பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின்படி இரட்டையாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு நூறாண்டுகளாகிவிட்டன. அப்புதிய நடைமுறையின் வழியே, திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிப் பொறுப்புக்குவந்து நூறாண்டுகள் முடிந்திருக்கிறது. அதிகாரப் பிரிவினைக் கோட்பாடுகளின்படி சட்டமியற்றும் அவைக்கும்நிர்வாகத் துறைக்கும் இடையிலான உறவில் அவை ஒவ்வொன்றும் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்துக்கும் சுய கட்டுப்பாடுகளுக்கும் தமிழகம் இன்றளவும் முன்னுதாரணமாக விளங்கிவருகிறது. அதற்கு 1920,டிசம்பர் 17 அன்று சென்னை மாகாணத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட நீதிக் கட்சியின் முதலாவது அமைச்சரவையும் அன்றைய ஆளுநர் வெல்லிங்டனும் பதித்துச்சென்ற வரலாற்றுத் தடங்களுக்கு முக்கியப் பங்குண்டு.
இந்தியச் சட்டம் 1919-ன்படி மாகாணச் சட்டமன்றமானது ‘லெஜிஸ்லேடிவ் கவுன்சில்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதன் பதவிக் காலம் மூன்றாண்டுகள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையைக் காட்டிலும் நிர்வாக சபை உறுப்பினர்களும் அதிகாரிகளுமே மிகுந்த செல்வாக்கையும் அதிகாரங்களையும் பெற்றிருந்தனர். நிதி, நீதி, காவல், பாசனம், தொழிற்சாலைகள் என முக்கியத் துறைகள் அனைத்தும் நிர்வாக சபையின் கட்டுப்பாட்டில் இருந்தன. கல்வி, உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட சில துறைகளைச் சார்ந்து மட்டுமே அமைச்சரவை முடிவெடுக்க அதிகாரம் பெற்றிருந்தது. நிர்வாக சபை, அமைச்சரவை முடிவுகளுக்கு மாறாக முடிவெடுக்கும் முற்று முழுதான அதிகாரம் ஆளுநரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனவே, ஆளுநருடன் நட்புறவைப் பேண வேண்டிய கட்டாயத்தோடுதான் அமைச்சரவை செயல்பட வேண்டியிருந்தது.
சட்டமன்றத்தின் முதல் தேர்தல்
அன்றைய சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, கேரளம், ஆந்திர மாநிலங்களின் பெரும் பகுதியையும் ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக இருந்தாலும், வாக்காளர்களில் 52% பேர் சென்னையில்தான் இருந்தார்கள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16,555. அவர்களில் சென்னையில் வசித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 8,644. மொத்த மக்கள்தொகையில் 2.9% மட்டுமே வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தார்கள். அவர்களிலும் தேர்தலில் கலந்துகொண்டு வாக்களித்தவர்கள் 24.9% மட்டுமே. கவுன்சிலில் அங்கம் வகித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 127. அவற்றில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 98. தேர்தலில் நீதிக் கட்சியினர் 63 இடங்களில் வெற்றிபெற்றனர். நியமன உறுப்பினர்களையும் சேர்த்து நீதிக் கட்சிக்குக் கிடைத்த மொத்த இடங்கள் 81. நீதிக் கட்சியின் வெற்றிக்கு காந்தி அப்போது அறிவித்திருந்த ஒத்துழையாமை இயக்கம் மட்டுமே காரணமல்ல. நீதிக் கட்சித் தலைவர்கள் சென்னை மாகாணம் முழுவதும் சுற்றிச் சுழன்று வாக்குகள் சேகரித்ததும் ஒரு முக்கியமான காரணம். தியாகராயர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் பேசி வாக்குகள் சேகரித்தார்.
நீதிக் கட்சியின் முதல் அமைச்சரவை அமைந்த காலத்தில் வெல்லிங்டன் ஆளுநராகப் பதவி வகித்தது ஒரு நற்பேறு என்று குறிப்பிட்டிருக்கிறார் அப்போதைய ஆளுங்கட்சி கொறடாவான பி.டி.ராஜன். அப்போது பெரும்பான்மை பெற்ற கட்சியின் உறுப்பினர்களில் மூவரை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அந்தச் சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நெறிமுறையை இந்தியாவிலும் வெல்லிங்டன் அறிமுகத்தினார். ஆனால், பி.டி.தியாகராயர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, கடலூர் சுப்பராயலு, பனகல் அரசர் ராமராயநிங்கர், கே.வி.ரெட்டி ஆகியோரில் யாரேனும் ஒருவரை முதல்வராக்குமாறு பரிந்துரைத்தார். அப்பட்டியலின்படி சுப்பராயலுவை முதல்வராகவும் மற்ற இருவரை அமைச்சர்களாகவும் ஆளுநர் வெல்லிங்டன் தேர்ந்தெடுத்தார்.
முதலாவது முதல்வர்
சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராக சுப்பராயலு பொறுப்பேற்றுக்கொண்டார். கடலூரில் வழக்கறிஞராகப்பணியாற்றிவந்த அவர் கடலூர் நகராட்சித் தலைவராகவும் பதவி வகித்தார். தென் ஆற்காடு மாவட்டக் குழுவில் அலுவல்முறை சாராத முதலாவது உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் என்றபெருமையையும் கொண்டவர் அவர். முதலாவது அமைச்சரவைபொறுப்பேற்றுக்கொண்டபோதே அது பிரிட்டிஷ் நாடாளுமன்ற நெறிமுறைகளை வழிகாட்டும் கொள்கைகளாக வரித்துக்கொண்டது. நீதிமன்றங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் அனுபவம் பெற்றிருந்த அமைச்சரவை அங்கத்தினர்கள், ஒருபுதிய அரசமைப்பின் கீழ் இயங்குவதற்கு எளிதில்தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டனர். அமைச்சரவையில் கூட்டுப் பொறுப்பு பின்பற்றப்பட்டது. இரட்டையாட்சி நடைமுறையில் இருந்த வரையிலும் சென்னை சட்டமன்றத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற மரபுகளுக்கு ஒருபோதும் முரணாக நடந்துகொள்ளவில்லை.
இந்தப் பெருமைக்குக் காரணம் அப்போது சட்டமன்றத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த பி.இராஜகோபாலாச்சாரியார் என்று நினைவுகூர்ந்திருக்கிறார் பி.டி.ராஜன். நீதிக் கட்சி மட்டும்தான் அமைச்சரவையில் அங்கம் வகித்தது என்றாலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கருத்தொருமிப்பு நிலவியது. உறுப்பினர்கள் யாரும் வெளிநடப்பு செய்யவில்லை. சட்டமன்ற நாட்களில் காலை 11 மணி தொடங்கி 5 மணி வரையிலும் கூட்டங்கள் நடக்கும். அனைத்து உறுப்பினர்களுமே முழு நாளும் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். தியாகராயர் மட்டும் தனது வயது மூப்பின் காரணமாக மதிய உணவுக்குச் சென்று அதன்பின் சிறு தூக்கமும் போட்டுவிட்டுச் சற்றே தாமதமாக சட்டமன்றம் திரும்புவார்.
பெண்களுக்கும் வாக்குரிமை
நீதிக் கட்சியின் முதலாவது அமைச்சரவைக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக் கோரிய கிருஷ்ணன் நாயரின் தீர்மானம் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. பிரிட்டனிலேயே 1918-ல்தான்பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அதற்கடுத்த நான்காண்டுகளில் இந்தியாவில் முதன்முதலாக சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் நீதிக் கட்சி ஆட்சியில் அந்த உரிமையை நிலைநாட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடல்நலக் குறைவின் காரணமாக 1921 ஜூலையில் சுப்பராயலு முதல்வர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அவருக்குப் பதிலாக ராமராயநிங்கர் முதல்வராகப் பொறுப்பேற்றார். நீதிக் கட்சியின் இரண்டாவது அமைச்சரவையிலும் அவர் முதல்வராகத் தொடர்ந்து 1926 வரையில் பதவி வகித்தார்.
1921 ஆகஸ்ட்டில் ஓ.தணிகாசலம் கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில் அரசாங்க அலுவல்களில் வகுப்புவாரிபிரதிநிதித்துவம் அளிப்பதற்கான தீர்மானம் நிறைவேறியது. அத்தீர்மானத்தையொட்டி அரசாணையொன்றும் வெளியிடப்பட்டது. 1923-ல் இந்து சமய அற நிலையத் துறை சட்டமும் இயற்றப்பட்டது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்கவும் ஆலோசனைகள் வழங்கவும் வகைசெய்யும் சட்டமும் இயற்றப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தைக் கல்லூரிகளுடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் வகையிலும் மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்கும் வகையிலும் இயற்றப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம்-1923 மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது.
ஆளுநருடன் நல்லிணக்கம்
ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 1920-லிருந்துகல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. உள்ளாட்சிஅமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவதற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. நீதிக் கட்சி ஆட்சியில் சென்னை மாகாணத்தின் மொத்தமுள்ள 126 வட்டக் குழுக்களில் 75 குழுக்களிலும் மொத்தமுள்ள 85 நகராட்சிகளில் 52 நகராட்சிகளிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த அறங்காவலர் குழு உருவாக்கப்பட்டது.
இத்தனையும் பகுதியளவிலான அதிகாரங்களின் பெயரில்தான் நடந்திருக்கின்றன என்பதுதான் நூற்றாண்டைக் கடந்த வியப்பு. ஆளுநர் எந்த நிலையிலும் தலையிட்டுச் சட்டங்களையும் தீர்மானங்களையும் இல்லாமலாக்கிவிட முடியும் என்ற நிலையில், அவருடன் இணக்கத்தைப் பேணி இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. மாண்ட்போர்ட் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் வெல்லிங்டனுடன் சுப்பராயலுவும் ராமராயநிங்கரும் அப்படியொரு உறவைப் பேண வேண்டியிருந்தது. பகுதியளவு மாகாண சுயாட்சிக்கு வழிவகுத்த 1935 சட்டத்தின்படி பின்பு ராஜாஜியும் ஆளுநர் எர்ஸ்கினுடன் அதே உறவைத்தான் பின்பற்ற வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் செயல்பட்டுவந்த காலம் அது. இப்போதும்கூட, நமது மாநில முதல்வர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளோடு அதே உறவைத்தான் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.
டிசம்பர் 17: நீதிக் கட்சி முதலாவது அமைச்சரவையின் நூற்றாண்டு நிறைவு
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago