உறுப்பு வணிகத்தைக் கட்டுப்படுத்தி உறுப்பு தானத்தை அதிகரித்திருக்கிறது தமிழகம்
பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகரின் தெற்கில் உள்ள உறுப்பு வணிக மையமாகத் திகழ்ந்தது வில்லிவாக்கம். சிறுநீரகத்தை விற்றவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் ‘கிட்னிவாக்கம்’ என்றே பலர் குறிப்பிட்டார்கள். இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுப் பாராட்டும் வகையில், உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னேறியிருக்கிறது.
மனித உறுப்புகளை மாற்ற அனுமதிக்கும் சட்டம் 1994 முதல் அமலில் இருக்கிறது. ஆனால், அதற்கு மக்களிடையே பெருத்த ஆதரவு இல்லை. சென்னை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த வி.ஆர். முரளிதரன், எஸ். ராம் பிரசாத் என்ற இருவர், தமிழ்நாட்டில் மருத்துவநலம் எப்படி ஒழுங்குபடுத்தப்படுகிறது என்று ஆய்வுசெய்து 2003-ல் அறிக்கை அளித்தனர். மனித உறுப்புகள் மாற்றுச் சட்டம் இப்போதுள்ள அதன் வடிவில், ஏழைகளைச் சுரண்டி இடைத்தரகர்கள் மூலம் விற்கப்படுவதைத் தடுக்க எதையும் செய்ய முடியவில்லை என்று அதில் சுட்டிக்காட்டியிருந்தனர். வில்லிவாக்கம் மட்டுமல்லாமல் பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் ஏழைகளும் தங்களுடைய உறுப்புகளைக் குறைந்த பணத்துக்கு விற்றிருந்தது தெரியவந்தது.
மாற்றம் தந்த நம்பிக்கை
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று ரத்தநாளங்கள் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜே. அமலோற்பவநாதன், சிறுநீரகவியல் நிபுணர் சுநீல் ஷராஃப் உள்ளிட்ட பலர் விரும்பினார்கள். மோஹன் என்ற அறக்கட்டளையை சுநீல் நடத்திவந்தார். இறந்தவர்களின் உடல்களை மருத்துவ ஆய்வுக்காக அளிப்பதிலிருந்து உறுப்பு தானம் வரை அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும் தெளிவுபடுத்தவும்அறக்கட்டளையை யார் வேண்டு மானாலும் அணுகலாம். உறுப்புகளைத் தர முன்வரு கிறவர்களும், பெற வேண்டியவர்களும் அதை முறையாகப் பரிமாறிக்கொள்ளவும், ஏழைகள் வஞ்சிக்கப்படாமல் இருக்கவும் ஒரு ஏற்பாடு தேவை என்று வெளிநாடுகளில் வாழும் மூத்த மருத்துவர்களும் அறுவைச் சிகிச்சை நிபுணர்களும் விருப்பம் தெரிவித்து, இதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இதன் விளைவாக 2005-ல் உறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கான ‘தேசியத் தகவல் அமைப்பு’ (என்.என்.ஓ.எஸ்.) உருவாக்கப்பட்டது. உறுப்பு மாற்றம் தொடர்பான நிபுணத்துவத்தை அளிக்க இது பெரிதும் உதவியது.
“உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை பெருமளவுக்கு ஆரம்பமானதும் இதில் வியாபார நோக்கத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அப்போது சுகாதாரத் துறைச் சிறப்புச் செயலாளராக இருந்த பி.டபிள்யு.சி. டேவிதாரும் சுகாதாரச் செயலர் வி.கே. சுப்புராஜும் உதவுவதற்கு ஆர்வமாக முன்வந்தனர். அதற்கு முன்பிருந்தும் இந்த வகையில் எங்களுக்கு அரசின் ஆதரவு இருந்தது” என்று அமலோற்பவநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.
“மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டது என்று முதலில் சான்றிதழ் பெறுவது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டது. சென்னையில் உள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகள் அந்தப் பொறுப்பை ஏற்றன. மூளைச் சாவு என்ற அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று உணர்த்தினோம். அப்படி அறிவிப்பது சட்டபூர்வமானது, அறிவியல்பூர்வமானது, அப்படி அறிவிப்பதும் சாத்தியம். அந்த நிலையில், மூளைச் சாவு அடைந்தவரின் குடும்பத்தவரை அணுகி இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகத் தாருங்கள் என்று கேட்பதில்கூட எங்களுக்கு ஆர்வம் இல்லை” என்கிறார் டேவிதார். உறுப்புமாற்று மருத்துவ இயக்கத்தில் அவர் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறார்.
10 லட்சத்துக்கு 2 பேர்
2008 அக்டோபர் முதல் 2015 செப்டம்பர் வரையில் 2,158 உறுப்பு மாற்று சிகிச்சைகள் நடந்துள்ளன. இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கணையம், சிறுகுடல் என்று முக்கியமான உறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. இதய வால்வுகள், விழித்திரை, தோல், ரத்த நாளங்கள் போன்றவற்றையும் சேர்த்தால் எண்ணிக்கை 3,870 ஆகிறது. இப்படி எத்தனை உறுப்புகள் மாற்றப்பட்டன என்ற புள்ளிவிவரத்தை எப்போது வேண்டுமானாலும் ‘டிரான்ஸ்டான்’ அமைப்பின் இணையதளத்தில் காணலாம். இதுவரை 701 பேர் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர். 10 லட்சத்துக்கு 2 பேர் என்ற வீதத்தில் தமிழகத்தில் உறுப்புதானம் செய்துள்ளனர்.
“பல்வேறு மாநிலங்களும் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப் படும் நடைமுறைகளைப் பின்பற்ற ஆர்வம் காட்டுகின் றன. தென்னிந்தியாவில் ‘உறுப்புமாற்று பிராந்திய மையமாக’ மத்திய அரசால் தமிழகம் அறிவிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்திலேயே இதை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடியும் என்று நாங்கள் கருதும் வேளையில், பிரதமர் இதை வானொலி உரை யில் குறிப்பிட்டுப் பேசியதும், அதையடுத்துப் பல மாநில அரசுகள் எங்களிடம் விளக்கம் கேட்டிருப்பதும் உற்சாகத் தைத் தருகிறது” என்கிறார் சுகாதாரச் செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன். “துடிப்பும் ஒத்துழைக்கும் மனப்பான்மையும் உள்ள தனியார் மருத்துவத் துறையு ம் செயல்வேகம் மிக்க தன்னார்வத் தொண்டமைப்புகளும் இல்லையென்றால், தமிழ்நாட்டால் இதைச் சாதித்திருக் கவே முடியாது. உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் மட்டுமல்ல, இது தொடர்பான நடைமுறையை வகுப்பதிலும் தங்களுடைய நேரத்தையும் ஆற்றலையும் அவர்கள் அதிகம் செலவிட்டுள்ளனர்” என்று பாராட்டுகிறார் ராதாகிருஷ்ணன்.
உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘டிரான்ஸ்டான்’ அமைப்புடன் ஆந்திரப் பிரதேசத்தின் முதன்மை உறுப்புமாற்று ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கடே தொடர்புகொண்டிருக்கிறார்.
உறுப்புமாற்றுச் சிகிச்சை என்பது சர்வ சாதாரணம் என்பதைப் போலத் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுகிறது. இதையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக அருகிலிருந்து பார்த்துவரும் இதய, நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் பால் ரமேஷ், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிகிறார். “இந்தத் துறையில் பல மடங்கு முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. மூளைச் சாவு அடைந்தவரை மருத்துவரீதியாகத் தயார் நிலையில் வைத்திருப்பது, உறுப்புகளை உடலிலிருந்து எடுப்பது, பிறகு பாதுகாப்பாக எடுத்துச் செல்வது, தேவைப் படுவோருக்கு நேரத்தை வீணாக்காமல் பொருத்துவது போன்ற அனைத்து நுட்பங்களிலும் வெகுவாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறோம்” என்கிறார் பால் ரமேஷ்.
உறவினர்களின் பெருந்தன்மை
மூளைச் சாவு நிலையில் உள்ளவரின் உறவினர்களை அணுகி, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அடுத்து அவருடைய உறுப்புகளைக் கொண்டு பலரை வாழ்விக்க முடியும் என்று மனம் புண்படாமல் எடுத்துக்கூறி ஒப்புதல் பெறுவதற்குப் பொறுமை, மனிதாபிமானம், தெளிவாகப் புரியவைக்கும் ஆற்றல் அனைத்தும் வேண்டும். மூளைச் சாவு அடைந்தவருடைய உறுப்புகளைத் தானமாகப் பெற்றாலும் அதைச் செயல்முறைப்படுத்த வேண்டியது அன்னாருடைய நெருங்கிய உறவினர்கள்தான். தானத்தை வழங்குவது உண்மையில் அவர்கள்தான். தானம் கொடுப்பவர்கள் இல்லாவிட்டால் தானம் பெறுவோரும் இருக்க முடியாது. இந்த மருத்துவ முறையும் இருக்காது.
அசோகன் சுப்பிரமணியும் அவருடைய குடும்பத்தாரும் இதற்கான ஆவணங்களில் கையெழுத்திடும்போது, அவர்களுடைய விழிகளில் நீர் திரண்டு பார்வையை மறைத்தது. கணவன், மனைவி இருவருமே மருத்துவர்கள். அவர்களுடைய அருமை மகன் ஹிதேந்திரன் 2008-ன் பிற்பகுதியில் மருத்துவமனையில் இருந்தபோது மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதை மருத்துவர்கள் அறிவித்தனர். மருத்துவர்களான அவர்கள் அது என்ன என்பதைப் புரிந்துகொண்டு, தங்களுடைய மகனின் உறுப்புகள் மற்றவர்களுக்குப் பயன்படட்டும் என்று ஒப்புதல் அளித்து ஆவணங்களில் கையெழுத்திட்டனர். அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. இந்த இயக்கத்தில் தீவிரப் பங்கேற்பாளர்களாகச் செயல்படுகின்றனர். இப்படிப்பட்ட சிறு துளிகள் சேர்ந்துதான் பெருங்கடல் உருவாகியிருக்கிறது. இதனால்தான் தமிழ்நாடு உறுப்புமாற்று மருத்துவத்தில் தனியிடம் பெற முடிகிறது.
தமிழில் சுருக்கமாக: சாரி
© ‘தி இந்து’
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago