மேற்குலக வேளாண் மானியங்கள்

By செய்திப்பிரிவு

உலகில் எந்த நாட்டிலுமே வேளாண்மை என்பது பெரிதும் லாபகரமான தொழிலாக இல்லை. எனவே, அனைத்து வளர்ந்த நாடுகளுமே தங்கள் உழவர்களுக்குப் பெருமளவில் மானியம் அளித்து, அவர்கள் வேளாண்மையிலிருந்து வெளியேறிவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். உலகில் அனைத்து நாடுகளுமே, சமூகநலத் திட்டங்களின் ஒரு பகுதியாக, உணவு நுகர்வுக்குப் பெருமளவில் மானியங்களை அளித்துவருகின்றன.

ஒப்பீட்டளவில், வளரும் நாடுகளைவிட ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில், வேளாண் மானியங்கள் மிக அதிக அளவில் உள்ளன. ஜெர்மானியப் பெண் பத்திரிகையாளர் காத்தரீனா ஷிக்லிங், ஐரோப்பாவின் வேளாண் மானியம் எப்படி ஆப்பிரிக்க வேளாண்மையைச் சிதைக்கிறது என்பதை, ஒரு முழுமையான ஆவணப்படமாக எடுத்துள்ளார். இந்த ஆவணப்படம் வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்ற ஜெர்மானிய உழவர் வில்லி க்ரெமரிடமிருந்து தொடங்குகிறது. ஜெர்மனி, ஆண்டுக்கு 2.40 கோடி டன் கோதுமையை உற்பத்தி செய்கிறது. அதில் 1 கோடி டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்படுகிறது. க்ரெமர் 98 ஏக்கர் நிலத்தில் கோதுமை உற்பத்தி செய்துவருகிறார். அது பெரிதும் லாபமில்லை என்பதால், அதை ஒரு துணைத் தொழிலாக மட்டுமே செய்துவருகிறார். அவர் உற்பத்திசெய்யும் கோதுமையின் உற்பத்தி மதிப்பு, டன்னுக்கு இந்திய மதிப்பில் ரூ.19,700. சர்வதேசச் சந்தையில் கோதுமையின் விலை டன்னுக்கு ரூ.14,500. சந்தை விலையில் விற்றால், அவருக்கு ஒரு டன்னுக்கு ரூ.5,200 நஷ்டம்.

ஆனால் ஜெர்மனி அரசு, சர்வதேசச் சந்தை விலைக்கும், அவரது உற்பத்தி மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தினால் உருவாகும் நஷ்டத்தையும், அவரின் உழைப்புக்கேற்ற ஒரு மதிப்பையும் ஈடுகட்டும் பணத்தை மானியமாக வழங்கி, அவர் தொடர்ந்து கோதுமை விளைவிக்க உதவிசெய்கிறது.

ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கோதுமை உள்ளிட்ட உணவு வகைகளை அருகில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஆப்பிரிக்க நாடுகள், ஆண்டுக்கு 4 கோடி டன் உணவுப் பொருட்களை, முக்கியமாக, கோதுமையை இறக்குமதி செய்கின்றன. இப்படி ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியங்கள், ஆப்பிரிக்க நாடுகளில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய செனகலுக்குப் பயணிக்கிறார் காத்தரீனா.

விலை அதிகம்

செனகலின் தலைநகரான டாக்கர் நகரில் உள்ள ஒரு அடுமனைக்குச் சென்று, அங்கு கிடைக்கும் க்ரெப் என்னும் சப்பாத்தி போன்ற ஒரு கோதுமை ரொட்டியை வாங்குகிறார். அந்தக் கடையில் விற்கப்படும் பொருட்கள் அனைத்துமே கோதுமை மாவினால் செய்யப்படுபவை. செனகலில் விளையும் கம்பு, மரவள்ளிக் கிழங்கு மாவு போன்றவற்றை உபயோகிப்பதில்லையா என அடுமனை உரிமையாளரிடம் கேட்கிறார். ‘அவை விலை அதிகம்’, எனப் பதில் வருகிறது.

அதையடுத்து, உணவுப் பொருள் விற்பனை அங்காடிக்குச் செல்கிறார். அங்கே இருக்கும் ஒரு கோதுமை மாவுப் பொட்டலத்தை எடுத்துப் பார்க்கிறார். அந்த மாவு டாக்கரின் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள ஒரு மாவு மில்லிலிருந்து தயாராகிறது. அதாவது, கப்பலிலிருந்து கோதுமை நேராக மாவு மில்லுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அரைக்கப்பட்டு மாவாகிறது. அந்த உணவுப் பொருள் அங்காடியில் செனகலில் உற்பத்தி செய்யப்படும் கம்பு, மரவள்ளிக் கிழங்கு மாவுப் பொருட்கள் எதுவும் இல்லை. அவற்றை டாக்கர் நகரில் பெரும்பாலான வணிகர்கள் விற்பதில்லை. அவை விலை அதிகமும் கூட.

கம்பு, மரவள்ளிக் கிழங்கு மாவு கிடைக்கும் கடையைத் தேடி அலைகிறார் காத்தரீனா. டாக்கர் நகர் மார்க்கெட்டின் ஒரு மூலையில், ஒரு சிறு அங்காடியில் கம்பு, மரவள்ளிக் கிழங்கு மாவு கிடைக்கிறது. கம்பு மாவு ஒரு கிலோ ரூ.160. மரவள்ளிக் கிழங்கு மாவு ஒரு கிலோ ரூ.145. கோதுமை மாவு ஒரு கிலோ ரூ.45. செனகலில் உற்பத்தி செய்யப்படும் உள்ளூர் கம்பு, மரவள்ளிக் கிழங்கு மாவின் விலை கோதுமையின் விலையைவிட முறையே 355%, 322% அதிகம். செனகல் மக்கள்தொகையில் 80% மக்கள் வேளாண்மையை நம்பியுள்ளார்கள். ஆனால், அவர்களின் உற்பத்தி விலை, மானியங்கள் கொடுத்து உற்பத்திசெய்து கொண்டுவரப்படும் கோதுமை விலையை விட 320-350% அதிகமாக இருக்கும்போது, அதற்கான சந்தை இல்லை. விளைவு, செனகல் உழவர்கள் தங்கள் உணவுத் தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்துகொள்கிறார்கள். அதிகமாக விளையும் உணவுப் பொருட்களை நகர்ப்புறங்களில், விலை அதிகம் கொடுத்து நுகர்வோர் வாங்குவதில்லை.

சமத்துவமற்ற பந்தயம்

உள்ளூர் உற்பத்தியை முன்னிறுத்தும் ஒரு செனகலீஸ் வேளாண் தலைவர், இது ஒரு சைக்கிளையும் பந்தய காரையும் ஒன்றாக நிறுத்திப் பந்தயம் விடுவதுபோல என்கிறார். செனகலின் உழவர்களை முன்னேற்றுவதற்காக ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கும் அவல நகைச்சுவையும் இன்னொருபுறம் நிகழ்கிறது.

ஐரோப்பாவின் பெரிய வேளாண் அலகுகள், நவீனத் தொழில்நுட்பம், உரங்கள், வீரிய வித்துகள், லாபகரமாக நடத்த அரசு மானியங்கள் என்னும் பேருரு கொண்ட ஒரு வேளாண் தொழிலை எதிர்த்து, பாரம்பரியமான முறையில், குறைவான கரிமத் தாக்கத்துடன் (carbon footprint) வேளாண்மை செய்யும் உழவர்கள் என்றுமே போட்டியிட முடியாது என்பதுதான் நிலை. வேளாண் துறையில் உலகெங்கும் நாடுகள் வழங்கும் மானியங்கள் பற்றிய உண்மையான அறிக்கை வெளியிடப்பட்டு, ஒவ்வொரு நாடும் தனது உழவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் வேளாண் கொள்கைகளை உருவாக்குவதுதான் ஒரே வழி. அதுவரை, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் சிறு விவசாயிகள், இந்தக் கண்ணுக்குத் தெரியாத நவீன காலனியாதிக்கப் பிடியில் அடிமைகளாக வாழும் நிலைதான் நீடிக்கும்.

- பாலசுப்ரமணியம் முத்துசாமி,

‘இன்றைய காந்திகள்’ நூலாசிரியர்.

தொடர்புக்கு: arunbala9866@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்