வெடிகுண்டுகள் சின்னாபின்னமாக்குவது மனிதர்களை மட்டுமல்ல
கடையநல்லூரைச் சேர்ந்த முகம்மது ரிஃபாஸ் நல்ல படிப்பாளி. பொறியியல் துறை மாணவர். அவர் எனக்கு எழுதியிருந்த ஒரு நீண்ட கடிதத்தில் (இன்னும் பதில் எழுதவில்லை) ‘உங்கள் வுல்பெக்’ என்று எழுதியிருந்தார். மிஷெல் வுல்பெக் பற்றி ஏற்கெனவே சிலமுறை எழுதியிருக்கிறேன். ரிஃபாஸுக்கு ‘உங்கள் வுல்பெக்’ பற்றிக் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும் என்று நேற்று நினைத்திருந்தேன். நான் என்னென்னவெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதெல்லாம் நவம்பர் 13 அதிகாலை பாரிஸ் குண்டுவெடிப்பு நிகழ்வுகளைக் கேள்விப்பட்டபோது மீண்டும் ஞாபகம் வந்தது.
ரிஃபாஸுக்கு நான் எழுதிய கடிதத்தில் மிகவும் வலியுறுத்தி எழுத நினைத்த விஷயத்தின் சாராம்சம் இதுதான். “இப்படியே போய்க்கொண்டிருந்தால் பாரிஸிலும் இரட்டைக் கோபுரச் சம்பவம் நடக்கும்.” நவம்பர் 12-ல் இப்படி நான் எழுதியிருந்தால் என்ன நினைத்திருப்பீர்கள்? ஆனால், அன்று இப்படி நான் நினைத்தேன். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே என் நண்பர்களிடம் இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். பாரிஸைப் பார்க்க வேண்டும் என்று ஆசையிருந்தால் அதை இன்றே பார்த்துவிடுங்கள். பாரிஸ் நாளுக்கு நாள் செத்துக்கொண்டிருக்கிறது. பிரெஞ்சு இலக்கியத்தில் நீங்கள் பார்த்த பாரிஸ், பயணக் கதைகளில் நீங்கள் கேள்விப்பட்ட பாரிஸ் இப்போது இல்லை. இப்போதைய பாரிஸ் ஏதோ ஒரு வட ஆப்பிரிக்க நகரைப் போல் மாறிவிட்டது. ஒருநாள் நாத்ர் தேம் மெத்ரோ நிலையத்திலிருந்து நான் தங்கியிருந்த லா சப்பல் என்ற இடத்துக்கு ரயிலில் போய்க்கொண்டிருந்தேன். லா சப்பல் ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதி. இரவு 11 மணி இருக்கும். நான் அமர்ந்திருந்த பெட்டியில் 10 பேர் இருந்தார்கள். அதில் ஏழு பேர் வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கறுப்பின மனிதர்கள். நானும் என் நண்பரும் தமிழர்கள். மீதி ஒருவர் மட்டுமே பிரெஞ்சுக்காரர்.
மாறிவரும் முகம்
ஒருநாள் பாரிஸில் உள்ள மார்க்கெட் ப்வாசினியே என்ற பகுதியில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, அந்த ஊரின் பெரும்பான்மை மக்கள் வட ஆப்பிரிக்கர்கள் என்று அறிந்துகொண்டேன். வட ஆப்பிரிக்கா என்றால் மெக்ரிப் நாடுகள் என்று சொல்லப்படும் ஆப்பிரிக்காவின் வடமேற்கில் உள்ள அல்ஜீரியா, மொராக்கோ, மாலி, துனிஷீயா. இவை அனைத்தும் முன்னாள் பிரெஞ்சு காலனி நாடுகளாக இருந்தவை. இந்த நாடுகளில் அரபி மொழி தவிர, மற்ற மொழிகள் அனைத்தும் செவ்வியல் மொழிகள் அல்ல. உதாரணமாக, மாலியை எடுத்துக்கொண்டால் பிரெஞ்சுதான் அங்கே தேசிய மொழி. மற்றபடி ஒவ்வொரு இனக் குழுவுக்கும் ஒவ்வொரு மொழி உள்ளது. அவற்றுக்குப் பெரும்பாலும் எழுத்துரு கிடையாது. இப்படி மாலியில் குறைந்தபட்சம் 50 மொழிகள் இருக்கும். இதன் காரணமாக, பிரெஞ்சுக்காரர்கள் இந்த நாட்டை அடிமைப்படுத்தியபோது பிரெஞ்சையே இந்த மக்கள் தங்களுடைய தாய்மொழியாகக் கொண்டனர்.
இன்றைய தினம் பாரிஸில் வாழும் ஒரு வட ஆப்பிரிக்க அகதி பிரெஞ்சுக்காரரைப் போலவே பிரெஞ்சு பேசுவார். ஈழத் தமிழரான என் நண்பர் ஒருவரின் மனைவி மாலி தேசத்தைச் சேர்ந்தவர். அவரும் அவர் குழந்தைகளும் அசல் பிரெஞ்சுக்காரர்களைப் போலவேதான் பேசுகிறார்கள். பிரான்ஸுக்குப் புலம் பெயர்ந்து போன ஈழத் தமிழர்களால் இன்றளவும் அந்த தேசத்தின் கலாச்சாரத்தினுள் ஊடுருவ முடியாததற்கு முக்கியமான காரணம், இந்த மொழிப் பிரச்சினைதான். என்னதான் பிரெஞ்சு அரசாங்கம் கற்றுக்கொடுக்கும் இலவச மொழி வகுப்புகளுக்குச் சென்றாலும், புலம்பெயர்ந்த தமிழர்களால் வட ஆப்பிரிக்கர்களைப் போல் பிரெஞ்சு சமூகத்துக்குள் ஊடுருவ முடியவில்லை.
கொஞ்சம் விளக்க வேண்டும். நீங்கள் பாரிஸில் எந்த ஒரு கஃபேவுக்குள் சென்றாலும் அங்கே ரய் இசைப் பாடல்களைக் கேட்கலாம். ரய் இசையின் பிறப்பிடம் அல்ஜீரியாவைச் சேர்ந்த கபீலியா என்ற பகுதி. பிரெஞ்சுக்காரர்கள் மிக விரும்பிக் கேட்கும் இசை ரய். ரய் பாடகர்களான ஷாப் கலீத் (ஷாப் என்றால் ரய் பாடகர்; கலீத் இந்தியாவிலும் பிரபலம்), ஷாப் மாமி, ஷாப் பிலால், ரஷீத் தாஹா போன்றவர்கள் இன்று பிரான்ஸில் சூப்பர் ஸ்டார்களாக விளங்குகின்றனர். இவர்களுடைய பாடல்களின் குறுந்தகடுகள் வட ஆப்பிரிக்காவில் விற்பதை விடப் பல மடங்கு அதிகமாக பிரான்ஸில் விற்பனையாகின்றன.
வெறுப்பும் எழுத்தும்
இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் பிரெஞ்சு இலக்கியவாதிகளைவிட ‘ஃப்ராங்கோஃபைல்’ எழுத்தாளர்கள்தான் உலகப் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஃப்ராங்கோஃபைல் என்பது பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் வட ஆப்பிரிக்க எழுத்தாளர்கள். இவர்கள் அரபியிலும் பிரெஞ்சிலும் எழுதிக் குவிக்கிறார்கள். ஒரு காலத்தில் ரஷ்யாவில் துர்கனேவ், தோல்ஸ்தோய், தஸ்தாயேவ்ஸ்கி, மாயகோவ்ஸ்கி, ஓஸிப் மண்டல்ஸ்டாம், ஆண்டன் செகாவ் என்று ஏராளமான இலக்கிய மேதைகள் வாழ்ந்ததைப் போல இப்போது பிரான்ஸில் ஃப்ராங்கோஃபைல் எழுத்தாளர்கள் உருவாகி இருக்கின்றனர். காரணம், அவர்களுடைய தாய்நாட்டின் துயரமான வரலாறு இலக்கியமாகிறது. அவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் அஸியா ஜெபார், தாஹர் பென் ஜெலோன்.
இதற்கும் எனக்குக் கடிதம் எழுதிய ரிஃபாஸுக்கும் அவர் குறிப்பிட்ட மிஷெல் வுல்பெக்குக்கும் என்ன சம்பந்தம்? வுல்பெக் எனக்குப் பிடித்த எழுத்தாளரே தவிர அவர் ஒரு இஸ்லாமிய வெறுப்பாளர். இவரைப் போல் பல வெறுப்பாளர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர். எழுத்தாளன் என்பவன் அன்றாட வாழ்க்கைச் சிக்கலை வைத்து வரலாற்றைப் புரிந்துகொள்ள மாட்டான். துரதிர்ஷ்டவசமாக வுல்பெக் அப்படிப்பட்டவர். பாரிஸுக்குப் புலம்பெயர்ந்து வந்திருக்கும் மெக்ரிப் நாட்டு மக்களைப் பார்த்து அவர்கள் மீது வெறுப்பு கொண்டிருக்கும் ஏராளமான பிரெஞ்சு சராசரி மனிதர்களைப் போன்றவர் வுல்பெக்.
பாரிஸின் புத்தகக் கடைகளின் அடுக்குகளில் ஒரு காலத்தில் ஆல்பெர் காம்யுவும், ஜான் ஜெனேவும், மல்லார்மேவும், பால் வெர்லேனும், ஆர்த்தர் ரேம்போவும், பால்ஸாக்கும் நிரம்பியிருந்தார்கள். இப்போது ஒஸாமா பின்லேடனும் அவரைப் போன்ற மற்ற பலருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களும்தான் அந்த இடங்களைப் பிடித்திருக்கின்றன. இஸ்லாம் பற்றி வெகுஜன ஊடகங்களின் வழியே உருவாகியிருக்கும் எதிர்மறைக் கருத்துக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே பல வலதுசாரிகள் இத்தகைய புத்தகங்களை வாங்குகிறார்கள்.
பிரான்ஸ் ஓர் அற்புதமான நாடு. பாரிஸ் எனக்குப் பிடித்த நகரங்களில் ஒன்று. அது அவ்வளவு பிடிக்க, அதன் பன்மைத்துவமும், தாராளவாதமும்தான் முக்கியக் காரணம். குண்டுகள் மனிதர்களை மட்டும் சின்னாபின்னமாக்குவதில்லை என்பதுதான் ரொம்பவும் பயமுறுத்துகிறது.
- சாரு நிவேதிதா, எழுத்தாளர், தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago