நாமெல்லோரும் சுதந்திரமானவர்கள் இல்லை என்பதை அம்பலப்படுத்தியதால், தன் சுதந்திரத்தை அசாஞ்சே இழந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன!
நம் யுகத்தின் முக்கியமான தினங்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்: செப்டெம்பர் 11 (2001-ல் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தது மட்டுமல்ல, சிலேயில் 1973-ல் ராணுவப் புரட்சியால் சல்வதோர் அயெந்தேவின் ஆட்சி கவிழ்க் கப்பட் டதும் இதே தினத்தில்தான்), டி-தினம் (ஜூன் 6, 1944) என்று பல தினங்கள் நம் நினைவுக்கு வரும். இந்தப் பட்டியலில் இன்னுமொரு தினத்தையும் நாம் சேர்க்க வேண்டியிருக்கலாம்: ஜூன் 19.
நம்மில் பெரும்பாலானோர் பகல் பொழுதில் காற்று வாங்குவதற்காக நடப்பதை விரும்புவார்கள். சிலரால் அப்படிச் செய்ய முடியாமல் இருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கலாம். அதாவது, அவர்கள் பார்க்கும் வேலையின் காரணமாக அப்படிச் செய்ய முடியாமல் போகலாம் (சுரங்கத் தொழிலாளிகள், நீர்மூழ்கிக் கப்பலில் இருப்பவர்கள்). அல்லது சூரிய ஒளி மேலே பட்டால் உயிருக்கே ஆபத்து என்ற விசித்திரமான நோயைக் கொண்டவர்களாலும் அப்படிச் செய்ய முடியாதுதான். காற்றுவாங்குவதற்காக நடப்பதற்குச் சிறைவாசிகளுக்குக் கூடத் தினமும் அனுமதி உண்டு.
அசாஞ்சே செய்தது என்ன?
கடந்த 19-ம் தேதியுடன் ஜூலியன் அசாஞ்சேவுக்கு இந்த உரிமை பறிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன: லண்டனில் ஈக்வடார் நாட்டின் தூதரகம் இருக்கும் அடுக்ககத் தில் அவர் நிரந்தரமாகத் தன் வாழ்நாளைக் கழிப்பதற்கு விதிக்கப்பட்டிருக்கிறார். அந்த அடுக்ககத்துக்கு வெளியே அவர் கால் வைத்தால் அடுத்த நொடியே கைதுசெய்யப்படுவார். அப்படி அசாஞ்சே செய்த குற்றம்தான் என்ன? வேறொன்று மில்லை, அசாஞ்சேவும் அவரது விசிலூதி சகாக்களும் தேசத் துரோகிகளாக அடிக்கடிக் குற்றம்சாட்டப்படுகின்றனர். உண்மையில், அவர்கள் அதைவிட மோசமானவர்கள் (அதாவது, அதிகாரத் தரப்பின் பார்வையில்).
‘மக்களுக்கான உளவாளி' என்று அசாஞ்சே தன்னை அழைத்துக்கொண்டார். ‘மக்களுக்காக உளவுபார்ப்பது' என்பது சாதாரணமான துரோகம் அல்ல (இப்படிச் செய்வது என்பது டபுள் ஏஜென்ட் வேலை பார்ப்பது. அதாவது, நம் நாட்டின் ரகசியங்களை எதிரிகளிடம் விற்பது என்று அர்த்தம்); அது மிகவும் புரட்சிகரமானது. இப்படிச் செய்வதன் நோக்கமே ரகசியங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதுதான். எனவே, உளவுபார்த்தல், ரகசியம் என்ற கருத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படை அர்த்தத்தையே இது கேள்விக்குள்ளாக்குகிறது. வங்கிகள், புகையிலை, எண்ணெய் நிறுவனங்கள் போன்ற தனியார் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை அரசுத் தரப்புகளுக்கு அம்பலப்படுத்தியவர்கள் என்று விக்கிலீக்ஸுக்கு உதவியவர்களையெல்லாம் இனிமேல் கருத முடியாது; உண்மையில் அரசுத் தரப்புகளைத்தான் மக்களிடம் அவர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
நாம் கற்பனை செய்திராத எதையுமே விக்கிலீக்ஸிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவில்லை. ஒன்றைப் பற்றிப் பொதுப்படையாக அறிந்திருப்பது என்பது வேறு; அதைப் பற்றிய நிதர்சனமான தகவல்களை அறிந்திருப்பது என்பது முற்றிலும் வேறு. ஒருவருடைய இணை, வேறு பலருடன் உறவு வைத்திருப்பது குறித்து ஒருவருக்கு முன்னமே தெரிந்திருந்தாலும், புகைப்படங்கள் போன்ற சில ஆதாரங்கள் கிடைக்கும்போதுதான் அவருடைய வேதனை அதிகமாகும்; அதைப் போன்றதொரு உணர்வுதான் விக்கிலீக்ஸ் அம்பலத்தில் நமக்கும் கிடைத்தது.
அமெரிக்கர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?
இந்த உண்மைகளையெல்லாம் எதிர்கொண்டபோது கண்ணியமான அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் மிகவும் கூனிக்குறுகிப் போனார்களா? இப்போதுவரை, சராசரி குடிமக்களின் அணுகுமுறை கபடமும் பொறுப்பின்மையும் கூடியதாக இருந்தது. உளவு நிறுவனங்கள் செய்த அசிங்கமான காரியங்களை மறந்துபோவதையே நாம் விரும்பினோம். இனியும் நமக்கு எதுவும் தெரியாது என்று நாம் பாவனை செய்ய முடியாது.
அமெரிக்காவுக்கு எதிரான நிகழ்வாக மட்டுமே விக்கிலீக்ஸைப் பார்த்தால் போதாது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அமெரிக்காவைவிட அடக்குமுறையான நாடுகளாக இருக்கின்றன. இராக் போரில் அமெரிக்கா செய்ததையெல்லாம் அம்பலப்படுத்திய செல்சியா மேனிங் போன்ற ஒருவருக்கு சீனத்தின் நீதிமன்றங்களில் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்! அநேகமாக, வெளிப்படையான விசாரணையே இருந்திருக்காது; அந்தப் பெண் திடீரென்று காணாமல் போயிருப்பார், அவ்வளவுதான்.
பெரும் அச்சுறுத்தல்
அமெரிக்கா அதுபோலவெல்லாம் கைதிகளைக் கொடூரமாக நடத்துவதில்லை. ஏனென்றால், அதற்குத் தொழில்நுட்பம்தான் முன்னுரிமை. எனவே, வெளிப்படையாகக் கொடூரமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியமே அதற்கு இல்லை. நமது சுதந்திரத்துக்கு சீனாவைவிட அமெரிக்காதான் பெரும் அச்சுறுத்தல் என்பதற்கு இதுதான் காரணமே: அமெரிக்காவின் கட்டுப்பாட்டு வழிமுறைகள் வெளிப்படையாகத் தெரியாது; ஆனால், சீனத்தின் கொடூரமான அணுகுமுறை வெளிப் படையாகவே தெரியக்கூடியது.
சீனாவைப் போன்ற ஒரு நாட்டில் சுதந்திரத்துக்கு இருக்கும் எல்லைகள்குறித்து அனைவருக்குமே தெளிவாகத் தெரியும். யாருக்கும் அதைப் பற்றிய பிரமைகள் இல்லை. அமெரிக் காவிலோ, முறைப்படியான சுதந்திரத்துக்கு அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதன்மூலம் பெரும்பாலான மக்கள் தாங்கள் சுதந்திரமாக வாழ்கிறோம் என்று உணர வைக்கப்படுகிறார்கள். கூடவே, எந்த அளவுக்கு அரசாங்கத்தின் கரங்களால் அவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியாத நிலையிலும் அவர்கள் இருக்கிறார்கள். வெளிப்படையாகவே அடக்குமுறை செலுத்தும் அரசுகளை அம்பலப்படுத்துவதைவிடவும் முக்கியமான காரியத்தை விசிலூதிகள் செய்கிறார்கள்: நாம் உணரும் சுதந்திரத்துக்கு அடியில் சுதந்திரமின்மை ஒளிந்திருப்பதைப் பொதுமக்களுக்கு அவர்கள் உணர்த்துவதுதான் மேலும் முக்கியமானது.
நாமெல்லாம் எலிகள்தானா?
2002-ம் ஆண்டு மே மாதத்தில், நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஒரு சாதனையை நிகழ்த்தினார்கள். எலியின் மூளையில் ஒரு கணினிச் சில்லை இணைத்ததன் மூலம் சில அடிப்படையான சமிக்ஞைகளை எலியின் மூளைக்குக் கடத்தி, எலியின் இயக்கங்களைத் தங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்படுத்தினார்கள். தொலைஇயக்கியை (ரிமோட் கண்ட்ரோல்) கொண்டு பொம்மை காரை செலுத்துவது போன்ற செயல்முறைதான் அது. ஒரு பிராணியின் தன்னிச்சையான வாழ்க்கையை முதன்முறையாக ஒரு கருவி ஆக்கிரமித்துக்கொண்டது.
வெளியிலிருந்து கட்டுப்படுத்தப்படும் தனது செயல் பாடுகளை எப்படி உணர்ந்திருக்கும் பாவப்பட்ட அந்த எலி? தனது இயக்கங்கள் வேறொருவரால் தீர்மானிக்கப்பட்டதை அது முழுவதும் உணராமலேயே இருந்திருக்குமா? சீனக் குடிமக்களுக்கும் மேற்குலகின் சுதந்திர நாடுகளின் சுதந்திரக் குடிமக்களுக்கும் இருக்கும் வேறுபாடு இதுதான். சீன எலிகளுக்குத் தாங்கள் கட்டுப்படுத்தப்படுவது தெரியும், முட்டாள் எலிகளான நாமோ நமது அசைவுகள் எப்படிக் கண்காணிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் உணராமலேயே காலாற நடந்துகொண்டிருக்கிறோம்.
சாத்தியமே இல்லாத ஒரு கனவை விக்கிலீக்ஸ் பின்தொடர் கிறதா? நிச்சயமாக இல்லை. அதன் அம்பலங்களால் உலகம் ஏற்கெனவே மாறுதலுக்கு உள்ளாகியிருப்பது கண்கூடு.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை நாம் தெரிந்துகொண்டது மட்டுமல்ல; உளவு நிறுவனங்களின் செயல்பாடுகளை மட்டுப்படுத்தியதோ அவற்றைக் கட்டுப்படுத்தும் விதத்திலான சட்டங்களை இயற்றக் காரணமாக இருந்ததோ மட்டுமல்ல; விக்கிலீக்ஸ் அவற்றையெல்லாம்விட அதிகமாகச் சாதித்திருக்கிறது: கோடிக் கணக்கான மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறார்கள். சமீப காலம்வரை பிரச்சினை ஏற்படுத்தாதது என்று நாம் நினைத்துவந்த சமூகம், உண்மையில் பிரச்சினைக்குரியதுதான் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அதுதான் விக்கிலீக்ஸின் பெரிய சாதனை.
இதனால்தான் பெரும் தீங்கு செய்தவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் அசாஞ்சே. உண்மையில், விக்கிலீக்ஸ் எந்த வன்முறைப் பாதையையும் மேற்கொள்ளவில்லை. கார்ட்டூன் படங்களில் தொன்றுதொட்டு வரும் ஒரு காட்சி நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமானது; கார்ட்டூன் கதாபாத்திரமொன்று ஒரு இடத்தின் உச்சிப் பகுதியில் ஓடிக்கொண்டே இருக்கும்; தரைப்பகுதியைத் தாண்டியும் அந்தரத்தில் ஓடிக்கொண்டே இருக்கும், கீழே தரையே இல்லை என்பதை உணராமலேயே. கீழே குனிந்து பார்த்தபின்னரே தான் ஓடிக்கொண்டிருப்பது அந்தரத்தில் என்பது தெரிந்து, அதன் பிறகுதான் அந்தப் பாத்திரம் கீழே விழத் தொடங்கும். கீழே குனிந்துபாருங்கள் என்று அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சொன்னதுதான் விக்கிலீக்ஸ் செய்த காரியம்.
விக்கிலீக்ஸின் அம்பலங்களுக்குப் பெரும்பாலான மக்கள் ஆற்றிய எதிர்வினையானது ஊடகங்கள் செய்த மூளைச்சலவையால் உருவானது. மக்களின் எதிர்வினையை நாஷ்வில் என்ற திரைப்படத்தின் இறுதிப் பாடலின் வரிகளோடு பொருத்திப் பார்க்கலாம்: “நான் சுதந்திரஜீவி இல்லையென்று நீ சொல்லலாம், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.” விக்கிலீக்ஸ் நம்மைக் கவலைகொள்ள வைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலானோர் அப்படிக் கவலைகொள்வதை விரும்புவதில்லை.
© தி கார்டியன், தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago