பிரதமர் அலுவலக அதிகாரிகள் லண்டன் ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்கள். மோடியின் அடுத்த விஜயம் இங்கிலாந்து. பிரதமராக அமர்ந்த முதல் 17 மாதங்களில் 28 நாடுகளைச் சுற்றி வந்துவிட்டார் நரேந்திர மோடி. இடையிடையே மாநிலத் தேர்தல்கள் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், பிரதமரை எப்போதேனும் காணும் அரிய வாய்ப்பும் கிடைக்கக்கூடியது அல்ல. இப்படி ஓடி ஓடி உழைக்கும் பிரதமர் வெளியிலிருந்து எவ்வளவு முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிறார் என்கிற கணக்குகளை அப்புறம் பார்க்கலாம்.
ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம், தெற்காசியாவில் வலுவான ‘தாதா’ எனப் பல கோதாக்களோடு ராஜீய உறவுகளைக் கையாளத் தொடங்கியது மோடி அரசு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் எவ்வளவு மோசமாக அடிவாங்க ஆரம்பித்திருக்கின்றன என்பதற்கு இப்போது அழுத்தமான புள்ளியாகியிருக்கிறது நேபாளம்.
மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் மிக முக்கியமான வியூகம் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’. இதன்படி, ஒரு பிரதமராகத் தன்னுடைய முதல் பயணத்தை பூடானுக்கு அமைத்துக்கொண்ட மோடி, தொடர்ந்து ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்காக பிரேசில் சென்றார். அடுத்து, அவர் பயணம் மேற்கொண்ட நாடு நேபாளம். இந்தியாவுக்கு மிக நெருக்கமான கூட்டாளியான நேபாளம் இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு எனும் பின்னணியில், வழக்கம்போலத் தன்னுடைய இந்து அடையாளத்தை அரசியல்ரீதியாக அங்கும் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டார் மோடி.
“காவி உடையோடு, நெற்றியில் அப்பிய சந்தனமும் கழுத்தில் இரட்டை ருத்திராட்ச மாலையுமாக பசுபதிநாதர் கோயிலுக்கு அவர் விஜயமானபோது, வந்தவர் இந்திய பிரதமராகத் தெரியவில்லை; எங்களூர் ரிஷிகளில் ஒருவராக உணர்ந்தோம்” என்று உச்சி குளிர்ந்தார்கள் நேபாளியர்கள். இது 2014 ஆகஸ்ட் நிலவரம். “நேபாளம் பெரும் மானுட நெருக்கடியை இந்தியாவால் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஐ.நா. சபையும் சர்வதேசச் சமூகமும் உடனடியாகத் தலையிட்டு, நிலைமை மேலும் மோசமாகும் முன் நேபாளியர்களைக் காக்க வேண்டும்” என்று ஐ.நா. சபையின் கதவைத் தட்டியிருக்கிறது சர்வதேச நேபாளச் சமூகம். நேபாளத்தின் பல பகுதிகளில் இந்தியக் கொடிகள் எரிக்கப்படுகின்றன; மோடிக்கு எதிராக கோஷங்கள் முழங்குகின்றன. இரு நாட்களுக்கு முன் நேபாளத்தின் புதிய பிரதமர் கே.பி.ஒலி வெளிப்படையாக, “நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது” என்று பேசியிருக்கிறார். இது 2015 நவம்பர் நிலவரம்.
என்ன நடக்கிறது நேபாளத்தில்?
நேபாளம் கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் இருக்கிறது. “போர் அற்ற ஒரு போர்ச் சூழல் இங்கே நிலவுகிறது. ஆனால், இந்திய அரசுக்கு இணையான அதே பெரியண்ணன் மனோபாவத்தில் இருக்கும் இந்திய ஊடகங்கள் தரும் செய்திகளைத் தாண்டி இங்கே வந்தால்தான் நீங்கள் இந்த விஷயத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார் ஒரு நேபாளிய நண்பர். நேரில் சென்று கள நிலவரத்தை எழுத நேபாளம் செல்வது இப்போது அத்தனை எளிதானது அல்ல என்பதை அண்மையில் அங்கு சென்று திரும்பிய நண்பர்களின் அனுபவங்கள் உணர்த்தின.
“நேபாளத்தின் எந்த வீதியிலும் தனிநபர் போக்குவரத்து வாகனங்களைப் பார்க்க முடியாது. பஸ்கள் நிரம்பி வழிகின்றன. வயதானவர்களும், குழந்தைகளும்கூட பஸ்களுக்கு மேல் பகுதியில் கும்பலாக உட்கார்ந்துகொண்டு செல்லும் நிலை. ஒவ்வொரு நாளும் விபத்துச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. சாலையோரங்களில் விறகுக் கடைகள் திறக்கிறார்கள். ஒரு வேளை சமையல் மூன்று வேளைகளுக்கு ஓடுகிறது. நான் தங்கியிருந்த விடுதி வசதியானது. அவர்களே விறகு அடுப்பு மூலமாகத்தான் சமைத்தார்கள். உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு. இந்திய விமானங்கள் நேபாளத்துக்கான விமான சேவைகள் பெரும்பாலானவற்றை நிறுத்திவிட்டன” என்றெல்லாம் சொன்னார்கள்.
இமயமலை நாடான நேபாளம் தன்னுடைய பெரும்பாலான தேவைகளுக்கு இறக்குமதியை நம்பியிருக்கிறது. அதன் இறக்குமதியில் 60% - குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களில் பெரும்பான்மை இந்தியாவிலிருந்து செல்வது. கடந்த இரு மாதங்களாக இந்தியாவிலிருந்து நேபாளத்தில் நுழையும் எல்லைப் பாதைகள் அடைபட்டுக் கிடக்கின்றன. இந்தியாவிலிருந்து சென்ற லாரிகள் சரக்குகளோடு ஆங்காங்கே முடங்கி நிற்கின்றன.
பிரச்சினையின் தொடக்கப் புள்ளி
அரை நூற்றாண்டுப் போராட்டத்துக்குப் பின் நேபாளம் தன்னுடைய அரசியல் சட்டத்தை இந்த ஆண்டு நிறைவேற்றியது. அரசியல் சட்ட வடிவமைப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த சூழலில்தான் மோடியின் நேபாள விஜயம் நடந்தது. இந்திய நேபாள உறவின் நான்கு முக்கியப் புள்ளிகளில் ஒன்றாக கூட்டுறவு, தொடர்பு, கலாச்சாரம் ஆகியவற்றோடு அரசியல் சட்டத்தையும் மோடி குறிப்பிட்டபோதே நேபாள அரசியல் தலைவர்கள் மத்தியில் சிறிய சலசலப்பு உருவானது. அடுத்து வந்த சில மாதங்களில் பெரும் பூகம்பத்தை நேபாளம் எதிர்கொண்டது.
பூகம்ப நிவாரணப் பணிகளில் வழக்கம்போல முன்னின்று உதவியது இந்தியா. கூடவே ‘மோடி இந்தியா’ பிம்பத்தை ஊதிப்பெருக்கும் வேலைகளில் அரசுசார் இந்திய ஊடகங்கள் இறங்கியது நேபாளியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. சமூக வலைதளங்களில் ‘இந்திய ஊடகங்களே வெளியேறு’ என்ற ஹேஷ்டாக் தீயாகப் பரவியது.
ஏப்ரல் பூகம்ப அடியிலிருந்து மெல்ல சுதாரித்த நேபாள அரசு புதிய அரசியல் சட்டத்தை செப்டம்பரில் அறிவிக்க முடிவெடுத்தது. இந்து மதத்துக்கே உரிய சாதியப் பாகுபாடுகளின் தாக்கமோ என்னவோ நேபாள அரசியல் சட்டமும் பல பாகுபாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது. மலைப் பகுதியில் வாழும் மேட்டுக்குடியினருக்குக் கூடுதல் பிரதிநிதித்துவத்தை ஒதுக்கிய அரசியல் சட்டம், பெண்கள், ஜனஜாதிகள், தாருக்கள், மாதேசிகள் எனச் சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்கள் மீது பாகுபாட்டைப் பரப்பியது. மேலும், தொகுதிகள் வரையறையிலும் நீடிக்கும் இந்தப் பாகுபாடானது பாதிக்கப்பட்டவர்களைக் கோபத்தில் தள்ளியதுடன் போராட்டத்தை நோக்கியும் நகர்த்தியது.
“இந்தப் போராட்டங்களில் மாதேசிகளின் போராட்டம் இந்திய அரசுக்கான கருவியாகிவிட்டது” என்கிறார்கள் நேபாளத் தலைவர்கள். அடித்தட்டுப் பிரிவினரான மாதேசிகள் இந்திய எல்லையை ஒட்டி வாழ்பவர்கள், உத்தரப் பிரதேசம் பிஹாரோடு நெருக்கமானவர்கள் என்பதோடு, இந்தியர்களோடு மண உறவும் வைத்திருப்பவர்கள்.
இந்திய அரசு மாதேசிகள் உள்ளிட்ட எல்லாப் பிரிவினரோடும் கலந்து பேசி எல்லோர்க்கும் ஏற்ற அரசியல் சட்டமாக, நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டுவரச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, இந்து நாடாக நேபாளத்தை அறிவிக்கவும் மோடி அரசின் தரப்பிலிருந்து நிர்ப்பந்தங்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ராம் மாதவ் நிழலில் நிறையக் காரியங்களில் ஈடுபட்டதாக வெளியுறவுத் துறை வட்டாரங்களே தெரிவிக்கின்றன. நேபாள அரசோ, இனியும் புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டுவருவதைத் தாமதப்படுத்த முடியாது; பிரச்சினைகளைப் பின்னர் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்ததோடு, நேபாளம் மதச்சார்பற்ற கூட்டமைப்புக் குடியரசு என்றும் பிரகடனப்படுத்தியது.
“இந்தப் பின்னணியிலேயே மாதேசிகளின் போராட்டத்தைத் துருப்புச்சீட்டாக்கி, ‘போராட்டக்காரர்கள் இந்திய வாகனங்களை உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள்’ என்ற பெயரில் போக்குவரத்தை நிறுத்தி பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்திவிட்டது இந்தியா. இதன் மூலம் ஒரே கல்லில் மோடி இரண்டு காய்களை அடிக்கத் திட்டமிடுகிறார், 1. நேபாளத்தைப் பணியவைப்பது; 2. மாதேசிகள் மூலம் பிஹார், உத்தரப் பிரதேசத்தில் பாஜக செல்வாக்கை வளர்த்தெடுப்பது; ஆனால், எங்களைப் பொறுத்த அளவில் இது எங்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதாரப் பூகம்பம்” என்று நேபாளியர்கள் கூறுகிறார்கள்.
நேபாளியர்கள் கூறுவதுபோல் மோடி அரசின் மனதில் என்னென்ன திட்டங்கள், நோக்கங்கள், பின்னணிகள் எல்லாம் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவுக்கு மிக நெருக்கமான கூட்டாளியான நேபாளம் நம் வட்டத்திலிருந்து வேகமாக விலகிக்கொண்டிருக்கிறது; மேலும், அதே வேகத்தில் சீனத்தை நோக்கியும் அதை திசை திருப்பிவிட்டிருக்கிறது இந்த அரசின் அணுகுமுறை. நேபாளம் இந்திய அரசை நோக்கி விடுத்த வேண்டுகோள்கள் யாவும் செவிமடுக்கப்படாத நிலையில், சீனாவுடன் தன்னுடைய முதல் எண்ணெய் ஒப்பந்தத்தில் ஒரு வாரத்துக்கு முன் கையெழுத்திட்டது நேபாளம். நேபாளத்துக்கான எரிவாயு விநியோகம் முழுவதையும் ‘இந்தியன் ஆயில்’ நிறுவனம் மட்டுமே இதுவரை மேற்கொண்டுவந்தது.
சீன இறக்குமதியானது இன்றைய தேதியில் நேபாளத்தின் யானைப் பசிக்கு சோளப்பொறி என்றாலும், எதிர்கால வணிகச் சூழலைத் தம் திசைக்கேற்ப சீனாவால் திருப்பிக்கொள்ள முடியும். ஏற்கெனவே நேபாளத்தின் பெரிய அந்நிய முதலீட்டாளர் எனும் நிலை இந்தியாவிடமிருந்து சீனா கைக்குப் போய்விட்டது. இரு நாட்டுக்கிடையேயான புதிய வாணிபப் பாதைகள் தொடர்பாக இப்போது திட்டமிட ஆரம்பித்திருக்கின்றன காத்மாண்டும் பெய்ஜிங்கும்.
மானுட நெருக்கடி
சர்வதேசக் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றிருக்கும் நேபாளக் குழுவில் ராஜதந்திரிகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், ஐ.நா.சபையின் முன்னாள் அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றிருந்தார்கள். ஐ.நா. சபைக்கான முன்னாள் உதவிப் பொதுச்செயலர் கல் சந்திர கவுதம் அவர்களில் ஒருவர். “அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்பதனாலேயே போர் பிராந்தியங்களில்கூடச் சண்டை நிறுத்தங்கள் அறிவிக்கப்படுகின்றன. நேபாளியர்களுக்கு அந்த வாய்ப்புகூட இல்லை.
உயிர் காக்கும் மருந்துகளுக்குக்கூடத் தட்டுப்பாடு நிலவுகிறது நேபாள மருத்துவமனைகளில். பள்ளி செல்லும் 16 லட்சம் குழந்தைகளின் உணவும் உயிரும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. துசைன், தசரா, தீஹார், தீபாவளி, சாட் என வரிசையாக இது நேபாளியர்களுக்குப் பண்டிகைக் காலம். இந்த நாட்களில் இவ்வளவு மோசமான சூழலை நாங்கள் அனுபவித்ததே கிடையாது. நாங்கள் செய்த பாவம் என்ன?” என்கிறார் கல் சந்திர கவுதம்.
நேபாள அரசியல்வாதிகளிடமிருந்து நேரடியாகவே குற்றச்சாட்டுகள் வருகின்றன. “புது டெல்லியிலிருந்து கடைசி நிமிடம் வரை மோடி தன்னுடைய சமிக்ஞைகளை அனுப்பிக்கொண்டே இருந்தார். அதைப் பொருட்படுத்தவில்லை என்பதுதான் அவருடைய ஒரே கோபம். அதற்கான விலைதான் இதெல்லாம். ‘ரா’வின் தலையீடு தொடர்ந்து எங்களைச் சங்கடப்படுத்துகிறது. இந்தியா பெரியண்ணன் மனோபாவத்தை விட்டொழிக்காவிட்டால் உறவு சீரடைய வாய்ப்பே இல்லை” என்கிறார்கள். “மாதேசிகள் மட்டும் அல்ல; ஜனஜாதிகள், தாருக்கள் எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன; எங்கள் பிரச்சினைகளை எங்களால் தீர்த்துக்கொள்ள முடியாதா?” என்கிறார் பிரதமர் ஒலி. நீங்கள் யார் நாட்டாமைக்கு என்பதுதான் அவர் கேட்காமல் கேட்பது!
நேபாளத்தைத் தன் பக்கம் நோக்கி இழுக்கும் சீன முயற்சிகள் பல்லாண்டு காலமாகத் தொடர்பவை. நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை திரும்பிய பின் நேபாள அரசியல்வாதிகள் மத்தியிலும் தனக்கென்று ஒரு ‘லாபி’யை சீனா உருவாக்கியது. கம்யூனிஸ்ட்டுகளின் எழுச்சி குறிப்பாக, மாவோயிஸ்ட்டுகளின் எழுச்சி நேபாளத்தில் சீனாவின் செல்வாக்கை மேலும் உயர்த்தியது. எனினும், இந்தியாவுடன் வரலாறு, கலாச்சாரங்கள் வழி பின்னிப் பிணைந்திருக்கும் நேபாள மக்களின் மனங்களை இந்திய அரசு பல்லாண்டு காலமாக நம் பக்கம் ஈர்த்துவைத்திருந்தது. இப்போது அங்கு ஓட்டை விழ ஆரம்பித்திருக்கிறது.
நல்ல நண்பர்களுக்கான எல்லை எது?
நேபாளத்தில் என்ன நடந்தாலும் அது முழுக்க முழுக்க அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று நிச்சயம் இன்றைய புவியரசியல் சூழலில் இந்தியாவால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. 1751 கி.மீ. எல்லையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நாடு அது என்பதோடு, நம்முடைய எல்லையை ஒட்டிய நாடுகளில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் நாடும் அது. எனினும், அதன் இறையாண்மையை யாரும் சீண்ட முடியாது. அடுத்தவர் மூக்கைப் பிடித்து அறிவுரை கூறும் உரிமை எவருக்குமே கிடையாது.
நேபாளத்துடனான உறவில் மட்டும் அல்ல; நம்மைச் சுற்றியிருக்கும் அண்டை நாடுகள் பலவற்றுடன் சங்கடமான சூழலை வலிய உருவாக்கிக்கொண்டிருக்கிறது இந்த அரசு. சில வாரங்களுக்கு முன் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், ஜமாஅத் உத் தவா தலைவர் ஹசீஃப் முஹம்மது சயீத் இருவரையும் கொல்ல ‘ரா’ திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது பேத்தலாக இருக்கலாம். ஆனால், பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளின் பின்னணியில் ‘ரா’ கை இருப்பதாக பாகிஸ்தான் அரசு ஐ.நா.சபையில் ஒப்படைத்த ஆவணங்கள் அத்தனை எளிதாகப் புறந்தள்ளிவிடக் கூடியவை அல்ல.
இலங்கை அரசியலில் இந்தியத் தாக்கமானது அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்வது. இலங்கையின் அதீத சீன நெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் உத்திகளில் ஒன்றாகவே மூன்று தசாப்தங்களுக்கு முன் தமிழ் ஆயுதக் குழுக்களை இந்தியா அங்கு வளர்த்தெடுத்தது. ஆனால், அப்போதெல்லாம்கூட வெளியே வராத குற்றச்சாட்டுகள் மோடி பொறுப்பேற்ற பின் வந்தன. இலங்கைத் தேர்தலில் அமெரிக்க, நார்வே உளவு அமைப்புகளுடன் ‘ரா’ முக்கியப் பங்காற்றியதாகப் பகிரங்கக் குற்றச்சாட்டுகள் வெளியாயின. கொழும்புவுக்கான ‘ரா’ தலைவரை அங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் அன்றைய இலங்கைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ச கூறியதாகச் செய்திகள் வெளியாயின. தேர்தல் தோல்விக்குப் பின் ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’டுக்குப் பேட்டி அளித்த முன்னாள் அதிபர் ராஜபக்ச, “என்னுடைய தோல்விக்குப் பின்னணியில் ‘ரா’ இருந்தது” என்று வெளிப்படையாகவே பேட்டி அளித்தார் (பின்பு மோடியின் இலங்கைப் பயணத்தின்போது மோடியை இது தொடர்பாக நான் குற்றஞ்சாட்டவில்லை என்று அவர் விளக்கம் அளித்தது தனிக் கதை).
எல்லை கடந்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கப் பாணி சாகசத்தில் இந்திய ராணுவம் மியான்மர் எல்லையில் ஈடுபட்ட செய்தி வெளியானபோது, மியான்மரிலும் இந்தியாவுக்கு எதிராக முணுமுணுப்புகள் கிளம்பி ஓய்ந்தது நினைவிருக்கலாம்.
அண்டை நாடுகளின் இறையாண்மைக்குள் கால் நுழைப்பதற்கும் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. காலங்காலமாக இந்தியர்கள் உலகை ஈர்த்ததும் இரண்டறக் கலந்ததும் நட்புறவாலும் பன்மைக் கலாச்சாரத்தாலும்தானே தவிர, மேலாதிக்கத்தால் அல்ல. மோடி கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இந்தத் தோல்வியிலிருந்து வெகு விரைவில் தேசத்தை விடுவிப்பதுடன் தானும் வெளியே வந்துவிட முடியும்; ஒருவேளை இதே அணுகுமுறையைத் தொடர்ந்தால் அவர் அடையப்போகும் தோல்விகளின் தொடக்கப் புள்ளியாக நேபாளம் வரலாற்றில் குறிக்கப்படும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago