பழமைக்கெல்லாம் பழமையானதும் புதுமைக்கெல்லாம் புதுமையானது மான இசை வாத்தியம் வீணை. அதனால்தான் கலைமகளின் கைப்பொருளாய் வீணை இருக்கிறது என்பார் வீணை சிட்டிபாபு. அந்த மேதையிடம் இசை பயின்று புகழ் பெற்ற வீணை வித்வானாக விளங்கியவர் பிரபாவதி கணேசன் (1941-2021).
குரு - சிஷ்ய பாரம்பரியம்
குழல் இல்லாத கிருஷ்ணனை நாம் தரிசித்ததில்லை. நந்தி தேவரின் தாள வாத்தியமாகக் கொண்டாடப்படுவது மிருதங்கம். நாரதரின் கையால் மீட்டப்படும் மகதி வீணையும் கலைமகளின் வீணையும் பக்தியின் வழி நின்று நம்மிடையே இசையைக் கொடுக்கும் வாத்தியங்கள். பாரம்பரியமான கர்னாடக இசை வாத்தியங்களில் வீணை மிகவும் பழமை வாய்ந்தது. பல விதமான பாணிகளில் வீணையை வாசிக்கும் கலைஞர்கள் நம் நாட்டில் நிறைந்திருந்தனர். வீணை தனம்மாள் - வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரது பாணிகளை உள்ளடக்கிய தஞ்சாவூர் பாணி, காரைக்குடி பாணி, மைசூர் பாணி, ஆந்திர பாணி, திருவாங்கூர் அல்லது கேரள பாணி அவற்றுள் சில.
பாரம்பரியமான நம்முடைய இசைக்கும் பக்தி நெறிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புராணங்களின் வழியாகவும் காலம் காலமாக வடிக்கப்படும் இறை திருவுருவங்களின் வழியாகவும் உணரலாம். தியாகராஜ சுவாமிகள் ‘மோக்ஷமு கலதா’ கிருதியில் சிவனை அடையச் சுலபமான வழி, வீணை மூலம் நாத யோகம் செய்வதுதான் என்று குறிப்பிட்டிருப்பார். பிரபாவதியின் பெற்றோர்களுக்கும் தங்களின் குழந்தைக்கு வீணையை முறைப்படி சொல்லித் தருவதற்கான குருவைத் தேடும் முயற்சியில், அன்றைக்கு ‘ஈமனி’ பாணியில் வீணை வாசிக்கும் கலைஞராக கர்னாடக இசையிலும் திரையிசையிலும் செல்வாக்கு செலுத்திய வீணை மேதை சிட்டிபாபுவிடம் குழந்தைக்கு வீணை கற்பிக்கக் கேட்டுக்கொண்டனர்.
இப்படி 10 வயதில் இசை மேதை சிட்டிபாபுவிடம் வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் பிரபாவதி. அதன்பின் லால்குடி ஜெயராமன், டி.கே.ஜெயராமன் எனப் பலரிடமும் தனது சங்கீதத் திறமையை மேம்படுத்திக்கொண்டார் பிரபாவதி. 16 வயதில் அரங்கேற்றம் கண்டார்.
கைவசமான வீணை
ஒவ்வொரு நாளும் வீணையில் மணிக்கணக்காகச் செய்த அசுர சாதகத்தால், பிசிரில்லாமல், அபஸ்வரங்கள் எழுப்பாமல் பிரபாவதியால் வீணையில் இனிய நாதத்தை எழுப்ப முடிந்தது. வயலினையோ மாண்டலினையோ வாசிப்பதுபோல் வீணை வாத்தியத்தைச் சுலபமாக வாசிக்க முடியாது. மேற்படி வாத்தியங்களில் இருப்பதுபோல் அல்லாமல் வீணையின் சுரஸ்தானங்களைக் கையாள்வதில் இருக்கும் சவால்களைத் தொடர் பயிற்சியால் சாத்தியமாக்கிய கலைஞர் பிரபாவதி. தன்னுடைய சாதக பலத்தால் வீணை அவரின் கைவசம் ஆனது. ‘அபஸ்வரம் அவரின் வீணையில் எழாது’ என்னும் நிலையைத் தன்னுடைய சாதகத்தால் பெற்றார்.
வாத்ஸல்யமான வாசிப்பு
பொதுவாகவே, வீணை வாசிக்கும் கலைஞர்கள் பக்கவாத்தியமாக வயலின், புல்லாங்குழல் துணையின்றி வாசிக்க மாட்டார்கள். ஆனால், பிரபாவதியின் வீணையின் இனிய நாதம் ஏகமாக அரங்கம் முழுவதும் வியாபிக்கும். தாளவாத்தியக் கலைஞர்கள் ‘தனி’ வாசிக்கும் நேரத்தில்தான் பிரபாவதியின் விரல்கள் ஓய்வெடுக்கும். சற்றும் சோர்வில்லாமல் பிரபாவதியின் வீணை வாசிப்பில் வெளிப்படும் வாத்ஸல்யம், இசையைக் கேட்கும் ரசிகர்களையும் கச்சேரி முழுவதும் சவுக்கியத்தில் வைத்திருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய கச்சேரியைக் கேட்ட அனுபவத்தை இசை விமர்சகர் சாருகேசி இப்படிக் குறிப்பிட்டார்: “அன்றைக்கு முத்தையா பாகவதரின் ‘மாதே மலையத்வஜ பாண்டியா’ பாடலின் ஸ்வர சஞ்சாரங்கள் பிரபாவதியின் வீணை வாசிப்பில் பிரமாதமாக வெளிப்பட்டன. கமாஸ் ராகத்தை வர்ணத்துக்கு எடுத்துக்கொண்டார். ‘விநாயக நினு வினா’ என்னும் வரிக்கு ஹம்சத்வனி ராக ஆலாபனை, தொடர்ந்து கல்பனா ஸ்வரங்கள் என கச்சேரியை விறுவிறுப்பாகத் தொடங்கினார். எவ்வளவோ பிரச்சினைகள், வேதனைகளுக்கு இடையே கச்சேரி கேட்க வரும் ரசிகர்களை அவசரப்படாமல் கச்சேரிப் பக்கம் திருப்பும் கலையை நன்கு அறிந்தவர் பிரபாவதி கணேசன். அன்றைக்கு அமோகமாக அவர் வாசித்த சுருட்டி ராக ஆலாபனை இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. தொடர்ந்து முத்துசுவாமி தீட்சிதரின் ‘ஸ்ரீ வெங்கடகிரிசமலோகயே’ கிருதியை மத்யமகாலத்தில் வாசித்தார். ரசிகர்களின் மனநிலை ஆசுவாசமானவுடன் பூர்விகல்யாணி ராக ஆலாபனையில் விஸ்தாரமான சங்கதிகளால் ராக ஆலாபனையைப் பரிபூரணமாக்கினார். அபசுரம் எட்டிப் பார்க்காத வாசிப்பும் ஸ்வர சங்கிலிகளால் கோத்த இசை வார்ப்பும் அந்த வித்வாம்சினியின் தனித்துவம். சுவாதி திருநாளின் ‘போஹிந்த்ர ஸயினம்’ பாடலை சுருக்கமான குந்தளவராளி ராக ஆலாபனையோடு வாசித்தார். சங்கராபரணம் ராகத்தை அன்றைய கச்சேரிக்கான பிரதானமான உருப்படியாக எடுத்துக்கொண்டு விஸ்தாரமான ஆலாபனையோடு வாசித்தார்.
“ராகம் தானம் பல்லவி ஒரு வீணைக் கலைஞரின் திறமையை, பெருமையைப் பளிச்சிட வைக்கும். பிரபாவதி நேர்த்தியான வாசிப்பும் ஆழமான பாடாந்தரமும் கொண்ட கலைஞர் என்பதால், அன்றைக்கு இரண்டு ராகங்களை எடுத்துக்கொண்டு வாசித்தார். அவர் தேர்வுசெய்த ராகங்கள் மோகனம் - கல்யாண வசந்தம். மோகனத்தை முதலில் வாசித்தார். அதன்பின் அந்த ராக சொரூபங்களைத் தொட்டுக் காட்டிவிட்டு, கல்யாண வசந்தம் ராகத்தில் பிரவேசித்தார். இரு வேறு ராகங்களை விளக்கும் தானம், பல்லவிக்கு ‘மோகன முரளிதர கோபாலா, மோகன முரஹர கிரிதரா’ என்னும் வரிகளை இரண்டு ராகங்களில் வாசித்தார். பெஹாக் ராகத்தில் ‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ..’ வாசித்து அன்றைய கச்சேரியை பிரபாவதி முடித்தபோது மனம் லேசானது. உடலில் தெம்பு கூடியது.” இதுதான் ஓர் இசைக் கலைஞருக்கும் ரசிகருக்கும் இடையே காலம் காலமாக நீடிக்கும் அலாதியான பந்தம்.
விருதும் வித்யாதானமும்
15.01.1941 அன்று பிறந்த பிரபாவதி கணேசன் 17.02.2021 அன்று காலமானார். 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நெடிய கலைப் பயணம் அவருடையது. பிரபாவதி கணேசனுக்குக் கலைமாமணி பட்டத்தைத் தமிழ்நாடு அரசு கொடுத்துக் கௌரவித்தது. மியூஸிக் அகாடமி அவருக்குச் ‘சிறந்த மூத்த வீணைக் கலைஞர்’ விருது வழங்கியது. அனைத்திந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் அங்கீகாரம் பெற்ற கலைஞரான பிரபாவதி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அநேக ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா என உலக இசை மேடைகளிலும் தன்னுடைய வீணையின் இனிய நாதத்தை ஒலிக்க வைத்தவர். ‘அம்பா ஜனனி’, ‘சோல் ஆஃப் வீணா’, ‘கிருஷ்ண கானம்’ உள்ளிட்ட இசைத் தொகுப்புகள் பிரபாவதி கணேசனின் கலை ஆழத்தை என்றென்றும் சொல்லிக்கொண்டிருக்கும். வீணைக் கச்சேரிகளைச் செய்வதுடன் தன்னுடைய இசைப் பணியை பிரபாவதி நிறுத்தாமல், நிறைய மாணவர்களுக்கு இசையை வித்யா தானமாக அளித்திருக்கிறார். அவரிடம் இலங்கைவாழ் தமிழர்கள் பலர் வீணை வாசிக்கக் கற்றுக்கொண்டனர். பிரபாவதி கணேசனின் கலை என்பது ஒரு பெரும் மரபின் தொடர்ச்சி. அவர் தன்னுடைய வீணையின் இனிய நாதத்தில் வார்த்திருக்கும் ஆபேரி, சங்கராபரணம், கதனகுதூகலம், நளினகாந்தி, கல்யாண வசந்தம் முதலிய ராகங்களில் அமைந்த பாடல்கள் எக்காலமும் காற்றில் கலந்திருக்கும்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago