கரோனா காலத்தில் கணக்கில் வராத பெண்கள்!

By ம.சுசித்ரா

நான்கு மணி நேர அவகாசத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களை உருக்குலைத்தது என்றால், வீடடங்கி இருக்க வேண்டிய கட்டளையோ பெண்களுக்குப் பேரிடியாக வந்து விழுந்தது. உலகப் போர்கள் காலத்திலாவது ஆண்கள் போர் முனையில் திரள, பெண்கள் தங்களுடைய குடும்பத்தைக் காக்க வீட்டை விட்டு வெளியேறி, தொழிற்புரட்சியின் அங்கமாக உருவெடுத்தார்கள். ஆனால், கரோனா காலமோ 24 மணி நேரமும் வீட்டிலேயே ஆணையும் பெண்ணையும் பூட்டிவைத்துக் குடும்ப வன்முறையைப் பல மடங்காக்கியது.

இதில் ஒண்டுக்குடித்தனம் நடத்தும் ஏழை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊரடங்கானது இட நெருக்கடியோடும் பண நெருக்கடியோடும் மன நெருக்கடியையும் ஒருசேர விதித்தது. சண்டைச் சச்சரவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வேலைக்கோ அக்கம்பக்கத்து வீட்டுக்கோ செல்ல முடியாத கதியை இருவருக்குமே முழு ஊரடங்கு உண்டாக்கியது. போதாததற்குக் குடும்ப வன்முறை புகார் அளிப்பதற்கான அவசர உதவித் தொலைபேசி எண்களும் வேலை செய்யவில்லை. அந்தரங்க நேரமும் திட்டமிடப்படாத கர்ப்பமாக உருமாறி அநேக சாமானியப் பெண்களின் உடலையும் மனத்தையும் வாட்டியது.

ஓய்வும் சம்பளமும்

கரோனாவுக்கு எதிரான ‘போரில்’ அவரவர் வீடுகளின் பால்கனியில் நின்று கைகளையும் பாத்திரங்களையும் தட்டச் சொன்ன பிரதமர், “உங்களுடைய வீட்டுப் பணிப் பெண்களுக்கு ஓய்வும் சம்பளமும் கொடுங்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் பேச்சைத் தட்டாமல் கைகளையும் பாத்திரங்களையும் தட்டிய மச்சு வீட்டு ‘இல்லத்தரசி’கள் தங்களுடைய வீட்டுப் பணிப் பெண்களுக்கு முழு ஓய்வும் சம்பளமும் கொடுத்தோமா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளட்டும்.

பணிப் பெண்களை வீட்டுக்குள் அனுமதிக்காததை அடுத்து நடுத்தர வர்க்க இல்லத்தரசிகளின் குடும்பச் சுமை கனக்கத் தொடங்கியது. வேலைக்குச் செல்லும் மகளிரானாலும் இல்லத்தரசியானாலும் நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தமட்டில் வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பு பெண்ணுடையது என்கிற வழக்கு ஒழியவில்லை. இதில் ஊடரங்குக்கும் முன்னமே கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால் குழந்தைகளை முழு நேரமும் சமாளிக்கும் பெரும் சவாலும் இந்தப் பெண்களின் தலையிலேயே விழுந்தது. இது அல்லாது கரோனா நோய்க்கான சிகிச்சையைத் தவிர்த்து, இதர மருத்துவச் சிகிச்சைகள் மறுக்கப்பட்டதால் உடல் உபாதைகள் நிறைந்த முதியோரையும் ஓய்வின்றிப் பேணும் பொறுப்பும் இவர்களை வந்தடைந்தது. நடுத்தரக் குடும்ப ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தாலும் அது பெண்ணுக்குக் காட்டும் சலுகையாகவே பாவிக்கப்படுகிறது. அரைகுறையாகச் செய்துவிட்டு பேருதவி செய்தோம் என்கிற பெருமிதம் வேறு நம் நடுத்தர வர்க்க இல்லத்தரசர்களுக்கு!

சூரரைப் போற்று

வீட்டுக்குள் இருக்கும்படி தள்ளப்பட்ட நடுத்தர, ஏழைப் பெண்களின் நிலை இப்படி என்றால், கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கவும் மீட்கவும் பாடுபட்ட பெண்களின் தொண்டு ஈடு இணையற்றது. நோயாளிகளுடனும் நோய்த் தொற்று ஏற்படுத்தும் சூழலுடனும் நேரடியான தொடர்பில் இருந்தவர்கள், இருப்பவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சமூகச் சுகாதார ஆர்வலர்கள். மருத்துவச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி செலுத்தும்படி பிரதமர் அறிவித்தார். ‘‘எங்களுடைய சம்பளத்துக்கும் பணிநிரந்தரத்துக்கும் உத்தரவாதம் கொடுங்கள்” என்றனர் அல்லாடிக்கொண்டிருந்த சுகாதாரத் துறை ஊழியர்கள்.

அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களின் மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோரின் நிலை கவனிக்கப்படவே இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்குச் சத்து மாத்திரை அளிப்பது, பிறந்த குழந்தை 6 வயது வரை ஆரோக்கியமாக வளர்கிறதா என்பதைக் கண்காணிப்பது, இளம் பெண்களுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வும் சானிடரி நாப்கினும் வழங்குவது உள்ளிட்ட பணிகளை கரோனா காலத்திலும் இடைவிடாது செய்தவர்கள் அங்கன்வாடி ஊழியர்கள்.

சமூக ஊடகங்களில் அண்மையில் வீசிய ‘நிஜமான சூரரைப் போற்று’ அலையின்போதுதான் இப்படியான அங்கன்வாடி ஊழியரான பெண் ஒருவர் உலகின் பார்வைக்கு வந்தார். அவர்தான் மஹாராஷ்டிரத்தின் நந்தர்பார் மாவட்டத்தைச் சேர்ந்த சிமல்காடி பழங்குடிக் கிராமத்தின் அங்கன்வாடி ஊழியர் ரேலு வசாவே. கருவுற்றிருக்கும் பழங்குடிப் பெண்களும் குழந்தைகளும் கரோனா அச்சத்தால் அங்கன்வாடிக்கு வருவது நின்றுபோனது. கருணை மிகுந்த ரேலு வசாவே படகை வாடகை எடுத்துத் தானே துடுப்புப் போட்டார். தினந்தோறும் 18 கிமீ வரை நர்மதா நதியில் பயணித்துப் பழங்குடிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சேவை புரிந்தார். கரோனா வீராங்கனைகள் என்று ஷைலஜா டீச்சரும் ஜசிந்தா அர்டெர்னும் கொண்டாடப்பட்டதுபோல ரேலு வசாவே போன்ற களப்பணியாளர்கள் கொண்டாடப்படவில்லை.

கொண்டாடுவது இருக்கட்டும், தினந்தோறும் வீடு தேடி வந்து நோய்க்கான அறிகுறியைச் சோதித்து சுகாதார ஆலோசனைகள் வழங்கிய ‘ஆஷா’ பணியாளர்கள் எனப்படும் சமூகச் சுகாதார ஆர்வலர்களுக்கு உட்கார நாற்காலியும் குடிக்கத் தண்ணீருமாவது கொடுத்திருக்கிறோமா? மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்குமே பிபிஇ கிட்கள் போதவில்லை என்று கைவிரித்த அரசு ‘ஆஷா’ பெண்களுக்கு முகக்கவசமும் சேனிடைசரும்கூட இல்லை என்றுவிட்டது. நாளொன்றுக்கு ரூ.30 என்றரீதியில் மாதத்துக்கு ரூ.1,000 ஊதியம் கொடுத்து 9 லட்சம் இந்தியப் பெண்களை ஒன்றிய அரசு சுரண்டிக்கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்தப் பெண்கள் சேகரித்துத் தரும் தரவுகளின் அடிப்படையில்தான் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மீண்டவர்களின் கணக்கெடுப்பை அரசு வெளியிட்டுவருகிறது. ஆனால், இவர்களோ எந்தக் கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது பெருந்துயரம்.

‘மீண்டு’ம் வருவார்களா?

கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, சத்துணவு விநியோகம் தடைப்பட்டதால் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளியாகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழகக் கல்வித் துறை ஜூலை மாதத்திலிருந்து சத்துணவை உலர் பொருட்களாக வழங்கத் தொடங்கியது. ஆனாலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நலப் பள்ளி மாணவர்களுக்கு இன்று வரை சத்துணவு கொடுக்கப்படவில்லை. இதில் பெண் குழந்தைகளின் கதி கொடுமையிலும் கொடுமை. ஊரடங்கு விதிக்கப்பட்ட ஓரிரு வாரங்களுக்குள்ளேயே 18 வயதுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியப் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பலருக்குக் குழந்தைத் திருமணங்கள் ரகசியமாக நடத்தப்பட்டது. காப்பாற்றப்பட்ட பெண் குழந்தைகளில் எத்தனை பேர் மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்படும் நாளன்று கல்வியைத் தொடரும் நிலையில் இருப்பார்கள் என்பது அச்சமூட்டும் கேள்வியாகும்.

வேலைக்கான குறைந்தபட்ச உத்தரவாதமாவது இருப்பதாக நம்பப்படும் அலுவலகப் பணி ஊழியர்களுக்கே வேலை இழப்பும் சம்பளக் குறைப்பும் கரோனா ஊழிக் காலத்தில் நிகழ்ந்தேறியது. அதிலும் பணியிடங்களில் ஆண்களைவிட உற்பத்தித் திறன் குறைவானவர்களாகச் சொல்லாமல் சொல்லிப் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களின் நிலை இன்னும் கொடுமை. இந்நிலையில், ஊரடங்குக் காலகட்டத்தில் வீட்டிலிருந்து அலுவலகப் பணியை மேற்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது; இதனால், அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கத் தொடங்கியிருப்பதாக இணையத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவித்தது. எந்தச் சமூக, பொருளாதார அடுக்கைச் சேர்ந்த பெண்களுக்கு இது சாத்தியப்பட்டுள்ளது என்பதையெல்லாம் அந்த ஆய்வு கொஞ்சமும் பேசவில்லை. எல்லாப் பெண்களும், அவர்கள் அனுதினமும் எதிர்கொள்ளும் சிக்கல்களும் ஒன்றல்ல. அடுக்கடுக்காகப் பெண்களும் அவர்தம் சிக்கல்களும் இருக்கையில் தீர்வு மட்டும் ஒன்றாக இருக்க முடியுமா என்ன?

- ம.சுசித்ரா,

தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்