குண்டு விழும் மலர் வனம்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநில ஓகலா தேசிய வனப் பகுதியில் ஓய்வெடுக்கச் சென்றால் எச்சரிக்கையாக இருங்கள். எந்த நேரமும் உங்கள் தலைமீது குண்டு விழலாம்! பறவைகளின் ஓசை எத்தனை இனிமை என்று ரசித்துக்கொண்டிருக்கும்போதே, அண்ட சராசரங்களும் இடிந்து விழுந்ததைப்போன்ற நாராச ஓசை உங்கள் காதைத் துளைக்கலாம்.

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரம் நெடுகிலும் இந்த ஒரு இடம்தான் அமெரிக்கக் கடற்படைக்கு, நிஜமான குண்டுகளை வீசிப் பயிற்சி எடுப்பதற்கான களமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. காப்புக்காடு என்று அறிவிக்கப்பட்ட தேசியப் பூங்காவில், தற்போது குண்டுவீசிப் பழகும் பயிற்சிக் களம் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க வேளாண் துறையின் பொறுப்பில் உள்ள இந்த 4,30,000 ஏக்கர் வனத்தின் மையப் பகுதியில் குண்டுவீச்சுப் பயிற்சிக் களம் அமைக்க அனுமதி தேவை என்று ராணுவம் கேட்டது. வேளாண் துறையால் மறுக்க முடியவில்லை.

போர் விமானிகள் உற்சாகத்துடன் பயிற்சி பெறுவதற்காக இங்கே ஜப்பானிய நகரத்தின் நகல் நிர்மாணிக்கப்பட்டது. போர் முடிந்த பிறகு 40,000 ஏக்கர் நிலத்தை வேளாண் துறையிடம் ஒப்படைத்தாலும் இன்னும் 5,000 ஏக்கரைத் தனது களமாகவே கடற்படை நிறுத்திவைத்துள்ளது.

ஜேக்சன்விலி என்ற இடத்தில் உள்ள கடற்படை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம் வனத்தின் மீது தாழப் பறக்கிறது. 450 ஏக்கர் பரப்பின் மையப் பகுதியில் குண்டு வீசப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 குண்டுகள் வீசப்படுகின்றன.

குண்டு நிஜமாக இருந்தாலும் அதில் நிரப்பப்படுவது வழக்கமான வெடிமருந்து அல்ல. களிமண், கான்கிரீட் கலவை அல்லது இரும்பு போன்றவைதாம். நூற்றுக் கணக்கான குண்டுகள் இலக்கின் மீது விழுந்தும் வெடிக்காமலேயே இருக்கின்றன. பைலட்டுகள் துல்லியமாக வீசுவதைப் பொறுத்து அவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும். போர் என்றால் மக்கள் மட்டுமா, மரங்களும் அல்லவா மடிய நேர்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE