அனுப்பப்படாத ஆத்திரக் கடிதங்கள்!

By மரியா கொன்னிகோவா

யார் மீதாவது கோபம் வந்தால் ஆபிரகாம் லிங்கன் அவருடைய பெயருக்குக் கோபமாக ஒரு கடிதம் எழுதுவாராம். தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் கொட்டி, எல்லா வசவுச் சொற்களையும் போட்டு அந்தக் கடிதத்தை எழுதி முடிப்பாராம். கோபமெல்லாம் எழுத்தில் வெளிப்பட்டுக் கரைந்தவுடன், அந்தக் கடிதத்தை எடுத்து அப்படியே தனியே வைத்துவிடுவாராம். இத்தகைய கடிதங்களில் அவர் எப்போதும் கையெழுத்திட்டதும் இல்லை, யாருக்கு எழுதினாரோ அவருக்கு அனுப்பியதும் இல்லை.

லிங்கனின் கடிதம்

அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது கெட்டிஸ்பர்க் என்ற இடத்தில் யூனியன் படைகளுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஜார்ஜ் மீடே, கான்ஃபடரேட் படைகளுக்குத் தலைமை தாங்கிய ராபர்ட் லீயைத் தோற்கடிக்க தாமதித்ததல்லாமல், தப்பிக்கவும் விட்டதற்காக ஆபிரகாம் லிங்கனுக்கு அவர்மீது ஏகப்பட்ட கோபம். ஆனால், கோபமாக எழுதிய கடிதத்தை அவருக்கு அனுப்பாமல் விட்டதால், ஜார்ஜ் மீடேவுக்குக் கடைசிவரை லிங்கனின் கோபமே தெரியாமல்போனது.

ஒரே நாளில் முடிந்திருக்க வேண்டிய அந்தப் போர், மூன்று நாட்கள் தொடர்ந்ததல்லாமல், சுமார் 56,000 பேர் அதில் இறந்தனர்.

என்ன பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்று நிதானித்துப் பேச வேண்டிய உயர் தலை வர்கள் லிங்கனிடமிருந்து இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி, கோபமாக இருக்கும்போது கடிதம் எழுதுவதும் பிறகு அதை உரிய நபருக்கு அனுப்பாமல் வைத்துக்கொள்வதும் லிங்கனுக்கு மட்டுமல்ல, வேறு பலருக்கும் அந்த நாளில் வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி எழுதுவது கோப உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமைவதுடன், கடிதம் எழுதும்போதே அவர் என்ன தவறு செய்தார், நாம் எப்படி அவருடைய தவறைத் தடுத்திருக்கலாம் என்ற யோசனைகளும் தோன்றும்.

ஹாரி ட்ரூமேன், சர்ச்சில்…

இப்படிக் கடிதம் எழுதும்போது வார்த்தைகளைப் பயன்படுத்தவும் வசைபாடவும் அளவற்ற சுதந்திரம் கிடைப்பதாக மார்க் ட்வைன் கூறியிருக்கிறார். அவருக்கும் இந்தப் பழக்கம் உண்டு.

“அமெரிக்காவின் நிதிநிலைமை என்ன என்பதை, அந்த ஆண்டவனுக்கே நிதி ஆலோசகராக இருக்கக் கூடியவர் வந்து உங்களுடைய அறிக்கையைப் படித்தால்கூட ஒன்றும் புரியாதய்யா” என்று அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் ஒருமுறை தன்னுடைய நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதினார். பிறகு, அதை அவருக்கு அனுப்பாமல் சட்டைப் பையிலேயே நீண்டகாலம் வைத்திருந்தார்.

1922-ல் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் லாயிட் ஜார்ஜுக்கு எழுதிய (அனுப்பப்படாத) கடிதத்தில், இராக் பிரச்சினையில் தலையிடுவதன் மூலம் ஆண்டுதோறும் 80 லட்சம் பவுண்டுகள் தண்டமாகச் செலவாகிறது என்று எச்சரித்திருந்தார் வின்ஸ்டன் சர்ச்சில்.

இப்படிக் கோபமாக இருக்கும்போது கடிதம் எழுதிவிட்டு, பிறகு அதை அனுப்பாமல் வைத் திருக்கும் ஏகபோகம் அரசியல் தலைவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மட்டுமே உரியதல்ல. காதலர்கள்கூட ஒருவருக்கொருவர் ஏற்படும் ஏமாற்றங்கள், கோபதாபங்களைப் பட்டியலிட்டு இப்படிக் கடிதமாக எழுதிக்கொள்வார்கள். பிறகு, அதை அனுப்பாமல் தங்களுடனேயே வைத்துக் கொண்டுவிடுவார்கள். (இல்லாவிட்டால் காதல் பிழைக்காதே?)

அப்பா-மகன் கடிதங்கள்

குடும்பங்களிலும் இது சகஜம். கல்லூரியில் படிக்கிறேன் பேர்வழி என்று ஊரைச் சுற்றிக்கொண்டு சினிமா, நாடகம் என்று பார்த்துக்கொண்டு பணத்தைக் கரைக்கும் மகனுக்கு அப்பாவும், கல்லூரியில் போய்ப் படி என்று அனுப்பிவிட்டு, சாப்பாட்டுக்கு மட்டுமே கட்டுப்படியாகும் அளவுக்குப் பணம் அனுப்பும் கஞ்ச அப்பாவுக்கு மகனும் இப்படிக் கோபத்துடன் கடிதம் எழுதி அனுப்பாமல் தங்களுடனேயே வைத்துக்கொள்வதும் உண்டு.

தெருவில் போகும்போது மாடு மாதிரி நம்மீது வந்து மோதிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் ‘ஜென்மத்தை' நாம் சிறிது நேரம் நின்று திரும்பிப்பார்த்து, அவன் காதுக்கு எட்டாது என்று தெரிந்ததும் துணிச்சலாகத் திட்டுவதில்லையா அதுவும் இந்தக் கடித ரகத்தில்தான் சேர்த்தி.

பத்திரிகைக்காகக் கட்டுரை எழுதும்போது எனக்கும் இந்தப் பழக்கம் உண்டு. நான் எழுதிய வற்றை இப்படி இப்படி மாற்ற வேண்டும் என்றும் இது சரியில்லை என்று அடித்தும் தரும் ஆசிரியரின் போக்கைக் கணித்து, என்னுடைய கணினியிலேயே சில வாசகங்களைத் தயாராக வைத்திருப்பேன். என்னுடைய கோபமும் ஆத்திரமும் தணிந்த பிறகு அதையெல்லாம் நீக்கிவிடுவேன். எனக்குத் தெரிந்து என்னுடைய கட்டுரையில் ஆசிரியர் கைவைக்காமல் இருந்ததே கிடையாது.

லிங்கன் காலத்திலிருந்த இந்தப் பழக்கத்தில் சிறிதே இப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் கடிதம் எழுதுவதே கிடையாது. எல்லாமே மின்னஞ்சலாக மாறிவிட்டதே!

மாறியது யுகம்

கணினியில் நம் எண்ணத்தை, கோபத்தை, ஆத்திரத்தையெல்லாம் கொட்டிப் பதில் தயாரித்து ஒருமுறைக்கு இருமுறை படித்து கோபம் தீர்ந்ததும் அப்படியே சேமிப்பதோ அல்லது அழிப்பதோதான் நடக்கிறது.

சமூக வலைத்தளங்கள் நல்லதொரு வடிகாலாக இப்போது இருக்கிறது. தங்களுடைய நெருங்கிய நட்பு வட்டத்தினர் மட்டும் படிக்கும் வகையில் எல்லாவற்றையும் கொட்டி எழுத முடிகிறது. நாம் யாரென்றே தெரியாமல் உலகம் முழுக்கப் படிப்பதற்கும் நம்மால் எழுத முடிகிறது, கிட்டத்தட்ட மொட்டைக் கடிதாசிபோல!

காதலித்து பிறகு ஏமாற்றிய காதலிக்கு, வாழ்க்கையில் நாம் ஒருமுறை சந்தித்த அந்த நபருக்கு, சிற்றுண்டிச் சாலையில் பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு என்று அவர்களுடைய பெயர், அடையாளத்தை வெளிப்படுத்தாமலும் - அதே சமயம் - சம்பந்தப்பட்டவர்கள் அந்த சமூக வலைத்தளத்தைப் படிக்க நேர்ந்தால் அது தங்களுக்குத்தான் என்று தெரிந்துகொள்ளவும் - இயலும் வகையில் சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.

இதில் ஆபத்தும் இருக்கிறது. முற்காலத்தில் கோபம் வந்தால் உடனே செயலாளரை அழைத்துக் கடிதத்தைத் தயாரிக்கச் சொல்ல வேண்டும் அல்லது நாமே பேனாவால் எழுத வேண்டும். இதற்குச் சற்று நேரம் ஆகும் என்பதால் கொதிப்பு அடங்கி, கோபம் குறைந்து நிதானம் பிறக்க வழியுண்டு. இப்போது கணினியை முடுக்கினால் திரை வந்து விடுகிறது, படபடவென்று மின்னல் வேகத்தில் கோபத்தைக் கொட்டவும் முடிகிறது. அதே வேகத்தில் எதிராளிக்குக் கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டால் வேறு வினையே வேண்டாம். முன்பெல்லாம், கடிதங்கள் சம்பந்தப்பட்ட நபர் கையில் மட்டும்தான் கிடைக்கும், இப்போதோ எல்லோராலும் படிக்கப்பட்டு பரவிவிடும் ஆபத்தும் சேர்ந்திருக்கிறதே!

இப்படி மின்னஞ்சலில் எழுதுவதிலும் இன்னொரு சுகக் குறைவு இருக்கிறது. கையால் பேனா பிடித்துக் காகிதத்தில் எழுதும்போது, யாரைக் குற்றம் சாட்டுகிறோமோ அவரே நேரில் வந்து கைகட்டி தண்டனையை வாங்கிக்கொள்வது போன்ற திருப்தி ஏற்படும். இங்கோ நொடிக்கு நூறு எழுத்துகள் என்று திரை எல்லாவற்றையும் வாங்கி ஏப்பம்விட்டு அப்படியே எதிராளிக்கு அனுப்பிப் பகையை வளர்த்துவிடும்.

கைபேசியில்கூட எதிரில் இருப்பவர் பேசுவது பிடிக்கவில்லையென்றால், “சரி… சரி… போனை வை” என்று சொல்லிவிட்டுப் பொத்தானை அழுத்தத் தான் முடியும். இதே பழைய காலத் தொலைபேசி என்றால் ரிசீவரை ஓங்கி அறைந்து கோபத்தைத் தணித்துக்கொள்ள முடியும்!

©: தி நியூயார்க் டைம்ஸ்.
தமிழில் சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்