அமெரிக்காவின் முக்கியமான தொழில் நுட்ப நிறுவனங்கள், அரசு முகமைகள் போன்றவற்றின் கணினி, தரவுகள் போன்றவற்றில் பெரும் ஊடுருவல் (hacking), அநேகமாக ரஷ்யாவால், நடந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருப்பது பைடனின் புதிய அணியினரை உண்மையில் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது: ரஷ்ய அதிபர் புதினை எப்படி, எப்போது பழிவாங்குவது? பழிவாங்கத்தான் வேண்டுமா? இந்தக் குழப்பம் குறித்து எனக்கு மிகுந்த கரிசனை உண்டு. ஏனென்றால், விளாடிமிர் புதின் அமெரிக்காவைப் பொறுத்தவரை நரகத்திலிருந்து வந்த அதன் முன்னாள் காதலராக ஆகிவிட்டார்.
அமெரிக்காவுக்கு ரஷ்யா மிகவும் முக்கியமானதாக இருந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது சோவியத் ஒன்றியத்தின் மையமாக ரஷ்யா இருந்தது (தற்போது புதின் ஆளும் ரஷ்யாவைவிட இரு மடங்கு மக்கள்தொகையை சோவியத் ஒன்றியம் கொண்டிருந்தது). அப்போது ஐரோப்பா முழுவதையும் அடக்கி ஆளப்போவதாகவும் உலகெங்கும் கம்யூனிசத்தைப் பரப்பப்போவதாகவும் அச்சுறுத்திக்கொண்டிருந்தது. அது பனிப்போர் காலம். அந்தக் காலம் எப்போதோ மலையேறிவிட்டது. அமெரிக்காவைப் பொறுத்தவரை தற்போது அதன் உலகளாவிய எதிரி சீனாதான்.
நச்சு உள்ளாடை
அமெரிக்காவுக்கு புதின் முக்கியமானவரே இல்லை. அவர் தற்போது மாஸ்கோவின் மாஃபியா டான். அவரது ஆட்கள் ஊழல் எதிர்ப்புச் செயல்பாட்டாளரான அலெக்ஸி நவால்னியின் உள்ளாடையில், சோவியத் காலகட்டத்தைச் சேர்ந்ததும் நரம்பைப் பாதிக்கக் கூடியதுமான விஷத்தைத் தெளித்து அவரைக் கொல்ல முயன்றார்கள். நானொன்றும் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. ரஷ்யா முன்பு இந்த உலகத்துக்கு டால்ஸ்டாய், சைக்காவ்ஸ்கி, ரக்மானுனாஃப், தஸ்தயேவ்ஸ்கி, சக்கரோவ் ஸோல்ஸெனிட்ஸின் போன்றோரைத் தந்திருக்கிறது. நச்சு தெளிக்கப்பட்ட உள்ளாடையைத் தந்ததற்காக புதினின் ரஷ்யா நினைவுகூரப்படும்.
தனது ஊழலிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கமாக வைத்திருப்பதற்காக ரஷ்யத் தாய்நாட்டின் மாபெரும் பாதுகாவலராகவும், கடவுளற்றவர்களும் தன்பாலின உறவின் ஆதரவாளர்களுமான மேற்கத்தியர்களிடமிருந்து ரஷ்யாவின் மரபார்ந்த கிறிஸ்துவக் கலாச்சாரத்தைக் காப்பவராகவும் புதின் தன்னை முன்வைக்கிறார். தனது முக்கியத்துவத்தைத் தனது பார்வையிலும் ரஷ்யர்களின் பார்வையிலும் ஊதிப் பெருக்குவதற்காக புதின் அமெரிக்காவைத் துக்கிரித்தனமாகப் பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார். அமெரிக்கத் தேர்தல்களில் அவர் தலையிடுகிறார், அமெரிக்க நிறுவனங்களின் தரவுகளில் ஊடுருவல் செய்கிறார், அதே நேரத்தில் டொனால்டு ட்ரம்ப்பை புதின்தான் அமெரிக்க அதிபராக ஆக்கினார் என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள் என்ற நினைப்பில் திளைத்தபடி தன் மீதான மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நமுட்டுச் சிரிப்புடன் மறுக்கிறார் புதின்.
அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுக்கு உத்தி வகுப்பதில் ஏற்பட்டிருக்கும் புதுவிதப் பிரச்சினை இது – புவியரசியல்ரீதியாகப் பின்தொடர்ந்து தொல்லை தருபவரை எப்படிச் சமாளிப்பது? வல்லரசாக இல்லாத ஆனால் பெரும் வம்பராக இருக்கும் ரஷ்யத் தலைவரை, நிராகரிப்பை ஏற்காத பழைய வரனை எப்படிச் சமாளிப்பது? “விளாடிமிர், உங்கள் மீது எங்களுக்கு ஆர்வம் இல்லை. நாங்கள் வேறு வரன்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம், சீனாவைப் போல.”
உண்மையில், இன்னமும் புதின் ஆபத்தான அணு ஏவுகணைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். காலாவதி ஆகவிருந்த ‘நியூ ஸ்டார்ட்’ அணு ஒப்பந்தத்தை புதினும் அமெரிக்க அதிபர் பைடனும் நீட்டிக்க ஒப்புக்கொண்டிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. அமெரிக்க நிறுவனங்களையும் அரசு முகமைகளையும் இணையம் வழியே எந்த அளவுக்கு ரஷ்யா ஊடுருவக் கூடியது என்பதையும் பார்த்திருக்கிறோம்.
ரஷ்யாவின் மனித வளம்
அவ்வளவு துடிப்பாக இல்லாத ஒரு நாட்டுக்கு இந்தச் செயல்பாடுகள் எல்லாம் முகத்திரை போட்டு மறைக்கின்றன. நிதர்சன உலகத்தில் மற்ற நாடுகளெல்லாம் பிறர் வாங்க நினைக்கும் பொருட்களை உற்பத்திசெய்வதன் மூலம் வளம் கொழிக்கின்றன. புதினின் பிரதான ஏழு ஏற்றுமதிகளாவன: கச்சா எண்ணெயும் எரிவாயும் (52%); இரும்பு; விலையுயர்ந்த உலோகங்கள்; இயந்திரங்களும் கணினிகளும் (2.1%); மரம்; உரம்; தானியங்கள்.
அளப்பரிய மனித ஆற்றலைக் கொண்டிருக்கும் நாடு இந்த நிலையில் இருப்பது இரங்கத்தக்கது. அறிவியலர்களெல்லாம் ரஷ்யாவை விட்டு ஓடிச் சென்று, இஸ்ரேலையும் சிலிக்கான் பள்ளத்தாக்கையும் தொழில்நுட்ப வல்லரசுகளாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவுக்குக் கிடைத்த அரிதான வெற்றி கரோனாவுக்கான தடுப்பு மருந்து, அதையும் பெரும் எண்ணிக்கையில் உற்பத்திசெய்வது கடினம்.
ரஷ்யத் தயாரிப்புகளான கணினி, திறன்பேசி, அல்லது செயலியைக் கடைசியாக எப்போது வாங்கினீர்கள்? ஒரு ரஷ்ய கார்? ரஷ்ய கைக்கடிகாரம்? ரஷ்யத் தயாரிப்புப் பயணிகள் விமானம்? மேற்கத்தியர்களைக் கவரும் ரஷ்யப் பொருட்களெல்லாம் கவியா ஊறுகாய், வோட்கா, கூட்டுப் பொம்மைகள் ஆகிய மூன்றும்தானே.
ஏன் அப்படி? ஏனெனில், புதின் தன் நாட்டு மண்ணிலிருந்து வரும் பொருட்களின் மீதுதான் நம்பிக்கை வைத்திருக்கிறாரே தவிர, அவரது மக்களின் மூளையால் உருவாக்கப்படும் பொருட்களை நம்புவதில்லை. ஆகவே, அவர் பெட்ரோல்-சர்வாதிகார சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த சாம்ராஜ்ஜியத்துக்கான எரிபொருள் இயற்கை வளங்கள்தானே தவிர மனித வளங்கள் இல்லை. அதற்குப் பிறகு, அந்தப் பணத்தை அவரையும் அவருடைய சகாக்களையும் அதிகாரத்தில் வைத்திருப்பதற்குப் பயன்படுத்திக்கொள்கிறார், அதேநேரத்தில், தனது நாட்டு இளைஞர்கள் தங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன.
ஆகவே, புதின் நீங்கள் அமெரிக்க நிறுவனங்களை ஊடுருவினீர்கள். அதனால் என்ன பலன்? நீங்கள் அமெரிக்காவின் மீது படையெடுக்கப் போவதில்லை. கொள்ளைநாயகம் என்ற உங்கள் ஆட்சியின் லட்சணம், வெளிநாட்டவருக்கு மட்டுமல்ல, உங்கள் நாட்டு மக்களுக்கே குமட்டுகிறது. ரஷ்யாவை ஊடுருவும் எண்ணம் நிச்சயமாக அமெரிக்காவுக்கு இல்லை.
என்ன செய்யப்போகிறார் பைடன்?
ஆக, புவியரசியல்ரீதியில் பின்தொடரும் துக்கிரியை பைடன் எப்படிக் கையாளப்போகிறார்? இதற்கான பதில்: குறைந்த செலவிலான ராணுவத் தடுப்பு நடவடிக்கைகளும் நவால்னியின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய வகையிலான ராஜதந்திர நடவடிக்கைகளும்தான். புதினுக்கான அமெரிக்காவின் செய்தி: “எங்கள் முன்னாள் அதிபர் உங்களின் கூட்டாளியாக இருந்தார். நாங்களோ உங்கள் மக்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். இந்த நாள் உங்களுக்கு நன்னாளாகட்டும்.”
2014-ல் க்ரீமியாவைத் தன்னுடன் ரஷ்யா சேர்த்துக்கொண்டதிலிருந்து மக்களின் விசுவாசத்தைப் பெறவும் தனது செல்வாக்கை நிலைநாட்டவும் ராணுவமயப்படுத்தப்பட்ட தேசப்பற்று, அமெரிக்க எதிர்ப்பு, இழந்துபோன சோவியத்தின் வல்லரசுத்தனத்தை மீட்டெடுக்கும் முனைப்பு போன்றவற்றை புதின் மேற்கொள்ள ஆரம்பித்தார் என்று ‘போரிஸ் யெல்ட்ஸின்: எ ரெவலூஷ்னரி லைஃப்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் லியோன் அரோன் என்னிடம் கூறினார்.
நவால்னியின் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவரான விளாடிமிர் அஷுர்கோவுடன் சமீபத்தில் ஒரு ஜூம் சந்திப்பில் கலந்துகொண்டேன். பைடனுக்கு அனுப்பிய கடிதமொன்றை அஷுர்கோவ் பகிர்ந்துகொண்டார். புதினின் ஆசைநாயகிகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும், புதினின் பிள்ளைகளுக்கும் பாய்மரப் படகுகள், அடுக்ககங்கள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் பல கோடி ரூபாய் சம்பளம் போன்றவற்றை ஏற்பாடு செய்துதரும் 35 பேருக்கு அமெரிக்கா தடைவிதிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தற்போதைய பொருளாதாரத் தடைகளெல்லாம் தெளிவற்றவை என்றார் அஷுர்கோவ். இந்த 35 பேரும் மேற்கு நாடுகளுக்குச் சென்று கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தினால், புதினே நேரடியாகப் பாதிக்கப்படுவார் என்று அவர் கூறினார்.
நவால்னி ஏன் புதினுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்றால், அவருக்கு புதினின் நீதிமன்றம் ஏன் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது என்றால், புதின் அளவுக்கு நவால்னியும் தீவிரமான ரஷ்ய தேசியர், ஆனால் அவர் தனது பிரச்சாரத்தின் மூலம் புதினின் மாபெரும் ஊழல் மீது குறிவைக்கிறார்.
கருங்கடலில் புதின் இந்திய மதிப்பில் ரூ.12,400 கோடி செலவில் கட்டியதாகக் கூறப்படும் பிரம்மாண்டமான மாளிகையொன்றின் காணொளியைச் சமீபத்தில் நவால்னியின் அமைப்பு வெளியிட்டது. அந்தக் காணொளி 10 கோடி தடவை பார்க்கப்பட்டிருக்கிறது. அந்த மாளிகை தன்னுடையது இல்லை என்று புதின் மறுத்திருக்கிறார், அந்தக் காணொளி ‘சலிப்பூட்டுகிறது’ என்றார் (அவருடைய கூட்டாளிகளில் ஒருவர் அதனைத் தன்னுடையது என்கிறார்).
அதே சமயத்தில், பைடனின் பருவநிலை/ பசுமை எரிபொருள் கொள்கையானது அமெரிக்காவில் எல்லா தரப்பினருக்கும் அனுகூலமானது, அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிரானது. பசுமை எரிபொருள் மூலம் அமெரிக்கா உருவாக்கும் ஒவ்வொரு புதிய கிகாவாட்டும் புதினின் எண்ணெய், எரிபொருள் ஆகியவற்றின் மதிப்பைக் குறைத்து அமெரிக்காவை மேலும் ஆரோக்கியமானதாக மாற்றுகிறது.
நியூயார்க் டைம்ஸ், சுருக்கமாகத் தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago