சோலை சுந்தரபெருமாள் (09.05.1953 - 12.01.2021) கீழத்தஞ்சை மண்ணையும் மக்களையும் தன் எழுத்துகள் வழி வாழ்வித்தவர். திருவாரூர் அருகே அம்மையப்பன் - காவனூரில் பிறந்து வளர்ந்த அவர் வேளாண்குடியைச் சார்ந்தவர் என்றாலும் அவரின் தந்தையோ கொத்தனார். ஊர்ப்புறச் சேவைக் குடிகள்போல் எளிமையான வாழ்வுதான். இந்தக் குடும்பச் சூழல் காரணமாகவும் இளமையில் தாயை இழந்ததாலும் சுந்தரபெருமாள் அடிப்படைக் கல்வியோடு வேலை தேடலானார். தந்தையோடு சித்தாளாகவும் சென்றார். துணிக் கடை, மளிகைக் கடைகளிலும் வேலை பார்த்திருக்கிறார். தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த இவருக்கு அரசுப் பள்ளியில் தொழிலாசிரியர் பணி கிடைத்ததுதான் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.
ஊர்ப்புறங்களில் தொழிலாசிரியர்கள் பெரும்பாலும் கல்விசாராப் பணிகளில் ஆர்வம் காட்டுவது இயல்பு. இவரோ இதற்கு மாறானவர். பாடம் நடத்துவது, பாடப் புத்தகங்களுக்கு வெளியே இலக்கிய நூல்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது, பள்ளி நூலகப் பொறுப்பேற்றுச் செயல்படுத்துவது என்றிருந்தார். பணியில் இருந்துகொண்டே தமிழ் இலக்கியம் பயின்று தமிழாசிரியராகவும் தன்னை தரம் உயர்த்திக்கொண்டார். தீராத படிப்பாளி. நூல்களைத் தேடித் தேடிப் பயின்றவர். தன் இல்லத்தில் அரிய நூலகம் ஒன்றையும் உருவாக்கினார்.
வளர்ந்த சூழல்
இவர் வாழ்ந்த அம்மையப்பன் பகுதி திராவிட இயக்கம் அடர்த்தியாக இருந்த இடம். பெரியார், கருணாநிதி கொள்கைகளில் ஈர்ப்பும், பாரதிதாசன் கவிதை மீது பற்றும் கொண்டார். ஏழ்மையும் வறுமையுமிக்க வாழ்க்கைப் பின்புலமும், ஊர்ப்புற உழைக்கும் மக்களின் இன்னல் பாடுகளை நேரடியாகக் கண்டுணர்ந்த அனுபவமும் இவரிடம் இயல்பிலேயே ஒடுக்கப்பட்டோர் சார்புநிலையை உருவாக்கிற்று எனலாம்.
பள்ளி ஆசிரியர் வாழ்வும், சங்க அமைப்பும் இடதுசாரித் தோழர்களை அவருக்கு அறிமுகப்படுத்திற்று. தொடக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும், பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்களோடும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்களோடும் அணுக்கமாக இருந்தார்.
தீவிர வாசிப்பின் வழியே கவிதை, பயிற்சி எழுத்து இவற்றிலிருந்து தன் படைப்பூக்கத்தைத் திசைமாற்றிக்கொண்டார். 1980 தொடங்கி பத்தாண்டுகள் எழுதிப் பழகினார் என்றே சொல்ல வேண்டும். 1987-ல் ‘கலைமகள்’ இதழில் பரிசு வென்ற ‘மனசு’ குறுநாவலும், அதே ஆண்டு ‘தாமரை’ இதழில் வெளிவந்த ‘தலைமுறைகள்’ சிறுகதையும் இலக்கியத் தடத்தில் சோலையின் முதல் காலடிகள். கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலத்தின் ஊக்கத்தால் தொடர்ந்து ‘தாமரை’யில் எழுதினார். 1990-ல் ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ நாவலை ‘சுபமங்களா’ இதழ் சிறந்த நாவலாகப் பட்டியலிட்டது.
இலக்கியப் பங்களிப்புகள்
‘ஒரே ஒரு ஊர்ல’, ‘நஞ்சை மனிதர்கள்’, ‘செந்நெல்’, ‘தப்பாட்டம்’, ‘பெருந்திணை’, ‘மரக்கால்’, ‘தாண்டவபுரம்’, ‘பால்கட்டு’, ‘எல்லைப் பிடாரி’ உள்ளிட்ட பத்து நாவல்களை சோலை படைத்துள்ளார். ‘மனசு’, ‘குருமார்கள்’, ‘காத்திருக்கிறாள்’ ஆகிய குறுநாவல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘மண் உருவங்கள்’, ‘வண்டல்’, ‘ஓராண்காணி’, ‘ஒரு ஊரும் சில மனிதர்களும்’, ‘வட்டத்தை மீறி’, ‘மடையான்களும் சில காடைகளும்’, ‘வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்’, ‘கப்பல்காரர் வீடு’ ஆகிய எட்டு சிறுகதைத் தொகுப்புகள் வழி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் படைத்துள்ளார். தமிழர் திருமண முறை, மருத நிலப் பண்பாடு, வண்டல் உணவுகள் குறித்த கட்டுரை நூல்களும் முக்கியமானவை.
கா.சி.வேங்கட்ரமணி முதல் யூமா. வாசுகி வரை தஞ்சை வட்டார எழுத்தாளர்களின் ஐம்பது சிறுகதைகளை ‘தஞ்சைச் சிறுகதைகள்’ என சோலை தொகுத்தார். உ.வே.சா. முதல் சிவக்குமார் முத்தையா வரை ஐம்பது எழுத்தாளர்களின் சிறுகதைகளை ‘தஞ்சைக் கதைக்களஞ்சியம்’ எனத் தொகுத்தார். இந்தத் தொகுப்புகளில் இவர் எழுதிய எழுத்தாளர் அறிமுகக் குறிப்புகள் முக்கியமானவை. ‘மூவலூர் இராமாமிர்தம்மாளின் மதிபெற்ற மைனர் (அ) தாசிகளின் மோசவலை’ எனும் தமிழின் முக்கியமான நாவலை 1932-க்குப் பிறகு எழுபதாண்டுகள் கழித்துப் பதிப்பித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
1990 தொடங்கி 2016 வரை ஏறக்குறைய 25 ஆண்டுகள் தீவிரமாகத் தொடர்ந்து எழுதியவராக சோலை சுந்தரபெருமாளைச் சொல்ல முடியும். “ஒரு படைப்பு கலாபூர்வமாக வெற்றி பெற வேண்டுமானால் சமூக உணர்வுடன் மக்களின் வாழ்வியல் பண்பாடு கலாச்சாரக் கூறுகளில் உள்ள சிறிய நுகர்வைக்கூட நசுக்கிவிடாமல் ஒளி-ஒலிப்பதிவு செய்துவிட வேண்டும். ஒளிப்பதிவினுள்ளே புறச்சூழலில் ஏற்படும் தொடர்பற்ற ஒலிகளும்கூட மாந்தர்களின் உணர்வுகளைத் திசைதிருப்பிப் புது வேகத்துக்கு உட்படுத்திவிடும்” எனப் படைப்புக்கு வரையறை சொன்னவர் சோலை. இதன்படியே தன் எழுத்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.
சமூக யதார்த்த எழுத்து
தஞ்சை எழுத்து என்பது ‘மணிக்கொடி’யில் தொடங்கி கும்பகோணத்தை மையமிட்டு அடையாளப்பட்டது. காவிரி, கோயில் கோபுரம், இசை, நாட்டியம், இல்லறம் என வாழ்க்கைத் துய்ப்பை முதன்மைப்படுத்தியது. மேட்டிமை வாழ்வும் மொழியும் அவ்வழி வந்த எழுத்தாளர்களால் மொழியப்பட்டது. தூய கலை பேசிய இது, பற்றி எரிந்த விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட எந்த அரசியலையும் தன் மேனியில் பூசிக்கொள்ளாமல் புனிதம் காத்தது. தமிழ் நவீனத்துவம் இப்படி தஞ்சையில் நிலைகொள்ள, நிலவுடைமையின் உச்சமாக 44 உயிர்களை எரித்துச் சாம்பலாக்கிய அவலம் நடந்தேறியது. இதன் தாக்கம் இலக்கிய அரங்கையும் அசைத்தது. இந்த வெண்மணிக் கங்கின் ஒளிக்கீற்றாய் சோலை முகிழ்த்தார் எனலாம். சமூக யதார்த்த எழுத்தின் சாத்தியங்களைத் தன் எழுத்தால் தீட்டிக்காட்டினார்.
வெண்மணியில் பொசுங்கிய உடல்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு செல்வதைச் சிறுவனாக இருந்தபோது பார்த்த பதைபதைப்பே ‘செந்நெல்’ நாவலின் மூலம் என்பார் சோலை. ஓர் இலக்கியக் கணக்குத் தீர்ப்பாகவே எழுதினார். 32 ஆண்டுத் தணலின் வெப்பிராளம் அது. பாலியல் உளவியலாகவும் சாதியமாகவும் திசைமாறிப் புனையப்பட்ட ‘குருதிப்புன’லுக்கு மாற்றீடு. வெண்மணி நிகழ்வின் ஐம்பதாண்டு கழிப்பில் தீர்ப்புகள் திருத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கக் குரல்களுக்கு சோலையின் ‘செந்நெல்’ எழுத்து ஒரு வாக்குமூலமாக அமையும்.
சோலையின் ‘தப்பாட்டம்’ இந்திய சாதி அமைப்பின் வேர்களைத் துழாவி, வர்க்கம், சாதி முரணில் இடதுசாரிகளை உரசிப்பார்த்தது. தன் தோழர்களிடமிருந்தே விமர்சனங்களைப் பெற வேண்டி அமைந்தது. அதேபோலதான், ‘தாண்டவபுரம்’ நாவலும். ஆரிய மதம், சைவ மதம் எனப் பகுத்து, தமிழ்த் தேசியம் என்றெல்லாம் பேச முயன்றார். இந்நாவலும் மதவாதிகள், இடதுசாரிகள் ஆகிய இருதரப்பு எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
வண்டல் வாழ்வு
சோலை கள்ளங்கபடமற்றவர். இந்த மண்ணை, மக்களை அதிகம் நேசித்தவர். எவ்விதத் துணையுமின்றி ‘வண்டல்’ எனத் தன் ஒற்றைக் குரலைக் கூவிக் கூவி முன்மொழிந்தவர். ஆர்.சண்முகசுந்தரத்தின் ‘கொங்கு’போல, கி.ரா.வின் ‘கரிசல்’போல ‘வண்டல்’ சோலையின் வழிமொழிவு. அதற்காக வசைகளையும் சுமந்தார். “மருத நிலத்தையே தங்கள் ‘வாழ்க்கை’யாகக் கொண்ட வேளாண் மக்கள் முதன்மையானவர்கள். அவர்களின் பண்பாட்டுக் கூறுகளை படைப்பிலக்கியம் உள்வாங்கிக்கொண்டு வெளிப்படுத்தவில்லை. அப்படியே செய்திருந்தாலும் சேற்றில் வாழும் மனிதர்கள் ஒரு ஓரமாகவே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்’’ என்பது சோலையின் கவலை.
அவர் தன் வண்டலைப் படைப்பு மொழியிலிருந்து தொடங்கினார். அவரின் எழுத்து வாழ்வின் தொடக்கமே அதற்குச் சான்று. 1987-ல், அவரின் பரிசு பெற்ற ‘கலைமகள்’ இதழ்ப் படைப்பு குறித்து அதன் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன், “இது போன்ற படைப்பை ‘கலைமகள்’ வெளியிடுவது இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கும். உங்களுக்கு ஏற்ற பத்திரிகைகளிலே இனி எழுதிக்கொள்ளுங்கள” என்றாராம். சோலை தன் முடிவில் உறுதியாக இருந்தார். ‘தாமரை’யில் தொடர்ந்து எழுதினார். அப்போது எழுதத் தொடங்கிய சி.எம்.முத்து மேலத்தஞ்சைக்கும், சோலை கீழத்தஞ்சைக்குமான மொழியைப் பயன்படுத்தினர்.
படைப்பு மொழியும் விமர்சனங்களும்
சோலை அவரது படைப்பு மொழி சார்ந்தே அதிக விமர்சனங்களை எதிர்கொண்டார். சோலையின் படைப்புகள் பாடங்களாகப் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை இருக்கின்றன; பெரும் போராட்டங்களினூடே இவை சாத்தியமாயின. பத்தாம் வகுப்பு துணைப் பாடநூலில் இடம் பெற்று சிக்கலுக்குள்ளான ‘மண்ணாசை’ சிறுகதை ஆகட்டும், பல்கலைக்கழகங்களில் இடம் பெற்ற ‘ஒரே ஒரு ஊர்ல’ , ‘செந்நெல்’ நாவல்களாகட்டும் எல்லாமே கொச்சை, ஆபாச மொழி என்றெல்லாம் அவதூறு செய்யப்பட்ன. அதற்கு மொழி குறித்த ஆதிக்க மனநிலையும் ஒரு காரணம்.
பொது மொழி என்பது ஒருவித அதிகாரம் சார்ந்தது. புழங்கு மொழி விளிம்பாகவே அமையும். இதைப் புரிந்துகொண்டே அவர் வலிந்து அதைப் பயன்படுத்தினார். மொழியைப் பண்பாட்டின் ஒரு கூறாகக் கண்டார் சோலை. அவரின் படைப்புகளில் மருத நிலத்தின் பயிர்கள், உயிர்கள், புழங்கு பொருள்கள், விழாக்கள், சடங்குகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், மக்கள் தெய்வங்களெல்லாம் வாழ்வாங்கு வாழும் நிலையைக் காணலாம்.
உழைக்கும் மக்களின் குரல்
தஞ்சைக் கதைகளின் தொகுப்பு, அம்மையப்பன் வட்டார நாட்டுப்புறக் கதைகள் பதிப்பு, வண்டல் உணவுகள், கீழத்தஞ்சை களப்போராளிகளின் வாய்மொழி வரலாறு உள்ளிட்ட இவரின் பிற முன்னெடுப்புகளும் நாட்டார் மரபின் தேடலையும் தேவையையும் உணர்த்தி நிற்பவை. தஞ்சை வட்டார வழக்குச் சொல்லகராதி விரைவில் வெளிவர உள்ளது.
வேளாண் தொழிலாளர்களை, சேவைக் குடிகளை, உதிரிப் பாட்டாளிகளையே சோலை தன் படைப்புகளில் நாயகர்களாகச் சித்தரித்தார். அவரின் கதையுலகப் பெண்கள் அந்த மண்ணின் தன்மையை எதிரொலித்தார்கள். அவர்களின் ஈரத்தையும் வீரத்தையும் ஒருசேர காட்சிப்படுத்துவார். வர்க்கம், சாதி ஆகிய இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளான ஆண்கள் தங்கள் மனைவிகளை ஒடுக்கும் அவலத்தை சோலையால் சுட்ட முடிந்தது. தி.ஜா.வும் கு.ப.ரா.வும் காட்டிய பெண்களின் மறுதலையாக சோலையின் பெண்கள் திகழ்ந்தார்கள்.
வண்டல் எனும் வளமையின் குறியீட்டைத் தன் எழுத்தாக, வாழ்வாகக் கடைப்பிடித்தார் சோலை. வாழ்க்கைச் சிக்கல்கள், தொடர் நோய்த் தாக்குதல்களில் சிக்கி சில ஆண்டுகளாகப் போராடிவந்தார். எழுத்தில் போராடி வென்றவர் மரணத்தையும் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது. வண்டலின்றி சோலை ஏது? என்றும் வண்டலாய் வாழ்வார்!
- இரா.காமராசு, ‘தமிழ்ச் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் தமிழியல் பங்களிப்பு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: kamarasuera70@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago