நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக்கொள்ளும் நடைமுறை உலகின் எந்த நாட்டிலும் அமலில் இல்லை.
உச்ச நீதிமன்றத்தின் மோசமான தீர்ப்புகள் என்று பட்டியலிட்டால் அதில் முதலில் வருவது நீதிபதிகள் நியமனச் சட்டத்தை ரத்துசெய்த தீர்ப்பாகத்தான் இருக்கும்.
நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் அதிகாரம் 1993-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த ‘நமக்கு நாமே’திட்டம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதைக் கண்ட நாடாளுமன்றம், நீதிபதிகள் நியமனத்தில் புதிய ஏற்பாட்டை அமலுக்குக் கொண்டுவந்தது. இந்தத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்திலேயே மேற்கொள்ளப்படுவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஆதரவுடன் கூடவே மாநிலங்களின் ஒப்புதலும் பெறப்பட்டது.
அரசமைப்புச் சட்டம் சொல்வது என்ன?
1950-ல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், உயர் / உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவதற்கான தகுதிகளை நிர்ணயித்திருக்கிறது. எனினும், நியமனங்களுக்கான நடைமுறை விதிகளை விரிவாகக் கூறவில்லை. நியமனத்தில் சம்பந்தப்பட்ட அதிகார மையங்கள் பொறுப்புடன் செயல்படும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு இது. ஆனால், அப்படி நடக்கவில்லை. சின்ன உதாரணம், நெருக்கடிநிலைக் காலகட்டம். அப்போது, அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகள் பலர் பலிவாங்கப்பட்டதாக விமர்சனங்கள் உண்டு. நீதிபதிகள் நியமனத்தில் அரசின் தலையீடு இருப்பதாகக் கூறி நடைமுறை விதிகளை முறைப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தில் இதுவரை மூன்று முறை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரே நியமிக்கப்பட்டபோது, முதுநிலைப் புறக்கணிப்பு நடந்ததாகக் கூறி, மூன்று நீதிபதிகள் பதவி விலகினர். இதேபோல, அரசுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களை நியமிப்பதையும், அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுப்பதையும் கண்டித்து வழக்கறிஞர்களும் போராடியிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான், உயர் நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்பட நியமன முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பான முதல் வழக்கில், “தலைமை நீதிபதியுடன் மத்திய அரசு நடத்தக் கூடிய கலந்தாலோசனை பெயரளவுக்கானதாக இல்லாமல் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்; அதேசமயத்தில் கலந்தாலோசனை என்பதை ஒப்புதலாகக் கருத வேண்டியது இல்லை” என்றது உச்ச நீதிமன்றம். அடுத்த வழக்கில், “நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதியின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று தன்னுடைய முந்தைய கருத்தையே மறுதலித்தது. மூன்றாவது வழக்கில், “தலைமை நீதிபதி பதவியில் இருப்பவர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்று கருத இயலாது. எனவே, அவரது தனிப்பட்ட கருத்தைக் கருத்தில் கொள்ளாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முதுநிலைப் பட்டியலிலுள்ள முதலிரண்டு நீதிபதிகளின் கருத்தையுமே கணக்கில் கொள்ள வேண்டும்” என்று தீர்ப்பளித்தது. இதைத்தான் ‘கொலிஜியம் முறை’(நீதிபதிகள் குழு) என்று சொல்வார்கள். உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அத்தீர்ப்பின் மூலம் நீதிபதிகள் நியமனத்தை நீதித் துறையே தன் கையில் எடுத்துக்கொண்டது.
கடந்து வந்த பாதை
1993 நியமன நடைமுறைப்படி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிபதி நியமனத்துக்குத் தகுந்த வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, மூத்த நீதிபதிகள் இருவரின் கருத்துகளைப் பதிவுசெய்து பட்டியலை மாநில ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அப்பட்டியல் தொடர்பாக முதல்வரின் கருத்துகளை அறிந்து, மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, பட்டியல் வரும் மாநிலத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் பதவி வகிக்கும் நீதிபதியின் கருத்தையும் தெரிந்துகொண்டு, அவருக்குக் கீழேயுள்ள இரு மூத்த நீதிபதிகளின் கருத்தை எழுத்து மூலமாகப் பதிவுசெய்து, நியமனப் பட்டியலை மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அமைச்சரவையின் உயர் நியமனக் குழு ஒப்புதலுக்குப் பின் அப்பட்டியல், குடியரசுத் தலைவர் நியமன ஆணை வழங்க அனுப்பப்படும்.
இப்படிப் பரிந்துரைக்கப்பட்ட பெயரில் ஆட்சேபணை இருந்தால், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தனது கருத்தைத் தெரிவிக்கலாம். ஆனால், அதற்குப் பின்னும் உச்ச நீதிமன்ற ‘கொலிஜியம்’மறுபடியும் பரிந்துரைத்தால், அந்தப் பெயரைக் குடியரசுத் தலைவருக்குக் கட்டாயமாக மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும். இதன் பின்னரே குடியரசுத் தலைவர் நீதிபதி நியமனத்துக்கான உத்தரவைப் பிறப்பிப்பார். அப்படியொருவர் நீதிபதியாக நியமனம் பெற்றுவிட்டால், அவரைப் பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு வாக்களிப்பு தேவை.
கடந்த 20 ஆண்டுகளில் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் அநேகமாக எவ்விதப் பங்கும் அரசுக்கு வழங்காமல் நியமனங்கள் நடைபெற்றது தொடர்பாகப் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலரும் கட்டுரைகள் மற்றும் சுயசரிதைகள் வாயிலாக ‘கொலிஜியம்’நியமன நடைமுறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தேசிய ஆணையச் சட்டம்
அரசமைப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்ற / உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள் பற்றி கூறப்பட்டுள்ள பிரிவுகளைத் திருத்தும் வண்ணம் புதிய சட்டத் திருத்தத்தையும், நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையச் சட்டத்தையும் நாடாளுமன்றம் 2014-ல் இயற்றியது. நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவில், இரண்டு பிரபலமான நபர்களும் அதில் இடம் பெறுவர். அவர்களில் ஒருவரைச் சட்ட நிபுணத்துவம் கொண்டவராக அறிவிப்பதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
ஆனால், 99-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையும், அதையொட்டி நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட நீதிபதிகள் நியமனச் சட்டத்தையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, “ஏழு நீதிபதிகள் அமர்வின் மூலம் கொண்டுவரப்பட்டது ‘கொலிஜியம்’நடைமுறை என்பதால், இப்புதிய வழக்கை அதைவிட அதிகமான நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தால்தான் நியாயம் கிடைக்கும்”
என்று கூறினார் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதகி. ஆனால், அதை நிராகரித்தனர் நீதிபதிகள். புதிய நீதிபதிகள் அமர்வில் தலைமை வகித்த நீதிபதி கேஹார் அட்டர்னி ஜெனரலிடம் எழுப்பிய கீழ்க்கண்ட கேள்வி நகைப்புக்குரியது: “அட்டர்னி ஜெனரல் அவர்களே! இதுவரை எங்களது நியமனத்தில் சோடை போன நியமனம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?”
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இதுவரை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த பெயர்களில் சொத்தையானவற்றைப் பட்டியலிட்டு முத்திரையிடப்பட்ட உறை ஒன்றை நீதிமன்றத்திடம் அதற்கு முன்னர்தான் சமர்ப்பித்திருந்தார். அதற்குப் பின்னும் நீதிபதிகள் அப்பாவித்தனமாகக் கேட்ட கேள்வி விசித்திரமாக இருந்தது. புதிய சட்டத் திருத்தத்துக்கு எதிராகக் கூறப்பட்ட வாதங்களில் முக்கியமானது நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக் குழுவில் தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் தவிர, சட்ட அமைச்சர் மற்றும் இரண்டு பிரபலங்கள் இருந்தனர் என்பது. அந்தப் பிரபலங்கள் யார்; அவர்கள் தகுதியென்ன என்பது பற்றி புதிய சட்டம் கூறவில்லை என்றும், அவர்களைத் தவிர சட்ட அமைச்சர் அரசியல் கட்சியின் பிரதிநிதியென்றும், அவர்கள் மூவரும் நீதிபதிகள் பரிந்துரைக்கும் பெயர்களைப் புறக்கணிக்கும் வாய்ப்பு இருப்பதனால் இது நீதித் துறையின் சுதந்திரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும், நீதித் துறையின் சுதந்திரம் என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கூறுகளில் ஒன்றானதனால் அதை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கும் அதிகாரமில்லை என்றும் வாதாடப்பட்டது. இவ்வாதங்களை உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்விலிருந்த ஐந்து நீதிபதிகளில் நால்வர் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். புதிய சட்டத் திருத்தத்தை ரத்துசெய்ததோடு மட்டும் இல்லாமல், பழைய ‘கொலிஜியம்’மூலமான நியமன நடைமுறை மறுபடியும் அமலுக்கு வந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளனர்.
வரம்பு மீறிய செயல்
இத்தீர்ப்பு ஜனநாயகக் குடியரசுத் தத்துவத்துக்கு விரோதமானது மட்டும் அல்லாமல் நாடாளுமன்றம், அரசு மற்றும் நீதித் துறைக்குள்ள அதிகாரப் பங்கீட்டின் வரம்பை மீறிய செயலாகும். அரசமைப்புச் சட்டத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெளிவான வரையறை இல்லாதபோது, சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உண்டு. கொலிஜிய நியமன நடைமுறை அதாவது, நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தில் நீதிபதிகளிடம் கொடுக்கப்படாததோடு, அப்படிப்பட்ட நடைமுறை உலகத்தின் எந்த நாட்டிலும் அமலில் இல்லை.
விருப்பு வெறுப்பற்ற பணி
நீதிபதிகள் நியமனத்தில் அரசின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று கூறும் நமது நீதிபதிகளுக்கு, அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தனது அரசியல் நண்பர்களையே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்கும் அதிகாரம் படைத்தவர் என்று தெரியாதா? அங்கே நீதிபதிகள் நியமனத்துக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், ஒருவர் நீதிபதியான பிறகு தன்னை நியமித்தவருக்கு நன்றி விசுவாசம் பாராட்டுவதில்லை. அதற்குப் பதிலாக தாங்கள் எடுத்துக்கொண்ட அரசமைப்புப் பதவிப் பிரமாணத்தின்படி விருப்பு வெறுப்பில்லாமல் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்கிறார்கள்.
ஆகவே, நீதிபதி பதவியில் யாரை நியமிக்கிறார்கள் என்பதைவிட, நியமனம் பெற்ற பின் பதவிப் பிரமாணத்தின் வாசகங்களின்படி நீதி பரிபாலனம் செய்கிறார்களா என்பதே முக்கியம். கடந்த காலங்களில், ‘கொலிஜிய’நியமன நடைமுறைப்படி பரிந்துரைக் கப்பட்ட பெயர்கள் திருப்தியளிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட வில்லையா? அதேபோல், நீதிபதிகள் கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி, பகவதி, தேசாய் போன்றவர்களுக்கு ஒப்பானவர்கள் ஏன் ‘கொலிஜிய’நியமன நடைமுறை அமலுக்கு வந்த பின்னர், கடந்த 20 ஆண்டுகளில் நியமனம் பெறவில்லை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உச்ச நீதிமன்றமும், அதன் தீர்ப்பை ஆதரிப்பவர்களுமே பதில் கூற வேண்டும்!
- கே. சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago