சேலத்தில் அரசை எதிர்பார்க்காமல் மக்களே நீர் நிலைகளை சீரமைத்த வரலாற்றைப் பார்த்தோம். உண்மையில் தொடக்கக் காலத்தில் ஏரிகள், குளங்கள் அனைத்தும் மக்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. இவை ஊர் பொது சொத்தாகக் கருதப்பட்டன. ‘மடையர்கள்’ என்றழைக்கப்பட்ட மடைக் குடும்பத்தினர் மட்டுமின்றி குளத்துப் பள்ளர்கள், குளக் காப்பாளர்கள், நீராணிக்கர்கள், நீர்க்கட்டியார், கரையார் ஆகியோரும் நீர் நிலைகளைப் பராமரித்தனர்.
வெள்ளக் காலங்களில் இந்த நீர் நிலைகளின் உடைப்புகளை அடைக்கச் சென்று உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நஷ்ட ஈடாக நிலம் கொடுக்கப்பட்டது. அதன் பெயர் உதிரப்பட்டி. கி.பி. 1302-ல் ராமநாதபுரம் மாவட்டம், கருங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டபோது அதை அடைக்கச் சென்ற பெருந்தேவப் பள்ளன் வெள்ளத்தில் இறந்தான். அவனது தியாகத்தைப் போற்றும் வகையில் அவனுக்கு நினைவுக் கல்லை நட்டு உதிரப்பட்டி நிலமும் அளிக்கப்பட்டது. இந்த விவரங்கள் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ‘தமிழ்நாட்டு வரலாறு பாண்டியர் பெருவேந்தர் காலம்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த நீர் நிலைகள் மக்கள் கையில் இருந்தவரை மட்டுமே நன்றாக இருந்தன. என்றைக்கு அவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதோ அன்றே அவற்றின் அழிவுக் காலம் தொடங்கியது. ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு தொடங்கியதும் அப்போதுதான்.
தொடக்கக் காலத்தில் குடும்பங்களுக்கு என தனி சொத்து இல்லை. நீர், நிலம், வனம் எல்லாம் சமூகத்துக்குப் பொதுவானது. பிறகு இது மெல்ல மாறியது. ஊர்களை உள்ளடக்கிய நாடுகள் உருவாயின. வேளாண்மை மரபினரிடம் இருந்த ஊர் நிர்வாகம் போர் மரபினருக்குச் சென்றது. படைத் தலைவர்கள் வரி வசூலித்தார்கள். இவர்களுக்கு விவசாயம், பாசனம், நீர் நிலை பராமரிப்பு பற்றித் தெரியாவிட்டாலும் நீர் நிலைகளின் அருமைகளை அறிந்திருந்தனர். புதிய நீர் நிலைகள் தொடர்ந்து உருவாக்கினார்கள். இது தவறிய இடங்களில் மக்கள் மன்னனிடம் முறையிட்டு முடிந்தவரை பாசன அமைப்புகளைப் பாதுகாத்தார்கள்.
பின்பு ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. நமது பாரம்பரியப் பராமரிப்பு முறைகளை ஒட்டு மொத்தமாக ஒழித்துக்கட்டியது அவர்கள்தான். தமிழகத்தில் ‘ரயத்துவாரி’ முறை அமல் படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு நில உரிமை அளிக்கப்பட்டது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், வனங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசு சொத்துகளாக மாற்றப்பட்டன. மலைகளில் வனங்கள் அழிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் மலைவாசஸ்தலங்களாகவும் தேயிலைத் தோட்டங்களாகவும் மாற்றப்பட்டன. மலைகளில் இருந்த நீர் வழித்தடங்கள் அழிந்துப்போயின. சமவெளிகளில் இருக்கும் நீர் நிலைகளுக்கான நீர்வரத்துக் குறைந்துப்போனது.
ஊருக்குள் நீர் நிலைகளைப் பராமரித்த மடையர்கள், பள்ளர்கள், நீராணிக்கர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். விவசாயிகள் விளை பொருளில் அவர்களுக்குப் பங்கு தரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. நீர் நிலைகளுக்கும் அவர்களுக்குமான உரிமை பறிக்கப்பட்டது. உயிரையே பறிகொடுத்ததுபோல துடித்தார்கள் அவர்கள். குளங்களையே குழந்தைகளாக பாவித்த சமூகம் பசியிலும் பஞ்சத்திலும் வாடியது. ஒருகட்டத்தில் வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைத்த வேலையைச் செய்யப் பழகிக்கொண்டன அந்தச் சமூகங்கள். தமிழகத்தின் நீர் நிலை சமூகங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்ட வரலாற்றுப் பிழை அரங்கேறியது அப்போதுதான்.
வருவாய் துறை உருவாக்கப்பட்டு ஏரிகள், குளங்கள் அந்தத் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்றன. அவற்றைப் பராமரிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு நமது பாரம்பரிய தொழில்நுட்பங்கள் புரியவில்லை. இதனால் ஏரிகளைப் பராமரிக்க ராணுவம் வந்தது. ராணுவப் பொறியாளர்களுக்கும் பிடிபடவில்லை நமது தொழில்நுட்பம். அவர்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏரிகள் வலுவிழந்தன. அடிக்கடி வெள்ளம் வந்தது. வறட்சி தலைதூக்கியது. 1850-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் இறந்தார்கள்.
நிலைமையை சமாளிக்க 1878-80ல் ஆங்கிலேய அரசு ஓர் ஆணையம் அமைத்தது. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் அரசு செப்பனிட வேண்டும். 200 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு கொண்ட ஏரிகளை அரசு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் குறைவான ஆயக்கட்டுகளைக் கொண்ட ஏரிகளை மக்களிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏரிகளைப் பராமரிக்க ஏரி மராமத்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொதுப் பணித்துறை உருவான வரலாறு இதுதான். இதன் நீட்சியாகவே இன்று 100 ஏக்கருக்கு அதிகமான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும் அதற்கும் குறைவான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் (மக்கள் பிரதிநிதிகள்) கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.
தொடர்ந்து 1858-ல் ‘சென்னை கட்டாய வேலையாட்கள் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்படி ஏரிகளைப் பராமரிப்பது உட்பட பாசனம் தொடர்பான அனைத்து வேலை களுக்கும் நிலம் வைத்திருப்பவர்கள் வேலையாட் களைக் கட்டாயமாக அனுப்ப வேண்டும். தவறியவர்களுக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய வேலையாட்களுக்கான கூலியில் இருமடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து 1901-ல் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
நாடு விடுதலை அடைந்தது. ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. அதிலும் அணை களைக் கட்டுவதற்கே முக்கியத்துவம் அளித்தார் கள். பாரம்பரிய ஏரிகள், குளங்கள் புறக்கணிக் கப்பட்டன. எரிபொருள் தேவைக்காக கருவேல முட்செடிகளை இறக்குமதி செய்தார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை ஏரிகள்தான். ஏனெனில் வற்றாத ஜீவ நதிகளைப் போன்று வற்றாத ஏரிகளும் உண்டு. 10 அடி ஆழத்துக்கும் அதிகம் கொண்ட ஏரிகளில் இயற்கையான ஊற்றுகள் இருந்தன. அவை கோடைக் காலங்களில் கொஞ்சமேனும் தண்ணீர் வைத்திருந்தன. அதுவும் வற்றினால் மக்கள் பள்ளம் பறித்து குடிநீர் எடுத்தார்கள். ஆனால், கருவேலம் முட்செடிகள் நிலத்தடி நீரை அதிவேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவை ரத்தத்தை உறிஞ்சுவதுபோல ஏரியின் நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சிவிட்டன. எதற்கும் பயனில்லாமல் போனது ஏரிகள். மக்களுக்கும் படிப்படியாக ஏரிகள் மீது பிடிப்பில்லாமல் போனது. ஒடுக்கப்பட்டது சமூகங்கள் மட்டுமில்லை, நீர் நிலைகளும்தான்!
(நீர் அடிக்கும்)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago