கூடலூரில் இருக்கும் மக்களின் கனிவான தன்மை என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. வலியில் கூக்குரலிடுவதையோ - அது பிரசவ வலியானால்கூட - மரண துக்கத்தில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பதையோ காண்பது மிக அரிது. அதுபோல் குழந்தைகளைக் கண்மண் தெரியாமல் அடிப்பதைக் கண்டதே இல்லை.
இந்த மக்களிடையே மரபணு சார்ந்த ‘தாலசீமியா’ என்கிற ரத்த நோய் உள்ளது. இதற்குள்ள சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு ‘அஸ்வினி’யில் தனி மையமே உள்ளது. இப்போது இது பெயர் பெற்றதாகி இருக்கிறது.
சொல்ல மறந்துவிட்டேனே... அஸ்வினி என்ற தனி மையத்தின் மூலம் தன்னார்வத் தொண்டால் பழங்குடி மக்களின் நலனில் கவனம் செலுத்திய ஒப்பற்ற மருத்துவரின் பெயர் பிரமிளா. கடந்த அத்தியாயத்தில் அவர் சேவை குறித்து எழுதியதும் வாசகர்கள் நிறையப் பேர் மின்னஞ்சலில் கேட்டதால் இதைப் பகிர்கிறேன்.
‘‘காலம் மாறிப் போச்சு, இந்தக் காலத்து இளையவர்கள் உலகத்தைக் குட்டிச்சுவர் ஆக்கிவிடுவார்களோ?’’ என்கிற ஆதங்கமும் கவலையும் பல முதியவர்களை ஆட்டுவிக்கிறது. ஆனால், இந்தக் கூடலூர் அனுபவம் நம் எதிர்காலத்திலும் இளையவர்களிடமும் உள்ள நம்பிக்கையை வளர்த்துவிட்டது.
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 14: வியக்கவைக்கும் மருத்துவர்
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 13- சிவசக்திக்கு ஒரு வேண்டுகோள்!
பல்வேறு துறைகளில் மேற்படிப்பு, வெளிநாடுகளில் படிப்பு மற்றும் பயிற்சி, வளமான குடும்பம், பல்கலைக்கழகத்தில் முதல் இடம், தங்கப்பதக்கம் இவை எல்லாம் அடைந்துள்ள இளைஞர்கள் பலர் இங்கே கூடலூரில் வந்து நல்ல ஆர்வத்துடன் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்கு உழைக்க வருவதைக் கண்டு நான் ஆனந்தமும் ஆச்சரியமும் அடைந்தேன். ‘படித்த படிப்புக்குப் பெரிய வேலையில் கை நிறைய சம்பாதிப்பதை விட்டு இது என்ன மடத்தனம்’ என்று தம் மக்களை ‘புத்தி கூறி’ தடுக்காமல் ஊக்குவிக்கும் அந்தப் பெற்றோருக்கு என் வணக்கங்கள்.
இந்த இளையவர்கள் பலவிதங்களில் சேவை செய்கின்றனர். சிலர், குடியிருப்புகளுக்குப் போய் புள்ளி விவரங்கள் சேகரித்தார்கள் (Field work). நம் உழைப்பு பலன் அளித்திருக்கிறதா, எவ்வளவு, மாற்றங்கள் தேவையா, எப்படிப் பலனை அதிகரிக்கலாம் என்றெல்லாம் ஆராய்ந்தால்தான் முன்னேற முடியும். நமது உற்சாகமும் அதிகரிக்கும்.
சிலர், குழந்தைகளைப் பள்ளியில் படிப்பித்தார்கள். பள்ளி நேரம் கடந்ததும் மாலை நேரத்தில் டியூஷன், விளையாட்டு என்று கற்பித்தார்கள். பொறியியல் படித்தவர்களும், மேலாண்மை, கணிதத் துறை, கட்டுமானத் துறை, பொருளாதாரம் படித்தவர்களும் சுயநலமின்றி உழைத்தார்கள். காபி, தேயிலை, மிளகு, மஞ்சள் விவசாயம், அதற்குத் தேவையான வங்கிக் கடன் பெறுவதற்கு உரிய உதவி, காட்டுச் செடிகளைக் கொண்டு சின்ன ஸ்டூல், மேசை, அலமாரி போன்றவற்றைத் தயாரிக்கக் கற்பித்தார்கள். அத்துடன் நிறுத்தி விடாமல் விளைபொருட்கள், செய்வினைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யவும் உதவுகிறார்கள்.
மருத்துவத் துறையில் பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், ஓரிரண்டு ஆண்டுகளுக்கோ அல்லது நீண்ட நாட்களுக்கோ இங்கே வந்து ஆர்வத்துடன் உழைக்கிறார்கள். பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிலர் தங்கள் குழுவுடன் மாதம் ஒருமுறையோ, இரு மாதங்களுக்கு ஒருமுறையோ இங்கே வந்து 3 - 4 நாட்கள் தங்கி சிகிச்சை அளிக்கிறார்கள்.
ஆயுர்வேதக் கல்லூரியில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் மாதந்தோறும், ஊதியமற்ற விடுப்பு எடுத்துக்கொண்டு இங்கே வருகிறார். அவரது கல்யாணம்கூட அவர் விருப்பத்தின்படி உற்றார் உறவினரோடு இங்கேதான் நடந்தது.
சில மருத்துவக் கல்லூரிகளில், படிப்பு முடிந்ததும் ஓரிரு வருடங்கள் கிராமங்களில் சேவை செய்ய வேண்டும் என்கிற உறுதிப் பத்திரம் எழுதி வாங்கிக்கொள்வார்கள். அந்த மாதிரி ‘புது’ மருத்துவர்கள் இங்கே வந்து வேலை செய்து அந்தப் பிரமாணத்தை நிறைவேற்றுகிறார்கள். நிறைய கற்றுக்கொள்கிறார்கள். இங்கே வந்து வேலை செய்து (எதுவானாலும்) போகிறவர்களை கூடலூர் ‘காந்தம்’ போல் திரும்பத் திரும்ப இழுக்கிறது.
இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து கடைசி வருட மருத்துவப் படிப்பு மாணவர்களும் பயிற்சியில் (ஹவுஸ் சர்ஜன்) இருப்பவர்களும் இங்கே வந்து 4 - 6 வாரங்கள் தங்கி, இங்குள்ள மக்கள், நோய்கள், இந்திய மருத்துவப் படிப்பிக்கும் முறைகளைப் பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள். சில நேரம் சமையல் குறிப்புகளைக்கூட!. இந்த மாணவர்களுக்கு இதய நோய் பற்றி வகுப்புகள் எடுக்கத்தான் நான் 3 மாதங்களுக்கு ஒருமுறை சென்று 10 நாட்கள் தங்குவேன். அப்போது பயிற்சி பெறும் செவிலியர்களுக்கும் வகுப்பு எடுப்பதுண்டு. இந்த செவிலிய மாணவர்கள் கூடலூரிலேயே தேர்வு எழுதி, அந்த விடைத்தாள்கள் நகரத்துக்கு அனுப்பப்பட்டு, திருத்தப்படும் வசதி செய்யப்பட்டு இருந்தது. பிறகு அவர்களுக்கு டிப்ளமோ வழங்கப்படும். பலர் இப்போது மேல் படிப்பு, பயிற்சி, வேலை என்று நகரங்களுக்குப் போய் ‘அஸ்வினி’க்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் ஒரு வழக்கு உண்டு. ‘பசியுள்ளவனுக்கு மீன் கொடுத்தால் அவன் பசிதான் தீரும். ஒரு தூண்டில் கொடுத்தால் அவன் குடும்பத்தின் பசியையே தீர்ப்பான்’ என்று. இப்போது பழங்குடி இளைய தலைமுறையினர் கணினியைக் கற்றுக்கொண்டு ‘அஸ்வினி’யின் விவகாரங்களைக் கவனித்து மேலாண்மை செய்யக் கற்றுவிட்டார்கள். ‘அஸ்வினி’யின் நிர்வாகக் குழுவில் மக்களும் ஏராளமானோர் சேர்ந்து நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
மற்ற மாநில தன்னார்வக் குழுக்களுடன் செய்திப் பரிமாற்றம் நடக்கிறது. ஜெர்மனியில் இருந்து ஒரு தன்னார்வக் குழுவினர் இங்கே வந்து பார்வையிட்டு, உதவியும் செய்கிறார்கள். இணையதளத்தில் இன்று கூடலூர் இடம் பெற்றிருக்கிறது. உலகின் பல பாகங்களிலும் இங்கே நடப்பவற்றை அறியும் வசதி உள்ளது.
இங்கே முக்கியமான ஒன்றைக் கூற வேண்டும். ஒற்றையடிப் பாதையைத் தவிர வேறு ஒன்றுமே காடுகளுக்குள் இல்லாத சமயத்தில், நீலகிரி மாவட்டத்துக்கு கலெக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரை அணுகுவதும் சுலபம். குறைகளைக் கேட்டு ஆவன செய்து வந்தார். இன்று காட்டுக்குள் ஜீப் மட்டுமல்ல, ஆட்டோக்களும் குடியிருப்புகளுக்குள் போகின்றன. அதனால், நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டுவருவது குறைந்த நேரத்திலேயே முடிகிறது. தொண்டு நிறுவனங்களின் உதவியால் ஆம்புலன்ஸ் ஊர்திகளும் உள்ளன.
‘அஸ்வினி’ இன்று வளர்ந்து நல்ல மருத்துவமனையாகிவிட்டது. பலர் இதற்கு உதவியிருக்கின்றனர். இதில் ‘டாடா’ நிறுவனத்தின் பங்கைக் கண்டிப்பாகச் சொல்லியே ஆக வேண்டும். இத்தனைக்கும் தோட்டங்களோ வேறு லாபம் ஈட்டும் தொழில்களோ அவர்களுக்கு இங்கே இல்லை. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீட்டு வசதியிலிருந்து, அறுவை சிகிச்சைக்கான தியேட்டர்கள் வரைக்கும் கட்டித் தந்திருக்கிறார்கள். பல நவீன உபகரணங்களும்கூட. வேறொரு பெரிய உதவி, சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் கூரைகள், மின்சாரத்தைச் சேமிக்கும் கலங்கள். இன்று 3 நாட்கள் வரை வெயில் இல்லாவிடினும் எல்லா மின் விளக்குகளும், முக்கியமாக எல்லா கணினிகளும் வேலை செய்யும் அளவுக்கு இந்த மின்சாரம் உதவுகிறது. இதேபோல் வெயில் உள்ளபோது சுடுநீரும் கிடைக்கும்.
பண உதவி மட்டுமின்றி, அது எப்படிச் செலவு செய்யப்படுகிறது, பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன, ஏதாவது கூடுதலாகத் தேவையா என்று ஆராய அவர்களது நிறுவனத்தின் அதிகாரி 3 மாதங்களுக்கு ஒரு முறை வருவார்.
சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ‘டாடா’வின் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகியது. அதில் அவர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டுத் திடல்கள் என்று பலவற்றையும் காண்பித்துவிட்டுக் கடைசியில் ‘நாங்கள் இரும்பு உருக்காலையும் வைத்திருக்கிறோம்’ என்று முடிப்பார்கள். அந்த விளம்பரத்தை உருவாக்கியவருக்கு ஒரு ‘சலாம்’ போடத் தோன்றும்.
அதிக விளம்பரமில்லாமலும், பகட்டு இல்லாமலும் எப்படித் தனித்தனியாகப் பலர் சேர்ந்து ஒரு மகத்தான தொண்டை கூடலூரில் செய்கிறார்கள்?
மீசைக்கார கவிஞனின் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.
‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்;
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்;
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்;
ஆண்மையாளர்கள் உழைப்பினை நல்கீர்’.
- இந்தக் கவிதையின் நடைமுறை உதாரணமாகும் கூடலூர் ஆதிவாசிகள் முன்னேற்றத்துக்கான ‘அஸ்வினி’ நிறுவனம்.
சந்திப்போம்... சிந்திப்போம்..!
கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago