காலத்தால் அழியாத கச்சமங்கலம் அணை!

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

வரலாற்றை முழுமையாகப் பார்த்து விடுவோம். நீர் மேலாண்மையில் உலகுக்கே முன்னோடிகளாக திகழ்ந்தது எகிப்தியர்கள். தொடர்ந்து சுமேரி யர்களும், சீனர்களும், தமிழர்களும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். இதைப் பற்றியெல்லாம் தனது விரிவான ஆய்வுகள் மூலம் பதிவுசெய்திருக்கிறார் மறைந்த பழ.கோமதிநாயகம். அவரைப் பற்றி நினைவுக்கூர்வது நமது கடமை. பழ.நெடு மாறனின் சகோதரர்தான் பழ.கோமதிநாயகம். நீரியல் அறிஞரான அவர், தமிழகத்தின் நீர் நிலைகளின் மீது மிகுந்த அக்கறை காட்டி னார். பொதுப் பணித்துறையில் உயர் அதிகாரி யாக அவர் பணிபுரிந்தபோது தமிழகத்தின் நீர் நிலைகளை மேம்படுத்த ஏராளமான திட்டங்களை வகுத்துத் தந்தார். அதே போல பொதுப் பணித்துறையில் பணியாற்றிய ராமலிங்கம், தேவி கவுண்டர், வீரப்பன் உள்ளிட்டோரும் சென்னையின் நீர் நிலை களை மேம்படுத்தவும் வெள்ளங்களைத் தடுக் கவும் ஏராளமான திட்டங்களை வகுத்துத் தந்த னர். இவர்களை எல்லாம் தமிழகத்தின் ஆட்சி யாளர்கள் கண்டுக்கொள்ளவே இல்லை.

முன்பு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சி.எம்.டி.ஏ) நீர் நிலைகளைப் பரா மரித்து மேம்படுத்தவும், அவற்றில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் ‘நியூக் கிலியஸ் செல்’ (Nucleus cell) என்ற பிரிவு இருந்தது. காவல் துறையினரைப் போல தனிப்படை கொண்ட அமைப்பு அது. இடுப்பில் வாக்கி டாக்கியுடன் மொத்த நீர் நிலைகளையும் கண்காணித்தது அந்தப் படை. எங்கேனும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டால் உடனடியாக காவல் துறையினருடன் கைகோத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதேபோல நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்ட சி.எம்.டி.ஏ-வின் கட்டுமானப் பிரிவு அனுமதி அளித்தால் அதனை ஆட் சேபித்தது நியூக்கிலியஸ் செல். அரசியல் தலையீடுகள் ஏதுமற்ற சி.எம்.டி.ஏ-வின் பொற்காலம் அது. இன்றைய சி.எம்.டி.ஏ-வின் நிலையை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. பல இடங்களில் நீர் நிலைகளின் மீது கட்டிடங்கள் கட்ட சி.எம்.டி.ஏ-வே அனு மதியளித்திருக்கும் கொடுமையை எங்கே போய் முறையிடுவது?

ஆனால், 2700 ஆண்டுகளுக்கு முன்பு எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படாத காலத்தில் மனிதன் நீர் நிலைகளைத் தெய்வமாக வணங்கினான். அரசன் தொடங்கி நாட்டின் ஒவ் வொரு குடிமகனுக்கும் நீர் நிலைகளின் மீது அக்கறை இருந்தது. எகிப்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் அரச முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது எகிப்திய மன்னன் ஸ்கார்ப்பியனின் (King Scorpion - 3200 BC) முத்திரை. அதில் மன்னன் ஸ்கார்ப்பியன் தனது கையில் ஒரு மண்வெட்டியை வைத்திருக்கிறான். அருகில் மற்றொருவன் கூடையைச் சுமந்துக்கொண்டிருக்கிறான். அதாவது நீர் நிலைகளின் குடி மராமத்துப் பணிகளின்போது நாட்டின் மன்னனே களத்தில் இறங்கி வேலை செய்தான் என்பதை விளக்குகிறது முத்திரைச் சின்னம். மன்னனே இறங்கி வேலை செய் வதைப் பார்த்த மக்கள் அனைவரும் ஓடோடி வந்து குடி மராமத்துப் பணிகளை செய்தார்கள் என்கிறது வர லாறு. நம் பழந்தமிழர் சமூகத்திலும் இந்த முறை இருந்துள்ளது. ‘பிட்டுக்காக மண் சுமந்த சிவன்’கதையும் இதையே உணர்த்துகிறது. எகிப்தில் கடந்த 19-ம் நூற்றாண்டுவரை பாத்திகளில் ஆற்று நீரைப் பாய்ச்சும் சடங்கை ‘ஆறு வெட்டும் நாள்’ என்று விவசாயிகள் கொண்டாடியிருக்கிறார்கள்.

உலகின் தொன்மையான அணை ‘சாத் எல் - காஃபாரா’ என்பதைப் பார்த்தோம். அதற்கு அடுத்ததாக தொன்மையான அணை கல்லணை. கண்ணில் பார்க்க முடியாமல் பூமிக்குள் ஆற்றின் அடி யில் கட்டப்பட்ட கல்லணையின் பெருமை உலகம் அறியும். ஆனால், கல்ல ணையின் சமகாலத்தில் கண்ணில் பார்க்கும்படியாக கட்டப்பட்ட மற்று மொரு தொன்மையான அணையும் நம்மிடம் இருக்கிறது. வெளியுலகம் உணராமல்போன உலக அதிசயம் அது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் அழிசியின் மகன் சேந்தன் என்பவன் கட்டியதுஅது. அபார தொழில்நுட்பங்கள் கொண்டதும்கூட.

கல்லணையின் கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் காவிரியின் துணை ஆறான வெண்ணாற்றில் திருக் காட்டுப்பள்ளிக்கு அருகே கச்சமங்கலம் கிராமத்தில் இப்போதும் கம்பீரமாக இருக்கிறது அந்த அணை. ஒரு காலத்தில் இந்த இடத்தில் மூன்று மைல் தொலைவுக்கு ஏராளமான பாறைகளுடன் கூடிய தொடர்ச்சியான மலைக்குன்றுகள் அமைந்திருந்தன. துவாக்குடி மலையின் தொடர்ச்சி இது. அதிலிருந்த மலைக் குன்று ஒன்றை அப்படியே பெயர்த்தெடுத்து அதனை கொஞ்சம் தள்ளி வைத்து பாறை களை குடைந்து தடுப்பு சுவர் போல வைத்துவிட்டார்கள். பெயர்த் தெடுக்கப்பட்ட குன்று இருந்த இடம் பள்ளமாக அமைந்துவிட்டது. இருபக்க மும் பாறைகளாலான சுவர் தயார். இதனை கற்சிறை என்றும் குறிப்பிடு கிறார்கள் சோழர்கள்.

வெண்ணாற்றின் தண்ணீர் இந்த அணையில் நிரம்பியவுடன் அணையின் தென்கரை மதகு திறக்கப்பட்டு தண் ணீர் ஆனந்த காவிரி கால்வாய் மூலம் ராஜசுந்தரி சதுர்வேதமங்கலம் ஏரிக்குச் சென்றது. அந்த ஏரியின் தற்போதையப் பெயர் கள்ளப் பெரம்பூர் ஏரி. காவிரிக்கும் வெண்ணாற்றுக்கு இடைப்பட்ட அந்தப் பகுதியின் பெயர் ஆற்காட்டுக் கூற்றம். மேட்டு நிலம் அது. தற்போது தஞ்சை - திருவாரூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது இந்தப் பகுதி. அந்த காலத்தில் அங்கே தாழ்வான பகுதியில் வெண்ணையாறு ஓடியது. இதனால் மக்கள் பாசன செய்ய முடியாமல் தவித்தனர். பஞ்சங் களும் நேரிட்டன. அந்த சமயத்தில் கச்சமங்கலம் அணையில் இருந்து ஏரிக்கு வந்த தண்ணீர் இதற்கு தீர்வாக அமைந்தது.

இதனால், சங்க காலத்திலேயே இந்தப் பகுதி வளமுடன் இருந்ததாக நற்றிணை, குறுந்தொகை இலக்கியங் கள் குறிப்பிடுகின்றன.

இந்த ஏரியின் தண்ணீர் நிரம்பியவுடன் அணையின் வடகரையின் மதகு மூலம் பிள்ளைக் கால்வாய் வழியாக தண்ணீர் வீரசிகாமணி பேரேரிக்குச் சென்றது. இந்த ஏரியின் தற்போதையப் பெயர் அல்லூர் அழிசிகுடி ஏரி. வீராணம் ஏரியை வெட்டிய பராந்தகச் சோழன்தான் இந்த ஏரியையும் வெட்டி னான். வடகரை மதகு 16-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கர் காலத்தில் செப்பனிடப்பட்டிருக்கிறது. அதற்கான கல்வெட்டு இப்போதும் மதகில் இருக்கிறது. மேற்கண்ட அணையின் தொன்மை மற்றும் தொழில்நுட்பம் இவை எல்லாம் நீண்டகாலமாக நம் சமூகம் அறிந்தி ருக்கவில்லை. இன்றும் பலருக்கு தெரியாது. வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் செந் தலை சுந்தரேஸ்வர் கோயில் கல்வெட்டு களை ஆய்வு செய்து இந்த அதிசயத் தைக் கண்டுபிடித்திருக்கிறார். அவருக்கு நாம் நன்றி சொல்ல கடமைபட்டிருக் கிறோம்.

நம் முன்னோர்கள் மலையை பெயர்த்து அணையை கட்டினார்கள். அந்த அணை 2,000 ஆண்டுகளைக் கடந்து இன்றைக்கும் நமக்கு சோறிடுகிறது. ஆனால், இன்றைய மனிதன் அதே மலையைப் பெயர்த்தெடுத்து ரொட்டித் துண்டுகளைப் போல வெட்டி வெளி நாடுகளுக்கு விற்று காசு பார்க்கிறான். இயற்கை நம் மீது ஏன் சீற்றம் கொள்ளாது?

(நீர் அடிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்