அரசுக்குக் குடிமராமத்தில் பிறந்த மோகம்

By தங்க.ஜெயராமன்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் வாய்க்கால் வெட்டப்போகிறது என்று சொன்னால், காவிரிப்படுகை கிராமங்கள் நம்பியிருக்காது. “குடிகளாகவே செய்துகொள்ளும் வேலையை சர்க்கார் மெனக்கெட்டு செய்யுமா?” என்று ஐயப்பட்டிருப்பார்கள். அரசாங்கமே இப்போது குடிமராமத்துப் பணிகளைச் செய்கிறது. இவற்றை ஏன் அரசாங்கம் செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு மக்கள்நல அரசியலில் இடமில்லை. இந்தப் பணிகளைச் சரியாகச் செய்கிறார்களா என்பதும் நம் கவலையல்ல. ஆனால், குடிமராமத்துப் பணிகளில் அரசின் இன்றைய மோகத்துக்கு ஏதாவது சமூக, கலாச்சார அம்சங்கள் உண்டா என்பதை நாம் ஆராயலாம்.

அரசாங்கம் ஆறுகளைத் தூர்வாரி, கரை கட்டுகிறது. ஏரிகளைப் புனரமைக்கிறது. மதகுகளை மறுசீரமைக்கிறது. இவற்றோடு கிராமங்களில் வாய்க்காலும் வெட்டுகிறது. அரசாங்கம் செய்யும் இந்தப் பணிகளைக் குடிகளே செய்துகொள்ளும் பணிகளைப் போல் ‘குடிமராமத்து’ என்று ஏன் சொல்ல வேண்டும்? இந்த விவரிப்புப் பிரச்சினை வரும்போது அரசாங்கத்தின் ஆர்வத்தை ‘மோகம்’ என்று வர்ணிக்க வேண்டியுள்ள சங்கடம் உங்களுக்கு விளங்கியிருக்கும்.

சொற்குற்றம், பொருள் குற்றம் பார்க்கும் பழைய மொழி மரபுக்கு நாம் மிகவும் பழகிப்போயிருக்கலாம். அதற்காக, ‘குடிமராமத்து’ என்ற இன்றைய சொல்லை இந்த இரண்டில் ஏதோ ஒரு குற்றம் என்று ஒதுக்கிவிட்டு நம்மால் கடந்துவிட முடியாது. சரி என்றோ தவறு என்றோ மதிப்பிடாமல் அதை விளங்கிக்கொள்ளுங்கள் என்றுதான் மொழியியல் சொல்லும். ஒரு சொல்லின் எதிரிடையான பொருளைக் குறிப்பதற்கு அந்தச் சொல்லையே ஆசை ஆசையாகப் பயன்படுத்துவதை எப்படியாவது நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தற்போதைக்கு அதை மோகம் என்று வைத்துக்கொள்வோம்!

அரசும் குடிகளும் அவர்களுக்கு இடையிலான அதிகார உறவில் எதிர்முனைகள். அதிகாரத்தின் பிறப்பிடம் அரசு. குடிகள் அந்த அதிகாரம் செல்லுமிடம். இந்த நிலையில், தான் செய்யும் பணிகளை அரசு தன் குடிகள் செய்வதாகப் பாவித்துக்கொள்வதும் அல்லது அப்படியே பாவித்துக்கொள்ளட்டும் என்று இருந்துவிடுவதும் மொழிப் புதிரல்ல; அரசியல் புதிர். செலவுத் தொகையில் பத்து சதம் மக்களின் பங்களிப்போடு பணிகள் நடக்கின்றன என்று சொல்லிக்கொண்டாலும் ‘குடிமராமத்து’ என்பதற்கு அவை தகுதி பெறாது.

நான் இருப்பது அறுபது வேலி கிராமம். ஏறத்தாழ நானூறு ஏக்கர். பல நூற்றாண்டுகளின் போக்கில் அதற்கு ஒரு பாசன வாய்க்காலும் வடிகாலும் நிலைப்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் குடிமராமத்துக்காக ஆண்டுதோறும் ஊர்க்கூட்டம் போடுவார்கள். நீராணிக்கம் பார்த்தவர்களும், கிராமத்தில் வெட்டுமை பார்த்தவர்களும் என்னென்ன வேலைகளை வாய்க்காலில், வடிகாலில் எவ்வளவு எவ்வளவு தூரத்துக்குச் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். இவற்றுக்கு எத்தனை ஆள், எத்தனை நாள் தேவைப்படும் என்று கூட்டம் மதிப்பிடும். இதை அப்படியே அவரவரின் நில உடைமைக்குத் தக்கவாறு ஈவு செய்துவிடுவார்கள். எனக்கு ஐந்து மா நிலம் இருந்தால் ஒரு ஆள், பத்து மா இருந்தால் இரண்டு என்பதுபோல் கணக்கு வந்துவிடும். ஒரு வாரமோ, பத்து நாட்களோ என்று நிர்ணயித்துக் கடைமடையிலிருந்து வாய்க்கால் தலைப்பு வரை தொடர்ந்து வாய்க்கால் வெட்டுவார்கள். நானே நின்று வேலை செய்ய வேண்டும். இயலாவிட்டால், எனக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் ஆள் தர வேண்டும். அதுவும் முடியாவிட்டால் அந்த எண்ணிக்கையிலான ஆள் சம்பளத்துக்கு ரொக்கம் செலுத்த வேண்டும். ரொக்கச் செலவு என்பது குறைவாகவே இருக்கும்.

இந்தப் பகிர்மானத்தில் நியாயம் இருந்தது. பொது வசதிகளான பாசனம், வடிகால்களை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறேனோ அந்த அளவுக்கு நான் செலவு செய்ய வேண்டும். அந்த ஏற்பாடுபோல் இக்காலத்தில் செய்ய முடியுமா என்று உங்களுக்கு அவநம்பிக்கை வரலாம். அக்காலத்திலும்கூட இது சரியாக நடந்திருக்குமா என்றும் ஐயப்படலாம். இதற்கு மறுமொழியாக நான் இரண்டு சம்பவங்களை இங்கே சொல்ல வேண்டும்.

கழிந்த காலத்தின் கவர்ச்சி

இந்த ஆண்டு பொங்கலுக்கு முன் தொடர்ந்து மழை பெய்தபோது வயலில் கதிர்வந்து முற்றியிருந்தது. வாய்க்காலில் கோரை மண்டிக்கிடந்ததால் கிராமத்தில் தண்ணீர் வடியவில்லை. தலைக்கு இரண்டு, மூன்று என்ற வீதத்தில் ஆள் கொடுத்து, நான்கு நாட்களில் வாய்க்கால் வெட்டி வயலில் தண்ணீர் வடிந்தது. இப்படி கோடையில் ஒன்றும், மழைக் காலத்தில் ஒன்றுமாக ஆண்டுக்கு இரண்டு முறைகூடக் குடிமராமத்து நடக்கிறது.

1969 என்று நினைவு. மார்கழி மாதம். அப்போது புழங்கிய எட்டாம் நம்பர் என்ற நெல் எங்களுக்கு ஆறு ஏக்கருக்கு மேல் விளைந்து, தொடர் மழையில் சாய்ந்துவிட்டது. தண்ணீருக்குள் கதிர்கள். குடலையைத் தலையில் போட்டுக்கொண்டு வயலைச் சுற்றிச் சுற்றி வருவோம். விழுந்துகிடக்கும் கதிர்களை மீன்கள் உருவிக்கொண்டிருந்தன. சிறவிகளும் படைபடையாக வயலில் கதிரைக் கொத்திக்கொண்டு சென்றன. மழை பெய்தாலும் அது பெய்யப் பெய்யத் தண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. மழைவிட்டு இரண்டு நாட்களில் எங்களால் அறுவடை செய்து நெல்லைக் கரையேற்ற முடிந்தது.

நம் வேண்டுகோளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கும் வார நாளை மனுநீதி நாள் என்று சொல்கிறோம். நிர்வாகம் நவீன கால ஜனநாயக நிர்வாகமானாலும் புராண காலத்து மனுநீதிச் சோழனை நினைவுபடுத்தும் ஒரு சொல் நமக்கு வேண்டும். இதைப் போல் கழிந்த காலக் கவர்ச்சி ஒன்றும் ‘குடிமராமத்து’ என்ற சொல்லுக்கு இருக்கக்கூடும். அப்படி இல்லையென்றால், ஆற்றின் குறுக்கே இன்றைய நீர் மேலாண்மைச் சாதனமாக இருக்கும் படுக்கை அணையைச் செப்பனிடுவதைக்கூட குடிமராமத்து என்று சொல்வோமா? மொழியோடு நாம் கொள்ளும் உறவுக்கு இப்படியும் ஒரு இயக்கம் உள்ளது. ஆனால், இது மொழித் தளத்தில் நடக்கும் ஆக்கிரமிப்பு என்ற சாதாரண நிகழ்வல்ல. நம் கைவேலையைப் பிடுங்கி, தான் செய்யும் தோழமையின் பரிவாக அரசின் குடிமராமத்தை நினைக்கக் கூடாது. அரசு நிர்வாகம் தன் இருப்பின் பரிமாணங்களை விரித்து, விரித்து வாய்க்கால் வெட்டுவதைக்கூட விட்டுவிடாமல் எல்லா இடங்களையும் தானேயாக நிறைத்துக்கொள்ளும் தீர்மானம் அது.

தற்சார்பின் அடையாளம்

குடிமராமத்து என்ற சொல் இப்போதுவரை தரித்ததற்கு, புத்துயிர் பெற்றதற்குக் கலாச்சாரம் சார்ந்த காரணமும் உண்டு. நம் கிராமத்தின் இருப்புக்கும் தற்சார்புக்கும் சுயாட்சிக்கும் அந்தச் சொல் ஒரு அடையாளம். அரசாங்கம் நம் அரசாங்கம்தான். இருந்தாலும், அரசு நிர்வாகம் எந்தக் கோட்டுக்குப் புறத்தே நிற்க வேண்டும் என்ற கிராமத்தின் புரிதலுக்கும் அந்தச் சொல் அடையாளம். இக்கால அரசு தன் அதிகாரத்துக்கு மிக்காரில்லாதது. அப்போதைய குடிமராமத்து இதற்கு விலக்காக நின்ற மாற்று அரசியல் சிந்தனையின் எச்சம். சட்டத்தால் பிறந்த ஊராட்சி இருக்கும்; கிராம சபையும் நடக்கும். ஆனாலும், இந்தப் புற அங்கிகளையெல்லாம் விளையாட்டாகத் தரித்துக்கொள்ளும் அரசனாக ஊர்க்கூட்டமும் கிராமத்தில் நடந்துகொண்டுதான் இருக்கும். இப்படி கிராமத்தின் ஆன்ம சலனமாக இருந்தன அன்றைய ஊர்க்கூட்டமும் குடிமராமத்தும். கிராமத்தைத் தன்மயமாக்கிக்கொள்ள நிர்வாகம் எவ்வளவு முயன்றாலும் இந்த ஆன்ம சலனம் நிற்காது! அரசு வாய்க்கால் வெட்டினால் அது குடிமராமத்தும் ஆகாது! பெயரைச் சிறையெடுத்தால் பெயருக்கு உரியவர் அழிந்துவிடுவதில்லை. ஆனாலும், அது நுட்பமான கலாச்சார வன்முறைதான்!-

- தங்க.ஜெயராமன், தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்