செயலிகளை செம்மைப்படுத்துமா மாநில அரசுகள்?

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு ஜனவரி 13 அன்று, நாளேடுகளின் சந்தாதாரர்கள், வாட்ஸ்அப் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட முழுப் பக்க விளம்பரத்தோடுதான் விழித்தெழுந்தார்கள். அவ்வாரத்தின் தொடக்கத்தில், தனிநபர் உரிமைக் கொள்கை சார்ந்து தான் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்களை வாட்ஸ்அப் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பானது, அந்தச் செயலியைப் பயன்படுத்திவரும் பெரும்பாலானவர்களிடம் ஆழ்ந்த கவலையை உருவாக்கிவிட்டது. உடனே அவர்கள் சிக்னல், டெலிகிராம் போன்ற மற்ற செய்திப் பகிர்வு சேவைகளுக்கு மாற ஆரம்பித்துவிட்டனர். எனவேதான், வாட்ஸ்அப் தனது செயலியைப் பயன்படுத்துபவர்களின் தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதைத் தெரிவிக்கும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டியதாயிற்று. ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ்அப் செயலி தொடர்பாக வெளியிடப்பட்ட, வழக்கத்துக்கு மாறான இந்த விளம்பரம், இந்தியாவில் அதைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருப்பதையும் அவர்களின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனிநபர் உரிமைகளில் அக்கறை கொண்டிருப்பதையும் அத்தகைய நிலையானது சமீப காலங்களில் மிகவும் வலுப்பெற்றிருப்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.

தொழில்நுட்பமும் பெருந்தொற்றும்

பொதுச் சேவைகளை வழங்குவதில் இயல்பாகவே அரசு முற்றுரிமையைப் பெற்றிருப்பதால், தனியார் துறைகளைப் போலன்றி, அரசின் தொழில்நுட்பத் தளங்களில் தனிநபர் உரிமை என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எனவே, வாட்ஸ்அப் விஷயத்தில் வேறொரு சேவைக்கு மாறிக்கொள்வதோ அல்லது மிகவும் விரிவுபடுத்தப்பட்ட அலைக்கற்றை மேலாண்மையோ மட்டுமே சிறந்த தீர்வாக இருக்க முடியாது. அதற்குப் பதிலாக, அரசு கையாளும் தொழில்நுட்பத் தளங்களிலும் சிறந்த விழிப்புணர்வை உருவாக்க முடியுமா என்று ஆராய்வதே சரியானது. இந்திய அரசின் பயோமெட்ரிக் டிஜிட்டல் அடையாளத் தளமான ஆதார் மற்றும் பெருந்தொற்றுக் காலத்தில் தொற்றுப் பரவல் தொடர்புகளைக் கண்டறிவதற்கான ஆரோக்கியசேது செயலி ஆகியவற்றில் இத்தகைய செயல்முறையை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம்.

மார்ச் 24, 2020 அன்று முதலாவது பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, பெருந்தொற்றை முன்னிட்டு இந்தியாவின் 25 மாநில அரசுகள், ஒன்றியப் பிரதேசங்களால் குறைந்தபட்சம் 35 செல்பேசிச் செயலிகள் உருவாக்கப்பட்டன. அவற்றில், 27 செல்பேசிச் செயலிகள் கரோனா குறித்த பொதுவான தகவல்களை அளித்தன, 7 செயலிகள் அருகிலுள்ள தொற்றுப் பரவல்களை அறிந்துகொள்ள உதவின. இவற்றில் 15 செயலிகள் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினைக் கொண்டிருந்தன. மேலும், இவற்றில் குறைந்தபட்சம் நான்கு செயலிகளைப் பயன்படுத்துவதற்கு மாநில சுகாதாரத் துறையில் முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டியிருந்தது.

இந்த 35 செயலிகளையும் மதிப்பீடு செய்தபோது இவற்றில் 17 செயலிகள் கரோனாவுக்குச் சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனைகளைப் பற்றிய விவரங்களை அளித்தாலும் மூன்று செயலிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் பற்றிய விவரங்களை அளித்தன என்பது தெரியவந்தது. சில செயலிகளில் மளிகைப் பொருட்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீட்டிலேயே கொண்டுவந்து சேர்ப்பதற்கான வசதிகளும்கூட அளிக்கப்பட்டிருந்தன. ஏழு செயலிகளில் அதைப் பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து அனுமதிச் சீட்டு பெறவும் வாய்ப்பளிக்கப்பட்டது.

எல்லோருக்கும் இந்த வாய்ப்பில்லை

கரோனாவுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த செல்பேசிச் செயலிகள் ஆக்கபூர்வமான முயற்சியாக வரவேற்பைப் பெற்றது என்றாலும், அது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கும் பிரிவினரிடம் மட்டும்தான். அக்டோபர் 2020 நிலவரப்படி, இந்தியாவில் 40%-க்கும் அதிகமான செல்பேசி வாடிக்கையாளர்கள் இணையச் சேவைகளைப் பெறும் வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த எண்ணிக்கையானது, தங்களது செல்பேசிகளில் இணைய சேவைகளைப் பெறுவதற்கான வசதிகளைப் பெற்றிருக்காதவர்களையும் உள்ளடக்கியது. செல்பேசிகள் இல்லாதவர்களையும் கணக்கில்கொண்டால், இந்தியாவின் டிஜிட்டல் சேவைகளைப் பெறும் வாய்ப்பில்லாதவர்களின் எண்ணிக்கை 50%-க்கும் அதிகமாக இருக்கும். எனவே, செல்பேசிச் செயலிகளை உருவாக்கும்போது அந்தத் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளவர்களை உடனடியாக அவை சென்றடைந்துவிடுகின்றன. டிஜிட்டல் வாய்ப்புகளைப் பெற்றிராத தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் பிரச்சினைகள் அந்தச் செயலிகளால் நிவர்த்திசெய்யப்படாத நிலையே தொடர்கிறது.

சீர்மையும் தனிநபர் உரிமையும்

மேற்கண்ட தகவல்களிலிருந்து செல்பேசிச் செயலிகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றிலிருந்த தகவல்களைத் தரப்படுத்தும் முயற்சிகள் அல்லது ஒருங்கிணைந்த வகையிலான மேம்பாட்டு அணுகுமுறை முயற்சிகளோ மேற்கொள்ளப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கரோனா பெருந்தொற்றையொட்டி வெவ்வேறு மாநிலங்களால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலிகள், அவற்றின் சிறப்பம்சங்களிலும் செயல்பாடுகளிலும் அளிக்க முன்வந்த தகவல்களிலும் எந்தவிதமான சீர்மையும் இல்லை என்பதைப் பகுப்பாய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. பெரும்பாலான செயலிகளில் தகவல்கள் ஆட்களைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. செயலிகள் அளித்த தரவுகள் உண்மையான தரவுகளைக் காட்டிலும் வேறுபட்டிருந்ததால், எது உண்மையென்று உணர்ந்துகொள்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டன. இலவசத் தொலைபேசி உதவி சேவை மையங்கள், பதிவுசெய்யப்பட்ட தொலைபேசிப் பதிலுரைகள், செல்பேசிக் குறுஞ்செய்திகள் மற்றும் அது போன்ற வழிமுறைகளை அரசு தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றாலும் அத்தகைய தகவல்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒருங்கிணைக்கவும் வேண்டும். பெருந்தொற்று போன்ற முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் காலத்தில் இது மிகவும் அவசியம்.

தனிநபர் உரிமைக்கே மீண்டும் வருவோம். மாநில அரசுகள் உருவாக்கிய செயலிகளில் பெரும்பாலானவை அவை பயன்பாட்டாளர்களிடமிருந்து கேட்ட தகவல்கள் மற்றும் அனுமதிகளின் தரவுப் பாதுகாப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டிருந்தன. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 35 செயலிகளில் 31 செயலிகள் இருப்பிடச் சேவைகளை இணைக்குமாறு கேட்டன. 9 செயலிகள் செல்பேசியின் அடையாள எண்ணையும் தொலைபேசி அழைப்பு விவரங்களையும் அறிந்துகொள்ள அனுமதி கேட்டன. ஐந்து செயலிகள் ப்ளூடூத் அமைப்பை அணுகவும் 15 செயலிகள் கேமராவை அணுகவும் 3 செயலிகள் தொடர்பு எண்களின் விவரங்களை அணுகவும் மேலும் 3 செயலிகள் பயன்பாட்டாளரின் செல்பேசிக் கணக்கு விவரங்களை அணுகவும் ஒப்புதல் அளிக்குமாறு கேட்டன.

சாத்தியமுள்ள தீர்வுகள்

வெவ்வேறு நிரல்களுக்கிடையே தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் ஏபிஐ தொழில்நுட்ப அடிப்படையிலான குறுஞ்சேவை அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த தரவு அமைப்பின் துணையோடு பொருத்தமான மேலாண்மைக் கட்டமைப்பை உருவாக்குவதே இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவும். உதாரணத்துக்கு, ஆரோக்கிய சேது செயலியானது மாநில அரசின் பல்வேறு செயலிகளுடன் இணைக்கப்படுவதன் மூலம் அனைத்துச் செயலிகளின் சேவைகளையுமே தரமுயர்த்த முடியும். அதாவது, தொற்றுப் பரவலைக் கண்டறிவது மற்றும் அவ்வப்போதைய தகவல்கள் மட்டுமின்றி மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் அளிக்கின்ற சேவைகள் ஆகியவற்றுடன் மருத்துவமனைப் படுக்கைகள், அருகிலுள்ள மளிகைக் கடைகள் போன்ற தகவல்களையும் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.

ஐரோப்பாவிலுள்ள பெரும்பாலான நாடுகள் தொற்றுப் பரவலைக் கண்டறியும் செயலிகளின் தகவல்களின் அளிப்பைப் பொதுமைப்படுத்தவில்லை. தனிநபர் உரிமை கருதியே அவ்வாறான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. பொதுமைப்படுத்தப்பட்ட தரவுகள் கசிவதற்கான வாய்ப்புகளையும் பாதுகாப்பு உரிமை மீறல்களுக்கான வாய்ப்புகளையும் கொண்டிருக்கின்றன. மேலும், பொதுமைப்படுத்தப்பட்ட தகவல் அளிப்பானது, பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பில் மட்டுமின்றிப் பெரும்பாலான தனிநபர்களின் அமைப்புகளிலும் இடம்பெறுகிறது. எனவே, தனிநபர் உரிமைப் பாதுகாப்பில் மீறல்களைக் குறைக்க முயன்றாலும் அது அவ்வளவு எளிதானதல்ல.

மாநில அரசுகளின் சில செயலிகள் பொதுமைப்படுத்தப்பட்ட தரவு அணுகுமுறையைக் கையாண்டன. எனினும், எதிர்காலத்தில் இத்தகைய பொதுமைப்படுத்தப்பட்ட தகவல்களின் அவசியம் குறித்தும் பரிசீலிக்க வேண்டும். அதுபோல, பொதுமைப்படுத்தப்பட்ட தகவல் அளிப்பால் அதன் நோக்கத்தை அடைய இயலுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.

இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொழில்நுட்பங்களைக் குறித்து தொடர்ச்சியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை நடைபெறுவதைப் போலவே, மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத் தளங்களுக்கும் அதே விதமான கண்காணிப்பு அவசியம். அப்போதுதான் மேம்படுத்தப்பட்ட பொதுச் சேவைகள் அனைவரையும் சென்றடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அந்த வாய்ப்புகளை விரிவான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றால், மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டியது மிகவும் முக்கியம்.

- இந்தியப் பெருந்தொற்றுத் தொழில்நுட்பச் சீராய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இக்கட்டுரை எழுதப்பட்டது,

© தி இந்து, சுருக்கமாகத் தமிழில்: புவி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்