மாணவர் தலைவராக அரசியலில் அடியெடுத்துவைத்தவர் தா.பாண்டியன். 1953-ல் காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவர் மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது நடந்த நிகழ்வொன்று ஏற்றுக்கொண்ட கொள்கை, மனதுக்குச் சரியென்று உணர்ந்த கருத்து ஆகிய இரண்டிலும் இளம் வயதிலேயே அவர் எவ்வளவு உறுதியோடு இருந்தார் என்பதற்குச் சான்று.
திமுக எழுச்சி பெறத் தொடங்கிய காலம் அது. அழகப்பா கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்புரையாற்ற பேராசிரியர் க.அன்பழகன் அழைக்கப்பட்டிருந்தார். மாணவர் தலைவரான தா.பா. நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றிருந்தார். இருவரது பேச்சும் கம்யூனிஸ்ட் கருத்து நிலைப்பாட்டுக்கும், திராவிட இயக்கத்தின் நிலைப்பாட்டுக்கும் இடையிலான விவாதமாக மாறியது. இருவருமே அவரவர் கருத்துகளில் உறுதியாக நின்று பேசினார்கள். கடைசியில் கல்லூரியின் முதல்வர் வ.சுப.மாணிக்கனார் தலையிட்டு விவாதத்தை முடித்துவைத்தார். பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின், திமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பில் இருந்தபோது இச்சம்பவத்தை நினைவுகூர்ந்து தா.பா.வைப் பாராட்டினார் க.அன்பழகன்.
அண்ணனின் வழியில்
கொடைக்கானல் மலைக் குன்றுகளும் ஆறுகளும் சூழ்ந்த அழகிய நிலப் பகுதியான வாளாந்தூர் சொக்கதேவன்பட்டி தா.பா.வின் பூர்விக கிராமம். இவரது தந்தை டேவிட், தாய் நவமணி இருவரும் ஆசிரியர்கள். வெள்ளிமலைப்பட்டிக்கு ஆசிரியர் பணிக்காக வந்தவர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள். அந்த இடம் டேவிட் பண்ணை என்ற பெயரில் இப்போதும் குறிப்பிடப்படுகிறது.
இவரது அண்ணன் செல்லப்பா, இந்திய அளவில் புகழ்பெற்ற பொருளாதாரப் பேராசிரியர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் அவர் பணிக்குச் சென்றபோது, அங்கு கல்வி கற்கச் சென்றவர் தா.பா. கம்யூனிஸ்ட் ஆதரவாளரான அண்ணன் வழியில் இவரும் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
ஜீவாவின் மாணவர்
திராவிட இயக்கத்தின் வகுப்புரிமை அரசியலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க அரசியலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் இரண்டு முக்கிய பாகங்கள் என்பதை உணர்ந்துகொள்வதில் சில குறைபாடுகள் இருந்த காலத்தில் அதற்கான இணைப்புப் பாதையை உருவாக்க முயன்றவர் ப.ஜீவானந்தம். அதனை வளர்த்தெடுக்க முயன்றவர் தா.பா. ஒடுக்குமுறைக்கு எதிரான திராவிடக் கொள்கைகளுக்கும் கம்யூனிஸ சித்தாந்தத்துக்கும் இடையில் உள்ள ஆழமான கருதுகோள்கள் பற்றி ஆழமாகச் சிந்தித்தவர் தா.பா.
காரைக்குடி நகரத்தோடு பிரிக்க முடியாதவாறு இரண்டறக் கலந்தவர் ஜீவா. காரைக்குடி கம்பன் விழா ஜீவாவைக் கட்டித் தழுவி கம்பராமாயணத்திலுள்ள மானுடப் பெரும் பரப்பை இலக்கிய அன்பர்களுக்கு எடுத்துக்காட்ட வைத்தது. ஜீவாவின் வாழ்க்கையில், காரைக்குடிக்கு அருகில் அமைந்த சிராவயல் ஆசிரமம், சாதி ஒழிப்புக்கு இந்திய அளவிலான பெருமுயற்சி. இங்கு ஜீவாவுக்கும் தா.பா.வுக்கும் இடையில் உருவான தோழமை, அரசியல் தோழமையாக, இலக்கியத் தோழமையாக வளர்ச்சிபெற்றது. ஜீவாவின் தலைமை மாணவராகத் தன்னை மாற்றிக்கொண்டார் தா.பா. காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தா.பா. விரிவுரையாளராகப் பணியாற்றியபோது, அவரிடம் படித்த மாணவர்களுள் பழ.கருப்பையாவும் ஒருவர்.
ஒரு புதிய அரசியல் கலை இலக்கியச் சூழலில் தமிழகத்தின் மண்சார்ந்த கலைப் பண்பாட்டை மறு உருவாக்கம் செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 1963-ல் கோவையில் நடத்தப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளர்கள், படைப்பாளிகள், திரைப்படக் கலைஞர்கள், நாட்டுபுறக் கலைஞர்கள் என்று அனைவரும் கலந்துகொண்ட அந்த மாநாட்டில், இதற்கு யாரைப் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யலாம் என்பதை யோசித்து யோசித்து ஜீவா கடைசியில் தேர்ந்தெடுத்தது தா.பா.வை. அவரை விரிவுரையாளர் பணியிலிருந்து விலக வைத்து, கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளராக்கினார் ஜீவா. அன்றிலிருந்து, கட்சியின் முழு நேர ஊழியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் தா.பா. கட்சியின் கிளைச் செயலாளர் பொறுப்பிலிருந்து தேசிய நிர்வாகக் குழு வரை பல்வேறு பொறுப்புகளில் அவர் பணியாற்றியுள்ளார். ஒன்பது ஆண்டுகள் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பும்கூட.
எழுத்தும் பேச்சும்
உலகளவிலான பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் பிரதிநிதியாக அரசியல் களத்தில் நின்றாலும் தமிழ் அடையாளத்தையும் இறுகப் பிடித்து நின்றவர் அவர். அரசியல் மேடைகளை இலக்கிய மேடையாகவும் இலக்கிய மேடைகளை அரசியல் மேடையாகவும் மாற்றிவிடுகிற ரசவாதம் அவருக்கு வாய்த்திருந்தது. ஆழ்ந்தகன்ற தமிழ் இலக்கிய வாசிப்பும் தமிழர் நலனில் அவர் காட்டிய தனி அக்கறையுமே அதற்குக் காரணம். அரசியல் மேடைகளில் எழுச்சி, நகைச்சுவை, கருத்தாழம் என்று ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தனித்தன்மை இருக்கும். இவை மூன்றையுமே தன் பேச்சில் ஒருசேர உள்ளடக்கிக்கொண்டவர் தா.பா. அவரது பேச்சினிடையே எப்போதுமே பழந்தமிழ் இலக்கியங்களின் சொற்றொடர்கள் பிரித்துப் பார்க்க முடியாதவாறு இழையோடும். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையிலும் அவரது பேச்சு அனைவராலும் கவனிக்கப்பட்டது.
தா.பா. ஒரு தேர்ந்த பத்திரிகையாளராகவும் முத்திரையைப் பதித்தவர். பல பத்திரிகையாளர்களை உருவாக்கியவர். ஜீவாவுடன் இணைந்து ஜனசக்தி ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இவர், பின்பு அப்பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். ஜனசக்தியை ஒரு நாளிதழாகக் கொண்டுவர வேண்டும் என்று முயன்று வென்றார். எனினும் அதைத் தொடர முடியவில்லை. ஜனசக்தியில் அவர் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுதிவந்ததில் ‘சவுக்கடி’, ‘கடைசிப் பக்கம்’ ஆகியவை முக்கியமானவை. அரசியல், பொருளாதாரம், சமூகம் என்று தா.பா.வின் கட்டுரைகளில் பல்வேறு கருதுகோள்கள் விரவிக் கிடக்கும். வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 1989, 1991 ஆகிய இரண்டு பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
உலகத் தமிழர்களின் குரல்
உலகில் எந்த மூலையில் தமிழர்க்குப் பாதிப்பு என்றாலும் அவரது குரல் உரத்து ஒலித்தது. மாநிலச் செயலாளராக தா.பா. பொறுப்பில் இருந்த காலத்தில் இலங்கையில் தமிழர்களின் மீது பெரும் தாக்குதல் நடைபெற்றது. அப்போது நான் அவருடன் துணைச் செயலாளராகப் பணியாற்றிய காலம். இலங்கை அரசு தமிழ் மக்களின் மீது தொடுத்த போரை நிறுத்த வேண்டும் என்று 2008 அக்டோபர் 2-ல் அவர் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியல் களத்தில் ஒரு அழுத்தத்தை உருவாக்கியது. பிஹார், மஹாராஷ்டிரம், கேரளம், ஆந்திரம் போன்ற பல மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளையும் தமிழர் நலனுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க வைத்தார் தா.பா.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே மரணத்தைத் சந்தித்து மீண்டவர் அவர். 1991-ல் ராஜீவ் காந்தியின் உரையை மொழிபெயர்க்க மேடையில் இருந்தவர், வெடிகுண்டுத் தாக்குதலின்போது மேடையிலிருந்து தூக்கி வீசப்பட்டார். அதன் பிறகும் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து தனது எஞ்சிய கடமையையும் நிறைவுசெய்திருக்கிறார். தோழர் தா.பா.வின் பன்முக ஆளுமை அனைத்திலும் சமூக மாற்றத்துக்கான அனல் எப்போதும் வீசிக்கொண்டே இருந்தது. அவரது நினைவிலும் அந்த அனல் வீசிக்கொண்டே இருக்கும். சிற்பி பாலசுப்ரமணியம் சொன்னதுபோல என்றும் ‘தகிப்பாய் இருப்பார் தா.பா’.
- சி. மகேந்திரன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago