இலங்கையிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1991-ல் பிறந்த தனுஜன் என்ற ஆண் குழந்தை, ஜெர்மனியின் கோலோன் நகரில் 2012-ல் பெண்ணாக மாறுகிறது. தனுஜன் தனுஜாவாகப் பெயர் மாற்றம் அடைகிறது. தன்னைப் பெண்ணாக உணரத் தொடங்கியது முதல் தன் ஆணுடலைப் பெண்ணுடலாக மாற்றியது வரையிலான அவரது பயணம், அதன் பிறகான அவரது போராட்டங்களின் பதிவாக வெளியாகியிருக்கிறது ‘தனுஜா’ எனும் சுயசரிதை நூல். பாலியல் துஷ்பிரயோகங்கள், காதல் தோல்விகள், பாலியல் தொழில் எனக் குறுகிய காலத்தில் பெரிய வாழ்க்கையை வாழ்ந்த தனுஜா, தனது முந்தைய வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு, தற்போது ஜெர்மனியில் உள்ள கல்லூரி ஒன்றில் பல் பராமரிப்பு மாணவியாக இருந்துவருகிறார்.
உங்கள் வாழ்க்கையைப் புத்தகமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது?
என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்னைப் போன்றவர்களின் வாழ்க்கை பற்றி, எங்கள் உணர்வுகள் பற்றி, நாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. திரைப்படங்கள் எங்களுடைய வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாததைக் காட்டுகின்றன. இந்தச் சூழலில் என்னுடைய வாழ்க்கையைப் பற்றி வெளியே பேச வேண்டும், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.
உங்கள் எழுத்தில் பகடி இருக்கிறது. இந்தப் புத்தகத்தை ஷோபாசக்தி செம்மையாக்கம் செய்திருப்பதால் அந்தத் பகடித்தன்மை வந்துவிட்டதா?
இல்லை. அது திருநர் சமூகத்திடம் உள்ள பகடி. எங்கள் நெருக்கடிகள் எல்லாவற்றையும் நாங்கள் எங்களுக்குள் நகைச்சுவையாகத்தான் பகிர்ந்துகொள்வோம். வாழ்க்கையில் நிறைய வலிகளை அனுபவித்துவிட்டதால், துன்பங்கள் எங்கள் வாழ்வின் இயல்பாகவே மாறிவிட்டதால், அதை நாங்கள் சிரித்துக்கொண்டு சொல்வதன் வழியேதான் அந்தத் துயர நிலையிலிருந்து எங்களால் விடுபட முடிகிறது. நகைச்சுவையும் பகடியும் எங்களுக்கு நிவாரணியாக இருக்கின்றன.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது?
நான் பெண்ணாக மாறும் வரை எனது குடும்பம் என்னை வெறுத்தது. என் அக்கா மட்டும் உறுதுணையாக இருந்தார். நான் பெண்ணாக மாறிய பிறகு, என் அம்மாவிடம் மன மாற்றம் ஏற்பட்டது. நான் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்தபோது அம்மா என் கூட இருந்தார். ஆனால், ஒட்டுதலும் விலகுதலுமாகத்தான் குடும்பத்துடனான உறவு போய்க்கொண்டிருக்கிறது. தற்போது தனியாகவே வசித்துவருகிறேன். ‘தனுஜா’ புத்தகம் வெளியான பிறகு இன்னும் விரிசல் அதிகரித்திருக்கிறது. என் வாழ்வில் நடந்தவற்றை இவ்வளவு வெளிப்படையாக எழுதுவேன் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
பொதுவாக, திருநர்கள் பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்தே வருகின்றனர், ஏன்?
ஆமாம். மேல்தட்டிலிருந்து திருநர்கள் அவ்வளவாக உருவாவதில்லை. காரணம், சொத்துப் பிரச்சினை. குடும்பத்தின் சமூக, பொருளாதார அந்தஸ்து காரணமாகப் பலர் தங்கள் உணர்வுகளைப் புதைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடுத்தெருவுக்கு வருவதற்குப் பதிலாகப் பாதுகாப்பான இடத்தில் இருக்கவே பலர் விரும்புகின்றனர்.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் திருநர்களை எதிர்கொள்வதற்கும், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் திருநர்களை எதிர்கொள்வதற்குமான வித்தியாசம் என்ன?
நான் ஜெர்மனி வரும் வரை எனக்கு மேற்கத்திய நாடுகள் மேல் ஒரு மயக்கம் இருந்தது. இங்கு சுதந்திரமாக வாழலாம் என்று. ஆனால், அப்படி இல்லை. நான் படித்துக்கொண்டிருக்கும் கல்லூரியில் என்னைப் பெண் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். நான் திருநர் என்பதை மறைத்தே வாழ்கிறேன். நடைமுறையில் அவர்கள் திருநர் குறித்துக் கரிசனமாகவே பேசுவார்கள். ஆனால், அவர்கள் பக்கத்தில், அவர்களில் ஒருவர் திருநராக இருப்பதை அவர்கள் மோசமாகவே எதிர்கொள்வார்கள். அந்த வகையில் இந்தியா, இலங்கைக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ஜெர்மானிய அரசு திருநர்களை எப்படி நடத்துகிறது?
ஜெர்மன் சட்டங்களைப் பொறுத்தவரை திருநர் என்றால் அவர் ஒரு பெண். பெண்ணுக்கான சலுகைகள்தான் வழங்கப்படுமே தவிர, திருநர்கள் வரலாற்றுரீதியாகப் பின்தங்கியிருப்பவர்கள் என்று சிறப்புச் சலுகை எதுவும் கிடையாது. அதே சமயம், ஜெர்மானியச் சட்டம் திருநர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது; அவர்கள் மீதான ஒடுக்குமுறையைத் தடுக்கிறது.
நாடு திரும்பும் எண்ணம் இருக்கிறதா?
நிச்சயம் இருக்கிறது. ஆனால், இலங்கை இல்லை; இந்தியா. இந்தியாவில் ஒரு திருநருக்குப் பிரச்சினை என்றால், ஐம்பது திருநர்கள் கூடிவிடுவார்கள். இங்கு நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம்.
எந்தப் புள்ளியில் பாலியல் தொழிலிலிருந்து விடுபட்டுக் கல்வியை நோக்கிச் செல்லத் தோன்றியது?
சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் எங்கள் சமூகத்துக்குப் பாலியல் தொழில்தான் வருவாய்க்கான வழியாக இருக்கிறது. நானும் மது, பாலியல் தொழில், தற்கொலை எண்ணங்கள் என வாழ்க்கையைக் கழித்தேன். இப்படியே என் வாழ்வு முடிந்துவிடக் கூடாது என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். இந்தத் தருணத்தில்தான் சுவிஸ் பெண்ணான செலினா என்ற பல்கலைக்கழக ஆசிரியையின் அறிமுகம் கிடைத்தது. நான் மீண்டும் படிப்பதைத் தொடர வேண்டும் என்று அவர் என்னுள் தீயைப் பற்ற வைத்தார். இளமையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, முதுமையில் அநாதையாகத் தெருவில் கிடப்பதா அல்லது திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக உழைப்பதா? நான் மீண்டும் கல்வி கற்க முடிவெடுத்தேன்.
இப்போது உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?
மீண்டும் படிப்பைக் கையில் எடுத்தபோது, அது பொது உலகத்தோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. உலகத்தின் மேல் நம்பிக்கை வந்திருக்கிறது. வாழ்தல் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இனிமையையும் அமைதியையும்தான் நான் தேடினேன்.
தங்களின் மாற்றுப் பாலியல் உணர்வை, சமூகத்துக்குப் பயந்து அடக்கிக்கொண்டு வாழும் நபர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
ஒரு பெண்ணாகத் தன்னை உணரும் ஆண், ஒரு ஆணாகத் தன்னை உணரும் பெண் தங்கள் உணர்வை வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வைப்பது மிகுந்த வேதனையானது. அவர்களுக்கு என்னுடைய செய்தி என்னவென்றால், அவசரப்பட்டுப் பாலினம் மாறிவிடாதீர்கள் என்பதுதான். ஏனென்றால், அவசரப்பட்டு நம் பாலினத்தை மாற்றிக்கொள்ளும்போது, இந்தச் சமூகம் விரட்டியடித்துவிடும். சமூக அந்தஸ்தை நாம் நம் கல்வியின் மூலமாகவோ, வேலையின் மூலமாகவோதான் பெற முடியும். அந்தச் சமூக அந்தஸ்தில் நின்றுகொண்டுதான் நாம் நமது அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் நமக்கான சமூக அங்கீகாரத்தை உருவாக்குவதன் வழியே மட்டுமே நமக்குப் பின்வரும் திருநர் தலைமுறைக்கு நல்ல சூழலை ஏற்படுத்தித் தர முடியும்.
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
****************
தனுஜா
கருப்புப் பிரதிகள் வெளியீடு
விலை: ரூ.330
94442 72500
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago