மும்பையில் சமீபத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரித்துவந்த போலீஸாருக்கு ஆச்சரியமூட்டும் பல தகவல்கள் கிடைத்தன. அதன் பின்னணி, பல திரைப்படங்களை நினைவுபடுத்துபவை.
மும்பையில் நகைக் கடை நடத்திவந்த ஒரு தமிழரின் அதீத பொருளாதார வளர்ச்சி, வருமான வரித் துறையினரின் கண்களை உறுத்தத் தொடங்கியது. பணம் கணக்கில்லாமல் கொட்டும் அளவுக்கு மனிதர் என்னதான் தொழில்செய்கிறார் என்று விசாரிக்கத் தொடங்கிய மகாராஷ்டிர வருமான வரித் துறையினர், தமிழக வருமான வரித் துறையின் உதவியை நாடினர். அந்த நபரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் விசாரித்ததில் அவர் பெரிய நகைக் கடை மற்றும் ஆடம்பர பங்களா கட்டிவந்தது தெரியவந்தது. அத்துடன் ஒரு மருத்துவமனையைக் கட்டவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட இதே சமயத்தில் மும்பையின் பல வீடுகளில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்களைச் செய்தது யார் என்று மும்பை போலீஸார் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்தனர். ஜனவரி மாதம் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்துக்குப் பின்னர், அந்தச் சமயத்தில் அந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண்களைக் கொண்டு விசாரித்த போலீஸாருக்கு கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு மொபைல் எண் கிடைத்தது. அதன்மூலம் சரவணன்குமார் (45) என்ற அந்த நபர் மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டார். ஒன்றிரண்டு அல்ல 45 கொள்ளைச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவருடன் அவரது கூட்டாளிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
விசாரணைக்காக அவரைத் தமிழகத்தில் உள்ள அவரது சொந்தக் கிராமத்துக்குக் கொண்டுசென்றபோதுதான் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கு போலீஸாருக்குத் தெரியவந்தது. கைவிலங்கிடப்பட்டிருந்த சரவணன்குமாரைக் கண்டு அந்த மக்கள் கலங்கிவிட்டனராம். செய்வது சட்டத்துக்குப் புறம்பான தொழில் என்றாலும், இல்லை என்று தன்னிடம் வந்து நின்றவர்களுக்கு உதவ அவர் என்றுமே மறுத்ததில்லையாம். தவிர, மும்பையில் பெரிய தொழிலதிபராகத்தான் அவர் இருக்கிறார் என்றும் அவரது சொந்த கிராமத்தினர் நம்பிவந்திருக்கின்றனர். அவர் கொள்ளையர் என்ற செய்தியைக் கேட்டு அவர்கள் அதிர்ந்திருக்கின்றனர்.
அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 50 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் போலீஸாருக்குக் கிடைத்தன. மும்பையின் அடுக்குமாடிக் கட்டிடங்களில் தனது சிறு கும்பல் நடத்திய கொள்ளைச் சம்பவங்கள் பற்றிய தகவல்களை சரவணன்குமார் சொல்லச் சொல்ல… போலீஸாரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
விலையுயர்ந்த சொகுசு காரில் செல்லும் அந்தக் கும்பல், தாங்கள் கொள்ளை யடிக்கத் திட்டமிட்டுள்ள கட்டிடங்களின் முன் காரை நிறுத்தி, காவலாளியின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்வார்களாம். அல்லது, அந்தக் கட்டிடத்தில் வசிக்கும் ஒரு நபரைச் சந்திக்க வேண்டும் என்று முறைப்படி அனுமதி வாங்கி, பின்னர் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றுவார்களாம்.
மும்பையின் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள சரவணன்குமார் பற்றி போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.
பிரான்ஸிஸ் கப்போலாவின் 'காட்ஃபாத'ரைத் தழுவிய படம் என்றாலும், தன் ‘நாயகன்' நிஜ கதாபாத்திரத்தின் பாதிப்பில் உருவானவன் என்று மணிரத்னம் கூறுவார். மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்ற தாதாவின் கதையைத் தழுவியே அந்தப் படத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. வரதாபாய் என்று அழைக்கப்பட்ட அந்தத் தமிழர், மும்பை யின் நிழலுலக தாதாவாகக் கோலோச்சியவர்.
இப்போது சரவண்குமார் கதையைக் கேட்டால், அடுத்து ‘நாயகன்-2’ எடுக்குமோ கோலிவுட் என்று பயமாக இருக்கிறது!
- chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago