அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் எப்படிச் சிந்திக்கும் என்பது குறித்து இந்திய அரசியல் தலைவர்கள், வெளியுறவுத் துறையினர், இதழாளர்கள், அறிஞர்கள் போன்றோருக்குத் தற்போது ஒரு தெளிவான பார்வை ஏற்பட்டிருக்கும். இவர்களில் சிலர் பைடனைச் சந்தித்திருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கென், சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் போன்றோரில் தொடங்கி பருவநிலை மாற்றத்துக்கான சிறப்புத் தூதர் ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்காவின் ‘இந்தோ-பசிஃபிக் ஒருங்கிணைப்பாளர்’ கூர்ட் கேம்பல் ஆகியோரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள்.
பராக் ஒபாமாவின் துணை அதிபராக இருந்த நாட்களின் அடிப்படையில் அதிபர் பைடனுக்கு இந்திய-அமெரிக்க உறவு குறித்துத் தெளிவான கருத்து இருக்கிறது. மிக முக்கியமாக, செனட்டின் வெளியுறவுத் துறைக் குழுவின் தலைவராக இந்தியாவுக்கு எதிரான அணுசக்தித் தடைகளுக்கு முடிவு கட்டும்படி அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைத் தூண்டுவதில் பைடன் முக்கியப் பங்கு வகித்தார்.
அதிபரின் கருத்துகள், முக்கியமான வெளியுறவுத் துறைக் கொள்கை, தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான சிக்கல்கள் போன்றவற்றுடன் பழக்கமாகும்வரை துணை அதிபர் கமலா ஹாரிஸ் எச்சரிக்கையாகவே இருந்துவந்திருக்கிறார்.
கூர்ட் கேம்ப்பல் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் சீனாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்துகொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த அக்கறைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஐரோப்பிய சக்திகள் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது தீவிர அவநம்பிக்கையும் வெறுப்பும் கொண்டிருந்தன. பைடனின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் கேம்ப்பல் சீனா குறித்த அமெரிக்க-ஐரோப்பியக் கொள்கைகளையும்
இந்தோ-பசிபிக் தொடர்பான கொள்கைகளையும் ஒன்றிணைப்பது தொடர்பாகப் பார்வைகளைக் கொண்டிருக்கிறார். இந்தோ-பசிபிக் பிராந்தியம் தொடர்பான ட்ரம்ப் நிர்வாகத்தின் மதிப்பீடு தொடர்பான ரகசிய ஆவணம் பகிரங்கப்படுத்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாளே கேம்ப்பல் ‘இந்தோ-பசிபிக்’ ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்குக்கு ஈடுகொடுக்கும் சக்தியாக இந்தியாவை அந்த ஆவணம் குறிப்பிட்டிருந்தது. சீனாவின் உய்கர் முஸ்லிம்கள் மிகக் கொடுமையான விதத்தில் நடத்தப்படுவது குறித்து அதிபர் பைடனும் ஏனையோரும் ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள்.
சிந்து மாகாணத்தில் இரண்டு இடங்களில் சீனாவுக்கு கடற்படைத் தளங்களை பாகிஸ்தான் தரும் தருணத்தில் குவாடின் (Quad: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டு) முக்கியத்துவத்தை பைடன் அங்கீகரிப்பதையும் தெளிவாக உணர முடிகிறது. இந்தத் துறைமுகங்கள் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சீனக் கப்பற்படைத் தளத்துக்கான தளவாடங்களைக் கொடுத்து உதவும்.
ஆப்கன் கொள்கை
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் கொண்டிருக்கும் பார்வையானது ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்டின் தலைவராக இருந்தபோது அவர் கொண்டிருந்த பார்வையைப் பெரிதும் பிரதிபலிக்கிறது. அவருடைய பார்வைக்கும் அவர் ஓய்வுபெற்ற பிறகு பென்டகன் கொண்டிருந்த பார்வைக்கும் வேறுபாடு உண்டு.
ஆஸ்டின் இவ்வாறு அறிவித்தார்: “நமது பொதுவான நலன்களில் நான் கவனம் செலுத்துவேன்; சர்வதேச ராணுவக் கல்விக்கும் பயிற்சிக்குமான நிதிகளைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் எதிர்கால ராணுவத் தலைவர்களுக்குப் பயிற்சியளிப்பதை இது உள்ளடக்கும். ஆப்கானிஸ்தானில் ஏற்படக்கூடிய அரசியல் தீர்வில் பாகிஸ்தான் முக்கியமான பங்கு வகிக்கும்.”
வெள்ளை மாளிகையோ ஆஸ்டினின் இந்தக் கருத்துகளை ஒதுக்கிவிட்டது; “பிராந்திய வெளியுறவு முயற்சி ஒன்றுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்; அது இரண்டு தரப்புகளும் நீடித்த, நியாயமான அரசியல் தீர்வையும் நிரந்தரப் போர்நிறுத்தத்தையும் எட்டுவதற்கு உதவும்” என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கும் அவர்களின் புரவலர்களுக்கும் மேலும் எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் அங்குள்ள பெண்களையும் சிறுபான்மைக் குழுக்களையும் அமைதிச் செயல்பாட்டின் அங்கமாகப் பாதுகாப்பதைப் பற்றியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆலோசித்தார். இது இயல்பாகவே ஆப்கன் அதிபர் கனியால் வரவேற்கப்பட்டிருக்கிறது, அவரும் ஆப்கனுக்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் தூதருமான ஜல்மய் கலீல்ஸாதும் தலிபான்களாலும் பாகிஸ்தான் ராணுவத்தாலும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
பைடன் - இந்தியா
“அதிபர் பைடன் இந்தியாவுக்குப் பலமுறை சென்றிருக்கிறார். இருநாட்டுத் தலைவர்களும் நேரெதிர்க் கொள்கைகள் கொண்டிருந்தாலும் அவர்களுக்கிடையிலான உறவு நெடியது, வெற்றிகரமானது. இதை அதிபர் பைடன் மதிக்கிறார். அது தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்” என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாக்கி வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவிலிருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையில் பிரச்சினைகள் தொடரவே செய்யும். இந்தியாவுடனான ‘சிறப்பு உறவு’க்கு முடிவுகட்டும்படி சீனத் தலைமையால் தூண்டப்பட்டதால் ரஷ்ய அதிபர் புதினும், மிக முக்கியமாக, அதிகமாகப் பேசும் அவரது வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லேவ்ராவும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு குறித்து நியாயமற்ற, அவசியமற்ற கருத்துகளைக் கூறினார்கள்.
இந்தியாவின் எதிர்வினை கூர்மையாக இருந்தது, லேவ்ராவின் விளக்கத்துடன் இந்த விஷயம் முடிவுக்குவந்தது. ஆனால், ரஷ்யாவிடமிருந்து ‘எஸ்-400 தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணை’யை இந்தியா வாங்கியதனால் பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த ஏவுகணை அமெரிக்க ஏவுகணைகளைக் கண்காணித்து அவற்றைத் தரையில் வீழ்த்தக் கூடியது. இது ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் ஆயுதங்களை வாங்கும் எந்த நாட்டுடனும் ஆயுத உறவு வைத்துக்கொள்வதை அமெரிக்கச் சட்டம் தடுக்கிறது.
எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் என்பது மாற்றத்தக்கதல்ல என்பதையும் ரஷ்யாவிலிருந்து நமக்கு விருப்பமானவற்றை வாங்குவதற்கான உரிமை நம்மிடமே உள்ளது என்பதையும் அமெரிக்காவிடம் நாம் தெளிவுபடுத்தியிருந்திருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும், நமது நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்கள், ஏவுகலங்கள், டாங்கிகள், பெருந்துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களில் ரஷ்யாவின் பங்களிப்பு இருக்கிறது. பிரான்ஸும் இஸ்ரேலும் கூட இந்தியாவிடம் பெருமளவில் ஆயுதங்கள் விற்கும் நாடுகளாக இருக்கின்றன. ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் நமது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் நம்பகத்தன்மை கொண்ட கூட்டாளிகளாக வெகு காலம் இருந்துவருகிறார்கள். இந்தியா தனது தேசிய பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாத விஷயங்களில் பிற நாடுகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு அடிபணிந்து தனது வெளியுறவு உத்திரீதியிலான சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.
எல்லைப் பதற்றங்கள்
நாளுக்கு நாள் தனது அதிகாரப் பசியை அதிகரித்துக்கொண்டிருக்கும் சீனா, இந்தியாவுடனான தனது எல்லையில் பாதுகாப்புச் சூழலைப் பதற்றத்திலேயே வைத்திருக்கும் உறுதிப்பாட்டோடு உள்ளது என்று நம்புவதற்குப் பல காரணங்கள் உள்ளன. லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டில் ஊடுருவ முயன்றபோது முற்றிலும் எதிர்பாராத, வலுவான எதிர்ப்பை சீனா எதிர்கொண்டது. கடல் பிரதேசத்தில் சீனா செய்துவரும் அத்துமீறல்கள் தொடர்பாக அதனை எதிர்கொள்ள குவாட் நாடுகள் சேர்ந்து ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டும். ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, புருனே என்று அனைத்து அண்டை நாடுகளின் கடல் எல்லையிலும் சீனா அத்துமீறல் செய்திருக்கிறது.
தைவான் தனது கடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும் கப்பற்படை, விமானப் படையை வலுப்படுத்தவும் அமெரிக்கா எப்போதுமே உதவக்கூடும். இந்தியாவும், தைவானின் மின்னணுவியல் துறையின் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்/ பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது நமது மின்னணுவியல் துறையையும் வலுப்படுத்த உதவும். இந்த நகர்வு வெகு காலம் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
- ஜி.பார்த்தசாரதி, பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர்.
‘தி பிஸினஸ்லைன்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago