கட்டிடக் கலை, சிற்பவியல், இசை எனத் தமிழினம் ஆழ்ந்த தடங்களைப் பதித்த தொன்மையான கலைகளில் ஆபரணக் கலையும் ஒன்று. தொன்மைவாய்ந்த அந்த அறிவு மரபின் தொடர்ச்சியை வைத்திருக்கும் புராதன குந்தன் ஆபரணத் தொழிலில் ஈடுபட்டிருக்கும், அருகிவரும் கலைஞர்களில் ஒருவர் தாணு பிச்சையா. நகை ஆபரணத் தொழிலோடு இணைந்திருக்கும் நுட்பத்தை, கவித்துவத்தை, ஆபரணத்தை உருவாக்கும் தருணங்களை ‘உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்’ நூலில் கவிதைகளாக்கியிருக்கிறார். தமிழகத்தின் தென்கோடிப் பகுதியான நாகர்கோவிலில் உள்ள வடசேரியைச் சேர்ந்த இவர், தொழில் சார்ந்து சென்னையில் வசிக்கிறார். பொற்கொல்லர் சமூகம் குறித்த வரலாற்று நாவல் ஒன்றை எழுதுவதில் தற்போது ஈடுபட்டிருக்கும் இவர், புராதன குந்தன் ஆபரணத் தொழிலின் தொன்மை, தனித்துவம், தொடர்ச்சி, சவால்கள் குறித்து நம்மிடம் பேசுகிறார்.
வடசேரி பரதநாட்டிய நகைகளைச் செய்வதிலிருந்து தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர் நீங்கள். இப்போது குந்தன் ஆபரணங்களைச் செய்கிறீர்கள். அவற்றின் உற்பத்தி, வடிவமைப்பு, தயாரிப்புகளின் தனித்துவம் என்ன?
வடசேரி பரதநாட்டிய நகைகளெல்லாம் சிங்கிள் ரேக் எனப்படும் ஒற்றைக் கோதில் கூர்ந்த தொழில்நுட்பத்துடன் இழைக்கப்படுபவை; நகைச் சட்டகத்தை ‘உம்சம்’ என்று நாங்கள் சொல்வோம். புராதன குந்தன் ஆபரணங்களுக்கும் வடசேரி பரதநாட்டிய நகைகளுக்கும் தூய தங்கம்தான் அடிப்படை. குந்தன் என்ற வார்த்தைக்குச் சுத்திகரிக்கப்பட்ட தங்கம் என்று அர்த்தம். குந்தன் ஆபரணங்களைப் பொறுத்தவரை புடமிடப்பட்ட தூய தங்கத்தை வெங்காயத் தோல் போன்று மெல்லிய தகடுகளாக முதலில் ஆக்கிக்கொள்வோம். பிறகு, உம்சம் எனப்படும் நகைச் சட்டகத்தில் கற்கள் பதித்து, ஒன்றன் மீது ஒவ்வொன்றாக மெல்லிய தகடுகளை இடுமானம் போட்டு இட்டு ஏற்றிக் கற்கள் முழுவதுமாக மூடப்படும். சதைப்பற்றாக உள்ள தங்கத்தில், பாறைக்குள் சிற்பத்தைத் தேடுவதுபோல் நிதானமாகவும் கலைநுட்பமாகவும் செதுக்கித் தீர்மானம் செய்வோம்.
இயந்திரங்கள் உங்கள் தொழிலை இன்னமும் ஆக்கிரமிக்க முடியாததற்கான காரணங்கள் என்னென்ன?
இன்றைய சூழலில் மக்கள் பயன்பாட்டிலுள்ள பெரும்பாலான நகைகளை டன்டன்னாக உற்பத்திசெய்து குவிக்கின்றன இயந்திரங்கள். ஆனால், பாரம்பரிய குந்தன் ஆபரணங்கள் ஐந்து படிநிலைகளில் கைதேர்ந்த நிபுணர்களால் உருவாக்கப்படுகின்றன. ஆபரணங்கள் தீர்மானம் பெற குறைந்தது சில மாதங்களாகும். தூய தங்கத்தாலும், இயற்கையாக விளையும் விலை மிகுந்த ரத்தினங்களாலும், ரசவாதச் சேர்மானங்களாலும் தயாரிக்கப்பட்டாலும் இறுதியில் அதன் உயிரம்சமாய் ஒளிரும் கலையழகே மிக முக்கியமானது. ஒருவேளை ஏதேனும் சிறு குறைபாடு நேர்ந்தால், தொழிற்கூடத்துக்குள்ளேயே அழிக்கப்பட்டு, மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டுவிடும். இயந்திரங்களுக்கு இவற்றைக் கையாளும் கலைநெறியோ, அதன் உள்ளீட்டை அணுகும் கனிவோ, அவை முழுமை பெறுவதற்குரிய பொறுமையோ கிடையாது. இயந்திரங்களைக் கொண்டு உற்பத்திசெய்யலாம். சிருஷ்டிக்க இயலாது.
குந்தன் நகைகளின் தொன்மையைச் சொல்லுங்கள்...
ஐந்தாம் நூற்றாண்டில் வளர்ச்சிபெற்ற சிற்பக் கலையானது பத்தாம் நூற்றாண்டில் கட்டிடக் கலையாகப் பேரெழுச்சி பெற்றிருக்கிறது. ஆனால், ஆபரணக் கலை அதற்கும் பன்னூறாண்டுகளுக்கு முன்பே உச்சத்தில் இருந்திருக்கிறது. சங்கம் மருவிய காலமே அதன் பொற்காலம். மண்ணும் பொன்னும் அரசன் ஒருவனுக்கு மட்டுமே ஆளும் உரிமையுடையவை எனும் கருத்து வலுப்பெறப் பெற திணைக்குடிகளோடு பொன்செய்க் கொல்லர்களும் குன்றத் தொடங்கினார்கள். அணிகலவியலின் ஆகப் பெரும் சான்று சிலப்பதிகாரம்.
சூளாமணி என்பது ஒரு ரத்தின வகை. அதைச் சூடக் கூடாது என்பார்கள். நம் தமிழ் மன்னன் ஒருவன் அந்த மணியின் ஒளியில் மயங்கித் தனது திருமுடியில் அதை அணிந்துகொண்டானாம். சில நாட்களிலே அவனது அரசை இழக்க வைத்த அந்த மணிமுடி, இலங்கை மன்னனிடம் சென்றதாம். அவனும் அரசை இழந்தான். பின்னர், அது வடஇந்திய நிலமெங்கும் வெற்றிகரமாகச் சுற்றிவிட்டு, இறுதியில் ஆந்திரம் வழியாகத் தென்னகம் வந்ததாம் அதைச் செய்த பொற்கொல்லனிடமே. ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிபோல் ரத்தினாபரணங்களின் பழங்கதைகள் ஏராளம். சமணத் தொன்மங்களிலும், புத்தரின் ஜாதகக் கதைகளிலும், விக்கிரமாதித்தன் கதைகளிலும் ஆபரணங்கள் குறித்த பதிவுகள் அநேகம். அலங்காரப் பிரியனான திருமாலை முதற்கடவுளாகக் கொண்ட வைணவ சம்பிரதாயத்தில் சற்றுக் கூடுதலான குறிப்புகள் செறிவாகக் கிடக்கின்றன. திவ்யப்பிரபந்தத்தின் திருவாய்மொழியில் வரும் ஒரு ஒற்றை வரி, ஆயிரம் வருடத் தொன்மையுடைய இந்த வாக்கியம் ஓர் அரிய மாணிக்கம் ‘குந்தனத்தில் அழுத்தின ரத்தினங்கள்’.
புராதன நகைத் தொழில் எந்தெந்தத் தேவைகளுக்காகத் தற்போது நீடித்திருக்கிறது?
புகழ்பெற்ற நடனக் கலைஞர்களுக்கு, பரதநாட்டியம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு, திரைப்பட நடிகையர்களுக்கு, பெருஞ்செல்வந்தர்களுக்கு, திருத்தலக் கோயில்களுக்கு, ஏற்றுமதிக்கு என இந்தத் தொழில் நீடித்திருக்கிறது.
இயற்கையின் பிரதிபலிப்பாகவும் கலை உள்ளது. அந்த அடிப்படையில் தொன்றுதொட்டு நீடிக்கும் உருவங்கள், உயிர்கள், விடுபட்ட ரூபங்களைப் பற்றிச் சொல்லுங்கள்…
புராதன ஆபரணங்கள் அனைத்துமே அன்னம், கிளி, மயில் போன்ற பறவைகளாலும் கொடி, இலை தழைகளுடன் கூடிய பூக்களாலும் வடிவமைக்கப்பட்டவைதான். ரூப, அரூப, வினோத உருவங்களையும் உட்செரித்திருப்பவையும்கூட. பெண்களின் சிகையலங்காரமான விண்டசரம், சூரிய சந்திர வில்லைகள், உச்சியில் பத்மபெருவட்ட தாக்குராக்கொடி மற்றும் சடையலங்காரமாக வரும் ஐந்துதலை நாகம், பூசாந்திரம், பிறைவட்டம், தாமம், அன்னராக்கொடி, மீன் என வெவ்வேறு வடிவங்களை உடைய இந்த அணிகலன்கள் ஒரே சரடில் கோக்கப்பட்டிருப்பவை. சடையலங்காரம் செய்துகொண்ட பெண் உள்ஆற்றல் நிரம்பிய மகாயோகினியாக உருவகிக்கப்படுகிறாள். இதில் பண்டைய யோக சாஸ்திரக் குறியீட்டு வடிவங்களையும் உலோகப் பிரதிகளாய் அன்றைய ஆபரணக் கலை உள்வாங்கியிருப்பதை நுண்மையாக அவதானிக்க முடியும்.
மகரகண்டி எனும் மாலையானது ஆணின் மார்பில் நிறைந்திருக்கும் அகலமுடையது. அதிலுள்ள மகரபட்சியின் தனிச்சிறப்பு ஓருடலில் மூன்று தலைகளைக் கொண்டிருப்பது. வாயை அகற்றியபடி அந்த மகரபட்சி இருக்கும். அதன் தலையின் மேற்பகுதியை விரலால் மறைத்தால் மயிலாகத் தெரியும். முகத்தின் முன்பகுதியை மறைத்தால் அலகு திருப்பிய அன்னம் தோன்றும். இன்றைக்குள்ள ஆபரண வடிவங்களில் விடுபட்டவை என இதைச் சொல்லலாம். எனினும், அந்த மகரபட்சியின் தொன்மம் உள்ளுக்குள் சிறகடித்துக்கொண்டே இருக்கிறது. இந்தத் தொன்மம் தொடர்பாக ஒரு கதை இருக்கிறது. முன்பொரு காலத்தில் முனி ஒருவர் ஆற்றங்கரை ஓர முதுமரத்தின் கீழ் தவமியற்றினாராம். யுகங்களுக்குப் பின் ஞானமடைந்த அவர் தனக்கு நிழல் அளித்த மரத்துக்கு வரம் தர விரும்பினார். மரமும் வீணே உதிர்ந்து மட்கும் தனது இலைகளுக்கு நித்யத்துவமளிக்க வேண்டியதாம். அதன் பின் நிலத்தில் விழுந்தவை கிளிகளாகவும், நீரில் விழுந்தவை மீன்களாகவும் மாறின. கரையின் ஓரத்தில் இங்குமங்குமன்றி விழுந்த சில இலைகளே மகரபட்சிகளாக ஆகினவாம். இதுபோல் ஊர்வன, நடப்பன என அனைத்து ஜீவராசிகளிலும் யாளிப்புனைவு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. கர்ணப்பத்ரம் எனும் காதணி, ஒட்டியாணம் குறித்தும் கலாபூர்வ வியாக்கியானங்கள் என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
நீங்கள் இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?
ஆரம்பத்தில் நான் ‘வடசேரி கோயில் நகை’ என்று அறியப்படும் பரதநாட்டியத்துக்கான நகை வேலைகளைத்தான் செய்துவந்தேன். இருபது வருடங்களுக்கு முன்பு, அப்போது சென்னையில் வசித்துவந்த எனது தாய்மாமாவின் மூலம் அசல் கோயில் நகையான இந்த குந்தன் ஆபரணத் தொழிலுக்குள் வந்தேன். அன்றைய நாளில் என் மாமாவின் குருநாதரான மூத்த கலைஞர் ஒருவருக்கு ரத்தின அங்கி செய்வதற்கான வாய்ப்பு வரவே அவருடன் சென்றேன். ஆபரணங்களின் வடிவமைப்பில் அதன் அடிப்படைக் கட்டுமானம் மட்டுமே எனது பணி. அன்று அவருக்கு சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மையால் அதன் அடுத்தடுத்த வேலைப்பிரிவுகளிலும் நான் ஈடுபட வேண்டியதாயிற்று. அவருடன் தொடர்ந்து சில வருட இடைவெளிக்குள் மூன்று கோயில்களுக்கு (காஞ்சிபுரம், கடலூர் திருவந்திபுரம், திருவள்ளூர்) ரத்தின கிரீடம், ரத்தினக் கவசங்களை உடனிருந்து செய்யும் பெரும்பேறு கிட்டியது. அந்த ஆபரணங்களுக்கு மாணிக்கம் உள்ளிட்ட ரத்தினங்கள் விநியோகித்த வைர வியாபாரிகளின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. இன்று என் மாமாவும் குருநாதரும் இல்லை. அன்று தெய்வங்களுக்கு நான் செய்த சிறு கைங்கர்யத்தின் பிரதிபலன் இன்று வரை என் வாழ்வாக நீடிக்கிறது.
உலகமயமாதலும் இயந்திரமயமாதலும் பாரம்பரியத் தொழில்களில் பலவற்றை வெளிப்படையாக அழித்திருக் கின்றன. அதேவேளையில், சந்தை சார்ந்து பழங்கலைகள், பழம்பொருட்களுக்கு ஆர்வமும் ஏற்பட்டிருக்கிறது அல்லவா?
ஆமாம். மரபறிவு மீது நமக்கு இருந்த அக்கறையின்மை தற்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. நமது பாரம்பரியமான அருங்கலைகளின் மேல் இன்று குவிந்திருக்கும் கவனம் சற்றே ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில், இந்த அதீத கவனிப்பு மேலோட்டமான ஆர்வக்கோளாறுகளால் புராணிகப் பீற்றலுக்கு இட்டுச்செல்லவும் வாய்ப்புள்ளது. நுண்கலை சார்ந்த படைப்பாளிகளான வீணை, நாகஸ்வரம், மிருதங்கம் போன்றவற்றை உருவாக்கும் கைவினைஞர்களின் வாழ்நிலையைப் பார்க்கையில், அந்த ஆர்வங்கள் பெரும் சீமான்களின் வீட்டுச்சுவர்களை அலங்கரிக்கும் விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட தலைகளாய், வெற்றுப் பெருமிதங்களாக மாறுகின்றனவோ என்றும் எண்ண வைக்கிறது.
நகை ஆபரணத் தொழிலோடு தொடர்புகொண்டிருக்கும் பிற புராதனத் தொழில் மரபுகளைச் சொல்லுங்கள்…
பொன்னைப் புடமிட்டுத் தூய்மையாக்கும் உலோகவியல், தெரிவுசெய்த ரூபத்தின் லட்சணங்களைத் தகட்டில் வரைகட்டுதல், மாணிக்கம், மரகதம், வைரம் உள்ளிட்ட ரத்தினங்களைப் பழுதுநீக்கிப் பட்டைதீட்டும் மணியியல், இந்த வேலைக்கு என்றே பிரத்யேகமாக உருக்கு இரும்பில் உபகரணங்கள் வடிக்கும் கம்மியம், செதுக்குளிகளைக் கூர்மையாக்கும் பல தரத்திலான சாணைக்கல் தயாரிப்பு, தங்கத்தைத் திரவமாகக் கரைத்து மெருகேற்றும் ரசவாதம், பொற்சரடு பின்னுதல், பட்டுநூல் குஞ்சம் கட்டுதல், கரவடி செவ்வடி எனும் பழமை செய்தல், சிலவகை மரப்பிசின்களுடன் அரிய கனிமத் தாதுக் கலவையாலான வைப்புமுறை பாஷாணம்... இவை யாவும் புராதன ஆபரணக் கலையுடன் தொடர்ந்துவரும் தனித்த தொழில் மரபுகள்.
ஒரு நல்ல ஆபரணக் கலைஞர் எத்தனை பிரிவுகளில் தனது அறிதலையும் கல்வியையும் கொண்டிருக்க வேண்டும்?
எந்தவொரு நகைக் கலைஞருக்கும் அடிப்படையாக இருக்க வேண்டிய தொழிற்பண்பு எடைநிறைத் துல்லியம், கனபரிமாண அளவீடு, கூறிட்டுப் பகுக்கும் அலகீடு. ஒரு பவுன் பொன்னில் கம்மல் ஜிமிக்கி செய்வதற்கான அலகுகள் அரைப் பவுனில் செய்வதென்றால் மாறுபடும். சக்கரமட்டம், சுரை, மரை, மேற்பிரி, உட்கால், கசைகம்பி, குண்டு, வளையம், கண்ணி, அரும்பு, மின், முனையரும்பு, அடித்தகடு, குப்பா, குளுசை, முத்து என்று இருபது எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கூறிடல்கள் உள்ளன. இந்தக் கணக்கீடுகள் கைவரப்பெற்றால் எவராலும் இந்தத் தொழிலில் இயங்கிட முடியும். ஆனால், ஒரு குந்தன் ஆபரணக் கலைஞன் இவற்றுடன் சிற்பவியலில் அறிமுகம் கொண்டிருக்க வேண்டும். புராதன மணிகலன்களின் வடிவவியலை அவற்றில்தான் தெளிந்துகொள்ள முடியும். இதைத் தவிர, சிறப்புத் தகுதிகள் வளர்த்துக்கொள்ளல் அவரவர் அறிவு வேட்கை சார்ந்தது. பொதுவாகவே, ஒரு அணிகலனுக்கான பொன்னை உருக்குகையில் நாள், நட்சத்திரம், திதியைப் பார்ப்பதென்பது நடைமுறை வழக்கம். பொற்கலைக்கு சோதிடவியலின் தேவை கட்டாயம் என்று கருத முடியாது.
உங்கள் காலத்திலேயே இந்தத் தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சொல்லுங்கள்...
கலைப் படைப்பு என்ற ரீதியில் சொல்வதானால் மூத்த தலைமுறையினரை விடவும் இன்றைய இளைஞர்களின் கைத்திறன் மேம்பட்டிருக்கிறது. செய்நேர்த்தி, துல்லியம், வடிவவொழுங்கு, புராதன உருவங்கள் என குந்தன் ஆபரணக் கலை இன்று செழுமை பெற்றிருக்கிறது. இன்றும் தென்னிந்திய குந்தன் ஆபரணங்களுக்கே சந்தையில் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆனால், கைவினைஞர்களுக்கும் பயனாளர்களுக்கும் இடையே தரகர்களின் இடையீடு அதிகரித்துவிட்டது. கோயில்களுக்கான ரத்தினாபரணங்கள் செய்யும் பணி என்பது பாரம்பரியப் பொற்கலைஞர்களிடமிருந்து என்றோ வெளியேறிவிட்டது. முந்தைய காலத்தில் இங்குள்ள தெலுங்கு வணிகர்கள் கோயில்களில் ஒப்பந்தங்கள் எடுத்தார்கள். அவர்களிடம் துணை ஒப்பந்ததாரராகத் தமிழ்ப் பெருவினைஞர்கள் பணிபுரிந்தார்கள். இன்று இவையெல்லாம் முழுவதும் வடபுலப் பெருவணிகர்களின் கைகளுக்குள் சென்றுவிட்டன. அவர்கள் ஜெய்ப்பூர் கைவினைஞர்களை வரவழைத்து செய்வித்துக்கொள்கிறார்கள். அந்தத் தொழிலாளர்களும் தங்கள் குடும்பத்துக்கான மூன்று வேளை உணவு உத்தரவாதத்தால் இங்கு வந்து இறைச் சேவை ஆற்றிவிட்டுச் செல்கிறார்கள்.
நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் குறித்து?
பல்வேறு கால அடுக்குகளைக் கொண்ட வரலாற்றுப் புனைவு இது. ராஜராஜ சோழன் பொறிப்பித்த, இன்றும் நாகர்கோவில் வடசேரியில் கொம்மண்டை அம்மன் ஆலயத்தில் இருக்கும் கல்வெட்டிலிருந்து தூண்டுதல் பெற்ற படைப்பு அது.
- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago