தமிழ்நாடானது அரை நூற்றாண்டைக் கடந்து திமுக அல்லது அதிமுகவாலேயே மாறிமாறி ஆளப்பட்டுவந்திருக்கிறது. இரண்டு கட்சிகளும் தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும், ஒன்றிய அரசில் அவை இடம்பெறுமே அன்றி மாநில அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு என்றுமே பங்கு தந்ததில்லை. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பல்வேறு புதிய கட்சிகளும் மூன்றாவது அணிகளும் தொடர்ந்து உருவாகிவந்திருக்கின்றன. எனினும், தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் மூன்றாவது மாற்றுக்கு இடம் இருக்கிறதா? தேர்தல்கள் வரலாற்றில் ஆய்வின் வழி பதில் தேடுவோம்.
பத்தாண்டுகளில் நடைபெற்ற ஐந்து தேர்தல்களையும் எடுத்துக்கொள்ளுவோம் - 2009, 2014, 2019 மக்களவைத் தேர்தல்கள், 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்கள். இந்த ஐந்து தேர்தல்களிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை சீராக அதிகரித்தது; கடைசியாக, 2019-ல் 4.16 கோடி என்பதிலிருந்து 5.91 கோடி என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்தது. வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்வும், வாக்குப் பதிவு உயர்வும் விகிதாச்சாரப்படி பொருத்தமாக இருந்தன. 2009-ல் 73.01% என்ற அளவிலிருந்து 2019-ல் 74.83% என்ற அளவுக்கு வாக்குப் பதிவு அதிகரித்திருந்தது. ஆயினும், சட்டமன்றத் தேர்தல்களில் அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகின.
இருமுனைப் போட்டி
மொரீஸ் ட்யூவர்ஜி என்ற பிரெஞ்சு அரசியலறிவியலாளர் ‘முதலாவதாக வருவோரே வெற்றி பெற்றவர்’ என்ற தேர்தல் முறையின் கீழ் ஒரு தொகுதியில் இரண்டு வலுவான வேட்பாளர்கள் மட்டுமே இருக்க முடியும் என்று 1951-ல் வாதிட்டார். இது அரசியலறிவியலில் ட்யூவர்ஜி விதி என்று அறியப்படலாயிற்று.
ஒவ்வொரு தொகுதியிலும் ஏன் இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே வலுவானவர்களாக இருக்க வேண்டும்? மூன்றாவது வேட்பாளர் ஒப்பீட்டளவில் பலவீனமானவர் என்பதால் வாக்காளர்கள் பலவீனமான வேட்பாளர்களுக்கு வாக்களித்துத் தங்கள் வாக்குகளை வீணடிக்க விரும்புவதில்லை. பெரும்பாலும் இது பொருந்துகிறது. இந்தியாவின் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களைக் கொண்டும் ஒரு எளிய கணக்கின் அடிப்படையில் நாம் ட்யூவர்ஜி விதியைப் பரிசோதிக்கலாம். ஒரு தொகுதியில் வலுவான வேட்பாளர்களின் எண்ணிக்கை என்பது அந்தத் தொகுதியில் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறும் வேட்பாளர்களின் எண்ணிக்கையாகும். ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கைவிடக் குறைவான வாக்குகள் பெறும் வேட்பாளர் தனது வைப்புத்தொகையை இழப்பார். அந்த வேட்பாளர்களைப் பலவீனமான வேட்பாளர்களாக வகைப்படுத்தலாம்.
தமிழ்நாட்டு அனுபவம்
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் ஒவ்வொரு தொகுதியிலும் வலுவான வேட்பாளர்களின் எண்ணிக்கையை நாம் கணக்கிடுவோம். ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 825 - 850 இருந்தது. அப்படியென்றால் ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 21 அல்லது 22 வேட்பாளர்கள். அப்படிப் பார்க்கையில், மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கையில் வைப்புத்தொகையை இழந்த வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் கழித்தால் கிடைக்கும் வலுவான வேட்பாளர்களின் எண்ணிக்கை 77 - 97 இருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு தொகுதியிலும் வலுவான வேட்பாளர்களின் எண்ணிக்கை 1.97 - 2.49 என்று அமைகிறது; இது ஒவ்வொரு தொகுதியிலும் வலுவான வேட்பாளர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்ற ட்யூவர்ஜியின் கணிப்புக்கு நெருக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 2014 தேர்தலைத் தவிர ஏனைய தேர்தல்களில் முதல் இரண்டு இடங்களில் வந்தவர்களின் ஒட்டுமொத்த வாக்கு வீதம் 80%-க்கும் மேல் இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், மூன்றாவது வேட்பாளர் தனக்கு முந்தையவர் வாக்குகளில் கிட்டத்தட்ட 20% மட்டுமே பெறுகிறார்; ஆக, இரண்டாவது வேட்பாளருடன் ஒப்பிடும்போது மூன்றாவது வேட்பாளர் பலவீனமானவராக இருக்கிறார்.
பலனளிக்கும் கூட்டணிகள்
திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதோடு அல்லாமல், கூட்டணிக்குத் தலைமை வகித்தும் போட்டியிட்ட இந்தத் தேர்தல்களில் 2014 தேர்தல் நீங்கலாக, பதிவான ஒட்டுமொத்த வாக்குகளில் இந்த இரண்டு கூட்டணிகளும் ஏறக்குறைய 80% வாக்குகளைப் பெற்றன. மேலும், 2014-ஐத் தவிர இந்த இரண்டு கூட்டணிகளும்தான் ஒட்டுமொத்த தொகுதிகளிலும் வென்றன. மற்றவர்களுக்கு ஒரு தொகுதியைக்கூட விட்டுவைக்கவில்லை. 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 37.66% வாக்குகள் கிடைத்து, அந்தக் கூட்டணி 13 தொகுதிகளை வென்றது. திமுக தலைமையிலான கூட்டணிக்கு 42.17% வாக்குகள் கிடைத்து அது 26 தொகுதிகளை வென்றது.
2014, 2019 மக்களவைத் தேர்தல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது முதலாம் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 44.22% வாக்குகள் கிடைத்து அது 37 தொகுதிகளை வென்றது. திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஒரு தொகுதிகூடக் கிடைக்கவில்லை. அதற்கு 26.80% வாக்குகள் கிடைத்தன. அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியின் வாக்கு வீதம் 51.33%. அது 38 இடங்களில் வென்றது. அதிமுக கூட்டணியின் வாக்கு வீதம் 30.09%. அது ஒரே ஒரு தொகுதியில் வென்றது. 2014 தேர்தலில் இந்தக் கூட்டணிகளில் இல்லாத வேட்பாளர்களுக்கு இரண்டு இடங்கள் சென்றன என்றாலும், அது ஒரு விதிவிலக்கே. 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்து இடங்களும் இரண்டு கூட்டணிகளுக்குமே சென்றன. 2011-ல் அதிமுக கூட்டணி 203 இடங்களை வென்றது, அதற்கு 51.79% வாக்குகள் கிடைத்தன. திமுக கூட்டணிக்கோ 31 இடங்களும், 39.43% வாக்குகளும் மட்டுமே கிடைத்தன. 2016-ல் 40.82% வாக்குகளைப் பெற்று 136 தொகுதிகளில் அதிமுக கூட்டணி மறுபடியும் வென்றது. திமுக கூட்டணியோ 38.79% வாக்குகளைப் பெற்று 98 இடங்களில் வென்றது.
கூட்டணியால் யாருக்கு லாபம்?
சரி, தமிழ்நாட்டின் பலமான போட்டியாளர்களான இரு கட்சிகளும் அமைக்கும் கூட்டணிகளால் யாருக்கு நல்ல லாபம்?
பாஜக: 2009 மக்களவைத் தேர்தலில் தனியாகவே போட்டியிட்டது, 2014-ல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது, 2019-ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. அனுபவம் சொல்வது என்னவென்றால், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும்போது மட்டுமே பாஜகவின் வாக்கு வீதம் அதிகரித்தது; குறிப்பாக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்த 2019-ல்தான் அது அதிக அளவிலான வாக்கு வீதத்தைப் பெற்றது. ஆக, கூட்டணிக் கட்சியினரே பாஜகவுக்கு வாக்குகளைப் பங்களித்திருக்கிறார்களே தவிர அவர்களுக்கு பாஜக வாக்குகள் பெரிதாகப் பங்களிக்கவில்லை.
கம்யூனிஸ்ட்டுகள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 2014-ல் தனித்தும், 2016-ல் மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது கூட்டணியில் சேர்ந்தும் போட்டியிட்டன. இரண்டு முறையும் அவை போட்டியிட்ட தொகுதிகளில் அவற்றுக்கு 3 - 7% வரை வாக்குகள் கிடைத்தன. பெரும்பாலான தொகுதிகளில் அவற்றின் வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தார்கள். ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கும்போது அந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வீதம் முன்பைவிட 50% வரை அதிகரித்தது. மேலும் 2009, 2019 மக்களவைத் தேர்தல்கள், 2011 சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட அவை போட்டியிட்ட அனைத்துத் தொகுதியிலும் வென்றன. ஆனால், இந்தக் கட்சிகளால் திராவிடக் கூட்டாளிகளுக்குப் பெரிய பலன் இல்லை.
தேமுதிக: 2009 மக்களவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது, 2014 மக்களவைத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டது. இந்தத் தேர்தல்களில் அதன் வாக்கு வீதம் 5 - 14%. பெரும்பாலான தொகுதிகளில் அதன் வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தார்கள். எனினும், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது அது நின்ற 41 தொகுதிகளில் 29 தொகுதிகளை வென்றது. அப்போது அதன் வாக்கு வீதம் முன்பைவிட 45% அதிகரித்தது. மறுபடியும் அது கூட்டணி அமைத்து 2019 மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டபோது, நான்கு தொகுதிகளிலும் தோல்வியுற்றது, அவற்றுள் இரண்டில் வைப்புத்தொகையை இழந்தது. தேமுதிக 22% மட்டுமே வாக்கு வீதத்தைக் கொண்டிருந்தது. அந்தக் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகக் கருதப்பட்ட தொகுதிகளிலும்கூட அதன் வாக்கு வீதம் குறைந்துகொண்டுவருவதாக நாம் கருதலாம். யாரால் யார் பலன் பெற்றார்கள் என்று பார்த்தால் மேலே சொன்ன கதைதான் இங்கும்!
காங்கிரஸ்: 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. அதில் 5% வாக்குகளையே பெற்றது, போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38-ல் வைப்புத்தொகையை இழந்தது. மற்ற நான்கு தேர்தல்களிலும் அது திமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டதால் அதன் வெற்றியும் வாக்கு வீதமும் கணிசமாக அதிகரித்தன. பாமக: 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தும், 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்தும் பாமக போட்டியிட்டது. 2011-ல் அது போட்டியிட்ட 30 சட்டமன்றத் தொகுதிகளில் 40% வாக்கு வீதத்தைக் கொண்டிருந்தது, அவற்றுள் மூன்றில் வென்றது. குறிப்பாக, தோல்வியடைந்த 27 தொகுதிகளிலும் தன் வைப்புத்தொகையை அது இழக்கவில்லை. 2016-ல் 232 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 212 தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்தது, வெறும் 5% வாக்கு வீதத்தையே பெற்றது.
2009, 2019 மக்களவைத் தேர்தல்களில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்து முறையே 6 மற்றும் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தத் தேர்தல்களில் பாமக எந்தத் தொகுதியிலும் வெல்லவில்லை என்றாலும் எதிலும் வைப்புத்தொகையை இழக்கவும் இல்லை. 2009-ல் அது போட்டியிட்ட தொகுதிகளில் அதன் வாக்கு வீதம் 35%-ஆகவும் 2019-ல் 29%-ஆகவும் இருந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக 8 தொகுதிகளில் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்தது, ஒரு தொகுதியில் வென்றது. அது போட்டியிட்ட தொகுதிகளில் அதன் ஒட்டுமொத்த வாக்கு வீதம் 21% ஆக இருந்தது. பாமகவுக்கு 8 - 10 தொகுதிகளில் கணிசமான வாக்கு வீதம் இருக்கிறது. ஆனால், ஒரு தொகுதியில்கூடத் தனித்து வெல்லும் சூழலில் அது இல்லை. கூட்டணியில் பெரும் பலனை பாமகவே பெறுகிறது என்பது வெளிப்படை. விசிக: கடந்த 5 தேர்தல்களில் 4-ல் விசிக போட்டியிட்டது திமுக கூட்டணியில்தான். 2016 சட்டமன்றத் தேர்தலில் மட்டும் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டது. விசிகவின் வாக்கு வீதமானது அந்தந்தத் தேர்தலில் திமுகவின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து ஏறவும் இறங்கவும் செய்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் விசிக போட்டியிட்டபோது அதனால் 7% வாக்கு வீதத்தை மட்டுமே பெற முடிந்தது. அது போட்டியிட்ட 25 தொகுதிகளில் 22-ல் வைப்புத்தொகையை இழந்தது.
மநீம – நாதக: 2019 மக்களவைத் தேர்தலில் கமலின் மநீம 3.96% வாக்குகளும், சீமானின் நாதக 4% வாக்குகளும் பெற்றன.
முக்கியமான குறிப்பான்கள்
ஒட்டுமொத்த வாக்கு வீதத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் அமைத்துக்கொண்ட கூட்டணியால் சிறிய கட்சிகள் 37% பலனடைந்திருப்பதை நாம் அறிந்துகொள்ளலாம். எனினும், இந்தக் கூட்டணிகளால் திராவிடக் கட்சிகளுக்கு வெறும் 8% கூடுதல் அனுகூலம் மட்டுமே கிடைத்திருக்கிறது.
எல்லாத் தொகுதிகளிலும் வெற்றிக்குக் காரணமான வாக்கு வீதத்துக்கு உரியவை இரண்டு திராவிடக் கட்சிகளும்தான். எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்கள் சிறிய கட்சிகளுக்கோ மூன்றாவது அணிக்கோ தங்கள் வாக்குகளைச் செலுத்தி வீணாக்க விரும்பவில்லை. மூன்றாவது அணி என்பது எப்போது சாத்தியம் என்றால் இரண்டு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியிலும் அவை பாதிப்பு ஏற்படுத்தும்போதுதான். அப்படி பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றால் சவாலாளிகள் இந்த இரண்டு கட்சிகளின் குட்டிக் கூட்டாளியாக எஞ்சுவதில் திருப்தியடைந்துகொள்ள வேண்டியதுதான்.
- இராம. சீனுவாசன், பொருளாதார அளவியல் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்; எஸ். ராஜா சேது துரை, பொருளாதாரப் பேராசிரியர், ஹைதராபாத் பல்கலைக்கழகம்.
© ஃப்ரன்ட்லைன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago