கோயிலின் கூட்ட நெரிசலுக்கு நிர்வாகத் தீர்வு ஏது?

By தங்க.ஜெயராமன்

கோயில்களும், கோயில் வழிபாட்டுக்கு வரும் கூட்டமும் அரசுக்கு இப்போது பெரிய நிர்வாகச் சங்கடங்களாகிவிட்டன. புத்தாண்டு பிறந்தபோது கோயில்களில் கூட்டம் அலைமோதியது என்று செய்தி. வழக்கமான நிகழ்வுதான். ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் இதுவே அதிர்ச்சிச் செய்தியாகிவிட்டது. கழிந்துபோன ஆண்டோடு பெருந்தொற்றும் கழிந்துபோகட்டும் என்று வேண்டிக்கொள்ள கோயிலுக்கு வருபவர்களை எப்படி வராதீர்கள் என்று சொல்வது? மறுபக்கம், இந்தக் கூட்டத்தால் கோயில்கள் ஆகப் பெரிய தொற்றுப் பரப்பிகளாகிவிடுமோ என்று நியாயமாகவே அஞ்சுபவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது?

அறிவியல் கணக்கில், கோயிலுக்கு வருபவர்கள் மனிதர்களின் கூட்டம்; கோயில்கள் தனிமனித இடைவெளி இல்லாத நெரிசல் கூடம். இதற்கு மாறாக, நம் பார்வையில் அவர்கள் ஆன்ம லாபம் தேடும் பக்தர்கள்; கோயில் வழிபாடோ மோட்ச சாதனம். அறிவியலும் ஆன்ம நம்பிக்கையும் ஒன்றையொன்று குறுக்கிடாத இணை கோடுகள் என்பதுதான் இந்நாள்வரை நம் அனுபவம். ஆனால், இவற்றுக்கு இடையேயான கண்ணோட்டப் பிணக்கு ஒரு மெளன யுத்தமாக கோயிலுக்குள்ளேயே வருவது இப்போதுதான். இது முற்றி முடிவுக்கு வந்துவிடாது. அதற்கான சிந்தனைத் தீவிரம் மனிதர்களுக்கு இன்னும் வாய்க்கவில்லை.

புண்ணியம் என் சம்பாத்தியம்

நிர்வாகத்தின் யுத்த சங்கடம்பற்றித்தான் இப்போது நாம் தெளிவாகப் பேச முடியும். இந்த பாண்டவ-கெளரவ யுத்தத்தில் ஒவ்வொரு பக்கமும் நிர்வாகம் தங்கள் பக்கம் இருப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டும்! அந்த சாமர்த்தியத்தை எப்படிப் பழகி நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பதுதான் நிர்வாகத்தின் சங்கடம். கோயிலைத் திறக்க வேண்டும்; ஆனால், பக்தர்கள் கூடி வந்துவிடக் கூடாது. திருவிழா குறைவில்லாமல் நடக்க வேண்டும்; ஆனால், அதைப் பார்க்க பக்தர்கள் வரக் கூடாது. சாமியைக் கண்ணாரப் பார்த்து, கையாரக் கும்பிடுவதுதான் திருவிழா. எனக்காக யாராவது சாமி பார்க்க முடியுமா? மனித வாழ்வு பிரதிநிதிகளை அங்கீகரிக்காத இடங்களுள் இதுவும் ஒன்று. நானே தேடிக்கொண்டால்தான் அது என் புண்ணியம். “போக்கில்லை என்று மயங்கிப் புலம்பாதே; ஆரூரைத் தொழுது உய்யலாம் வா” என்று அழைக்கிறார் சம்பந்தர். ‘‘ஊன் வாட, வாட, புலன் ஐந்தும் நோகத் தவம் செய்ய வேண்டாம்; தில்லை திருச்சித்திரக்கூடத்துக்கு வந்தாலே போதும்” என்கிறார் திருமங்கையாழ்வார்.

இப்படி எல்லோரையும் கவி கூறி அழைத்த காலம் மாறி, இப்போது ஏன் இவ்வளவு கூட்டம் வருகிறது என்று நொந்துகொள்கிறோம். ஆழ்வார்களின், நாயன்மார்களின் இந்த முயற்சிகள் அடர்ந்து, விளைந்து, கனிந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். தன் விளைச்சலின் பளுவைத் தானே தாங்க முடியாமல் தாழும் கிளைகள்போல இப்போது நம் கோயில்கள். நம் காலத்தின் பங்குக்கு நாமும் சாமிக்குச் செய்யும் அபிஷேகம், அலங்காரம் எல்லாவற்றையும் கண் உண்ணும் விளம்பரச் சித்திரமாகக் காட்சிப்படுத்திவிடுகிறோம். பிறகு, கூட்டத்தை எப்படி மட்டுப்படுத்துவது? கோயில் வழிபாட்டின் அம்சங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள வணிக சூட்சுமங்களை உரைத்துத் தரம் காட்டிக்கொண்டிருக்கிறது கரோனா என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்பதிவு. வரிசை. நாடக மேடையில் தூரம் கடக்காமல் ஓடும் நடிகரைப் போல் வரிசை தன் மேலேயே மடங்கி, மடங்கி இருந்த இடம் நகராமல் நீளும். கால் கடுக்க நின்று உடலும் புத்தியும் தன்னுணர்வின் உச்சத்தில் கனத்து அழுந்தும் இடமாகிவிட்டது கோயில். இங்கே உடம்பும் புத்தியும் முனைப்பு இழக்க வேண்டும். மனம் தொலைந்துபோக வேண்டும். தன் பிடிக்குள் வராத அழகுக்கு ஆற்றாது சிந்தனை வீறிழந்து பணிய வேண்டும். இவை அங்கே நடக்குமா?

மற்ற வழிபாட்டு மரபுகள்

கோயில் வழிபாடு மட்டுமே முற்றிலுமாக ஆக்கிரமித்துக்கொள்ளும் தரத்தில் ஏன் நம் இறை உணர்வு இருக்க வேண்டும்? ராமர் மடங்கள் இருக்கின்றன. ராமானுஜக் கூடங்கள் இருக்கின்றன. கம்பசேவை மண்டபங்களும்தான் இருக்கின்றன. அறுபத்துமூவர் மடங்களும், நாயன்மார்களுக்குத் தனித் தனி மடங்களும் இருக்கின்றன. இங்கு நடக்கும் பஜனைகளும், ராதா கல்யாண உற்சவங்களும் முற்றோதல்களும் இறை வழிபாடுதான். இதர மரபுகள் எல்லாவற்றையுமே கோயில் வழிபாடு நெருக்கி முடக்கிவிட்டது. கோயில் வழிபாடு மண்டித் தழைத்துப்போனதற்கும் இக்கால கலாச்சார வறுமைக்கும் காரண-காரிய உறவு இருக்கலாம்.

கோயில்களுக்கு மட்டும் ஒரு சிறப்பைச் சொல்வது வழக்கம். கோயில்கள் இருக்கும் இடம் ‘தலங்கள்’. எல்லா இடங்களும் தலங்கள் ஆகாது. அவ்வாறே கடவுள் சிலைகள் எல்லாமும் மூர்த்தியாகாது. தலங்களுக்கும், அங்கு உள்ள மூர்த்திகளுக்கும் ஒரு மகிமை உண்டு. இப்படிக் கோயில்களுக்கு வரும் பெரும் கூட்டத்துக்கு ஒரு நியாயம் கற்பிப்போம். ஆனால், ‘‘காசிக்கு வீசம் அதிகம்’’ என்று ஒரு ஊரை உயர்வாகச் சொல்கிறோம். “இது தென் திருப்பதி” என்று மற்றொன்றைச் சொல்வோம். இப்படிச் சொல்வதெல்லாம் ‘தலம்’ என்ற கருத்துக்கு மரபுக்குள்ளேயே வந்த மறைமுக விமர்சனங்கள்.

புரட்டாசியில் தளிகை போடும் பக்தர்களின் வீடுகளுக்கே திருமலை பெருமாள் வந்து இருந்துவிட்டு மலையேறுகிறார். 18 கிமீ பயணித்து திருக்கண்ணபுரம் பெருமாள் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு மீனவர்களின் மாப்பிள்ளை சாமியாகச் செல்கிறார். குடந்தை கும்பேஸ்வரரும், திருவையாறு ஐயாரப்பரும் ஏழு ஊர்களுக்குச் செல்கிறார்கள். குலதெய்வமாக மக்கள் கொண்டாடும் சில தெய்வங்கள் தங்களுக்குக் கோயில் வேண்டாமென்றே மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அங்கே பக்தர்கள் தங்கள் வசதிக்காகக் கோயில் கட்டிக்கொண்டாலும் சாமி இருக்கும் இடத்தில் கூரை இருக்காதாம்.

தலம் வேண்டாத மூர்த்திகள்

வயல்வெளியில் ஒதியனோ, வேம்போ, பூவரசோ நிற்கும். இந்த மரத்தடியில் மண்ணால் ஆன விளக்குக் கூண்டுதான் பலருக்குத் தெய்வங்கள். இவற்றுக்குப் பூசைபோடாமல் காதுகுத்துவதோ, திருமணமோ நடப்பதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு சமூகத்தின் தெய்வங்கள் பெட்டியில் இருக்கும். எந்தப் பங்காளி வீட்டில் திருமணம், காதுகுத்து நிகழ்ச்சியோ அங்கே அவை சென்று பூசையை ஏற்றுக்கொள்ளும். பிறகு அங்கிருந்து அடுத்த பங்காளி வீட்டுத் திருமணம் நடக்கும் ஊருக்குச் செல்லும். இப்படி ஒரே தலத்தில் நிலைநிறுத்தாத மூர்த்திகள் இருக்கின்றன. மூர்த்திகளே இல்லாத தலங்களும் இருக்கின்றன. இந்த வழக்கங்களைத் தொல்குடி வழக்கங்கள் என்றோ, தெய்வங்களைப் பெருங்கோயில்களில் உள்ள தெய்வங்களுக்குக் கீழே வைத்து சிறுதெய்வம் என்றோ கலாச்சாரப் படிநிலை உருவாக்குவது வரலாற்றுச் சிந்தனைக்கு ஒவ்வாது. ‘‘ஆரூர் தொழுது உய்யலாம், வாருங்கள்” என்பதையும், “கூடாரையும் வென்று தன் பக்கம் சேர்த்துக்கொள்ளும் கோவிந்தன்” என்பதையும் அக்காலத்தில் புது மரபாக வந்தவற்றின் அறிமுகம் என்றுகூடப் புரிந்துகொள்ளலாம்.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட கோயில் வழிபாட்டு வழக்கத்தை கரோனா காலம் கொஞ்சம் அசைத்துவிட்டது. அந்தப் பழக்கமான முகம் வேற்று மனிதர் ஆகிவிட்டதுபோல் ஓர் உணர்வு. இறை உணர்வில் கோயிலின் பங்குபற்றி இது சிந்திக்க வைத்தால் அதுவும் ஒரு முதிர்ச்சிதானே! பொல்லாப்புக்கு அஞ்சி இதைச் சொல்லாமல் இருக்கலாமா?

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்