அம்பேத்கரை மறந்த கல்விப்புலம்

By அன்பு செல்வம்

இன்றைக்கு மத அடிப்படைவாதக் குழுக்களின் கையில் அம்பேத்கர் சிக்கித் தவிக்கிறார்

டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை உலகமே கொண்டாடிவருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் வெகு விமரிசையாக விழா எடுத்துக்கொண்டிருக்கின்றன. அவர் படித்த கொலம்பியா பல்கலைக்கழகமும், லண்டன் பொருளாதாரப் பள்ளியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த விழாவைக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். அம்பேத்கரை உலக நாடுகள் கொண்டாடுவதற்கான காரணங்களில், இந்திய உயர் கல்வியில் அவரது கருத்துகள் ஏற்படுத்திய பெரும் தாக்கமும் ஒன்று.

இவ்விஷயத்தில் மத்திய அரசின் ‘அம்பேத்கர் ஃபவுண்டேஷ’னும், பல்கலைக்கழக மானியக் குழுவும் (யு.ஜி.சி) தார்மீக அடிப்படையில் பங்காற்றியிருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் ‘அம்பேத்கர் கல்விக்கான இருக்கை’களைத் தொடங்கியது இந்தத் துறைகள்தான். இதன் மூலம் உயர் கல்வி படிக்கும் மாணவர்களிடம் அம்பேத்கரின் தத்துவார்த்தச் சிந்தனைகள் சென்றடைந்தன. பொதுவெளியில் பேசப்படாத அம்பேத்கரை நேர் - எதிர் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு விவாதித்தார்கள். உயர் கல்வி வளாகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம், உறுதியான ஜனநாயக இந்தியாவைக் காண விரும்பிய அம்பேத்கருக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும். இதற்குப் பல அரசியல் - சமூகத் தலைவர்கள் உழைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் உழைப்பும் நோக்கமும் நிறைவடைந்திருக் கின்றனவா என்ற கேள்வி இன்றைக்கு எழுந்திருக்கிறது.

அம்பேத்கர் கல்வி இருக்கை

பல்கலைக்கழகங்களில் அம்பேத்கர் கல்வி இருக்கைகள் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன. ஆய்வுகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றின் மூலம் அம்பேத்கரின் சிந்தனைகள் இளைய சமுதாயத்துக்குக் கிடைக்க இந்த இருக்கைகள் வழிவகை செய்யும் எனும் நம்பிக்கை ஏற்பட்டது. முக்கியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், இன்றைக்கு இந்த இருக்கைகள் உண்மையிலேயே சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா? உலகத் தர‌ அறிவொளி யின் செல்வாக்கோடு ஒப்பிடும்போது, இத்திட்டம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? யு.ஜி.சி-யின் திட்டம் முழுமை அடைந்திருக்கிறதா என்பதெல்லாம் இது வரையில் மதிப்பீடு செய்யப் படவில்லை.

இந்தியாவில் உள்ள 727 பல்கலைக்கழகங்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட இருக்கைகள் இருக்கின்றன. மத்திய அரசின் சமூக நலத் துறை கீழ் இயங்குகிற ‘அம்பேத்கர் ஃபவுண்டேஷன்’ இந்தியாவின் 10 பல்கலைக்கழகங்களில் அம்பேத்கர் இருக்கையைத் தொடங்கியுள்ளது. அதில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று. ஒரு பேராசிரியர், விரிவுரையாளர் தகுதியுடைய ஓர் ஆய்வாளர், இளநிலை உதவியாளர் ஒருவர், அலுவலக உதவியாளர் ஒருவர் ஆகியோரின் சம்பளத்துடன் ஆண்டுக்கு ரூ. 35 -லிருந்து 50 லட்சம் வரை நிதி ஒதுக்குகிறது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை கீழ் இயங்கிவரும் யு.ஜி.சி-யும் 29 பல்கலைக்கழகங்களில் அம்பேத்கர் கல்வி வகுப்புகளைத் தொடங்கியிருக்கிறது. அம்பேத்கர் தவிர காந்தி, நேரு, புத்தர், அரவிந்தர், விவேகானந்தர், ஜாகிர் உசேன், தாகூர், சி.வி.ராமன், குருநானக் போன்ற 24 தலைவர்கள் தொடர்பான கல்வி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 51 பல்கலைக்கழகங்களில் யு.ஜி.சி. நிதியில் தொடங்கப்பட்ட அம்பேத்கர் கல்வி வகுப்புகள் 5 பல்கலைக்கழகங்களில் மட்டுமே செயல்படுகின்றன. இதில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இருக்கை இன்று வரையிலும் செயல்பட்டுவருகிறது. புதுவையில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம் தனது முயற்சியில் அம்பேத்கர் கல்வியைத் தொடங்கியது. ஆனால், ஆசிரியர் நியமிக்கப்படாததால் இன்று வரையிலும் அது செயல்படாமல் கிடக்கிறது. ஏனைய 4 பல்கலைக்கழகங்களில் பெயரளவில் மட்டுமே அம்பேத்கர் கல்வித் துறைகள் இருக்கின்றன. அந்தத் துறைகள் என்ன பணி செய்கின்றன என்பதுகுறித்து ஆண்டறிக்கைகளில் எந்தப் பதிவும் இல்லை. ஆனால், அரசு நிதியைப் பெறாத மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழக அங்கீகாரத்தோடு ஓராண்டு சான்றிதழ் / பட்டயப் படிப்புகளை நடத்திவருகிறது. ஆண்டுக்கு 90 மாணவர்கள் அம்பேத்கர் கல்வி பயில்கின்றனர். இது சாத்தியமாகும்போது, அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களில் சாத்தியமாகாமல் போவது எப்படி எனும் கேள்வி எழுகிறது.

அம்பேத்கர் கல்வியின் அவசியம்

நாட்டின் வளர்ச்சியிலும், ஜனநாயகப் பாதுகாப்பிலும் பொதுவான சில கொள்கை முடிவுகளை உருவாக்க இது போன்ற கல்வித் துறைகள் தேவை என்று யு.ஜி.சி. சொல்கிறது. அவை செயல்படாமல் இருப்பதைப் பார்க்கும்போது இது போன்ற இருக்கைகள் தொடங்கப்பட்டதற்கு என்ன நியாயம் செய்யப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசின் நிதியைப் பெற்று தங்கள் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பை மேம்படுத்தவும், அடையாள அரசியலுக்காக மட்டுமே இதுபோன்ற இருக்கைகளைத் தொடங்குவதா எனும் கேள்வி எழுகிறது. யு.ஜி.சி-யின் 10-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையின்படி கடந்த 10 ஆண்டுகளில் அம்பேத்கர் கல்விக்காக ரூ. 24 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

புத்தர், காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகிய துறைக ளுக்கு தடையில்லாமல் வழங்கும் நிதியை வாங்குவ தோடு சரி. திட்ட அறிக்கையில் சொல்லிய எதையும் செயல் படுத்துவதில்லை. கட்டமைப்பு வசதியை உருவாக்குவது, கருத்தரங்கு நடத்துவதோடு மட்டும் இக்கல்வி நிறுவனங்கள் நின்றுவிடுகின்றன. அம்பேத்கர் சிந்தனைகளைப் பரவலாக்கும் வேலைக்கு முன்னுரிமை தருவ‌தில்லை என்பதுதான் மிகப் பெரும் சோகம்.

யு.ஜி.சி-யின் வழிகாட்டுதலைச் செயல்படுத்தி யிருந்தால், தமிழ்நாட்டின் 5 பல்கலைக்கழகங்களிலும் 3 மாத அல்லது 6 மாத பட்டய / சான்றிதழ் படிப்புகள் தொடங்கியிருக்கலாம். சமூகச் செயல்பாட்டு, மனித உரிமைக் குழுக்களுடன் பண்பாட்டுத் தொடர்பு உருவாகியிருக்கும். கல்வியில் பின்தங்கிய மக்களுக்கும், உயர் கல்வி மாணவர்களுக்கும் இடையே கருத்தியல் உரையாடல் ஏற்பட்டிருக்கும். அம்பேத்கரின் சிந்தனைகள் அனைத்து மக்களிடமும் பர‌வலாகியிருக்கும். படிநிலை கருத்தாக்கக் கல்வி முறைக்கு வாய்ப்புகள் உருவாகி இருக்காது. சாதிபேதமற்ற சமத்துவம், சகோதரத்துவம் இவற்றால் இச்சமூகம் ஓரளவு வளர்த்தெடுக்கப் பட்டிருக்கும்.

அப்படி எதுவும் கடந்த 25 ஆண்டுகளில் அம்பேத்கர் கல்வித் துறைகளில் நடைபெறவில்லை என்பது துரதிர்ஷ்டம். ஒரு சடங்கைப் போல அம்பேத்கர், புத்தர் கல்வித் துறையின் காலம் கழிகிறது. குறைந்தபட்சம், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அம்பேத்கரைக் கூட சக மாணவர்களுக்காக மீட்டுத்தர‌ முடியவில்லை. பிறகு, எப்படி இந்தத் துறைகள் அம்பேத்கரின் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும்?

இதன் விளைவு, இன்றைக்கு மத அடிப்படைவாதக் குழுக்களின் கையில் அம்பேத்கர் சிக்கித் தவிக்கிறார். உயர் கல்வி வளாக‌ங்களில் புதிய சாதியவாதிகளால் அம்பேத்கர் கொண்டாடப்படுகிறார். பலம்பெற்றுவரும் சாதிய‌ அரசியல் சூழலில், அம்பேத்கரின் தனித்துவத்துக்கு நேர்ந்த மிகப்பெரிய பின்னடைவு இது. இத்தகைய அவல நிலை இனி தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்பதே கல்வியாளர்களின் வேண்டுகோள்.

- அன்புசெல்வம், ஆய்வாளர் எழுத்தாளர்,
புலம் வெளியிட்ட ‘அம்பேத்கர் டைரி’ நூலின் ஆசிரியர்.
தொடர்புக்கு : anbuselvam6@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்