கானாவும் பறையும் அரசியல் கருவிகள்!- ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’இசை இயக்குநர் டென்மா பேட்டி

By முகம்மது ரியாஸ்

கானா, பறை இரண்டும் தலித் சமூகத்தோடு அடையாளப்படுத்தப்படக்கூடியவை. தவிரவும், அவை இறப்போடு தொடர்புபடுத்தியும் பார்க்கப்படுபவை. சமூகத்தில் அவற்றின் மீது விலக்கப் பார்வை உண்டு. இப்படியான சமூகச் சூழலில், கானாவை, பறை இசையை, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் இசைக் குழுவான ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ (The casteless collective) வெகுஜனத் தளத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஜல்லிக்கட்டுப் போராட்டம், நீட், இடஒதுக்கீடு, ஆசிஃபா கொலை, குடியுரிமைச் சட்டம், மாட்டுக்கறி அரசியல் என சமகாலத்தில் இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் அதன் பாடுபொருள்களாக இருக்கின்றன. இக்குழுவின் பாடல்கள் இந்தியச் சமூகத்தின் கூட்டுமனப்பான்மையை நோக்கி, அதிகார மையத்தை நோக்கி கேள்விகள் எழுப்புகின்றன, அக்குழுவின் தலைவர், இசை இயக்குநர் டென்மாவுடன் உரையாடியதிலிருந்து…

எப்படி ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ குழு உருவானது?

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பாக, ‘நானும் ஒரு குழந்தை’ என்ற தலைப்பில் பழனிகுமார் புகைப்படக் கண்காட்சி ஒன்றை 2017-ம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்தார். சக மனிதனின் மலத்தைக் கையால் அள்ளும் அவலத்தை எடுத்துரைப்பதே அந்தப் புகைப்படக் கண்காட்சியின் நோக்கம். அதில் கானா பாடல் நிகழ்ச்சியும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் பல கானாப் பாடகர்கள் கலந்துகொண்டு பாடல்கள் பாடினர். ஏற்கெனவே இரஞ்சித் தற்கால சமூகப் பிரச்சினையை இசை மூலம் பேச வேண்டும்; அதற்கான குழுவை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தார். இந்தப் பின்புலத்தில், அன்றைய நிகழ்ச்சி, அவருக்கு கானாவையே அடிப்படையாகக் கொண்டு ஒரு இசைக் குழுவை உருவாக்கலாமே என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. நான் ‘மெட்ராஸ் இண்டி கலெக்டிவ்’ (Madras Indie Collective) என்ற பெயரில் சுயாதீன இசையமைப்பாளர்களுக்கு என்று ஒரு அமைப்பை நடத்திவந்தேன். இசைத் துறையில் நடந்துகொண்டிருந்த சாதிய, வர்க்கப் பாகுபாடுகள் குறித்துப் பேசிவந்தேன். இந்தச் சூழலில்தான் என்னைப் பற்றிய அறிமுகம் பா.இரஞ்சித்துக்குக் கிடைக்கிறது. நாங்கள் சந்தித்தோம். கானா கலைஞர்களை ஒருங்கிணைத்துப் பயிற்றுவிக்க முடியுமா என்று கேட்டார். சென்னையில் உள்ள திறமையான கானா, பறை இசைக் கலைஞர்களைத் தேடினோம். கானா, பறை தவிர ராப், ராக், ஜாஸ் என வெவ்வேறு இசை வடிவங்களில் அனுபவம் கொண்ட 19 நபர்களுடன் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ உருவானது. ஜனவரி 6, 2018 எங்கள் குழுவின் முதல் மேடையேற்றம் நடந்தது.

உங்கள் குழுவினரைப் பற்றிச் சொல்லுங்கள்….

தற்போது எங்கள் குழுவில் என்னுடன் சேர்த்து 12 பேர் இருக்கிறோம். முத்து (28), பாலச்சந்தர் (32), இசைவாணி (24), அறிவு (25), செல்லமுத்து (31), தரணி (25), சரத் (28), கெளதம் (21), நந்தன் கலைவாணன் (20), மனு கிருஷ்ணன் (32), சாஹிப் சிங் (28). முத்து ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். பாலச்சந்தருக்கு நிலையான வருமானம் கிடையாது. சரக்கு வண்டி ஓட்டுவது, மாட்டுவண்டி ஓட்டுவது என கிடைக்கும் வேலையைச் செய்பவர். (தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் ‘வாத்தி கமிங்’ பாடலைப் பாடியிருப்பது பாலச்சந்தர்தான்). செல்லமுத்து, நந்தனம் கல்லூரியில் படித்துவிட்டு, கானா பாடல் ஆசிரியராக இலக்கின்றிச் சுற்றிக்கொண்டிருந்தவர், கெளதம், சரத் இருவரும் இறுதி ஊர்வலத்தில் மேளம் வாசிக்கும் இளைஞர்கள். தரணி கானா பாடும் இளைஞன். இசைவாணி கல்யாணக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தவர், அறிவு நான்காண்டுகளுக்கு முன்புவரையில் பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டு அலைந்துகொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவர். திருநெல்வேலியைச் சேர்ந்த நந்தன் கலைவாணனின் அப்பா, அம்மா இருவரும் சமூக ஆர்வலர்கள். நந்தன் தற்போது சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் உயிரித் தொழில்நுட்பம் படித்துக்கொண்டிருக்கிறார். மனு கிருஷ்ணன் பிழைப்புக்காக 15 ஆண்டுகளுக்கு முன்பே கேரளத்திலிருந்து சென்னைக்கு வந்தவர். அவர், இசை நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் வாசிப்பார். சாஹிப் சிங் இசை நிகழ்ச்சிகளில் கிதார் வாசித்துக்கொண்டிருந்தவர். நாங்கள் அனைவரும் பா.இரஞ்சித்தின் வழியே ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற குடையின் கீழ் இணைந்திருக்கிறோம்.

தமிழ்ச் சமூகம் உங்களை எப்படி எதிர்கொள்கிறது?

இந்தியாவைப் பொறுத்தவரை இசையைக் கடவுளுடன் தொடர்புபடுத்தி, அதைக் கடவுள் தன்மையுடையதாகவே அணுகுகிறார்கள். இறப்பில் பாடப்படும் கானாவை, பறையைப் பொதுமேடைக்குக் கொண்டுவரும்போது, சிலர் பெரும் பதைபதைப்புக்கு உள்ளாகின்றனர். ஆரம்பத்தில் எங்களைச் சாதியைத் தூக்கிப்பிடிக்கும், சாதிப் பெருமை பேசும் குழு என்று சிலர் விமர்சித்தனர். வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் பிரச்சினைகளை, வலிகளைப் பேசுவது எப்படி சாதியைத் தூக்கிப்பிடிப்பதாகவும், சாதிப் பெருமையைப் பேசுவதாகவும் அமையும். எங்கள் குழுவில் தலித்துகள் மட்டும் அல்ல; பலதரப்பட்டவர்களும் இருக்கிறோம். தலித்துகள், முஸ்லிம்கள், பெண்கள், திருநர் சமூகத்தினர், தன்பால் உறவாளர்கள் என இந்தியாவில் சமூகரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தரப்பினரின் குரலாகவே எங்கள் இசைக் குழு வெளிப்படுகிறது. தற்போது பொதுத் தளத்தில் எங்களின் குரலுக்கு வரவேற்பு இருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் மாற்றுக் குரலாக ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ அடையாளம் பெற்றிருக்கிறது.

தமிழ் இசை உலகம் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ஐ எப்படிப் பார்க்கிறது?

பெர்லினைத் தலைமையிடமாகக் கொண்டு நிகழும் ‘வுமெக்ஸ்’ (Womex) என்ற மிகப் பெரிய உலக இசைக் கண்காட்சியில் எங்கள் குழுவுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ் இசை உலகில் எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடையாது. எங்கள் குழுவில் இருப்பவர்கள் முற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக மட்டும் இருந்திருந்தால் இன்று பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருப்பார்கள். இசைவாணியை எடுத்துக்கொள்வோம். பிபிசி வெளியிட்ட உலகளாவிய 100 பெண் ஆளுமைகளில் ஒருவராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் அவருக்கான இடம் என்ன? இசைத் துறையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் முற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பாடகி ஒருவரை இசை நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் என்றால், அவருக்கான விமானம், தங்கும் அறை, உணவு என அனைத்து வசதிகளையும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். ஆனால், இசைவாணிகளுக்கு நிலைமை வேறு. நிகழ்ச்சி நடக்கும் இடத்தை மட்டும் சொல்லி அங்கு வந்து சேரச் சொல்வார்கள். முடிந்த அளவு சூழலை மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

பொதுவெளியில் கானா மீது இன்னும் விலக்கப் பார்வையே இருக்கிறது. இந்த இடைவெளியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

1990-களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் இடம்பெறத் தொடங்கிவிட்டன. ஆனால், கானாவுக்குச் சந்தை மதிப்பு உருவானதே தவிர, சமூக மதிப்பு உருவாகவில்லை. இறப்பு வீட்டில், ஏரியா தலைவனைக் கொண்டாட, பெண்களைச் சீண்டப் பாடப்படுவது என்ற அடையாளத்துக்குள்ளே கானா பாடல்கள் இருந்துவந்தன. ஆனால், கானாவுக்கு 400 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. சூஃபி இசையின் தாக்கமும் அதில் உண்டு. இந்தக் கலாச்சார மதிப்பை ஏற்றுக்கொள்வதில் பொதுச் சமூகத்துக்கு இருக்கும் மனத்தடையே கானாவுக்கு சமூக மதிப்பு உருவாகாமல் தடுக்கிறது. தலித் இயக்கங்களின் வழியே கானா என்பது சென்னையின் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்ற பார்வை உருவானது. அதன் நீட்சியாகப் பறையைப் போல, தற்போது கானாவும் அரசியல் கருவியாக மாறியிருக்கிறது. ஆனாலும், பொதுத் தளத்தில் கானாவுக்குச் சமூக மதிப்பு ஏற்படவில்லை. அதற்கான சமூக மதிப்பை உருவாக்கும் பணியைத்தான் தற்போது மேற்கொண்டுவருகிறோம்.

சந்தை மதிப்பை உருவாக்குவதன் வழியேதான் நமது பிரச்சினைகளைப் பொதுத்தளத்துக்குக் கொண்டுசெல்ல முடியும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது அல்லவா?

ஆமாம். சூழல் மிகவும் சிக்கலாகத்தான் இருக்கிறது. எங்கள் குழுவிலுள்ள பாலச்சந்தர், ‘மாஸ்டர்’ போன்ற வெகுஜனத் திரைப்படத்தில் பாடல் பாடுவது என்பது வெற்றிதான். அந்த வெற்றி பாலச்சந்தரை பொதுச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆனால், அந்த அறிமுகம் வழியாக, பாலச்சந்தரின் தலைமுடி, ஆடை போன்றவை ட்ரெண்டாகிறதே தவிர, அவரது சமூகம் குறித்த விவாதம் முன்னிலைக்கு வருவதில்லை.

ஏன் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்று பெயர்?

அயோத்திதாச பண்டிதரின் ‘சாதி பேதமற்ற தமிழர்கள்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையிலே இந்த இசைக் குழுவுக்கு ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி என்று பிளவுபட்டு இருக்கிறோம். இங்கு சாதியப் பாகுபாடு இரண்டு தளங்களில் செயல்படுகிறது. ஒன்று, அமைப்புரீதியாக. மற்றொன்று, மனக்கட்டமைப்புரீதியாக. தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையை அமைப்புரீதியாகவே நாம் பெற முடியும். அதற்கு அடையாள வரையறை என்பது அவசியம். அதேசமயம், மக்களின் மனக்கட்டமைப்பை மாற்ற அடையாளத்தை அழிப்பது அவசியமாகிறது. மனிதர்கள் என்ற அடிப்படையில் நாம் ஒன்றிணைய வேண்டும்.

‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’வின் நோக்கம் என்ன?

இந்தியச் சூழலில், ஒரு இயக்கம் சமூகத்தில் மாற்றம் உருவாக்க வேண்டுமென்றால், அரசியல்ரீதியாக மட்டுமல்ல, பண்பாட்டுத் தளத்திலும் தன்னை வலுப்படுத்திக்கொள்ளவது அவசியம் என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அதை நோக்கமாகக் கொண்டே செயல்பட்டுவருகிறோம்.

- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்