நன்றியை மறந்த நவீன சமூகம்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு மனத்திரையில் தமிழகத்தின் வரைபடத்தை ஒரு பாயைப் போல விரித்துப் போடுங்கள். ஒருபக்கம் பச்சைப் பசேல் என மேற்குத் தொடர்ச்சி மலைகள். எதிர்ப்பக்கம் 1,100 கிலோ மீட்டர் தொலைவுக்கு மிக நீண்ட கடற்கரை. இடையே அகண்ட சமவெளி. சமவெளியில் இடையூறாக பெரிய மலைகள் எதுவுமில்லை. மேற்குப் பக்க மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர், சமவெளியில் தடையின்றி ஓடி கிழக்குப் பக்கம் இருக்கும் கடலில் சென்று கலக்கிறது. அருகில் உள்ள ஆந்திரா, கர்நாடகாவில் இப்படியான அகண்ட சமவெளி அமைப்பைப் பார்க்கவே முடியாது.

ஆனாலும், அறிவியல்பூர்வமாக தமிழகம் ஒரு வறட்சிப் பிரதேசம்! நமது புவியியல் அமைப்பு அப்படி. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, விந்திய மலைத் தொடர் இவற்றுக்கு நடுவே முக்கோண வடிவில் இருக்கும் பகுதி தக்காண பீடபூமி(Deccan plateau). இதன் தெற்கே இருக்கிறது தமிழகம். அதன்படி தமிழகம் ஒரு மழை மறைவுப் பிரதேசம். ஏன் என்று பார்ப்போம்.

ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நாடு முழுவதும் தென்மேற்குப் பருவ மழை சீராக பெய்கிறது. ஆனால், தமிழகம் மட்டும் விதிவிலக்கு. சொட்டு மழைப் பெய்யாது. வெக் கையில் வெந்து சுண்ணாம்பாகிப்போவோம். மேற்குத் தொடர்ச்சி மலை உயரமாக இருப்ப தால் அது தென்மேற்குப் பருவக் காற்று மூலம் தமிழகத்துக்கு வரும் ஈரப் பதத்தை தடுத்துவிடுகிறது. இதனால், தமிழகத்துக்கு தென் மேற்குப் பருவ மழை குறைவு (307 மி. மீட்டர்). நமக்குப் பிரதானமாக கிடைப்பது அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழைதான் (439 மி.மீட்டர்).

ஆனால், தென் மேற்குப் பருவ மழையைப் போன்ற இயல்பை கொண்டதல்ல வடகிழக்குப் பருவ மழை. முரட்டுப் பிள்ளை அது. அழிச் சாட்டியம் பிடிக்கும். நம்பவே முடியாது. பெய்தால் வானமே வெடித்ததுபோல கொட்டித் தீர்க்கும். பொய்த்தால் பூமியே வெடித்ததுபோல பாளம் பாளமாகப் பிளக்கும். நமது வரமும் அதுதான்; துயரமும் அதுதான்! ஆனால், அதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை. இந்த அறிவியல் உண்மையை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். இயற்கையின் இயல்புக்கு ஏற்ப நீர் மேலாண்மை செய்தால்தான் பிழைக்க முடியும் என்று அறிந்து வைத்திருந்தார்கள். எனவேதான், அவர்கள் அணைக்கட்டு காலத்துக்கும் முன்னதாகவே ஏரியின் தொழில்நுட்பத்தில் தேர்ந்திருந்தார்கள். ஏராளமான ஏரிகளையும் குளங்களையும் வெட்டி னார்கள். வரத்துக் கால்வாய், வடி கால்வாய், பாசன வாய்க்கால், கலுங்கு, மடை, மறுகால் ஓடை என விதவிதமான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தார்கள். வீட்டுக்கு ஒருவர் என வரிசை வைத்து அவற்றை தினசரி பராமரித்தார்கள். உண்மையில், தமிழகத்தின் பாரம்பரிய பாசனம் என்றால் அது ஏரிப் பாசனம்தான்.

பழம் பெருமை பேசவில்லை. ஆதாரங்களுடன் கூடிய உண்மை இவை. கடந்த காலங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் மதுரையில் மட்டும் 50 சங்க கால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றைக்கும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் என்று மூன்றடுக்கு குளங்கள் இருக்கின்றன. உண்மையில் இது ஒரே கண்மாய்தான். நம் முன்னோர்கள் ஏரியின் குறுக்கே கரைகள் அமைத்து அதனை மூன்றாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு அடுக்கையும் மேலிருந்து கீழாக ஒன்றைவிட ஒன்று உயரம் குறைவாக அமைத் தார்கள். பாசனம் பெறும் நிலங்களின் மட்டங் களுக்கு ஏற்ப குளங்களின் உயரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் எல்லாம்கூட அதன் அருகில் நெருங்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதன் அருகில் ஒரு முதுமக்கள் தாழி கிடைத்தது. அதை வைத்து குளத்தை ஆய்வு செய்த தொல்லியல் நிபுணர்கள், இவை 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

சங்க காலத்தில் நம் முன்னோர்கள் பொக்லை னும் புல்டோசரும் கொண்டா இப்படியொரு நுட்பமான ஏரியை உருவாக்கினார்கள்? வெறும் கடப்பாரையையும் மண்வெட்டியையும் கொண்டு இவ்வளவு பெரிய ஏரியை உருவாக்க அவர்கள் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்? வெட்டி முடிக்க எத்தனை காலம் ஆகியிருக்கும்? எத்தனை பேர் உழைத்திருப்பார்கள்? எத்தனை பேர் உயிரிழந் திருப்பார்கள்? எந்த அளவுக்கு தொலைநோக்குப் பார்வையும் தியாக உள்ளமும் இருந்தால் எதிர்கால தலைமுறையினருக்காக இப்படி ஓர் ஏரியை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள்?

ஆனால், நாம் என்ன செய்தோம்? முன் னோருக்கு நன்றி மறந்தவர்களானோம். வரும் தலைமுறையினருக்கு துரோகம் செய்தோம். முன்னோர்களின் உழைப்பை எல்லாம் உருத் தெரியாமல் அழித்துவிட்டோம். அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்ந்த பொக்கிஷங்களை எல்லாம் பொக்லைன் கொண்டு இடித்துத் தள்ளி கான்கிரீட் கட்டிடங்களாக்கிவிட்டோம். உலக அதிச யங்களிலும் யுனெஸ்கோவின் புராதன சின்னங்க ளிலும் பதிக்க வேண்டிய வரலாற்று அதிசயங் களை எல்லாம் வெளியுலகுக்கே தெரியவிடாமல், ‘சென்னைக்கு மிக அருகில்’, ‘திருச்சிக்கு மிக அருகில்’, ‘மதுரைக்கு மிக அருகில்…’ என்று கூறு போட்டு விற்றுவிட்டோம். இப்போது வெள்ளத் திலும் வறட்சியிலும் தவித்து நிற்கிறோம். தவறு யார் மீது?

சென்னை - போரூர் ஏரியின் உண்மையான பரப்பளவு 800 ஏக்கர். 29 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஏரியின் பெரும் பகுதி தனியார் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. ஏரியைத் தானம் செய்ய அரசுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அதன் நீட்சியாக தொடர் ஆக்கிரமிப்பு களால் அந்த ஏரி, இன்று வெறும் 330 ஏக்கராக சுருங்கி நிற்கிறது.

சேலம் பேருந்து நிலையம், காந்தி விளையாட்டு மைதானம், விழுப்புரம் பேருந்து நிலையம், நீதிமன்றம், அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை உயர் நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர்... இவை எல்லாம் ஏரியை அழித்து எழுப்பட்டவைதானே. சென்னையில் 36 ஏரிகள் இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன. சென்னைப் புறநகரில் தற்போது இருக்கும் 15 ஏரிகளின் மொத்தப் பரப்பளவான 2,416.51 ஹெக்டேரில் 589.2 ஹெக்டேர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 37 கண்மாய்களில் 30 கண்மாய்களின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. காலம் காலமாக ஏரிகளைப் பராமரிக்க நம் முன்னோர்கள் செய்து வந்த குடிமராமத்துப் பணியை இன்று அறிவார் யாருமில்லை.

மக்கள் பெருக்கத்தால் நகரமயமாக்கம் தவிர்க்க முடியாததுதான். ஆனால், அது திட்டமிடப் பட வேண்டியது; கட்டுப்படுத்தப்பட வேண்டியது. இரண்டையும் நாம் செய்யவில்லை. நீர் நிலைகளை எல்லாம் அழித்துவிட்டு அண்டை மாநிலங்களிடம் சண்டைப் போட்டுக்கொண்டிருக்கிறோம். சரி, அந்த அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கு கிடைக்கும் மழை அளவு எவ்வளவு என்பது தெரியுமா?

(நீர் அடிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்