சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்ட பிறகு அரசு அறிவிக்கும் எந்தவொரு மக்கள் நலத் திட்டமும் வாக்குகளைக் குறிவைத்து அறிவிக்கப்படுவதாகவே விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ள மினி கிளினிக் திட்டமும் இந்த விமர்சனத்திலிருந்து தப்பவில்லை. மாநிலம் முழுவதும் 2,000 மினி கிளினிக் தொடங்கப்படும் என்றும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் சேலம் மாவட்டத்துக்கு மட்டும் தனிக் கவனம் செலுத்தி 100 கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருந்தொற்றுக் காலத்தில் சென்னையில் தொடங்கப்பட்ட ஃபீவர் கிளினிக் மையங்களுக்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கலாம். அல்லது டெல்லியில் பிரபலமடைந்துவரும் ‘மொஹல்லா கிளினிக்’ என்று அழைக்கப்படும் அருகமை மருத்துவமனைகளிலிருந்தும் இந்தத் திட்டத்துக்கான உந்துதலைப் பெற்றிருக்கலாம். மக்கள் அடர்த்தி அதிகமுள்ள டெல்லி நகரத்தின் தேவையைத் தமிழகத்தோடு ஒப்பிட்டுவிட முடியாது என்றாலும் இத்திட்டம் வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
முக்கியமான கேள்வி
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே ஆரம்ப சுகாதார மையங்கள் சுகாதாரக் கட்டமைப்பின் ஆதார மையங்களாக இருந்துவருகின்றன. கிராமத்து மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் அமைந்துள்ள இந்தக் கட்டமைப்பு காலந்தோறும் படிப்படியாக மேம்படுத்தப்பட்டுவருகிறது. அதிக அளவில் புறநோயாளிகள் வந்துசெல்லும் ஆரம்ப சுகாதார மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுவருகின்றன. மருத்துவர், செவிலியர் தவிர ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பணியாளர்களும் அங்கு நியமிக்கப்படுகின்றனர். சில ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும்கூட அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவர் பணியிடங்களும்கூட ஒன்றிலிருந்து இரண்டாக சில மையங்களில் உயர்த்தப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நடந்துவரும் விரும்பத்தக்க மாற்றங்கள்.
சமீபத்தில் தமிழக அரசால் வேகவேகமாகத் தொடங்கப்பட்டுவரும் மினி கிளினிக், ஏற்கெனவே இருக்கும் இந்தக் கட்டமைப்பில் என்னென்ன மாற்றங்களைச் செய்யப்போகிறது என்பதுதான் நம் முன் எழுந்திருக்கும் முக்கியமான கேள்வி. தொடங்கப்படவிருக்கும் புதிய மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களோ செவிலியர்களோ பணிநியமனம் செய்யப்படாமலேயே இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இரண்டு பேர் பணியாற்றும் ஆரம்ப சுகாதார மையங்களிலிருந்து ஒரு மருத்துவரை மினி கிளினிக் பணிக்கு அனுப்பும் திட்டம், ஏற்கெனவே நல்லபடியாக நடந்துகொண்டிருக்கும் மருத்துவப் பணிகளையும் பாதிக்கக்கூடியது. ஒரு மருத்துவர் உடல்நலமின்மை அல்லது தவிர்க்கவியலாத காரணங்களால் மருத்துவப் பணிக்கு வர முடியாதபோது உடன் பணியாற்றும் மற்றொரு மருத்துவர் அவரது பணிகளை ஏற்றுக்கொள்வார். கூடுதல் மருத்துவரை மினி கிளினிக் பணிக்கு அனுப்பிவிட்டால், அது நிச்சயம் ஏற்கெனவே நடந்துவரும் மருத்துவப் பணிகளைப் பாதிக்கவே செய்யும்.
சென்னைக்குத் தனிச் சலுகை
மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த மருத்துவர்கள் பணியிட மாறுதல் பெறுவது என்பது இதுவரை ‘பரிந்துரை களால்’ மட்டுமே சாத்தியம் என்ற நிலையிருந்தது. தற்போது சென்னையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு உடனடியாகப் பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று சலுகைகாட்டப்படுகிறது. சென்னையில் புதிதாகத் தொடங்கப்படவிருக்கும் மினி கிளினிக் பணிகளுக்கான இந்த ஏற்பாட்டால், நீண்ட நாட்களாகப் பணியிட மாறுதல் கோரிவந்த மருத்துவர்கள் மகிழ்ச்சியடையவும் கூடும். ஆனால், அவர்களுக்குப் பதிலாக அந்தப் பணியிடத்தில் யார் நியமிக்கப்படுவார்கள் என்பதற்கு இதுவரை எந்த ஏற்பாடும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
மருத்துவர் நியமனம் குறித்து எந்தத் தகவலும் இல்லையென்றாலும் செவிலியர் மற்றும் மருத்துவமனை உதவியாளர்களை நியமிப்பதற்கான வேலைகள் படுவேகமாக நடந்துவருகின்றன. தற்போதைக்குச் செவிலியர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.14,000 தொகுப்பூதியம், மருத்துவமனை உதவியாளருக்கு ரூ.6,000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் பணி நிரந்தரத்துக்கு வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது. ஆனால், பணி நியமனத்துக்கான பரிந்துரைக்குக் கையூட்டு கேட்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். செவிலியர் பணி நியமனத்திலும் குறிப்பிட்ட சில செவிலியர் கல்லூரிக்கே முக்கியத்துவம் கொடுத்துவிடுவதாகக் குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது.
மருத்துவர்களின் கோரிக்கை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியாக மருத்துவர்களை நியமிப்பதால் கால தாமதம் ஆவதாகக் காரணம் சொல்லி இப்போது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வழியாகவே நியமனங்கள் நடந்துவருகின்றன. ஆனாலும், மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 12-ம் ஆண்டில் ஊதியப் பட்டை நான்கு என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவே இல்லை. மத்திய அரசின் கீழும் மற்ற மாநிலங்களிலும் 12-வது ஆண்டில் மருத்துவர்கள் பெறும் ஊதிய உயர்வு, தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு 20-வது ஆண்டில்தான் கிடைக்கிறது, அந்த நடைமுறையை மாற்றி மற்ற மாநில மருத்துவர்களைப் போல தங்களுக்கும் உரிய காலத்தில் ஊதிய உயர்வை அளிக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட காலக் கோரிக்கை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியபோது அவர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. மருத்துவர்களும் போராட்டத்தை விலக்கிக்கொண்டார்கள். ஆனாலும், அளிக்கப்பட்ட உறுதி நிறைவேற்றப்படவில்லை. 2019-ல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர்கள் அறிவித்தபோது கோரிக்கைகளைத் தாயுள்ளத்துடன் அணுகுவேன் என்று முதல்வர் பழனிசாமி உறுதியளித்ததன்பேரில் மீண்டும் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால், போராடிய மருத்துவர்கள் மீது பணியிட மாறுதல் உள்ளிட்ட துறைசார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது என்று உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டிய பின்னும் மாநில அரசு அதை நிறைவேற்றத் தயாராக இல்லை. இதுதான் இந்த நிமிடம் வரையிலுமான எதார்த்தம்.
தேவை புதிய கட்டுமானங்கள்
நியமிக்கப்படும் மருத்துவர்களுக்கு அவர்களது பணிமூப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்க மறுக்கும் மாநில அரசு, செவிலியர்களையும் மருத்துவமனை உதவியாளர்களையும் தொகுப்பூதியம் என்ற பெயரில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கிவருகிறது. அதே அரசுதான் தற்போது மக்களுக்கான சுகாதார வசதிகளை மேலும் பரவலாக்குவதாக அறிவித்துள்ளது. மினி கிளினிக் திட்டம் அவசியமானதுதான் என்பதில் எந்தச் சந்தேகமுமே இல்லை. ஆனால், ஏற்கெனவே இருக்கும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் எந்த விதமான மாறுதலுக்கும் ஆளாகாமல் பழையபடியே இயங்க வேண்டும். அவற்றின் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் மினி கிளினிக் மருத்துவமனைகளுக்கான கட்டமைப்புகள் அனைத்தும் முற்றிலும் புதிதாகத்தான் உருவாக்கப்பட வேண்டுமேயன்றி ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்பைப் பாதித்துவிடக் கூடாது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
26 days ago