பெத்தானியாபுரத்தில் உள்ளது வி.டி.ஆர்.சி. பெனியல் குழந்தைகள் இல்லம். 1988-ல் தொடங்கப்பட்ட இந்த இல்லத்தில் இப்போது 50 குழந்தைகள் இருக்கி றார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் கள்ளிப் பாலுக்கும் நெல்லுச் சாவுக்கும் தப்பியவர்கள். கடந்த 27 ஆண்டுகளில் உசிலம்பட்டி பகுதிகளில் சாவுக்கு சாசனம் எழுதப்பட்ட சுமார் 195 சிசுக்களைத் தத்து எடுத்து காப்பாற்றி ஆளாக்கி இருக்கிறது இந்த இல்லம். குழந்தைகளைப் படிக்க வைத்து ஆளாக்கியதோடு மட்டுமில்லாமல் பருவம் தொட்ட 8 பெண்களுக்குத் திருமணமும் செய்துவைத்திருக்கிறது இந்த பெனியல் இல்லம்.
“இங்கே வளர்ந்த நிறையக் குழந்தை கள், பிறந்ததும் ஆஸ்பத்திரிகளிலேயே விட்டுச் செல்லப்பட்டவைதான். குழந்தை களை வாங்கும்போதே அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் வாங்கி விடுவோம். அடித்தட்டு மக்கள் பெண் குழந்தைகள் தங்களுக்கு வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் மன நிலையை மாற்ற பாடம் எடுப்பதை விட அவர்களிடம் உள்ள குழந்தையை முதலில் காப்பாற்றுவது முக்கியம்.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மீது பழியைப் போட்டு பெண்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் உண்மை அதுவல்ல. ஆண்களில் நிறையப் பேருக்கு குடிப்பழக்கம் இருக் கிறது. அவர்கள் குடித்துவிட்டு வந்து பெண்களை அடித்துத் துன்புறுத்து கிறார்கள். இதனால், பெண்களுக்கு வாழ்க்கை மீது ஒருவிதமான விரக்தி. தான் படும் கஷ்டத்தை தனது மகளும் படவேண்டி இருக்குமோ என்று அஞ்சு கிறார்கள். மகளுக்கு அப்படியொரு வாழ்க்கை அமைந்துவிடுமோ என்று தாங்களாகவே தீர்மானித்துக் கொண்டு பெண்கள்தான் பெண் சிசுக்களை கொல்ல முந்துகிறார்கள்.
எங்களிடம் வளரும் குழந்தைகள் ஆறாவது ஏழாவது படிக்கும்போது, தங்களது பெற்றோரைப் பற்றிக் கேட்பார்கள். அப்போது நாங்கள் அவர்களைப் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். பெற்றோரைப் பார்க்க வேண்டும் என் பவர்களை விடுமுறையில் அனுப்பி வைப்போம். ஆனால், உறவுகளை விட்டு அந்நியப்பட்டுப் போன அவர்களால் அங்கே பாசத்தோடு ஒட்ட முடியாது. ‘நாங்கள் ஹோமுக்கே போறோம்’ என்று சொல்லி சந்தோஷமாக இங்கே வந்துவிடுவார்கள். வரும்போது புதுச் செருப்பும் உடுப்பும் வாங்கிக் குடுத்து ருப்பாங்க. இதுதான் அந்தப் புள்ளைய பெத்ததுக்கு அவங்க செய்யுற கடமை’’ என்கிறார் வி.டி.ஆர்.சி. பெனியல் இல்லத்தை நடத்தும் சுசிலா விக்டர்.
ஷீலா ராணி சுங்கத்
ஷீலா ராணி சுங்கத் - தமிழக சுகாதாரத் துறையின் முன்னாள் செய லாளரான இவர் உசிலம்பட்டி, தேனி மற்றும் வட மாவட்டங்களில் பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்காக 1995 முதல் 2005 வரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தவர். 1995 முதல் 4 ஆண்டுகள் ‘டானிடா (Danish International Development Agency - DANIDA)’ என்ற அமைப்பின் திட்ட இயக்குநராக இருந்த இவர், பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்காக உசிலம்பட்டி மற்றும் வடமாவட்டங்களில் கிராமம் கிராமமாக கலைப் பயணம் (கலா ஜாதா) நடத்தினார்.
பெண் சிசுக் கொலை தடுப்பு மற்றும் குழந்தைகள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தியதற்காக பிரதமரின் சிறப்பு விருதை பெற்ற ஷீலா ராணி சுங்கத், தனது பணிக் காலத்தில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை நினைவு கூர்கிறார். “பஞ்சாப்பில் சுதந்திரத்துக்கு முன்பே சிசுக் கொலைகள் அதிக அளவில் நடந்தன. ஆனால், அதே காலகட்டத்தில் (1901 முதல் 1935 வரை) தமிழகத்தில் ஆண்/பெண் பிறப்பு விகிதம் மிகச் சரியான அளவி லேயே இருந்திருக்கிறது. இங்கே, சுதந் திரத்துக்கு பிறகுதான் சிசுக் கொலைகள் அதிகரித்திருக்கின்றன. இதற்குக் காரணம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வரதட்சணை சம்பிரதாயங்கள், வறுமை இவைதான்.
‘பொட்டப் புள்ளைய எமனுக்குக் குடுத்தாலும் குடுப்போம் வேற யாருக்கும் தத்துக் குடுக்க மாட்டோம்’ என்று தீர்க்கமாக இருக்கிறார்கள் உசிலம்பட்டி மக்கள். காரணம் சாதியம். தத்து கொடுத்த பெண் வளர்ந்து பெரிய வளாகி எந்தச் சாதி பையனை கல்யாணம் பண்ணிக்குவாளோங்கிற கவலை அவங்களுக்கு. சிசுக் கொலைக் கும் கருக் கொலைக்கும் இந்த மனப் போக்கும் ஒரு காரணம். பெண் சிசுக் கொலைகளின் தொடக்கம் உசிலம் பட்டியாக இருந்தாலும் 1990-களில் வடமாவட்டங்களில் அதைக் காட்டிலும் அதிகமான பெண் சிசுக்கள் கொல் லப்பட்டு வந்தது நாங்கள் களத்துக்குப் போன பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது.
பெண் சிசுக் கொலை என்பது அப் போது செய்தித்தாள்களில் செய்தி வந்தால் மட்டுமே வெளியில் தெரியவரும். அப்படியில்லாமல் முன் கூட்டியே பெண் சிசுக் கொலை நடக்கும் இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதற் காக, தமிழகம் முழுவதும் பஞ்சாயத்து வாரியாக ஆண், பெண் குழந்தை இறப்பு விகிதம்குறித்து ஒரு வாரத் துக்குள் அறிக்கை கேட்டோம்.
அந்த அறிக்கையின்படி சேலத்தில், 60 ஆண் குழந்தைகளுக்கு 130 பெண் குழந்தைகள் இறப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது. எடப்பாடியில் நாட்டிலேயே மிக அதிக அளவில் பெண் சிசுக் கொலைகள் நடப்பதும் தெரியவந்தது.
அந்த நேரத்தில் சராசரியாக ஆண்டுக்கு மாநிலம் முழுவதும் சுமார் 3,000 பெண் சிசுக்கள் கொல் லப்பட்டனர். பெரும்பாலும் பெண்கள் தான் குழந்தைகளைக் கொல்கிறார்கள். அதன் பின்னணியில் ஆண்களின் அழுத்த மும் அச்சுறுத்தலும் இருக்கிறது. இருப்பினும் இதற்கு போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்தால் பெண்களைத்தான் பிடித்து ஜெயிலில் போடுவார்கள். இப்படிச் செய்தால் பெண் சிசுக் கொலைகள் நடப்பதை மறைக்கலாமே தவிர ஒழிக்க முடியாது என்று கணித்தோம். எனவே, போலீஸ் நடவடிக்கை இல்லாமல், விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டோம்.
மதுரை, தருமபுரி உள்ளிட்ட மாவட் டங்களில் எடுத்துச் செல்லப்பட்ட அந்த பிரச்சாரங்களில், பெண் குழந்தைகளை கொல்வது எத்தகைய குற்றம் என்பதை நாசூக்காக எடுத்துச் சொன்னோம். நாங்கள் நடத்திய பிரச்சார நாடகங்களில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த அனைத் துத் தரப்பினரையும் பங்கெடுக்க வைத்தோம்.
‘பெண்கள் கொள்ளி வைத்தாலும் கட்டை வேகும்’ என்பதை கிராமத்து மக்களுக்குப் புரியவைத்தோம். நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு நல்ல பலனும் கிடைத்தது. இரண்டே ஆண்டுகளில் பெண் சிசுக் கொலைகள் 3 ஆயிரத்தில் இருந்து நூறாக குறைந்தது.
2001-ல் நான் சுகாதாரத் துறை செயலாளராக வந்த பிறகு, பெண் சிசுக் கொலைகளைத் தடுக்கவும் பிரசவத் தின்போது தாய்மார்கள் இறப்பைத் தடுக்கவும் ஆரம்ப சுகாதார நிலை யங்களை 24 மணி நேர சேவையாக மாற்றினேன். எடப்பாடி பகுதியில் கருக் கலைப்புக்கு உடந்தையாக இருந்த 4 ஸ்கேன் சென்டர்களை மூடினோம்.
நான் சுகாதாரத் துறையை விட்டு மாறிய பிறகு அந்த சென்டர்களை மீண்டும் திறந்துவிட்டார்கள் என்பது வேறு விஷயம். கருக் கொலைகள் நடக்கும் மாவட்டங்களில் உள்ள ஸ்கேன் சென்டர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலே கருவிலேயே கொல்லப்படும் பெண் சிசுக்களை காப்பாற்றிவிடலாம்” என்கிறார் ஷீலா ராணி சுங்கத்.
பெண் சிசுக் கொலை என்பது பெண் இனத்துக்கு எதிரான மிகக் கொடூரமான வன்முறை. பெண்களின் வாழ்வுரிமையும் கண்ணியமும் சுய மதிப்பீடும் காக்கப் படாவிட்டால் அதனால் ஏற்படும் பாதக மான பின்விளைவுகளுக்கு சமுதாயம் மருந்து தேட முடியாது.
சிசுக்களை பொசுக்கும் ஈரமற்ற இதயங்கள் இதையெல்லாம் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றன?
‘டானிடா’ பொறுப்புக்கு வருவதற்கு முன்பு உசிலம்பட்டி பகுதியில் நான் ஒரு குறும்படம் எடுத்தேன். அப்போது பேட்டியளித்த ஒரு பெண்மணி, ‘ஆமா.. நான் தான் பொம்பளப் புள்ளைய உசுரோட மண்ணுக்குள்ள பொதைச்சேன்’ன்னு குற்ற உணர்ச்சியே இல்லாமல் சொன்னார். அந்த வீடியோவை அவருக்குப் போட்டுக் காட்டி, ‘ஏம்மா.. நீங்கள் என்ன சொல்லிருக்கீங்க பாத்தீங்களா..? இதுக்கே உங்கள ஜெயில்ல புடிச்சுப்போடுவாங்க’ன்னு சொன்னேன். அதுக்கும் கலங்காத அந்தப் பெண்மணி, ‘ஊரு நாட்டுல நடக்காததயா நான் செஞ்சுபுட்டேன். அப்படிப் பார்த்தா இந்த ஊரையேல்ல புடிச்சு ஜெயில்ல போடணும்’னு சொல்லிட்டு போனாங்க என்றார் ஷீலா ராணி சுங்கத்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago