எம்.ஜி.ஆரின் நீக்கத்துக்கு முன்பும் பின்பும் பல கட்சிகள் பிளவுபட்டுள்ளன. ஆனாலும் எம்.ஜி.ஆரின் நீக்கமே கடந்த 65 ஆண்டுகால அரசியலில் நிகழ்ந்த ஆகப்பெரிய பிளவு. அதற்கான காரணம் இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு முன் தமிழக அரசியலில் ஏற்பட்ட பிளவுகளின் பின்னணியைப் பார்த்துவிடலாம்.
சித்தாந்தச் சிக்கல் Vs தன்முனைப்பு
ஓர் அரசியல் கட்சி உருவாக அநேக காரணங்கள் இருக்கலாம். ஆனால், அது உடைவதற்கோ, உடைக்கப்படுவதற்கோ இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, சித்தாந்தச் சிக்கல். மற்றொன்று, தன்முனைப்பு. சில சமயங்களில் இரண்டும் சேர்ந்தேகூட இருக்கலாம்.
சித்தாந்தச் சிக்கல்களில் சமரசம் செய்து கொள்ளும் தலைவர்களால் ஏனோ தன்முனைப்பை வென்றெடுக்க முடிவதில்லை. இங்கே தன்முனைப்பு என்பது அதிகாரமட்டத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர எத்தனிப்பது மட்டுமல்ல, அதிகார ஏணியின் உச்சத்தில் இருப்பவர்கள் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முரண்டுபிடிப்பதும்தான்.
தன்முனைப்பே பதவி தாகத்தைத் தூண்டுகிறது. அதைத் தணிக்கத் தோதான முடிவை எடுப்பதில் கட்சித் தலைமை தவறும்போது கட்சிக்குள் குழப்பம் உருவாகிறது. அதுவே பிளவுக்கு இட்டுச் செல்கிறது. தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்த அநேக பிளவுகளும் அப்படித்தான் சொல்கின்றன.
காங்கிரஸ் கலைந்த கதை
சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸுக்குள் நேதாஜி தலைமையில் ஃபார்வர்டு பிளாக் உருவாகி, 1948 முதல் தனிக் கட்சியாகவே செயல்படத் தொடங்கியிருந்தது. சுதந்திரத்தை அடைவது அகிம்சை வழியிலா, ஆயுதப் பாதையிலா என்பதுதான் ஃபார்வர்டு பிளாக்கின் உருவாக்கத்துக்குக் காரணம். அந்தக் கட்சியைத் தமிழகத்தில் வழிநடத்தியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அந்தப் பிளவு பாண்டி மண்டலத்தைத் தவிர, மற்ற பகுதிகளில் காங்கிரஸுக்குப் பெரிய சேதாரத்தை ஏற்படுத்திவிடவில்லை.
காமராஜர் முதலமைச்சராகியிருந்த சமயம் அது. சட்டநாத கரையாளர், வெங்கட கிருஷ்ண ரெட்டியார் போன்ற முன்னணித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று முணுமுணுப்புகள் எழுந்தன. அது 1957 தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி என்ற புதிய கட்சிக்கு அடித்தளமிட்டது. தன்முனைப்பு காரணமாக உருவானபோதும், தேர்தலின் முடிவில் தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக உருவெடுத்தது அந்தக் கட்சிதான்.
நேருவினுடையது சோஷலிசப் பார்வை. ராஜாஜியோ தீவிர வலதுசாரி. உள்ளிருந்தபடியே எதிர்க் குரல் எழுப்பினார் ராஜாஜி. எடுபடவில்லை. 50-களின் இறுதியில் காங்கிரஸிலிருந்து விலகி சுதந்தரா கட்சியைத் தொடங்கினார். அந்தப் பிளவு மெய்யான சித்தாந்தச் சிக்கலின் விளைவு. அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்துக் களமிறங்கிய சுதந்தரா கட்சிதான் 1967-ல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, திமுக ஆட்சியைப் பிடிப்பதற்குத் துணையாக இருந்தது.
பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் காங்கிரஸின் சிண்டிகேட் தலைவர்களுக்கும் இடையிலான ஈகோ யுத்தமே 60-களின் இறுதியில் ஸ்தாபன காங்கிரஸ் - இந்திரா காங்கிரஸ் என்ற இரு பிரிவுகளை உருவாக்கியது. தேசிய அளவில் இந்திரா காங்கிரஸ் பலமாக இருந்தாலும், தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்தது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்தான்.
அதன் பிறகு, வெவ்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் பலமுறை உடைந்துள்ளது. கூட்டணி தொடர்பான கருத்துவேறுபாட்டில் காங்கிரஸிலிருந்து விலகி தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸைத் தொடங்கினார் பழ.நெடுமாறன். காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸைத் தொடங்கினார் குமரி அனந்தன். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் எந்தப் பிரிவை ஆதரிப்பது என்ற சர்ச்சையில் உருவானது சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி.
90-களில் காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் என்.டி.திவாரி தேசிய அளவில் தனிக் கட்சி தொடங்கியபோது அதன் தமிழகத் தலைவரா னார் வாழப்பாடி ராமமூர்த்தி. 1996-ல் அதிமுக-வுடனான கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து உருவானது மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ். அடுத்த தேர்தலில் அதே அதிமுக-வுடன் தமாகா கூட்டணி அமைத்ததை எதிர்த்து தமாகா ஜனநாயகப் பேரவையைத் தொடங்கினார் ப.சிதம்பரம்.
மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸில் இணைந்த தமாகா சமீபத்தில் அதிலிருந்து வெளியேறி மீண்டும் உருவாகிவிட்டது. கட்சியின் தேசியத் தலைமை, மாநிலத் தலைமைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது ஜி.கே.வாசனின் குற்றச்சாட்டு. இப்படி ஒவ்வொரு பிளவுக்குப் பின்னாலும் தன்முனைப்பும் அதன் பக்கவிளைவாக எழுந்த அரசியல் கருத்துவேறுபாடுகளும்தான் இருக்கின்றன.
திராவிடம் பிரிந்த பாதை
பெரியாரின் அணுக்கத் தொண்டர் அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திமுகவை உருவாக்கினார். இந்திய சுதந்திரத்தை எப்படி அணுகுவது என்பதில் ஏற்பட்ட சித்தாந்தச் சிக்கல், பெரியார் - மணியம்மை திருமணம் வழியே தன்முனைப்புச் சிக்கலாக மாறி திமுக-வின் உருவாக்கத்தில் வந்து முடிந்தது.
காங்கிரஸை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் செய்த திமுகவுக்கு 60-களின் தொடக்கத்தில் சிக்கல் வந்தது. உபயம்: ஈவெகி. சம்பத். திமுகவுக்குள் கருணாநிதி, எம்ஜிஆர் போன்ற திரைக் கலைஞர்களின் ஆதிக்கம் சம்பத்துக்குப் பிடிக்கவில்லை. அதை அவர் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியபோது கட்சிக்குள் கலகம் வெடித்தது.
ஒருகட்டத்தில் திமுகவின் உயிர்நாடிக் கொள்கையான திராவிட நாடு கோரிக்கை மீது கேள்வி எழுப்பினார் சம்பத். அந்த நொடியில் தன்முனைப்புச் சிக்கல் சித்தாந்தச் சிக்கலாக மாறியது. அதுவே பிளவுக்கும் வித்திட்டது. திராவிட தேசியம் பேசிவந்த சம்பத், தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கினார். அவரே பின்னர் இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டது தனிக் கதை. ஆனால், எம்.ஜி.ஆரின் விலகலில் சித்தாந்தச் சிக்கல் ஏதுமில்லை. இது நீயா, நானா யுத்தம்.
எம்.ஜி.ஆரின் விலகலுக்குப் பிறகு திமுகவுக்குள் மீண்டும் ஒரு பிளவை நிகழ்த்தினார் நெடுஞ்செழியன். கருணாநிதியுடனான கருத்துவேறுபாட்டால் மக்கள் திமுகவைத் தொடங்கிய அவர், பின்னாளில் அதிமுகவில் இணைந்துவிட்டார். எம்.ஜி.ஆர். இருந்தபோதே அதிமுகவில் இருந்து விலகி, நமது கழகம் தொடங்கிச் சிலகாலம் நடத்தியவர் எஸ்.டி. சோமசுந்தரம்.
எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அதிமுக யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி அதிமுகவை இரண்டாகப் பிளந்தது. அதிமுக (ஜெ), அதிமுக (ஜா) என்ற இரு கட்சிகள் உருவாகின. அதன் பிறகு நால்வர் அணி, திருநாவுக்கரசுவின் எம்.ஜி.ஆர். அதிமுக, ஆர்.எம்.வீ-யின் எம்.ஜி.ஆர். கழகம் போன்றவை அதிமுகவில் ஏற்பட்ட சேதம் ஏற்படுத்தாத சிறுசிறு பிளவுகள்.
ஒருங்கிணைந்த அதிமுகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்திருந்த திமுகவுக்கு 90-களின் மத்தியில் மீண்டும் ஒரு பெரும் பிளவு. பின்னணியில் இருந்தவர் வை. கோபால்சாமி. தனது மகன் மு.க.ஸ்டாலினைத் தலைவராக்க வைகோவை ஒதுக்குகிறார் என்று கருணாநிதி மீதும், ஈழப் பிரச்சினையில் தலைமையை மீறிச் செயல்படுகிறார் என்று வைகோ மீதும் எழுந்த குற்றச்சாட்டுகள் மதிமுகவை உருவாக்கின. ஆனால், கட்சி உருவாகி கால் நூற்றாண்டில் வைகோவின் தவறுகளுக்கு கட்சியே விலையாகிவிட்டது.
இடதுசாரிகளும் இன்ன பிறரும்
கம்யூனிச சித்தாந்தத்தில் நாம் பின்பற்ற வேண்டியது சீனாவையா, ரஷ்யாவையா என்ற கேள்வி கம்யூனிஸ்ட் கட்சியைச் சர்வதேச அளவில் இரண்டாகப் பிளந்தது. அது இந்தியாவிலும் தமிழகத்திலும், சிபிஐ, சிபிஎம் என்ற இரு கட்சிகளை உருவாக்கின.
70-களின் மத்தியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மூத்த கம்யூனிஸ்ட் மணலி கந்தசாமி தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். மூத்த கம்யூனிஸ்ட் எம்.கல்யாணசுந்தரமும் கருத்துவேறுபாடு காரணமாக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். அதில் அங்கம் வகித்த தா. பாண்டியன் பின்னாளில் கட்சியைத் தாய்க் கட்சியில் இணைத்துவிட்டார்.
சிறுபான்மை மக்களின் பிரதிநிதியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிளவுபட்டதற்கும் சித்தாந்தச் சிக்கல் காரணமல்ல. தேர்தல் களத்தில் அதிமுக அணியில் இருப்பதா, திமுக அணியில் நீடிப்பதா என்ற கேள்வி அப்துஸ் சமதுவையும் அப்துல் லத்தீப்பையும் இரண்டாகப் பிரித்தது. சிறுகட்சியானது இரு கட்சிகளாக ஆனது.
பாமகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், தலித் எழில்மலை, வேல்முருகன் போன்றோர் கருத்துவேறுபாடு காரணமாக வெவ்வேறு காலகட்டங்களில் வெளியேறினர். அவர்களில் வேல்முருகன் மட்டும் தனிக்கட்சி நடத்திவருகிறார். ஏனைய பிளவுகளைக் காட்டிலும் எம்.ஜி.ஆர் ஏற்படுத்தியதே ஆகப் பெரியது என்று சொல்வதற்கு என்ன காரணம்?
எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய செங்குத்துப் பிளவு
சட்டமன்றத்துக்கு உள்ளும் புறமும் சர்வ வல்லமை பொருந்திய ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை எதிர்த்து எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகதான் ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட 13 ஆண்டு காலத்துக்கு திமுகவால் ஆட்சிக்கே வர முடியவில்லை. இன்றும்கூட, தமிழக அரசியல் களம் என்பது அதிமுக, திமுக என்ற இரு துருவ அரசியலாகவே நீடிக்கிறது. அதனால்தான் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பிளவை மெய்யான செங்குத்துப்பிளவு என்கிறோம்!
- ஆர். முத்துக்குமார், திராவிட இயக்க ஆய்வாளர், தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
அக்டோபர் 14, 1972. திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட நாள்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago