திருச்சி வழியாகச் சென்றாலும் சரி, தஞ்சாவூர் வழியாகச் சென்றாலும் சரி, கல்லணை செல்லும் அனுபவமே தனி. ஒரு பெரும் பிரவாகமாக ஓடும் பிரம்மாண்டமான காவிரியின் கரைதான் சாலை. சுற்றிலும் பச்சை. சாலையின் இரு மருங்கிலும் வரிசையாகத் தூங்குமூஞ்சி மரங்கள், கண்ணுக்கு எட்டிய வரை பரவிக் கிடக்கும் நெல் வயல்கள், வரிசையாக தென்னை - வாழைத் தோப்புகள், இடையிடையே மாந்தோப்புகள்… கல்லணைப் பயணம் சாதாரண நாட்களிலேயே மனதை ஒரு அருவிக்குள் கொண்டுபோய் அமிழ்த்திவிடக் கூடியது. மழை நாட்களில் பயணிப்பது கூடுதல் சுகம். கார் போய்க்கொண்டிருந்தது. கண்கள் காவிரியிலேயே மிதந்துகொண்டிருந்தன.
உலகிலேயே காலத்தால் மிக முற்பட்டது, இன்னும் புழக்கத்தில் இருப்பது எனும் இரு சிறப்புகள் கல்லணைக்கு உண்டு. திருச்சிக்கு மேற்கே முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாகப் பிரியும் அகண்ட காவிரி, மீண்டும் ஒரு மாலைபோல நெருங்கி வரும் இடம் இது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் இங்கு கல்லணை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.
காவிரி நீரைத் தஞ்சைப் பகுதி முழுமைக்கும் திருப்பிவிட்டு, பாசனப் பரப்பையும் நெல் விளைச்சலையும் அதிகரிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது கல்லணைக் கட்டுமானம். 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் கல்லணையின் வடிவத்தை மேலும் மேம்படுத்தினர். காவிரியைப் பார்வையிட்ட பிரிட்டிஷ் ராணுவப் பொறியாளர் கேப்டன் கால்டுவெல், ஏராளமான தண்ணீர் காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தில் வீணாகப் பாய்வதையும் பாசனத்துக்கு மிகக் குறைவான தண்ணீரே கிடைப்பதையும் உணர்ந்தார். அணையின் உயரத்தைக் கொஞ்சம் உயர்த்தலாம் என்றார். அணை உயர்ந்தபோது நீரைத் தேக்கிவைக்கும் அளவும் கணிசமாக உயர்ந்தது. கொள்ளிடம் ஆற்றுக்குத் தண்ணீர் பாயும் பகுதியில் அணையின் கீழ்ப்புறத்தில் மதகுகளை அமைத்து, அணையில் வண்டல் படியாமல் அவ்வப்போது திறந்துவிடலாம் என்று மேஜர் சிம் கூறினார். தொடர்ந்து, கொள்ளிடத்தின் குறுக்காக மணற்போக்கியை சர் ஆர்தர் காட்டன் கட்டினார். பின்னாளில், கல்லணைக் கால்வாய் கட்டப்பட்டது. ஆக, காவிரி நான்கு நதிகளாக இங்கு பிரிகிறது. காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்.
கல்லணையால் எத்தனை உயிர்கள் வாழ்கின்றன என்று கேட்டால், சொல்லிவிடலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வேளையில், கல்லணை வழியே பாயும் காவிரி அரிசியைத்தான் சாப்பிடுகிறோம் சோறாக, இட்லியாக, தோசையாக… ஆமாம், தமிழகத்தின் மூன்றில் ஒரு பகுதி உணவு காவிரிப் படுகையிலிருந்தே வருகிறது. கல்லணையால் வாழ்வது வேறு; கல்லணையில் வாழ்வது வேறு. பரமசிவம் கல்லணையில் வாழ்பவர்!
கல்லணைக்குள் கார் நுழையவும் சங்கு ஒலிக்கவும் சரியாக இருந்தது. “இந்த சங்கு சத்தத்தை நல்லாக் கவனிச்சுக்குங்க” என்றார் உடன் வந்த லாரன்ஸ்.
“கல்லணையில வாழறதுங்கிறது ஒரு வகையில கடலுக்குள்ள வாழறது மாதிரிதான். காவிரில தண்ணி இல்லாத நாள்ல சூழல் வேற. தண்ணி வந்துடுச்சுன்னா, கரைக்கு நடுவுல கடலை விட்டா மாதிரி தண்ணி பெருகும். அதுவும் மழை நாள்னா, எப்போ என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. கொஞ்சம் கணிப்பு தப்பி எதாவது ஒரு ஆத்துல தண்ணி கூடிப்போச்சுன்னா, கரை உடைச்சுக்கும். குடி அழிஞ்சு போவும். நாலாப் பிரியுற காவிரியை ஒவ்வொரு அணைக்குள்ளேயும் எவ்வளவு தண்ணியை விடணும்னு யூகிச்சு அதிகாரிங்க சொல்றதுக்கு ஏத்த மாதிரி தண்ணியைக் கையாள்றதுதாம் இந்த லஸ்கர் வேலையில முக்கியமான அம்சம். ஊரு உலகமெல்லாம் மழை வெள்ள நாள்ல பள்ளத்தைவிட்டு மேட்டை நோக்கி ஓடும். ஆனா, அப்பம்தான் லஸ்கருங்க பள்ளத்தை நோக்கி ஓடுவாங்க. உயிரைப் பணயம் வெச்சு ஓடுற வேலை இது.
இந்த சங்கு சத்தத்துக்கு ஏராளமான அர்த்தம் உண்டு. இப்போ ஊதுற சங்கு லஸ்கருங்க காலையில வேலைக்கு வந்து ஒண்ணுகூட வேண்டிய நேரத்தைக் குறிக்கிறது. இப்போ மணி ஏழு. இதே மாரி ராத்திரி ஏழு மணிக்கும் சங்கு ஊதும். அது ராத்திரி வேலை நேரத்தைக் குறிக்க ஊதுறது. அப்போவும் லஸ்கருங்க ஒண்ணு கூடி, வேலையப் பிரிச்சுக்கிட்டுப் பிரியணும். மத்த நேரத்துல சங்கு ஊதுச்சு, தொலைஞ்சுச்சு. ஏதாவது ஆபத்து அவசரம்னு அர்த்தம். எல்லாரையுமே பரபரப்பு தொத்திக்கும்.
அந்தோ சின்ன அறை தெரியுதே, அதைத்தான் பாரா ஷெட்டுனு சொல்வாங்க. லஸ்கருங்க கூடுற இடம். பரமசிவம் அங்கேதான் இருப்பார்.”
சுமார் எட்டடி நீளம். ஆறடி அகலம். அவ்வளவுதான் அந்த அறை. பாரா ஷெட் என்கிறார்கள். அறையின் மூலையில் கிணறுபோல் படிக்கட்டுகளோடு இருக்கும் அமைப்பில் சேரும் தண்ணீர் அணையின் கொள்ளளவைக் காட்டுகிறது. ஒரு மழைக்கு நான்கு பேர் ஒண்டக்கூட முடியாது. அந்த அறைதான் காவிரியின் போக்கைத் தீர்மானிக்கிறது. பாரா ஷெட்டுக்குள் நுழைந்தபோது, பரமசிவம் தண்ணீர் அளவைப் பார்த்துவிட்டுப் படியேறிக்கொண்டிருந்தார். கல்லணையில் பணியிலிருக்கும் 30 லஸ்கர்களில் பரமசிவமும் ஒருவர். இந்த லஸ்கர்கள்தான் இங்கே எல்லாமும். தண்ணீர் கட்டுப்பாடு, அணைப் பராமரிப்பு வேலைகளோடு மின் வேலைகளும் தெரிந்தவர் பரமசிவம். தண்ணீரையும் மின்சாரத்தையும் ஒருசேரக் கையாள்பவர் என்பது அவருடைய சிறப்பம்சம்.
“எனக்குச் சொந்த ஊரே இதுதாங்க. நான் மட்டும் இல்ல, இங்கெ உள்ள லஸ்கருங்க எல்லாருமே ஒண்ணு இந்த ஊரா இருப்பாங்க, இல்லாட்டி பக்கத்தூரா இருப்பாங்க. அந்தக் காலத்துலேர்ந்தே இப்படித்தான். ஏன்னா, தண்ணியைச் சமாளிக்கிறது மட்டும் லஸ்கருங்க வேலை இல்ல; மழை, வெள்ள நாள்ல தண்ணியோட போராடணும்னா சுத்துப்பட்டு ஊர்க்காரங்க தொணை இல்லாம எதுவும் நடக்காது. அதே மாரி திடீர்னு எங்கேயாவது கரை உடைச்சுக்கிட்டா ஊருக்குள்ள வெள்ளம் பூந்துரும். சீறிக்கிட்டு வருவாங்க. சொந்த ஊர்க்காரனைப் பார்த்தா கோவம் காத்துல கரைஞ்சுபோயிரும். அதாம் காரணம்.
இஞ்சினீருங்க மூளைன்னா, லஸ்கருங்க கை, கால். அப்படித்தான் எங்க உத்தியோகம். மூளை நெனைக்கிற வேகத்துல கை, கால் ஓடியாடணும். ரெண்டும் கூடினாத்தான் தண்ணியைக் கையாளலாம். அதனால, வேகம் முக்கியம். குளத்துல நீச்சல் அடிக்கிறது வேற, கடல்ல நீச்சல் அடிக்கிறது வேற, ஆத்து வெள்ளத்துல நீச்சல் அடிக்கிறது இது எல்லாத்துக்கும் மேல. லஸ்கர் வேலையில இருக்குற எல்லாருக்குமே நீச்சல் அத்துபடியா இருக்கணும். அதைப் பார்த்துதாம் வேலைக்கே ஆள் எடுப்பாங்க.
ஜூன் மாசம் பன்னெண்டாம் தேதி வருசா வருசம் மேட்டூர்ல தண்ணி தொறப்பாங்க. அப்போ ஆரம்பிச்சா, அடுத்த ஜனவரி இருபத்தியெட்டு வரைக்கும் தண்ணியோட பொழப்பு ஓடும். ஆறு மாசம் இப்படி. மிச்ச ஆறு மாசம் கரைப் பராமரிப்பு, மரப் பராமரிப்பு, ரெகுலேட்டர் பராமரிப்புன்னு கிரீஸ் அடிச்சு, ஆயில் அடிச்சு, மதகுகள்ல ஓட்டை ஒடைசலைச் சரி பார்க்குறதுல ஓடும். இதுக்கு இடையிலேயேதான் வெள்ளக் காலத்தை எதிர்கொள்ள ஆயிரக்கணக்குல மண் மூட்டை, மூங்கில் கழியெல்லாமும் தயாரிச்சு வெச்சுக்கணும். இதுல அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த மூணு மாசம்தாம் சவாலு. கர்நாடகத்துலேர்ந்து காவிரில வர்ற தண்ணி போக, இந்தப் பக்கம் கரூர், ஈரோடு; அந்தப் பக்கம் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சின்னு மொத்த மழைத் தண்ணியும் இங்கே வந்து விழும். ரெண்டு லட்சம் கன அடிலேர்ந்து ஏழு லட்சம் கன அடி தண்ணி வரைக்கும் சர்வ சாதாரணமா ஏறி எறங்கும். நெனைச்சுப் பாருங்க, கடலுதான். ஆனா, பேயாட்டம் பாயுற தண்ணில வாயில கயித்தைக் கவ்விக்கிட்டு இந்தக் கரையிலேர்ந்து அந்தக் கரைக்கு நீந்திக்கிட்டிருப்போம்.”
கால் மணி நேரத்துக்கு ஒரு முறை இடையிடையே தண்ணீர் அளவை எட்டிப் பார்த்துவிட்டு வந்து பேசுகிறார் பரமசிவம்.
“எங்க வேலை 24 மணி நேர வேலை. ஷிப்ட் 12 மணி நேரக் கணக்குன்னாலும் இந்த மாதிரி வெள்ளக் காலங்கள்ல அதெல்லாம் ஒரு கணக்கு கிடையாது. ராப்பகல் பார்க்காம ஓடிக்கிட்டு இருப்போம். எங்க வீடு, வாசல், வாழ்க்கை எல்லாமே இந்த அணைப் பகுதிக்குள்ள இருக்குற அரசாங்கக் குடியிருப்புலதாம். அதாவது, இதை விட்டு வெளியே போகணும்னாலே, நாங்க அனுமதி வாங்கணும். அதனால, வீட்டு மளிகைச் சாமான் வாங்குறதுல ஆரம்பிச்சு புள்ளைங்கள ஆஸ்பத்திரி அழைச்சுக்கிட்டு போறது, சொந்தக்கார வீட்டு கல்யாண, கருமாதிக்குப் போறது எல்லாத்துக்குமே எங்க வீடுகள்ல பொம்பளைங்களைத்தான் அனுப்புவோம்.
இது 24 மணி நேர வேல. சொன்னா ஆச்சரியப்படுவீங்க, அரசாங்க வேல; ஆனா வார விடுமுறைகூடக் கிடையாது. ஏதோ, உடம்புக்குக் கடுமையா முடியலை; ஆயி, அப்பன் செத்துட்டாங்க, பொண்ணு புள்ளைக்குக் கல்யாணம் காட்சி இப்பிடின்னாதான் லீவு எடுத்துக்குவோம். அதுவும் அடுத்த நாளே ஓடியாந்துருவோம். கல்யாணத்து அன்னைக்குக்கூட உடனே ஓடியாந்தவங்க, அம்மா செத்ததுக்குக்கூட சாயங்காலமா போயி கொள்ளி போட்டுட்டு ஓடியாந்தவங்க எல்லாம் உண்டு.
இதைக்கூட கொறையா சொல்லலை; ஒரு பெருமையாத்தான் சொல்றேன். ஏன்னா, நாங்களும் குடியானவங்க குடும்பத்துல பொறந்தவங்க. மழை வெள்ள நாள்ல நாம ஒரு நாள் சவுரியம் பார்த்தோம்னா, எத்தனை பேர் வாழ்க்கை பாதிக்கப்படும்னு எங்களுக்குத் தெரியும். தண்ணியைக் கையாள்றது பெரும் கஷ்டம்னாலும், காவிரியோட கெடக்குறது பெரிய சந்தோஷம். இங்கே தண்ணி வந்தாக்காதான் தமிழ்நாடு நிம்மதியா பசியாற முடியும், இல்லையா?” என்ற பரமசிவத்திடம் கேட்க எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் இருந்தது.
“மழை நாள்ல கும்மிருட்டுல கடல் மாதிரி சீறி வர்ற தண்ணியைப் பார்க்கும்போதுகூடப் பயம் இருக்காதா?”
“வேலையைத் தொடங்கும்போதே இங்கெ உள்ள முனியசாமியைக் கும்பிட்டுட்டுதான் கெளம்புவோம். அது காவிரிக்குத் தலைச்சம் புள்ள மாரி. அப்புறம், தண்ணியே வராம வறண்டு கெடக்கும்போதும் சரி, அடிச்சிக்கிட்டு தண்ணி வரும்போதும் சரி, எப்ப மலைப்புத் தட்டுதோ அப்ப கடைசிக் கட்டமா, அம்மான்னு கீழ வுழுந்து கும்புடுவோம். சத்தியமா எல்லாம் சரியாயிரும். மத்தபடி என்னைக்கும் பயம் கெடையாது. ஏனா, இது ஒரு வகையில அம்மா, ஒரு வகையில சாமி!”
இரு கைகளாலும் காவிரியை அள்ளி முகத்தோடு ஒற்றிக்கொள்கிறார் பரமசிவம்.
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
(அடுத்த வெள்ளி, அடுத்த மனிதர்..)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago