வாயேஜர்-2: மீண்டும் தொடரும் உரையாடல்

By செய்திப்பிரிவு

வாயேஜர்-2 விண்கலத்தை நாஸா செலுத்திய 44 ஆண்டுகளில் அந்தக் கலம் யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்களைக் கடந்து விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் சென்றுகொண்டிருக்கிறது. இப்படியாக, மனிதர்களின் விண்வெளித் தேடலில் எல்லைகளைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது!

1,200 கோடி மைல்கள் தொலைவில் சென்றுகொண்டிருக்கும் இந்த முன்னோடி விண்கலத்தைத் தொடர்புகொள்ளும் அமைப்பை நாஸா கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானது. புவிக்கும் இந்த விண்கலத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பில் கடந்த ஓராண்டு காலமாக நிலவிய மௌனம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஆம்! அந்தத் தகவல்தொடர்பு அமைப்பை மறுபடியும் நாஸா உயிர்ப்பித்திருக்கிறது. இதன் மூலம் தொலைதூரங்களைத் துழாவிச் செல்லும் அந்தக் கலத்துக்கு மனித குலம் ‘ஹலோ’ சொல்லும் திறனை நாஸா மீட்டுருவாக்கியிருக்கிறது.

சூரியக் குடும்பத்திலிருந்து விடுபட்டு, வாயேஜர்-2 செல்லும் திசை காரணமாக ஒட்டுமொத்த உலகத்திலிருந்தும் ஒரே ஒரு அலைவாங்கியிடமிருந்துதான் (ஆன்டெனா) அந்த விண்கலம் கட்டளைகளைப் பெற முடியும். அதன் பெயர் ‘டிஎஸ்எஸ் 43’, அது ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் இருக்கிறது. இது ‘டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்’ (டிஎஸ்என்) என்ற வலைப்பின்னலின் ஒரு பகுதியாகும். சூரிய வளையத்தில் தொடங்கி ப்ளூட்டோவின் சுற்றுவட்டப்பாதையைத் தாண்டி இருக்கும் கைப்பர் பட்டை வரையில் ஆராய்வதற்கு அனுப்பப்பட்டிருக்கும் ஏராளமான விண்கலங்களுடன் நாஸாவின் ஏனைய விண்வெளி முகமைகளும் தொடர்பில் இருப்பதற்கான வலைப்பின்னல் அது. வாயேஜர்-2-க்குத் தகவல் அனுப்பித் திரும்பத் தகவலைப் பெறுவதற்குக் கிட்டத்தட்ட 35 மணி நேரம் ஆகும்.

டிஎஸ்எஸ் 43 என்பது 70 மீட்டர் விட்டமுள்ள வட்டு; இது 1973-லிருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. இனிவரும், மாதங்களிலும் ஆண்டுகளிலும் செவ்வாய்க்கும் பிற கோள்களுக்கும் ஆளில்லா விண்கலங்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் சூழலில், டிஎஸ்எஸ் 43 வட்டை மேம்படுத்தப்பட வேண்டிய நிலை எழுந்தது. ஆகவே, கடந்த ஆண்டு அந்த வட்டின் இயக்கம் நிறுத்தப்பட்டு, அதன் பாகங்கள் பிரிக்கப்பட்டன, இதன் காரணமாக ‘வயது மூத்த’ வாயேஜர்-2 விண்கலத்துக்குக் கணிசமான ஆபத்து ஏற்படும் வாய்ப்பு எழுந்தது.

2020-ல் மற்ற எல்லா விஷயங்களுக்கும் நடந்தது இந்த விஷயத்திலும் நடந்தது. வழக்கமான மேம்படுத்தல் வேலையாக இருந்திருக்க வேண்டியது அப்படிக் கொஞ்சங்கூட இல்லை. வழக்கமாக, கலிஃபோர்னியாவில் உள்ள நாஸாவின் ‘ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வக’த்தில் உள்ள இந்தத் திட்டத்தின் மேலாளர்கள் டிஎஸ்எஸ் 43 வட்டைச் சரிசெய்யும் வேலைக்குக் கிட்டத்தட்ட 30 வல்லுநர்களை அனுப்பும். ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக எழுந்த கட்டுப்பாடுகளால் அந்தக் குழு நான்கு பேராகக் குறைந்துவிட்டது.

கான்பெராவில் உள்ள நிலையத்தில் இந்த வட்டினை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் குழுவை மூன்று சிறிய குழுக்களாகப் பிரிக்க வேண்டியிருந்தது என்று ‘கான்பெரா டீப் ஸ்பேஸ் கம்யூனிகேஷன் காம்ப்ளக்’ஸின் விரிவாக்க மேலாளர் கிளென் நாகில் கூறினார். “எனவே, யாருக்காவது உடல்நலக் கோளாறு ஏற்பட்டால், அவர் இருந்த குழுவைத் தனிமைப்படுத்திவிட்டு மாற்றுக் குழு அந்த வேலையைப் பார்க்கும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது” என்றார் அவர். தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதற்காக அந்தக் குழுக்களைக் காலை, மாலை என்று இரண்டு வேளைகளுக்கு உரியவையாகப் பிரித்தனர்.

கான்பெரா தளத்தில் உள்ள சிறிய வட்டுகளுக்கு வாயேஜர்-2 தகவல்களை அனுப்ப முடியும் என்றாலும், இங்கிருந்து அந்தக் களத்துக்கு ஆணைகளை அனுப்புமளவுக்கு வேறெந்த வட்டுகளும் இல்லை. கடந்த ஆண்டு அந்த விண்கலத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருந்தால் அதைச் சரிசெய்ய நாஸாவுக்கு எந்த வழிவகையும் இருந்திருக்காது.

வாயேஜர்-2-க்கு முழுமையான ஆணைகளை நாஸாவால் அனுப்ப முடியவில்லை என்றாலும், அக்டோபர் இறுதியில் அந்த வட்டு பெரிதும் சரிசெய்யப்பட்டிருந்த நிலையில், ஒரே ஒரு சோதனைத் தகவலை நாஸா அனுப்பியது. அந்தக் கலத்தில் ‘கமாண்ட் லாஸ் டைமர்’ என்ற சாதனம் பொருத்தப்பட்டிருக்கிறது. புவியுடனான தொடர்பை அந்தக் கலம் இழந்தால், அது தன்னைக் காத்துக்கொள்ளும் விதத்தில் ஒருவகையிலான மின்னணு உறக்கத்தில் சென்றுவிடும் வகையில் அந்த சாதனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அக்டோபரில் நடத்தப்பட்ட சோதனை அந்த டைமரை மாற்றியமைத்திருக்கிறது, கூடவே, அந்த விண்கலத்தைத் தொடர்ந்து செயல்படவும் ஆணை விடுத்திருக்கிறது. “இப்போது பெரிய ஆசுவாசம் ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த விண்கலம் நம்மோடு இன்னும் பேசுகிறது என்பதை உறுதிப்படுத்த முடிந்ததில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி” என்கிறார் நாகில்.

இந்தப் பணியானது அமெரிக்காவிலுள்ள நாஸா அதிகாரிகளிடமிருந்து பெரும் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது. “பெருந்தொற்றுக் காலத்தில் டிஎஸ்எஸ் 43 வட்டினை மேம்படுத்துவதில் கான்பெராவில் உள்ள டிஎஸ்என் அணியினர் பிரமாதமான வேலையைப் பார்த்திருக்கிறார்கள்” என்றார் வாயேஜர் திட்டத்தின் மேலாளரான சூஸன் டோட். “அந்த அலைவாங்கி இன்னும் சில தசாப்தங்களுக்குப் பிரச்சினை இல்லாமல் இயங்கும் என்று எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது” என்றார் அவர்.

வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய இரண்டு விண்கலங்களும் மிகத் தொலைவுக்குச் சென்ற விண்கலங்கள் என்ற சாதனையையும், நீண்ட காலம் செயல்படும் விண்வெளித் திட்டம் என்ற சாதனையையும் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. சமீப காலமாக வாயேஜர்-2-ல் சில கோளாறுகள் ஏற்பட்டாலும் அது இன்னும் இருண்ட வெளியைத் துழாவியபடி சென்றுகொண்டுதான் இருக்கிறது, பால்வெளியையும் அதிலுள்ள நமது சூரியக் குடும்பத்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதிகள் குறித்த கண்டுபிடிப்புகளைச் செய்தபடியே சென்றுகொண்டுதான் இருக்கிறது. “வானியற்பியல் பின்புலம் கொண்ட அறிவியலர்கள் வாயேஜரின் தரவுகளைப் புவியில் அமைந்த தொலைநோக்கிகள், விண்வெளித் தொலைநோக்கிகள் ஆகியவற்றின் வழியாகப் பெறப்பட்ட தரவுகளுடன் ஒப்பிட்டுக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்று டோட் கூறினார். “கோள்களை ஆராயும் திட்டம் என்பதிலிருந்து, சூரியக் குடும்பத்தை ஆராயும் திட்டமாக மாறி, தற்போது வானியற்பியல் திட்டமாக மாறியிருக்கிறது என்பது பரவசப்படுத்துகிறது” என்றார் அவர்.

வாயேஜர்-2 தன் தடத்தில் சென்றுகொண்டிருக்கும் அதே வேளையில், டோடும் அவரது சகாக்களும் அந்தக் கலத்தில் உள்ள ‘குறைந்த மின்னூட்டம் பெற்ற அணுத்துகள்’ சாதனத்தை அணைத்து வைப்பதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் அந்தக் கலத்தில் குறிப்பிட்ட அளவே உள்ள மின்சக்தியானது அதன் மற்ற சாதனங்களுக்கு, குறிப்பாக அதன் தகவல்தொடர்பு அலைவாங்கி போன்றவற்றுக்கு நீடித்துக் கிடைக்கும்படி செய்வார்கள். அதனால், அறிவியல் தரவுகளைத் தரும் அந்தக் கலத்தின் திறன் குறைந்தாலும், முதன்மையான இலக்கென்பது அந்தக் கலம் நீண்ட காலம் செயல்பட வேண்டும் என்பதுதான். “புதிய தொழில்நுட்பமோ, பெரும் கண்டுபிடிப்புகளோ அல்ல இதிலுள்ள சவால். அந்தக் கலத்தை எவ்வளவு காலம் செயல்பட வைக்க முடியுமோ அவ்வளவு காலம் செயல்பட வைப்பதும் அதிலிருந்து தரவுகளை முடிந்த வரையில் பெறுவதும்தான்” என்கிறார் டோட்.

இந்த விண்கலம் இன்னும் 4-லிருந்து 8 ஆண்டுகள் வரை இயங்கக்கூடும் என்று அந்தக் குழு கணித்திருக்கிறது. இன்னும் மூன்றாண்டுகள் அதற்குப் பறத்தல் ஆயுள் இருக்கிறது என்று நாஸா கடந்த ஆண்டு கூறியிருந்தது. “அந்த விண்கலம் இன்னும் போய்க்கொண்டே இருக்கிறது. அது எப்போதும் எனக்கு வியப்பளிக்கிறது” என்றார் டோட்.

© நியூயார்க் டைம்ஸ், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்