அதிகரிக்கும் தேன் கலப்பட அபாயம்!

By கு.கணேசன்

கெட்டுப்போகாத ஒரே உணவுப்பொருள் தேன்தான். பழங்காலம் தொட்டே விருந்திலும் மருந்திலும் தேன் தவறாமல் இடம் பெறுவதற்குக் காரணம் அதுதான். மக்கள் அதிகமாக நுகரும் பத்து முன்னணி இந்திய நிறுவனங்கள் விற்கும் தேனில் ‘ஃப்ரக்டோஸ்’ எனும் சர்க்கரைப் பாகு கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்’ அண்மையில் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை நம்மைக் கலங்கடிக்கிறது.

மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இயற்கைத் தேனுக்கு இருப்பதால் கரோனா காலத்தில் தேனின் விற்பனை உலகச் சந்தையில் பல மடங்கு கூடியிருக்கிறது. இந்தியாவிலும் தேனின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், தேன் உற்பத்தி நிறுவனங்கள் தேன் சந்தையை விரிவுபடுத்தத் தீவிரமாகக் களத்தில் இறங்கின. வணிகப் போட்டியின் காரணமாகப் பல நிறுவனங்கள் தேனில் கலப்படம் செய்ய முனைந்துவிட்டன.

மாறும் மூலக்கூறுகள்

அடிப்படையில், தேனீக்கள் சேகரிக்கும் தேனில் ‘ஃப்ரக்டோஸ்’, ‘குளுக்கோஸ்’, ‘சுக்ரோஸ்’ என மூன்று வகை சர்க்கரை மூலக்கூறுகள் இருக்கின்றன. இவற்றில் ‘ஃப்ரக்டோஸ்’ அதிக இனிப்புச் சுவை உடையது. பொதுவாக, ‘ஃப்ரக்டோஸ்’ மற்றும் ‘சுக்ரோஸ்’ உள்ள செயற்கைச் சர்க்கரைப் பாகைத்தான் தேனில் கலப்படம் செய்கின்றனர். அடுத்ததாக, தேனீப் பண்ணைகளில் தேன் உற்பத்தியைப் பெருக்குவதற்காக ‘சுக்ரோஸ்’ சர்க்கரையைத் தேனீக்களுக்கு உணவாக அளிக்கும் உத்தி நடைமுறையில் இருக்கிறது. இவையெல்லாம் தேனின் மூலக்கூற்றை மாற்றிவிடும்.

இப்படிப் பல காரணங்களால், ‘இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்’ தேனின் தூய்மை குறித்துத் தெளிவான கருத்தைக் கூற முடியாத சூழல் இருக்கிறது. தேசிய அளவிலான இந்த ஆணையம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தேனின் தரத்தை மூன்று முறை திருத்தி அமைத்திருக்கிறது. அப்படியும் தூய்மையான தேனுக்கான தரம் அதில் இடம்பெறவில்லை.

கலப்படம் அறியும் சோதனைகள்

இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் இந்த ஆணையம் ‘கலப்படம் இல்லாத தேன்’ என்று சான்றிதழ் வழங்க 22 அளவுகோல்களைப் பின்பற்றுகிறது. அவற்றில் சி3 மற்றும் சி4 சோதனைகள் முக்கியமானவை. தேனில் சர்க்கரை மூலக்கூறுகள் பாதுகாப்பான அளவைத் தாண்டுகிறதா; அரிசி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து உருவாகும் சர்க்கரைப் பாகு கலக்கப்பட்டிருக்கிறதா என்பதை இவ்விரு சோதனைகள் நிர்ணயிக்கின்றன. மேலும், தேனில் ‘ஹெச்எம்எஃப்’ எனும் நச்சு கலந்திருக்கிறதா என்பதை அறியவும் பரிசோதனை உண்டு.

தேனின் தூய்மையைப் பரிசோதிக்கும்போது அதில் சர்க்கரை கலந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் கலப்படத் தொழில்நுட்பம் புதிய வழிமுறைகளை உருவாக்கி மோசடி செய்திருக்கிறது என்பது இந்த ஆணையம் வெளியிட்டிருக்கும் மற்றொரு அதிர்ச்சித் தகவல். இப்போதும்கூட தேனில் கலப்படம் செய்திருப்பதை இந்த ஆணையம் கண்டுபிடிக்கவில்லை. இதன் மேற்பார்வையில் குஜராத்தில் உள்ள ‘தேசிய பால் உற்பத்தி வளர்ச்சி அமைப்பு’ சி4 சோதனை மூலம் பரிசோதித்து, ‘தரமானவை’ என்று சான்றிதழ் அளிக்கப்பட்ட தேன் மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை ஜெர்மனியில்தான் கண்டுபிடித்துள்ளனர். அங்கு ‘நியூக்ளியர் மேக்னெடிக் ரெசொனன்ஸ்’ எனும் நவீன பரிசோதனையில் இந்த மோசடி தெரியவந்திருக்கிறது.

என்ன பிரச்சினை?

கலப்படத் தேன் நம் ஆரோக்கியத்தைப் பல வழிகளில் சிதைக்கும் என்பதற்கு இரண்டு உதாரணங்கள் தருகிறேன். கலப்படத் தேனைச் சாப்பிடுவதால் ரத்தச் சர்க்கரை உடனடியாகக் கூடிவிடும். ஏற்கெனவே உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை உச்சம் தொட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. இனி, கலப்படத் தேன் சாப்பிடுவது இந்தியாவில் தவிர்க்க முடியவில்லை என்றாகிவிட்டால் யோசித்துப்பாருங்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்தியாவில் தேன் பயன்படுத்தும் கரோனா நோயாளிகளுக்கு கரோனா காலத்தில் ரத்தச் சர்க்கரை அதிகமாக இருந்ததாகவும், புதிதாக சர்க்கரை நோய் தோன்றியதாகவும் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அடுத்ததாக, ரத்தசோகை நோயாளிகளுக்கு ரத்தம் பெருக்கும் உணவாகவும் மருந்தாகவும் இயற்கைத் தேன் உள்ளது. இதில் கலப்படம் புகுந்துவிடுமானால் தேனுக்கு உயிர்ச்சத்துகள் பறிபோகும்; இயல்புத்தன்மை விலகிவிடும்; மருத்துவ குணம் மறைந்துவிடும். ரத்தம் பெருக்கும் தன்மை குறைந்துவிடும். அப்போது நுகர்வோர் தங்கள் நோய் தணியாமல் ஏமாற்றப்படுவார்கள்.

‘உணவுப் பாதுகாப்பு ஆணையம்’ தனது ஆய்வுமுறைகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதையே இந்தக் கலப்பட மோசடி உணர்த்துகிறது. ‘நியூக்ளியர் மேக்னெடிக் ரெசொனன்ஸ்’ பரிசோதனையை இந்தியத் தரப் பாதுகாப்பு நெறிமுறைகளில் இணைக்க வேண்டும். இந்தப் பரிசோதனைக் கருவியை இயக்குவதற்குத் தகுதிவாய்ந்த வல்லுநர்களும் தேவை. ஆகவே, அதற்கான ஏற்பாடுகளை உடனே முடுக்கிவிட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்