போன்றே, ஜார்க்கண்ட்வாசிகளுக்கு வேலைகளில் முன்னுரிமை தரும் சட்டமொன்றுக்கு ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் திமுகவும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை தரப்போவதாகத் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. வேலையில்லாமல் இருக்கும் தங்கள் மக்களின் நலனைக் காப்பதற்காகப் பெரும்பாலான மாநிலங்கள் பூர்விகவியம் என்ற சாகசத்தில் இறங்கியிருக்கின்றன.

எதிர்பார்த்தபடியே இது பொருளியர்களாலும் அரசியல் விமர்சகர்களாலும் விமர்சிக்கப் பட்டிருக்கிறது. தாராளப் பொருளாதாரம் என்ற அவர்களின் தாராள சித்தாந்தத்துக்கே எதிராக இருப்பதால், இந்த நடவடிக்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள். ‘நிறைய வேலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டுமேயொழிய, இருக்கும் வேலைகளைச் சிலருக்கு மட்டும் ஒதுக்குவதில் கவனம் செலுத்தக் கூடாது’ என்பது வழக்கமாகச் சொல்லப்படுவது. ஆனால், அது தவறு. புதிய வேலைகளை உருவாக்குவது முற்றிலும் மாநில அரசுகளின் கையில் இல்லை. இதில் பல்வேறு காரணிகளின் சிக்கலான ஊடாட்டம் அடங்கியிருக்கிறது.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது பெரிய பொருளாதாரச் செயல்பாட்டின் விளைவாகும். இந்தியாவின் மாநிலமொன்றின் முதல்வர்களுக்குப் பொருளாதாரத்தின் மீது குறிப்பிட்ட அளவுக்குத்தான் கட்டுப்பாடு இருக்கிறது.அவர்களால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய முதலீடுகளையும் தொழில்களையும் ஈர்ப்பதில் ஒரு வரன்முறை இருக்கிறது.

முக்கியக் காரணிகள்

அதிலும் ஜி.எஸ்.டி.யின் அறிமுகத்துக்குப் பிறகு, இந்தியாவிலுள்ள மாநில அரசுகள் தங்கள் பொருளாதாரச் சுதந்திரத்தை இழந்துவிட்டன; தொழில்களுக்கு வரிச் சலுகை அளிப்பதற்கான அதிகாரங்களும் அவற்றுக்குக் கிடையாது. தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான நில வசதிகளும் அடிப்படைக் கட்டுமானங்களும் மாநில அரசுகளிடம் இருந்தாலும் தொழில்முறைப் பணியாளர்கள் உடனே கிடைப்பதிலோ தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் விதத்தில் வரிச் சலுகைகள் வழங்குவதிலோ மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அமெரிக்காவில் மாநிலங்கள் தங்கள் பிரதேசத்தில் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக வரிச் சலுகைகளையும் இடங்களையும் அளித்து, தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இதுபோன்ற போட்டி நடைபெறுவதால் பணக்கார மாநிலங்கள் மேலும் பணக்கார மாநிலங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் வறிய மாநிலங்கள் மேலும் வறிய மாநிலங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினையை நான் ‘3-3-3’ விளைவு என்று முன்பு ஒரு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்தியாவின் மூன்று பெரும் பணக்கார மாநிலங்கள் (மஹாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடகம்) மூன்று வறிய மாநிலங்களைவிட (பிஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்) தனிநபர் வருமானத்தில் மும்மடங்கு செல்வ வளம் கொண்டதாக இருக்கின்றன. இந்த வேறுபாடு 1970-ல் 1.4 மடங்கு அதிகமாக இருந்தது. இந்தியாவின் பணக்கார மாநிலங்களுக்கும் வறிய மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர, குறைவதாக இல்லை. இதற்கு நவீனப் பொருளாதார வளர்ச்சியின் தாக்கம்தான் காரணம்.

துணை தேசியம்

பொருளாதாரத்தில் சமமான ஆடுகளம் இல்லாமலும் பொருளாதாரச் சுதந்திரம் இல்லாமலும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் வேலைகளை உருவாக்குவதும் வளர்ந்துவரும் மாநிலங்களைப் பொறுத்தவரை மிகவும் கடினமாகும். இச்சூழலில், 5 ஆண்டுகள் ஆள்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் கோடிக்கணக்கான வாக்காளர் களைச் சின்ன விஷயங்களைக் கொண்டு திருப்திப்படுத்த முயன்று, பெரிய விஷயங்களைக் கோட்டைவிட்டுவிடுகின்றன.

ஆக, பல்வேறு மாநிலங்களின் பொருளாதார ஆடுகளங்கள் சமமாக்கப்பட்டு, மாநிலங்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் வழங்கப்படும்போதுதான் வேலைகள் நிறைய உருவாக்கப்பட்டு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

- பிரவீண் சக்கரவர்த்தி, அரசியல் பொருளியர், காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர்.

‘தி இந்து',

சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்