ஸ்ரீரங்கம் கோயிலில் அதிகாலையில் ஒரு யானை மீது அபிஷேக ஜலம் கொண்டு வருவார்கள். அந்த யானை வெகு ஜாக்கிரதையாகச் சில படிகள் ஏறி பக்தர்களுக்கு இடையில் வந்து சந்நிதிக்கு முன் மண்டியிடும். நிர்மால்ய மாலையை அணிவிப்பார்கள். வந்த மாதிரியே போய்விடும். எப்படி இந்த யானை மனிதர்களைக் கண்டு பயமில்லாமல் இருக்கிறது என்று கோயிலின் மூத்த பாகனிடம் கேட்டேன். அவர் ‘‘அம்மா தலைமுறை தலைமுறையாக இந்த யானைகளுக்கு இந்தக் கோயிலும் கூட்டமும்தான் தெரியும். அதனால் பழக்கம்...’’ என்றார்.
மனிதர்களுக்குத் துன்புறுத்தவும் தெரியும் என்பது அந்த யானைகளுக்குத் தெரியாது போலும்.
யானைகளை மரம் வெட்டும் இடங்களில் அவற்றைத் தூக்கிப் போக பழக்குவார்கள். பெரிய பெரிய மரத் துண்டுகளை அனாயசமாகத் தந்தங்களின் மேலேற்றித் துதிக்கையால் பிடித்துத் தூக்கிச்செல்லும். அந்தமான் தீவுக்குச் சென்றபோது இதைப் பற்றிய சில ஆச்சரியமான விவரங்களை அறிந்தேன். இந்த யானைகள் சில மணி நேரம் வேலை செய்த பிறகு தாமாகவே நிறுத்திவிடுமாம். பின்னர், தாமாகவே திரும்பி வந்து வேலையைத் தொடரும். நடுவில் அருகில் நீர்நிலை இருந்தால் குளிக்கவும் போய்விடுமாம். அவற்றுக்கெனத் தனியாகத் தொழிலாளர் சங்கமும் விதிமுறைகளும் இருக்குமோ?
யானைகள் ஜோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் பிரிவதில்லை. (புலிகளும் அப்படித்தான்!) ‘திருமணம்’ இல்லாததால் ‘மணமுறிவும்’ இல்லையோ! மனிதர்கள் மட்டும் இக்காலத்தில் பரீட்சார்த்தமாகக் கூடி வாழ்ந்து பிரிகிறார்கள்.
அந்தமானில் மரம் வெட்டுவது பெரிய அளவில் நடைபெறுகிறது. ஒரு இளம் ஜோடி யானைகள் இருந்தன. ‘ஸாம்ஸன்’, ‘டில்லா’ என்று பெயர். இந்த ஜோடியைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை சொன்னார்கள். இவை இரண்டும் வேலைக்கு நடுவில் ‘ரொமான்’ஸில் ஈடுபட்டு வேலையை விட்டுவிடும். நிர்வாகத்தினர் இவற்றைப் பிரிக்கத் தீர்மானித்து ‘டில்லா’வை 20 கி.மீ. தொலைவில் இருந்த ஒரு தீவுக்கு அனுப்பிவிட்டார்கள். ‘ஸாம்ஸன்’ குழம்பித் தவித்து வேலை செய்யாமல் பிளிறிக்கொண்டே இருந்தான். பிறகு ஓர் இரவில் ‘ஸாம்ஸன்’ கடலில் நீந்தியே ‘டில்லா’ இருக்கும் தீவுக்குச் சென்றுவிட்டான். எப்படி ‘டில்லா’ இருக்கும் தீவை மோப்பம் பிடித்தான்? யானைகள் தண்ணீரில் இருக்கும் இடங்களை வெகு தொலைவு வரை மோப்பம் பிடிக்கும் என்று படித்திருக்கிறேன். இதை விவரமாக ஒரு பெரிய பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 16: ஐந்தறிவா, ஆறறிவா?
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 15: நம்பிக்கை தரும் இளைஞர்கள்
இதேபோன்று ஒரு ‘புலிக் காதல்’ கதையை கட்டாக் அருகில் உள்ள மிருகக் காட்சி சாலையில் உள்ள ஒரு ‘போர்டில்’ எழுதியிருந்தார்கள். ஒரு பெண் புலியைப் பிடித்து அந்தக் காட்சி சாலைக்குள் வைத்திருந்தார்கள். அதன் ஜோடியான ஆண் புலி கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை மதிலுக்கு வெளியே ஓலமிட்டுக் கொண்டிருந்ததாம். உள்ளிருந்து பெண் புலியும் பதில் குரல் கொடுத்துக்கொண்டிருந்ததாம். பிறகு ஓர் இரவில், அந்த ஆண் புலி 10 அடி உயரமுள்ள மதில் சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே வந்துவிட்டது. சுதந்திரமான தனிமையைவிட ஜோடியுடன் சேர்ந்திருப்பதே மேல் என்று நினைத்துவிட்டது. பிறகு 20 வருடங்கள் அவை வாழ்ந்து நான்கு முறை குட்டிகளை ஈன்றனவாம். நம்மிடையே இந்த மாதிரி ‘ஆண்புலிகள்’ இருக்கிறார்களா? துர்பலம்.
ஒரு குட்டிப் புலியின் கதை. மத்தியப் பிரதேசத்தில் என் அக்காவின் வீட்டுக்கு அருகே வசிப்பவர் ஒரு காட்டு இலாகா அதிகாரி. காட்டில் ஒரு தாய்ப் புலி மூன்று குட்டிகளை ஈன்று இறந்துவிட்டது. அங்குள்ள ‘ரேஞ்சர்கள்’ முயன்றும் ஒரு குட்டியும் இறந்துவிட்டதாம். இந்த அதிகாரி மற்ற இரண்டையும் கொண்டு வந்தார். என் அக்கா அதில் ஒன்றைத் ‘தத்து’ எடுத்துக்கொண்டார். கண்கள் கூடத் திறக்காத பிஞ்சுகள். முதல் சில நாட்கள் பஞ்சைப் பாலில் நனைத்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வாயில் பிழிந்து கொண்டிருந்தோம். பிறகு அங்குள்ள ஒரு கால்நடை மருத்துவர், குட்டிப் பூனைகளுக்கு, நாய்களுக்கு உணவூட்ட விசேஷமான ‘ரப்பர் நிப்பிள்’களைக் கொண்ட ஒரு பால் குப்பியைக் கொடுத்தார்.
பாலில் தகுந்த அளவு நீரும் சில துளிகள் மீன் எண்ணெயுமாகக் கொடுத்து வந்தோம். 15 நாட்களுக்குள் ‘பிஸ்கட்’ தூளும் பாலுமாகத் தட்டில் நக்கிக் குடித்தது. வீட்டுப் பூனை போல் சுற்றி சுற்றி வந்து மடியிலும், தோளிலும், படுக்கையிலுமாக எங்களுடன் ஒட்டிக்கொண்டது. பூனையைப் போல் ‘புர்புர்’ என்று ஆனால், உரக்க உறுமியது. குலாப்ஜாமூன் ஜீராவை ஸ்பூனைப் பிடித்துக்கொண்டு நக்கியது. ‘முட்டை’ என்று எழுதப்பட்ட காகிதம்கூட உள்ளே தடை செய்யப்பட்ட அப்பட்டமான சைவ வீடு. பால், ரொட்டி, நெய்யும் பருப்பும் சேர்ந்த சாதம், இட்லி, தோசை என்று தின்றது.
கால்நடை மருத்துவர், ‘‘இது இயற்கையிலேயே வேட்டையாடும் மிருகம். ஒரு பறவையையோ, அணிலையோ பிடித்துத் தின்று ரத்தத்தின் ருசி அறிந்தால் பிறகு வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல’’ என்றார். மிகுந்த சோகத்துடன் ஐந்து மாதங்கள் ஆன ஆண் புலிக் குட்டியை நாக்பூர் மிருகக் காட்சி சாலையில் கொண்டுபோய் விட்டோம்.
ஒரு வருடத்துக்குப் பிறகு நாக்பூருக்குச் சென்றபோது, இதைப் பார்க்கப் போனாராம் என் அக்கா. ஆனால், அது தன்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்று சொன்னார். மனிதக் குட்டிகள் சுயமாக வாழக் கற்றுக்கொள்ளும் பருவத்திலும் தாய்க்குத் தாபம், மனப்பாரம் ஆயுள் முழுவதும் உண்டு.
என் அக்காவின் வீட்டில் மற்றொரு ‘புலி’ நிகழ்வு. அவர் வீடு ஊரின் எல்லையில் காட்டை ஒட்டி இருந்தது. அந்த ஊரில் வீட்டில் தண்ணீர்க் குழாய்கள் கிடையாது (1945 வாக்கில்). குளியல் அறையில் ஒரு பெரிய ‘டப்’. வேலையாள் கிணற்று நீரை அதில் நிரப்பி வைப்பார். அதற்கு வசதியாக அந்தக் குளியலறைக்கு வெளிப்புறம் தோட்டத்தில் திறக்கும்படியாக ஒரு கதவு உண்டு.
ஒரு வேனிற்கால மதியம். எல்லோரும் குளித்து விட்டதால் அந்த ‘டப்’பில் ஒரு சாண் அளவுக்குத் தண்ணீர் பாக்கி இருந்தது. நானும் என் சகோதரி மகளும் திறந்திருந்த குளியலறையின் உள் கதவைத் தாண்டி ஏதோ எடுக்கப் போனால், ‘டப்’பில் இருந்து ‘சடார்’ என்று எழுந்தது ஒரு சின்ன சிறுத்தை. பாவம் வெளியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் சூட்டைத் தாங்காமல், உள்ளே தண்ணீரில் படுத்துக் கொண்டிருந்திருக்கிறது. ஒரே பாய்ச்சலில் அதே வெளிக்கதவு மூலம் ஓடிவிட்டது. நாங்களும் அலறியவாறு ‘ஒரே பாய்ச்சலில்’ உள்ளே ஓடினோம். யார் அதிகம் பயந்தார்கள், நாங்களா அந்தச் சிறுத்தையா என்பது தர்க்கத்துக்குரிய விஷயம்.
சந்திப்போம்... சிந்திப்போம்..!
கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago