என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?- பேராசிரியர் வீ.அரசு, சென்னை ஒருங்கிணைப்பாளர், பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு

By செய்திப்பிரிவு

உயர் கல்விக் கொள்கையை மாநில அரசே வகுக்க வேண்டும்: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்கிய பிராந்தியம் இன்றைய தமிழகம். நிர்வாகத் திறன் மிக்க உயர் அலுவலர்கள், விஞ்ஞானிகள், நேர்மையான அரசியல் செயல்பாட்டாளர்கள் ஆகிய அறிவுத் துறை சார்ந்தவர்களை மிகுதியாகப் பெற்ற மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு, இங்கிருந்த உயர் கல்விச் சூழலே அடிப்படைக் காரணம். அந்த உயர் கல்விச் சூழல் இன்று மங்கிவருகிறது. உயர் கல்வித் துறையில் உள்ள சீர்கேடுகளைக் களைந்து பாதுகாக்க வேண்டியது அரசின் உடனடிக் கடமை. அதற்கு முதற்கட்டமாக, மாநிலத்துக்குச் சுயமான ஒரு உயர் கல்வியை வகுக்க வேண்டும்.

உயர் கல்வித் திட்டங்களுக்குத் தனி மையம்: தமிழகத்தின் உயர் கல்வி என்பது அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர் ஆய்வு நிறுவனங்கள், சுயநிதிக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எனப் பல வடிவங்களில் செயல்படுகிறது. இவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அடிப்படையான புரிதல்களும்கூட இல்லை. இப்போது உயர் கல்வி மையம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. அது உயர் கல்வி தொடர்பான எந்த வேலையையும் செய்வதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கில் பொறியாளர்களை உருவாக்கி, அவர்களுக்கான பணி வாய்ப்புகள் இல்லாமல் செய்வது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. மற்றொரு பக்கத்தில், அறிவியல் மற்றும் கலை தொடர்பான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் ஆகியவற்றில் எதற்காக அதனைப் படிப்பிக்கிறோம் என்னும் தெளிவான நோக்கம்கூட இல்லை. மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் என்ன செய்வது எனும் சூனிய மனநிலைக்குள் தள்ளப்படுகிறார்கள். இந்தக் குழப்ப நிலைக்கு முடிவுகட்டும் விதமாக, மாநில அளவிலான உயர் கல்வித் திட்டமிடலுக்குப் பல்துறை அறிஞர்கள் சார்ந்த அமைப்பு உருவாக்கப்படுதல் அவசியம். இதில் உலகளாவிய அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கிய பாடத்திட்டம், படிப்பு முறை ஆகியவற்றை உருவாக்குவது உடனடித் தேவை.

தகுதி உடையவர்களுக்கே பணி வாய்ப்புகள்: அரசு நடத்தும் கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் இவற்றில் பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படுவதில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆண்டுதோறும் ஓய்வுபெறும் பணியிடங்களில் உடனுக்குடன் புதியவர்களை நியமிக்க வேண்டும். இதனை முறையாகச் செய்யாமல், தற்காலிக விரிவுரையாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் என்று குறுக்குவழியைப் பின்பற்றுகிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் 2,331 பணியிடங்கள் நிரப்பப்படவிருப்பதாக அறிவித்தது. ஆனால், அவற்றை நிரப்பாது கௌரவ விரிவுரையாளர்களையே மீண்டும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் பணி நிரந்தரமும் இல்லை, ஊதியமும் மிகக் குறைவு. இந்தச் சூழல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே தொடர்கிறது. ஆசிரியர் தேர்வாணையம் மூலம் எழுத்துத் தேர்வுகள் நடத்தி, தகுதியானவர்களைத் தேர்வுசெய்தால் மட்டுமே கல்வித் துறை உயிர்ப்புடன் இருக்கும்.

உயர் பதவி நியமனங்களில் அரசியல் செல்வாக்கு கூடாது: உயர் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள், ஆசிரியர்கள், ஆய்வு நிறுவனங்களில் நியமிக்கப்படும் இயக்குநர்கள் போன்றோர் கல்விப் புலத்தில் அரிய அனுபவங்களை உள்வாங்கிய மனிதர்களாக இருக்க வேண்டும். தகுதி என்பதை வெறுமனே பட்டங்களைப் பெற்றிருப்பதாக மட்டும் கருத முடியாது. இத்தகைய பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர் உலகம் தழுவிய கல்விப் போக்குகள், ஆய்வுகள் ஆகியவற்றை அறிந்தவராகவும் நமது சூழல், நமது தேவை ஆகியவற்றைப் புரிந்து, அதற்கென உரிய கல்விப் புலங்களை வளர்த்தெடுப்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால் எதார்த்தத்தில், அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்றவர்களே பெரும்பாலும் துணைவேந்தர், இயக்குநர் போன்ற உயர் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். உயர் கல்வியை அழித்தொழிக்க இது ஒன்றே போதும். தமிழக உயர் கல்விச் சூழலில் கடந்த மூன்று தசாப்தங்களாகத் தகுதியானவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதில்லை. அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இல்லாத தனியான உயர் கல்வி மையம் இத்தகைய நியமனங்களைச் செய்ய வேண்டும்.

இணையவழிக் கல்விச் செயல்பாடு நிரந்தரத் தீர்வாகாது: அண்மையில் உருவான பெருந்தொற்றால் கல்வித் துறையில் இணையவழிச் செயல்பாடுகள் புது வடிவம் பெற்றுள்ளன. இம்முறையில் பயிலும் குழந்தைகள் உளவியல் சார்ந்த துன்பங்களுக்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உயர் கல்வியிலும் இந்தக் கற்பித்தல் முறையால் உயிர்த்தன்மை அறுபடுகிறது. இணையவழிக் கல்வி பெருந்தொற்றுக் காலத்துக்கான தற்காலிகத் தீர்வுதானே ஒழிய ஆசிரியர் - மாணவர் உறவு முறைக்கு அது ஒருபோதும் மாற்றாக முடியாது. அதை மனதில் கொண்டு புதிய கல்வித் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

உயர் கல்வி என்பது அரசின் பொறுப்பு: தொண்டூழிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க பல்கலைக்கழகங்களில்கூட ஆசிரியர் நியமனம், பணியாளர் நியமனம் உள்ளிட்ட அனைத்து வகையான நியமனங்களிலும் சீர்கேடுகள் மலிந்துவிட்டன. இவற்றின் மறு வடிவங்களாகவே தற்போது உருவாகிவரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் ஆகிவிடக் கூடாது. உயர் கல்வி எனும் பொறுப்பை மாநில அரசால் முழுதாக ஏற்க இயலாவிட்டாலும், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். மாநிலத்துக்கான தனித்த உயர் கல்விக் கொள்கையால் மட்டுமே அது சாத்தியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்