பட்டாணியை உரித்துக் கொண்டிருந்தேன். குண்டு குண்டாய், பச்சைப் பசேல் என்று இருந்தன. தோலைத் தனியாக ஒரு கூடையில் போட்டுக் கொண்டிருந்தேன். வீட்டில் உதவி செய்யும் பெண்மணி, தோல் நிறைந்த கூடையை ‘மக்கும் குப்பை’ பச்சை பக்கெட்டில் சேர்ப்பதற்காக எடுத்துப்போனார்.
எனக்கு என் இளமைப்பருவ நினைவுகள் வந்தன.
அன்று காய்கறிக் குப்பைகள் பசு வயிற்றில் போகும். நான் குறிப்பிடுவது கிராமத்தில் அல்ல. சென்னையின் திருவல்லிக்கேணி வீதிகளில்தாம். சாலையில் பல வீடுகளில் மாட்டைக் கொண்டு வந்து வாசலில் கட்டி, ‘அம்மா’ என்று குரல் கொடுப்பார் மாட்டுக்காரர். குவளையைக் கவிழ்த்துக் காண்பித்துவிட்டு (பாலில் கலப்படம் செய்யத் தண்ணீர் இல்லை என்று உணர்த்த) ஊட்டிக்கொண்டு இருக்கும் கன்றுக்குட்டியை இழுத்துக் கட்டுவார். பாவம்.. அது நான்கு வாய்கூடக் குடித்திருக்காது. காலிக் குவளையில் பீய்ச்சும் சப்தம். சில நிமிடங்களில் நிறையும். பாலில் விழும்போது ஒலி மாறும். நுரை ததும்பும் பாலை அளந்து பாத்திரத்தில் ஊற்றும்போது கை விரல்களால் நுரை விழாமல் தடுக்க வேண்டும். அம்மா கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டு இருப்பார்.
கறக்க வரும் மாடு மாத்திரமல்ல, தெருவில் சுதந்திரமாகவும் மாடுகள் திரியும் காலம். மதியம் விழும் எச்சில் இலைகள், கீரை, அவரை ஆய்ந்த குப்பை, பூசணி, பறங்கித்தோல் மற்றும் பல ‘மக்கும் குப்பை’கள் பசு, எருமை வயிற்றில் போகும். அவற்றின் பின்னால் விழும் சாணியை அள்ளித் திரட்டி வறட்டித் தட்ட எடுத்துப் போகும் பெண்மணிகள். கூட்டு ரோடுகளில் நடுவில் தீவுத் திடல் ஒன்று இருக்கும் அல்லவா, அவற்றில் மாடுகள் அசை போட்டவாறு படுத்திருக்கும். சுற்றும் போகும் போக்குவரத்தையோ, வாகனங்களையோ அவை லட்சியமே செய்யாது.
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 24: தோழிப்பெண் ஊர்வலமும் பூரி தக்ஷிணையும்!
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 23: ஊர் கூடி நடத்திய திருமணங்கள்!
அது 1957என்று நினைக்கிறேன். என் நாத்தனார் தன் ஆறாவது பெண்ணுடன் வந்திருந்தார். மும்பையில் மாடிகளையே பார்த்து வளர்ந்த பெண். மாடுகளைப் பார்த்ததில்லை. அன்றே மும்பையில் ‘ஆரே’ பால் நிறுவனம் பதப்படுத்திய பாலைக் குப்பிகளில் நிரப்பி விற்றது. இந்தப் பெண் குழந்தைக்குப் பாலைக் குப்பியில் விட்டு வாசலில் பார்த்துதான் பழக்கம். காலையில் என் வீட்டு வாசலில் பால் கறப்பதைக் கண்டாள். நான் ‘இது மாடு... பால் கறக்கிறார்கள்’ என்று சொன்னபோது, அவள் முகத்தில் ஆச்சரியமும் அருவருப்பும். “இப்படித்தான் பால் வருகிறதா இந்த ஊரில்? எனக்கு இது வேண்டாம்’’ என்றாள். மற்ற உடல் கழிவுகளைப் போல இதுவும் ஒன்று என்று நினைத்துவிட்டது அந்தக் குழந்தை. நான் பெண்களின் மார்பகத்தைப் போலத்தான் மாட்டின் மடி என்று விளக்கி சமாதானம் செய்தேன். நாம் எங்கே போகிறோம்? வயல், நெல் அரிசிகூடப் பார்க்காத தலைமுறை வந்துவிடுமோ? தோசை, இட்லி, சப்பாத்திகூட செடியில் விளையும் என்று எண்ணும் தலைமுறை வருமோ என்று நினைத்தபோது சிரிப்பு வந்தது.
பிறகு ‘பால் புரட்சி’ வந்தது. தமிழ்நாட்டிலும் பதப்படுத்திய பால் குப்பிகளில் வந்தது. பால் அட்டைக்கு விண்ணப்பித்து, மாதா மாதம் முன்பணம் கட்டி வாங்கினோம். அதிகாலையில் அருகிலுள்ள ‘பால் பூத்’தில் வரிசையில் நின்று வாங்கினோம். பாலை நமக்காக வாங்கி வீட்டில் கொண்டுவந்து தர கூலிக்காரப் பையன்கள், வீட்டு வாசலில் பால்குப்பிகளை வைத்துவிட்டு, காலிக்குப்பிகளை எடுத்துப் போவார்கள். பிறகு ஞெகிழி (பிளாஸ்டிக்) பால் பைகள் வந்தன. பாலும் தாராளமாய் கிடைத்தது கூடவே மக்காத குப்பையும்தான். அதன் பின் தானியங்கி இயந்திரங்கள், ‘டோக்கன்’கள். வீட்டில் பால் பைகளை மூலையைக் கத்தரித்துச் சிந்தாமல் பாத்திரத்தில் ஊற்ற கற்றுக்கொண்டோம்.
என் அக்காவின் மகன் புது வேலையில் சேர்ந்திருந்தான். பிரம்மச்சாரி. உணவு வெளியில். “ஏண்டா, காலை உணவுக்காவது வழிசெய்து கொண்டாயா?” என்று கேட்டேன். அவன் காபி குடிக்க மாட்டான். அவன் “ஆஹா... ஏற்பாடு செய்துவிட்டேனே! ரொட்டியும் பாலும் வைக்க ஃப்ரிட்ஜ். ஒரு கத்தரி. இரண்டு டம்ளர்களும் ஒரு தட்டும். பாலைக் கத்தரித்து டம்ளரில் ஊற்றி ரொட்டியுடன் சாப்பிடுவேன்” என்றான்.
வீதிகளில் காலையிலும் மாலையிலும் இடுப்பில் பெரிய அலுமினியக் கூடைகளில் பால் பாக்கெட்டுகளை நிரப்பி, வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு அம்மணிகள் வீடு வீடாய் வந்தார்கள். மாடுகள் நகரில் தடை செய்யப்பட்டன. சுவரொட்டிகள் மாடுகளால் தின்னப்படாமல் முழுமையாக இருந்தன. நாற்சந்திகளில் அசைபோடும் மாடுகள் இல்லை.
பசு மாடுகள் மாத்திரமல்ல; காளைகளையும் காண்பது அரிதாகிவிட்டது. எத்தனைவிதமான காளைகள்... திருஷ்டிக்குக் கழுத்தில் கறுப்புக் கயிறும் மணிகளும். ‘ஜல் ஜல்’ என்று குலுங்கப் போகும் இரட்டை மாட்டு வண்டி, ஒற்றை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட காளைகள்தாம் எத்தனை ரகம்! வெள்ளை, செவலை, கறுப்பு, புங்கனூர் குட்டை, காங்கேயம் காளை என்று எத்தனையோ!
விவசாயத்துக்கு உழவு மாடுகள், சுற்றிச் சுற்றி செக்கு இழுக்கும் காளைகள், முன்னும் பின்னுமாக நடந்து தண்ணீர் இறைக்கும் பொலி காளைகள், ‘ரேக்ளா’ வண்டிப் போட்டிக்கு உள்ளவை, ஜல்லிக்கட்டுக் காளைகள், பொலிகாளைகள், கருகருவென்ற எருமைகள். மந்தைக்கு மேயப் போகும் மாடுகளுக்கு வீட்டையும் மனிதர்களையும் நன்றாகத் தெரியும். பெயர் சூட்டி, குடும்பத்தின் அங்கத்தினராகவே அவை கருதப்பட்டன.
கோயில் மாடுகளில் இரண்டு வகை. சிலவற்றின் முதுகில் முரசு ஏற்றி அடித்தபடி கோயில் பிரகாரங்களில் ஊர்வலமாகச் செல்லும். தெய்வங்களுடன் போகும் மற்ற வகை கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டவை. ஒரு வேலையும் செய்யாமல் கம்பீரமாக வளையவரும். நம் ஊரில் வாட்டசாட்டமாய் நன்றாக உடுத்திக்கொண்டு, ஒரு வேலையும் செய்யாமல் ஊர் சுற்றுவார்கள். இவர்களைக் கேலியாகக் ‘கோயில் மாடு’ என்று சொல்லுவார்கள். ஏன், நகரங்களில்கூடப் பெரியவீட்டுப் பிள்ளைகள் சுகபோகமாக இப்படிக் ‘கோயில் மாடு’களாக இருப்பதைக் காணலாம்.
நகரங்களில் நாம் பார்க்கும் காளைகள் வண்டி மாடுகள்தாம். ‘ரப்பர் டயர்’ பூட்டிய வண்டியைப் பாரத்துடன், ஒற்றையாகவோ இரட்டையாகவோ இழுத்துப் போவதைப் பார்க்கலாம். பல நேரம் பாரம் தாங்காமல் திணறி, வாயில் நுரை தள்ளிக்கொண்டு போகும். மேடான பாதையானால் ஓட்டுநர் அடிப்பார். சில சமயம் அவரே இறங்கிக் கூடத் தள்ளுவார். இவை
பரிதாபமான காளைகள். என் தந்தை ஒரு முறை ‘பெண்டாட்டியை அடிக்கிற கணவர்கள் இப்படி வண்டி மாடாகப் பிறக்கிறார்கள்’ என்று சொன்னார். இது உண்மையானால் இவற்றின் மீது இரக்கத்துக்குப் பதில் ‘நன்னா வேணும்’ என்று சொல்லத் தோன்றும்.
சந்திப்போம்... சிந்திப்போம்...
கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago