ஆங்கிலம் முக்கியமா, விளையாட்டு முக்கியமா?

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி யின் முதல் சுற்றில் ஜப்பான் கால்பந்து அணி மோசமான தோல்வி அடைந்தது போதாதென்று மேலும் ஒரு பிரச்சினை எழுந்திருக்கிறது. பிரேசிலுக்கும் குரோஷியாவுக்கும் இடையிலான போட்டியின்போது ஜப்பானைச் சேர்ந்த கால்பந்து நடுவர் யூய்ச்சி நிஷிமுரா தவறான தீர்ப்பை அளித்துவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நிஷிமுராவுக்குச் சரியாக ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்று குரோஷிய அணியினர் ஒரு குற்றச்சாட்டை வைத்தனர். தங்கள் ஆங்கில அறிவு குறித்துத் தாழ்வுமனப்பான்மையில் இருக்கும் ஜப்பானியர்கள், இதனால் மேலும் கூனிக்குறுகிப்போயினர்.

நிஷிமுராவுக்கு சர்வதேசப் போட்டிகளில் நிறைய அனுபவம் உண்டு. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றிய அரிய அனுபவம் கொண்டவர் அவர். 2004-லிருந்து சர்வதேச நடுவராக இருக்கும் அவருக்கு ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த நடுவர் விருது 2012-ல் கிடைத்ததையும் மறந்துவிடலாகாது.

ஆங்கிலம்தான் மிகவும் அத்தியாவசியமான தகுதி என்றால், ஃபிஃபா அதை வெகுகாலத்துக்கு முன்னரே அமல்படுத்தியிருக்க வேண்டும். மேலும், கால்பந்து என்பது மொழி அடிப்படையிலான விளையாட்டு அல்ல. உலகக் கோப்பைகளில் நடுவராகப் பணியாற்றிய மூன்றாவது நடுவர் நிஷிமுராதான். அவர் நினைத்திருந்தால், ஜப்பானிலேயே இருந்துகொண்டு ஜப்பானிய மொழியைப் பேசிக்கொண்டு, ஜப்பானியக் கால்பந்து போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றுவதில் திருப்தி கொண்டிருக்கலாம். ஆனால், மிகுந்த துணிவுடன், நம்பவே முடியாத அளவில் போட்டி நிலவும் சர்வதேசக் களத்தில் புகுந்து இன்று பெயர்பெற்ற ஒரு நடுவராக அவர் உயர்ந்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE