கணவரின் மனத்தில் இடம்பிடிக்க மனைவிக்குக் கைப்பக்குவம் முக்கியம் என்று சொல்லியே பெண்பிள்ளைகள் வளர்க்கப்படும் சமூகம் இது. “எங்கம்மா அம்மியில கையாலயே தேங்காய் சட்டினி அரைப்பாங்க, கையாலதான் துணி துவைப்பாங்க, குக்கர்ல இல்லாம கையாலயே சட்டியில சோறு வடிப்பாங்க” என்று மணம் முடித்த கையோடு மனைவியிடம் மெய்சிலிர்க்கும் கணவன்மார்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள்.
இவற்றை மட்டுமா அந்த அம்மாவின் கைகள் செய்கின்றன? ஆண்களுக்குத் தெரிந்ததெல்லாம் அம்மாவின் கைமணம்தான். ஆனால், நம் வீட்டுப் பெண்டிர் அனுதினம் உழல்வது தம் கைகளில் வீசும் துர்நாற்றத்துக்குள்ளும்தான் என்பதைக் காட்சி மொழியில் வடித்திருக்கிறது, ‘நீஸ்ட்ரீம்’ (Neestream) ஓடிபி தளத்தில் வெளிவந்திருக்கும் மலையாளத் திரைப்படமான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ (The Great Indian Kitchen).
புழக்கடையில் மாட்டுக்கறி வறுவல்
படத்தின் எந்தக் கதை மாந்தருக்கும் இயக்குநர் ஜோ பேபி பெயர்சூட்டவில்லை. புதுமணத் தம்பதிக்கு இடையிலான சிருங்கார ‘ரசத்தை’ப் பிழியும் குளோசப் காட்சிகள் கதாநாயகனுக்கோ கதாநாயகிக்கோ வைக்கப்படவில்லை. ‘அடிபொலி’ என சொல்ல வைக்கும் கேரளக் கப்பக்கெழங்கு பிரியாணியையும், சப்புக்கொட்ட வைக்கும் தேங்காய் எண்ணெயில் வறுபடும் மீன் துண்டுகளையும், தளதளவெனக் கொதிக்கும் மீன் குழம்பையும், சுண்டியிழுக்கும் வாழைக்காய் சிப்ஸையும், அடுக்கடுக்காய் வேகும் இடியாப்பத்தையும், குழாயில் வேகும் புட்டு, கடலைக்கறியையும்தான் கேமரா மேலிருந்து கீழும் கீழிருந்து மேலுமாகச் சுற்றிச் சுற்றி வருகிறது. ஒரு ஃபிரேமில், மாட்டுக் கறி நறுக்கப்பட்டு வீட்டுப் புழக்கடையில் வறுக்கப்படுவதும் காட்டப்படுகிறது. இவற்றைக் காட்சிப்படுத்துவதோடு படம் நின்றுவிடவில்லை. அடுக்களைக் கழிவுத் தொட்டிக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்தியப் பெண்களின் வாழ்க்கையை நோக்கிப் படம் நகர்கிறது.
புனிதமும் தீட்டும்
கணவன் சாப்பிட்டு மீதம் வைத்த தட்டில் மனைவி உண்டி சுருங்கும் விதமாக உண்ட காலம் மலையேறியிருக்கலாம். ஆனால், கொஞ்சமும் மாறாதது சாப்பாட்டு மேஜையிலேயே உணவுச் சக்கையை உமிழ்ந்து சுற்றிலும் களேபரமாக மாற்றிவிட்டு ஆண்கள் எனக்கென்னவென்று எழுந்து செல்லும் வழக்கம். அதன் பின்னர், அதே மேஜையில் வீட்டுப் பெண்கள் உண்டு பிறகு அதைச் சுத்தம் செய்வதைக் காட்டிலும் அருவருக்கத்தக்க செயல் இருக்க முடியுமா? முடியும். அடுத்து வருவது பத்துப் பாத்திரங்களைத் தேய்த்துச் சுத்தம்செய்யும் படலம். எச்சிலில் தோய்ந்த மிச்சம் மீந்த உணவுப் பண்டங்களைக் குப்பைத் தொட்டியில் கொட்டி, பாத்திரங்களைக் கழுவி, கழிவு நீர் நிரம்பிய தொட்டியை அடைப்பெடுத்து, தொட்டிக்குக் கீழே ஒழுகும் துர்நாற்றம் வீசும் கழிவுநீரை வாளியில் தேக்கி, அழுகிய குப்பையைப் புழக்கடையில் அப்புறப்படுத்திவிட்டு, அயர்ந்து பஞ்சணையில் தஞ்சம் புகும் மனைவியைக் கணவன் புணரும்போது அவளுக்குள் மேலெழுவது என்ன என்பதைப் படம் முகத்தில் அறைந்தாற்போல் காட்டுகிறது. காதலற்ற கலவி கொள்ளும்போது அவள் மனத்துக்குள் அன்றாடக் கழிசடைகளின் நினைப்புதான் மேலோங்குகிறது. இந்நிலையில், கணவனிடம் முன்முயக்கத்தில் (foreplay) ஈடுபடக் கோரும் அவளிடம், ‘ஓ இதெல்லாம் உனக்கு முன்னமே தெரியுமா?’ என்ற கேள்வியின் வழி ‘கற்பு’ என்னும் கடைந்தெடுத்த இந்திய ஆணாதிக்கப் பார்வையை வீசுகிறான்.
கணவனும் மாமனாரும் சபரிமலை செல்ல விரதம் மேற்கொள்கிறார்கள். அப்போது மாதவிடாய் நாட்களை எதிர்கொள்ளும் மனைவிக்குத் தீட்டு என்னும் தீண்டாமை விதிக்கப்படுகிறது. இப்படிப் புனிதம், தீட்டு என்னும் கற்பிதங்களால் பெண்ணின் உடல் எவ்வாறு காலங்காலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அடுக்களையிலிருந்து படுக்கையறை வரை படம் காட்சிப்படுத்துகிறது. மேலும், பல விஷயங்களைப் படம் தொட்டுக்காட்டினாலும் தங்களது வீட்டு வேலைகளைச் செய்வதற்காகப் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது பேசுபொருளாகியிருக்கும் இந்நாட்களில் அதைக் குறித்துப் பேசுவது அவசியமாகிறது.
வீடு தர மறுக்கும் சுயமரியாதை
வீட்டை விட்டு வெளியே வேலைக்குப் போகும் பெண்களானாலும் சராசரியாகத் தங்களுடைய வீட்டு வேலைகளுக்கென 6 மணி நேரமேனும் செலவழிக்கிறார்கள். ஆனால், ஆண்களோ 52 நிமிடங்கள் வரை மட்டுமே செலவழிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கு ‘வீட்டை விட்டு வெளியே’ என குறிப்பிடக் காரணம், வேலைக்குப் போகும் பெண்கள் என்ற சொல்லுக்குள்ளேயே வீட்டில் இருக்கும் பெண்கள் குறித்த உதாசீனம் குடிகொண்டிருக்கிறது. வெளியே சென்று செய்வதுதான் பணி என்பது போலவும் வீட்டில் செய்பவை எதுவும் பணியல்ல என்கிற அர்த்தமும் பொதிந்துள்ளது. பொருளாதாரத் தற்சார்புக்காகவும் தன்னிறைவு பெறவும் பெண்கள் வெளியே வேலைக்குச் செல்வது அவர்களுடைய சுயமரியாதை சார்ந்த செயலாக மாற்றப்பட்டிருப்பதும் ஒரு விதத்தில் ஆணாதிக்கத்தின் நீட்சிதானே! உதாரணத்துக்கு, இல்லத்தரசிகளிடம், “என்ன செய்றீங்க?” என்று கேட்கப்படும்போதெல்லாம், “வீட்டுல சும்மாதான் இருக்கேன்” என்று கூச்சத்துடன் அப்பாவித்தனமாகச் சொல்பவர்களைப் பார்த்திருக்கிறோம். நிதர்சனத்தில் வீடு எந்தப் பெண்ணையும் சும்மா விட்டு வைப்பதில்லை. அத்தனையையும் செய்தாலும் பெண்ணை சுயமரியாதையோடு வாழ அனுமதிப்பதும் இல்லை.
குழந்தையின் மலத்தைக் கழுவும் ஆண்கள் எங்கே?
மறுபுறம் ஆண்களைப் பொறுத்தவரை எந்த மாதிரியான வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது விவாதத்துக்குரியது.
‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ பட ஆண்கள் எவரும் அவர்களுடைய இல்லத்தரசிகளிடம் வன்முறைப் பிரயோகம் செய்யவில்லை. ஆனால், தம் வீட்டுப் பெண்டிர் மெத்தப் படித்திருந்தாலும் வேலைக்குச் செல்லக் கூடாது என்பதில் தொடங்கி, இந்தியக் குடும்பங்களின் சாதிய - ஆண் மைய விழுமியங்களை மென்மையாக, அதேநேரம் வலிந்து திணிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதிலிருந்து சற்றே விலகி தத்தமது வீட்டு வேலைகளில் ஒத்தாசையாகவும், மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிப்பவர்களாகவும் விளங்கும் அநேக ஆண்கள் சமூகத்தில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், ‘ஒத்தாசை’ என்றும், ‘அனுமதி’ என்றும்தான் சொல்ல வேண்டிய நிலை உள்ளதே தவிர வீட்டின் பராமரிப்பு, துப்புரவுப் பணி உட்பட உயர்வு தாழ்வு பாராமல் அனைத்து விதமான பணிகளையும் ஆண்கள் பகிர்ந்துகொள்ளும் காலம் எட்டப்படவில்லை. வீட்டு அடுப்படியில் சமையல் செய்துதரும் ஆண்கள்கூட பாத்திரங்களை ஒழித்து, அடுப்பங்கரையைச் சுத்தம்செய்யும் பணியை ஏற்பதில்லை என்பதில் நிலவுகிறது பாகுபாடு. பெற்ற குழந்தைக்கு உணவு ஊட்டிவிடும் அப்பாக்களைக் காண்பது இன்று சகஜம். ஆனாலும், அதே குழந்தை சிறுநீரோ மலமோ கழித்தால் வீட்டையும் குழந்தையையும், கழிப்பிடத்தையும் கழுவிவிடும் பொறுப்பை ஏற்க அதே அப்பா முன்வருவதில்லை என்பதில் உள்ளது சமமின்மை. பெண்கள் வீட்டைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும்போதுகூட ஆண்கள் மீது விளக்குமாற்றின் ஒற்றை நாணல்கூட பட்டுவிடக் கூடாது என்று கூச்சலிடும் விதத்திலல்லவா சாதியமும் ஆணாதிக்கமும் முயங்கிய இந்தியக் குடும்ப அமைப்பு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதையெல்லாம் சித்தரிக்கும் விதத்தில் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் பெரும் விவாதங்களையும் எழுப்பிவிட்டிருக்கிறது.
- ம.சுசித்ரா, susithra.m@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago