கரோனா பெருந்தொற்று உலகில் கால் பதித்து ஓராண்டு முடிந்துவிட்டது. இன்றைக்கும் அது சர்வதேச ஊடகங்களில் தவிர்க்க முடியாத செய்தி ஆகிறது. உலகில் இதுவரை சுமார் 8 கோடிப் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 17 லட்சம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கி, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில் பார்த்தோமானால், இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் இல்லை என்பதும், கரோனா பாதிப்பின் அன்றாடப் புள்ளிவிவரங்கள் ரொம்பவே குறைந்துவருகின்றன என்பதும் நமக்கு ஆறுதல் அளிக்கின்றன.
இப்போது மட்டுமல்ல, இந்தப் பெருந்தொற்றைத் தொடக்கத்திலிருந்தே கவனித்திருப்பவர்களுக்கு ‘இந்தியாவில் கரோனா கொடுத்த பாதிப்பும் பலியும் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு’ என்பது புரிந்திருக்கும். இதற்கு ஒரு உதாரணம்… 33 கோடி மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் 2 கோடிப் பேர்; இறந்தவர்கள் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர். 138 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கோடிப் பேர்; இறந்தவர்கள் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களும் பலியானவர்களும்கூட பெரும்பாலும் நகர்ப்புறத்தைச் சார்ந்த மத்தியமர்களும் மேல்தட்டு மக்களும்தான். கிராமத்தினரின், சாமானியர்களின் பாதிப்பு விகிதம் மிகவும் குறைவு என்பதைப் புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும்.
கைகொடுத்த இயற்கை எதிர்ப்புச் சக்தி
இந்தியக் கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களிடம் கரோனாவுக்கு எதிரான இயற்கை எதிர்ப்புச் சக்தி அதிகம். 90% கிராமவாசிகள் மாசு மிகுந்த சூழலில்தான் வாழ்கின்றனர். அந்த மாசுக்குள் பலதரப்பட்ட கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. அவை அன்றாடம் அவர்கள் உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுந்து நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகின்றன. ஒரு தடுப்பூசி செய்யும் வேலையை இந்தக் கிருமிகள் அவர்களுக்கு இலவசமாகச் செய்கின்றன. பொதுவாக, தொற்றுகளுக்குத் தோழனாக இருக்கும் மாசுபட்ட சூழல், கரோனாவுக்குத் தடுப்பு சக்தி கொடுப்பதாக நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் இந்திய மக்களுக்குக் கிடைத்த இயற்கை எதிர்ப்புச் சக்தி வளர்ந்த நாட்டினருக்குக் கிடைக்கவில்லை.
மேலும் மலேரியா, காசநோய் ஆகியவற்றுக்கு இந்தியர்களிடம் காணப்படும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கரோனா பரவலுக்குத் தடை விதிக்கின்றன. உதாரணமாக, மலேரியா கிருமிகளுக்கு மனித உடலில் ‘ஐஜிஜி’ எதிரணுக்கள் உருவாகின்றன. இவை, ‘பிளாஸ்மோடியம்’ எனும் மலேரியா கிருமிகளிடமுள்ள ‘ஜிபிஐ’ (Glycosylphosphatidylinositol - GPI) வேதிப்பொருளுக்கு எதிராக வினைபுரிந்து அவற்றை அழிக்கின்றன. இந்த எதிரணுக்கள் கரோனா கூர்ப்புரதங்களையும் அழிக்கும் என்பது ஆப்பிரிக்கக் கறுப்பினத்தினரிடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுத்தம் காக்கும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மலேரியாவும் காசநோயும் அவ்வளவாக இல்லை என்பதால், இவ்வகையில் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, இந்தியப் பாரம்பரிய உணவுக் கலாச்சாரமும் மரபு வழியும் இயற்கை எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவதில் கைகொடுக்கின்றன.
வலுவான தடுப்பூசித் திட்டம்
இந்தியாவில் ஒன்றிய சுகாதாரத் துறையின் வலுவான அங்கமாக ‘சர்வதேசத் தடுப்பூசித் திட்டம்’ உள்ளது. 1985-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் செயல்முறைப்படி, ஆண்டுதோறும் சுமார் 3 கோடிப் பச்சிளம் குழந்தைகளுக்கும் 3 கோடிக் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தியாவில் பரவும் 12 வகையான தொற்றுநோய்களைத் தடுக்கத் தடுப்பூசிகள் இலவசமாகப் போடப்படுகின்றன. குழந்தைப் பருவத்தில் போடப்படும் பி.சி.ஜி. தடுப்பூசியும் எம்.ஆர். தடுப்பூசியும் கரோனாவுக்கு எதிரான தடுப்புச் சக்தியையும் தருவதாக நம்பப்படுகின்றன.
முக்கியமாக, காசநோயைத் தடுக்கும் பி.சி.ஜி. தடுப்பூசியானது, பலதரப்பட்ட வைரஸ் நோய்கள், சுவாசக் கோளாறுகள், மூளைக்காய்ச்சல் போன்றவற்றையும் தடுக்கும் என்பதும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, பொது ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் என்பதும் ஏற்கெனவே அறியப்பட்ட உண்மைகள். இப்போது கரோனா தொடர்பான புள்ளிவிவரங்களைக் கவனிக்கும்போது பி.சி.ஜி. தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் வழக்கமுள்ள இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கரோனாவின் பாதிப்பு பல மடங்கு குறைவு என்பதும் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு
இந்தியாவில் கரோனா பரவத் தொடங்கியபோது அதை முழுவீச்சில் எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவக் கட்டமைப்பு இல்லை. ஆனால், படிப்படியாக அது மேம்படுத்தப்பட்டது. உதாரணத்துக்குத் தமிழகத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு மார்ச் 7-ல் முதல் கரோனா தொற்று பதிவுசெய்யப்பட்டது. அப்போது கரோனாவுக்கு மருந்துகள் இல்லை; ஆக்ஸிஜன் கொடுக்கப் போதிய வென்டிலேட்டர்கள் இல்லை எனும் நிலைதான் இருந்தது. அதனால், ‘விழித்திரு, தனித்திரு, வீட்டில் இரு’ எனும் அறைகூவல்களுடன் அதை எதிர்கொள்ள ஆரம்பித்தோம்.
அதற்குப் பிறகு ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ பரிசோதனைகளை அதிகரித்தோம். சிகிச்சைக்கு ‘ஃபெவிபிரவிர்’, ‘ரெம்டெசிவிர்’, ‘டொசிலிசுமாப்’, ‘டெக்ஸாமெத்தசோன்’, ‘மெதில் பிரட்னிசலோன்’, ‘எல்.எம்.டபிள்யூ ஹெப்பாரின்’ ஆகிய மருந்துகளும் ‘தேற்றாளர் பிளாஸ்மா சிகிச்சை’யும் புழக்கத்துக்கு வந்தன. ஆரம்பத்தில் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும்தான் கரோனாவுக்கு முன்களப் பணியாளர்களாக இருந்தனர். பிறகு, தனியார் மருத்துவமனைகளையும் கரோனா போராட்டத்தில் அரசு இணைத்தது. அரசு மருத்துவமனைகளில் 3,000 வென்டிலேட்டர்களும் 10,000 படுக்கை வசதிகளும் புதிதாக உருவாக்கப்பட்டன. தமிழகத்தைப் போல் மற்ற மாநிலங்கள் கொண்டுவந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு காரணமாகவும் கரோனாவின் தாக்குதல் இந்தியாவில் குறையத் தொடங்கியது. இந்த நிலைமை நீடிக்குமானால், புத்தாண்டின் முதல் 3 மாதங்களிலிருந்து 6 மாதங்களுக்குள் கரோனா அலை நன்றாகக் குறைந்துவிடும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நம்பிக்கை தரும் கரோனா தடுப்பூசிகள்
இப்போது இந்தியாவில் இறுதிக்கட்ட ஆய்வில் இருக்கும் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’, ‘ஜைகோவ்-டி’ ஆகிய கரோனா தடுப்பூசிகள் புத்தாண்டில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். ஏற்கெனவே,இந்தியாவில் சராசரியாக 30% பேருக்கு கரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள தாராவியில் அதிகபட்சமாக 57% பேருக்கு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்றும் புள்ளிவிவரம் சொல்கிறது. இனி, இந்தத் தடுப்பூசிகளும் கைகோத்தால், ‘சமூக எதிர்ப்பாற்றல்’ கிடைப்பது உறுதி. பொதுவாக, நாட்டில் குறைந்தது 60% பேருக்குத் தடுப்பூசி போட்டதும்தான் ‘சமூக எதிர்ப்பாற்றல்’ கிடைக்கும். அப்போது கரோனா நம்மிடமிருந்து முழுவதுமாக விடை பெற்றுக்கொள்ளும். அதற்கு இன்னும் சில காலம் ஆகும். நடுவில் கரோனா மறுதொற்று, ‘பிரிட்டன் வைரஸ்’ போன்ற புதிய அச்சுறுத்தல்களும் வரலாம். ஆகவே, ‘கரோனா ஒழிந்தது’ என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் வரை நாம் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago