வெள்ளம், வறட்சி இரண்டையும் அனுசரித்த அற்புதக் கலாச்சாரம் தஞ்சை மண்ணுடையது.
காவிரி மாவட்டங்களில் வீட்டுக்கு வெளியில் அடிவைத்தால் தண்ணீர். நடந்தால் சேறு. கிராமங்களெல்லாம் தீவுகள். வயல் வரப்பும் ஆற்றங்கரையும் தவிர, வேறு பாதை இருக்காது. பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர்க் காடு. புனல் நாடு என்று புகழப்பட்ட கீழத்தஞ்சை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இப்படித்தான். கோடை பிறந்துவிட்டால் வயல்களெல்லாம் பட்டக்காலாகி ஒரே பொட்டலாக விரிந்திருக்கும். எங்கேயிருந்தும் எங்கேயும், இருபது முப்பது மைல் கூட, வயல் குறுக்கே இஷ்டத்துக்கு நடக்கலாம். சித்திரா பௌர்ணமியில் எட்டுக்குடிக்கு வரும் காவடிகளைப் பார்க்க வேண்டும். வண்டிக்காலின் குடத்தில் கோத்திருக்கும் ஆரங்கள்போல எல்லாத் திசையிலிருந்தும் வயல் குறுக்காகவே சரம்சரமாக காவடிகள் வந்து குவிந்துகொண்டிருக்கும். மழைக்காலத்தில் ஒரே பாதையாக இருக்கும் தொடர்பு கோடையில் இப்படி ஓராயிரம் பாதைகளாகிவிடும். சூழலியல் நோக்கில் கீழத்தஞ்சை தனிப் புவிப்பரப்பு. வெள்ளமும் உண்டு, வறட்சியும் உண்டு. இடைப்பட்ட தண்ணீர்த் தட்டுப்பாடும் உண்டு. இவற்றை எதிர்கொண்டு மீள்வதற்கு மக்கள் காலங்காலமாகத் தங்களை எப்படியெல்லாம் தகவமைத்துக்கொண்டார்கள்! அதில் உருப்பெற்ற பண்பாட்டுக் கூறுகள்தான் எத்தனையெத்தனை!
இந்தப் புனல் நாட்டில் ஒரு குளம் பிறந்துதான் கிராமம் பிறக்கும். குளம் வெட்டிய மண்ணைக் கொண்டு மேடுபடுத்தி அதன்மேல் வீடுகளைக் கட்டுவார்கள். இப்படித்தான் கமலாலயம் என்ற தெப்பக்குளத்தைச் சுற்றி திருவாரூர் பிறந்தது; ஹரித்ராநதி என்ற தெப்பக்குளத்தைச் சுற்றி மன்னார்குடி பிறந்தது. தெருவுக்கு முன்புறம் ஒரு நீராதாரம்; வீட்டின் பின்புறக் கேணியில் அதிலிருந்து ஊற்றாகக் குடிநீர். தெருவின் பின் னால் நீள ஓடையாக வெட்டுவார்கள். வெட்டு மண் விழுந்த இடத்தில் முன்தெருவின் மடிப்பாக அடுத்த தெரு. தெருவுக்குப் பின் ஒடை இருக்கும். ‘உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்’ என்ற திருப்பாவைத் தொடரின் பொருளைக் கீழத் தஞ்சையில் கண்ணால் பார்க்கலாம்.
வாய்க்காலைத் தாண்டுவதற்கு பனை அல்லது தென்னை மரத்தைத் குறுக்காகப் போட்டிருப்பார்கள். வாரி, ஆறு என்றால் மூங்கில் பாலம். கால்சட்டை, மேல்சட்டையைக் கழற்றிப் புத்தக மூட்டைக்குள் திணித்துக்கொண்டு ஆறு, வாரி, வாய்க்காலில் இறங்கித் தாண்டி குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற கிராமங்கள் ஏராளம்.
சாகுபடி சாமர்த்தியம்
இந்தச் சூழலில் நெல் சாகுபடி ஒரு சாமர்த்தியம். இளம் பயிராகவே இருந்து ஐப்பசி-கார்த்திகை மழையில் மூழ்கிவிடக் கூடாது. கொஞ்சம் முந்திக்கொண்டாலோ அடைமழைக் காலத்தில் பாளையின் பூ கொட்டிச் சேதமாகிவிடும். ஆற்று வரத்தில் நடவு, பருவமழையில் பயிர் வளர்ச்சி, மழை ஓயும் மார்கழியில் கதிர் முற்றி, தையில் அறுவடை. இப்படிப் பருவங்களோடு நீயா நானா என்று விவசாயிகள் சாமர்த்தியம் பண்ணுவார்கள். சாமர்த்தியம் பலிக்க பயணங்களையும் திருமணங் களையும் தவிர்ப்பார்கள். கிராமங்களில் தண்ணீர் வடியாத கோட்டகம் உண்டு. இதற்குத் தகுந்த நெல்வகை நாற்றை வளரவிட்டுப் பறித்து கோட்டகத்தில் நட்டுவைப்பார்கள்.
பாலாடை மரம்
தண்ணீர்த் தட்டுப்பாடு என்றால் வாய்க்காலில் கவணை போட்டுத் தண்ணீர் பாய்ச்சுவார்கள். முடியாதபோது இறைகூடை பிடித்து இறைக்க வேண்டும். முக்காலி நட்டுப் பாலாடை மரத்தால் இறைப்பதும் உண்டு. இறைகூடையும், பாலாடை மரமும் எதற்கு ஆகும் என்று கேட்கலாம். நாகை, திருத்துறைப்பூண்டி பகுதிகளில், பல நேரங்களில் இவற்றைக் கொண்டுதான் பயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். மழை வேண்டி சிவன் கோயில் நந்திக்கு மிளகுக் காப்பு இடுவார்கள். நந்தியை நீரில் நிறுத்தி வைப்பதும், ஐயனார் கோயில் குதிரையின் காலில் சீட்டு எழுதிக் கட்டுவதும் நடக்கும்.
தரையிலிருந்து நாலடி உயரத்தில் திண்ணைகள் வைத்து வீடுகள். இது வெள்ளத்தில் தற்காப்புக்கான ஏற்பாடு. புயலுக்கும் அசைந்துகொடுக்காத பிரமிட் போன்ற அமைப்பில் ஓட்டுக்கூரை. வைரம்
பாய்ந்த பனைவாரைகள். கவிழ்த்தும் மல்லாத்தியும் வரிவரியாக வேயப்பட்டிருக்கும் நாட்டு ஓடு. மல்லாத் தியிருக்கும் ஓட்டு வரிசை மழை பெய்யப்பெய்ய தண்ணீரை வாங்கித் தரைக்கு அனுப்பிவிடும். சுவர் நனையாமல் இருக்க கூரை வாரியை நீட்டி வைத்திருப்பார்கள். இடையில் பத்து நிமிடம் வெயில் காட்டினாலும் ஓட்டில் சுவர்ந்திருக்கும் தண்ணீர் ஆவியாகி கூரை இலேசாகிவிடும். சூழ லோடு இருந்த முழுமையான இயைபு அது.
மழையை வெருட்டலாம்
வெளியே வர இயலாதவாறு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து மழை கொட்டும். நாளைக்கு இரண்டு வேளை போரில் இருக்கும் காய்ந்த வைக்கோலை மாட்டுக் கவணையில் வைப்பதுதான் வேலையாக இருக்கும். தாழங்குடைகள் புழக்கத்தில் இருந்தன. தென்னங்கீற்றை மடித்து நெட்டுவாக்கில் இணைத்துக் குடலையாகப் போட்டுக்கொண்டு மழையில் நடக்கலாம். உடலோடு ஒட்டியிருப்பதால் பெருங்காற்றுக்கும் தாங்கும். அடைமழையின்போது பொழுது மறைந்ததைப் பீர்க்கு பூப்பதை வைத்துத் தெரிந்துகொள்வார்களாம். விடாது பெய்யும் மழையை வெருட்டி விரட்டுவார்கள். ஆண் பிள்ளையை அம்மணமாக நிற்கவைத்துக் கொள்ளிக் கட்டையைக் கொடுத்து வானத்துக்குக் காட்டி ‘சுட்டுவிடுவேன்’ என்று சொல்லச் சொல்வார்கள். பேன் ஒன்றை நத்தாங்கூட்டுக்குள் வைத்துப் புதைப்பார்கள்.
மழைக்காலத்தில் பச்சைக் காய்கறிகளைத் தேட மாட்டார்கள். கத்தரி, கொத்தவரை, பரங்கி, அவரை வத்தலும், மொச்சை, கொண்டைக்கடலையும் இருப்பில் இருக்கும். மாங்காயும் வெட்டுவத்தலாக, அடைமாங்காயாக இருக்கும். கருவாடும் உப்புக் கண்டமும் வேண்டியது வைத்திருப்பார்கள். உப்புக் கண்டத்தில் சாம்பார்கூட வைப்பது உண்டு.
சோழர்காலத்து நாணல்காரர்
ஆற்றுக் கரைகளை வெள்ளம் அரிக்காமல் இருக்க மூங்கில்படல்களைக் கொண்டு முடைசல் கட்டிவைப்பார்கள். கரை அரிப்பைத் தடுக்க நாணல் வளர்ப்பது உண்டு. பொதுப்பணித் துறை கரைக் காவலர்களை ‘நாணல்காரர்கள்’ என்றே அழைத்தோம். ஆனால், இது இன்றைக்கு வந்த சொல்லோ ஏற்பாடோ அல்ல. சோழர்கள் காலத்திலேயே நாணல்காரர் என்ற ஏற்பாடு இருந்தது என்று பின்னர் தெரிந்துகொண்டேன். அநேகமாகச் சிறிது காலம் முன்புவரை தரித்திருந்த சோழர்கால ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று.
கோடையில், வீட்டுக்கு முன்னால் காற்றுக் கொட்டகையும், கோடைப் பந்தலும் பரவலாகத் தென்படும். நகரங்களில் கடைத்தெரு முழுதும் கோடைப்பந்தல் போட்டிருப்பார்கள். மன்னர் காலத்துச் சாலைகளில் ஆங்காங்கே மண்டபமும் அதற்கு எதிரே குளமும் அமைந்திருக்கும். சில ஊர்களில் இரட்டைக்குளம் என்று அருகருகே இரண்டு குளங்கள் இருக்கும். ஒன்று புழங்குவதற்கு, மற்றது குடிநீருக்கு. குடிநீர்க் குளத்தில் துணி துவைக்கவோ குளிக்கவோ அனுமதிக்க
மாட்டார்கள். மீன் பிடிக்கும்போது குளத்தைத் தடுத்து தண்ணீரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு இறைத்துவிடுவார்கள். இப்படித் தண்ணீரைக் குளத்திலிருந்து வெளியேற்றாமலேயே மீனைப் பிடித்துக்கொள்வார்கள். குளத்தில் தண்ணீர் இஞ்சிப்போகும் நேரத்தில், காலம் ஒத்து வந்தால் அதிலேயே விதைவிட்டு நாற்று வளர்த்துக் கொள்ளலாம். மனிதர்களுக்கு குளங்களில் படித்துறை இருப்பதுபோலவே மாடு இறங்கு வதற்கும் கரையைச் சரித்துத் துறை இருக்கும்.
காவிரிக்கு வந்த கங்கை
இங்கே தண்ணீர் ஒரு பொருளாதார காரணி மட்டுமல்ல. பாவத்தைக் கழித்துத்தரும் தீர்த்தமாகவும் பார்க்கப்படுகிறது. ஐப்பசி கடைசியில் மயிலாடுதுறை காவிரியில் தீர்த்தவாரியும், கடைமுகம் என்ற முழுக்கும் நடைபெறும். பூம்பு காரில், காவிரியின் கழிமுகத்தில், ஈமக்கடன் செய்கிறார்கள். காசியைவிட வீசம் அதிகம் என்று காவிரியின் தீர்த்தத்துக்கு மேன்மை கூறுவார்கள். காவிரிப் பகுதியில் கங்கைகளும் உண்டு. தஞ்சையில் சிவகங்கை, கங்கைகொண்டசோழபுரத்தில் சோழ கங்கம், வாஞ்சியத்தில் குப்தகங்கை என்று குளங்கள் உருவாகி மனத்தளவில் கங்கை இங்கே வந்திருக்கிறது. கங்கையிலிருந்து புலம்பெயர்ந்து காவிரிக்கு வந்தவர்களின் பிரிவாற்றாமை என்று சொல்லத் தோன்றலாம்.
மனித இனமும் பண்பாடும் சுற்றுச்சூழலுக்கு வெளியில் இல்லை; அதன் அங்கங்கள். அடுத்த உலகத்துக்கு இந்தச் சமுதாயம் நடத்தும் ஆன்மபேரத்தில் தண்ணீர்தான் மையம். தண்ணீரின் இருப்புக்கும் இல்லாமைக்கும் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் சமுதாயம் கதைகள் வழியாகவும் புராணங்கள் மூலமும் அதைத் தன் வசப்படுத்தவும் முயற்சிக்கிறது.
- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago