விடுதலைப் போராட்ட வீரர் என்ற பொது முகத்தையும் தாண்டி தமிழறிஞர் எனும் முகமும் வ.உ.சி.க்கு உண்டு!
மொழிப்பற்று வழி நாட்டுப் பற்று உருவாகும்; அதனால் தலைவர்கள் கூட்டங்களில் தமிழில் பேசவேண்டும் என வ.உ.சி. வேண்டுகோள் விடுத்தார்; மேடைகளிலும் பேசினார்.
கப்பலோட்டிய தமிழரான வ.உ.சி. (1872 - 1936) ஆறாண்டு சிறைத்தண்டனையிலிருந்து, 1912 டிசம்பர் 24 அன்று விடுதலை பெற்றார். அதன் பின் புதுமனிதராக மாறிவிட்டார். “மகாபாரதக் கதை முடிவில் காண்டீபத்தைத் துறந்து இமயம் நோக்கி நடந்த அர்ஜுனனைப்போலத் தம் வீரம் - பெரும் அரசியல் தலைமை துறந்து பொதுப்பணியில் ஆழ்ந்தார்” என்று அப்போதைய நிலையை வர்ணிக்கிறார் அ. னிவாசராகவன். தமிழறிஞரும் பேராசிரியருமான வையாபுரிப்பிள்ளை, “தேசிய விஷயங்களில் உழைத்துவந்தவர் இப்போது தாய்மொழியாகிய தமிழின் பொருட்டு உழைக்க முன்வந்து சென்னையில் தங்கினார்” என்கிறார். சிறைவாழ்க்கை வ.உ.சி.யை மொழியின் பக்கம் திரும்பும்படியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. இதன் பின்னர் தன் 24 ஆண்டுகளை இலக்கியம், இலக்கணம், சைவம் படிப்புக்காக ஆராய்ச்சிக்காக வ.உ.சி. செலவிட்டார்.
தமிழ்ப் பற்று
வ.உ.சி. தமிழறிஞரானதோ இலக்கியப் பதிப்பாசிரியரானதோ தற்செயலாய் வந்ததல்ல. அவர் பிறந்த தென்பாண்டி நாடு தமிழ், சைவம் இரண்டுக்கும் களமாக இருந்த இடம். அவர் சிறையிலிருந்த போதே திருக்குறள் உரைகளைப் படித்திருக்கிறார்.
19-ம் நூற்றாண்டில் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் ஆங்கிலத்தில்தான் பேசினார்கள். இதனால் பெரிய கூட்டங்களுக்குச் சாதாரண மக்கள் வருவதில்லை. வேடிக்கை பார்க்க சிலர் வந்தனர். அந்தக்காலத்தில் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் ஒரு வாசகர் “நமது ஜனத்தலைவர்கள் இங்கிலீசில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை” என்று எழுதியதை பாரதி மேற்கோள் காட்டினார். வ.உ.சி இதைத் தலைவர்களிடம் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
மொழிப்பற்று வழி நாட்டுப் பற்று உருவாகும்; அதனால் தலைவர்கள் கூட்டங்களில் தமிழில் பேசவேண்டும் என வ.உ.சி. வேண்டுகோள் விடுத்தார்; மேடைகளிலும் பேசினார்.
தமிழ் ஆராய்ச்சி
வ.உ.சி. பதிப்பாசிரியர் கட்டுரையாசிரியர். மொழி பெயர்ப்பாளர்; உரையாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் பதிப்பித்தவற்றில் தொல்காப்பியம், சிவஞான போதம், திருக்குறள் ஆகிய மூன்றும் முக்கியமானவை. தொல்காப்பியம் இளம்பூரணத்தை வ.உ.சி. பதிப்பித்ததை வையாபுரிப்பிள்ளை எழுதியிருக்கிறார். தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் முதல் இரண்டு இயலை வ.உ.சி வெளியிடும் போது செல்வக்கேசவராய முதலியார் உதவியிருக்கிறார். பின்னர் வ.உ.சி.யும் வையாபுரிப்பிள்ளையும் இணைந்து பொருளதிகாரம் முழுவதையும் பதிப்பித்திருக்கின்றனர்.
திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரையில் சில இடங்களில் பிழை உள்ளது என்ற கருத்துடையவர் வ.உ.சி. அவருக்குப் பிடித்த உரையாசிரியர் மணக்குடவர். இந்த உரை தமிழ்ப் பண்பாடு கருதி எழுதப்பட்டது என்று கருதினார் அவர். 1918-ல் வ.உ.சி.யின் மணக்குடவர் உரை வெளிவர தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் உதவியிருக்கின்றனர்.
இன்னிலையால் ஏமாந்தார்
பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் இன்னிலையும் ஒன்று என நம்பி அதைப் பதிப்பித்தார் வ.உ.சி. இப்பதிப்பு போலியானது; தவறானது என மயிலை சீனி வெங்கடசாமி, மு. அருணாசலம் போன்றோர் எழுதிய பின்பு வ.உ.சி.யின் பதிப்பு தவறானது என்று தெரிந்தது. 1931-ல் அனந்தராம அய்யர் பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் ஒன்று ‘கைந்நிலை’ என பதிப்பித்த பின்னர் வ.உ.சி. மனம் நொந்திருக்கிறார். இதை வையாபுரிப்பிள்ளையும், கு. அருணாசலக்கவுண்டரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
திருநெல்வேலியைச் சார்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் ‘இன்னிலை’ என்ற பேரில் ஒரு நூலின் ஏட்டை வ.உ.சியிடம் கொடுத்து இது பதினெண்கீழ்க் கணக்கு நூற்களில் ஒன்று என கூறியிருக்கிறார். வ.உ.சி. யிடம் இதற்கு கணிசமாகப் பணமும் பெற்றிருக்கிறார். வ.உ.சி. அந்த ஏட்டை வெளியிட்டிருக்கிறார். சொர்ணம்பிள்ளை இது போலவேறு சிலரையும் ஏமாற்றியிருக்கிறார் அவர்களில் ஒருவர் வ.வே.சு. அய்யர்.
சிவஞான போதம்
வ.உ.சி. சிவஞானபோதத்தை 1935-ல் உரையுடன் வெளியிட்டிருக்கிறார். இதன் இரண்டாம் பதிப்பை முன்னுரை, பின்னிணைப்புகள், படங்களுடன் ஆ. வெங்கடாசலபதி - வெளியிட்டிருக்கிறார் (1999) இப்பதிப்பில் வ.உ.சி சைவசித்தாந்தம் தொடர்பாக எழுதி வெளிவராத ஒரு கட்டுரையும் உள்ளது.
வ.உ.சி. ஆரம்பத்திலிருந்தே சைவசமயம் தொடர்பான செய்திகளில் தீவிரமாய் இருந்தார். அவர் சிறையிலிருந்து வெளிவந்தபின் சென்னையிலும் (1913-1920) கோயம்புத்தூரிலும் (1920-24) வாழ்ந்தபோது சைவம் / தமிழ் இரண்டும் அவரை விடவில்லை. இக்காலங்களில் யோக வாசிஷ்டத்தை முறையாகப் படித்ததைச் சொல்லியிருக்கிறார். வ.உ.சி.யின் சிவஞானபோத இரண்டாம் பதிப்புக்கு அணிந்துரை எழுதிய சி.சு.மணி” வ.உ.சி கடும் சைவத்தைக் கடுமையாக எதிர்கொண்டிருக்கிறார். அவருடைய சீர்த்திருத்த எண்ணங்கள் வேதாந்தத்தோடு சித்தாந்தத்தை சமரசம் காண வைத்துள்ளன” என்கிறார். பொதுமக்கள் புரியும்படியான உரை வேண்டும் என்பதற்காக சிவஞானபோத நூலுக்கு உரை எழுதியதாக வ.உ.சி. கூறுகிறார்.
வ.உ.சி. ‘மனம் போன வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’, ‘சாந்திக்கு மார்க்கம்’ என்ற நூற்களை மொழிபெயர்த்திருக்கிறார். வ.உ.சியை பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலன் (1864 - 1912) பெரிதும் கவர்ந்திருக்கிறார். ஆலன் கீழைநாட்டு தத்துவங்களில் ஈடுபாடுடையவர். வ.உ.சி. மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் ‘மனம் போன வாழ்வு’ என்ற நூல் 13 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. வ.உ.சி. வாழ்ந்தபோதே இப்பதிப்புகள் வந்தன. ‘வலிமைக்கு மார்க்கம்’ நூல் 9 பதிப்பும் அகமே புறம் 6 பதிப்பும் பெற்றன. ஒருவகையில் வ.உ.சியின் வாழ்வாதாரத்துக்கு கடைசி காலத்தில் ஜேம்ஸ் ஆலன் உதவியிருக்கிறார்.
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
இன்று வ.உ.சி-யின் நினைவுநாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago