நிவர் நவம்பர் 26 அதிகாலையில் கரையைக்கடந்தது. புயலின் உக்கிரம் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருந்தது. புயல் பெருமழையையும் கொண்டுவந்தது. 2004-ல் சுனாமிப் பேரலைகளின் தாண்டவமும் 2015-ல்சென்னையை மூழ்கடித்த வெள்ளமும் உண்டாக்கிய அழிவுகள் அதிகமானவை. இவ்விரண்டு பேரிடர்களைக் கணிப்பதிலும் எச்சரிப்பதிலும் மீட்புப் பணிகளிலும், அவற்றை எதிர்கொள்ளத்தக்க உள்கட்டமைப்பிலும் போதாமைகள் இருந்தன என்பதை வல்லுநர்கள் அப்போதே சுட்டிக்காட்டினார்கள். தவிர, புயல்களும் அடிக்கடி சுழன்றடிக்கின்றன. வட தமிழகம் தானே புயலாலும் (2011), சென்னை நகரம் வார்தா புயலாலும் (2016), தென் தமிழகம் ஒக்கி புயலாலும் (2017), காவிரிப் படுகை கஜா புயலாலும் (2018) தாக்குண்டன.
கணிப்பு - எச்சரிக்கை
இந்த வரிசையில் நிவர் புயலும் சேர்ந்துகொண்டது. நவம்பர் 23-ல் உருவாகி, நான்கு நாட்களுக்குப் பிறகு மரக்காணத்தில் வீழ்ந்தது புயல். இந்த முறை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளும் எச்சரிக்கைகளும் மீட்புக் குழுவினருக்குக் கைவிளக்காக அமைந்தன. மிகத் தீவிரம் என்ற படிநிலையிலிருந்து தீவிரப் புயல் என்ற படிநிலைக்குப் நிவர் பலவீனமடைந்தது. புயலின் வீச்சும் போக்கும் துல்லியமாகக் கணிக்கப்பட்டது.
வெளியூர்ப் பேருந்துகளும் ரயில்களும் நிறுத்தப்பட்டன. தேசியப் பேரிடர் மீட்புப் படையின் ஆறு அணிகள் கடலூரிலும் இரண்டு அணிகள் சென்னையிலும் நிலைகொண்டன. சென்னை மாநகராட்சி, பல்வேறு ஊராட்சிகள், வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நல்வாழ்வுத் துறை, மின்வாரியம், வடிகால் வாரியம் முதலான அரசு இயந்திரத்தின் பல்வேறு கரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
புயலின் விளைவாகப் பெய்த பெருமழையால் அதிக பாதிப்புகள் உண்டாகின. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது. இயற்கை இந்த முறை உக்கிரத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டிருந்தது. 2015-ல் பொழிந்த உச்சபட்ச ஒரு நாள் மழையளவு 475 மி.மீ. (2.12.2015). இந்த முறை அது 132 மி.மீ. (26.11.2020). 2015-ல் 86%-ஆக இருந்த ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 93%ஆக உயர்ந்தது; வினாடிக்கு 29,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. விளைவை நாடறியும். இந்த முறை நீர்மட்டம் சீராக உயர்ந்தது. அது 84%ஐ எட்டியபோதே வெளியேற்றமும் தொடங்கியது. திறந்துவிடப்பட்ட நீர் வினாடிக்கு 7,050 கன அடி. அடையாற்றின் கரையோரம் வசித்தவர்களும் இன்ன பிற பாதுகாப்புக் குறைவான இடங்களில் வசித்தவர்களுமாக சுமார் 2.3 லட்சம் மக்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். புயலில் சரிந்த மரங்கள் விரைவாக அகற்றப்பட்டன. நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
சாலையில் தேங்கிய நீர்
அதே வேளையில், புயல் கரையேறி இரண்டு நாட்களுக்குப் பின்னும் வேளச்சேரி, சூளைமேடு, அடையாறு, வடபழனி, கே.கே.நகர், அரும்பாக்கம், கொளத்தூர் முதலான பகுதிகளில் உள்ள பலசாலைகளில் தேங்கிய நீர் வடியவில்லை. அதிகம்பாதிக்கப்பட்டவை செம்பரம்பாக்கத்தின் தென்புறமும் தாம்பரம்-பெரும்புதூர் சாலையை ஒட்டியும் அமைந்துள்ள முடிச்சூர், வரதராஜபுரம் முதலான புறநகர்க் குடியிருப்புப் பகுதிகள். இங்கு சாலைகளைக் கடந்து வீடுகளிலும் புகுந்தது வெள்ளம்.
இதை எப்படி மட்டுப்படுத்துவது? சென்னை மழைநீர் வடிகால்களின் நீளம் சுமார் 2,000 கிமீ. இது நகரிலுள்ள சாலைகளின் செம்பாதி நீளத்தைவிடக் குறைவுதான். மேலும், கட்டப்பட்டிருக்கும் எல்லா வடிகால்களும் பிரதான வாய்க்கால்களுடனோ ஆற்றுடனோ இணைக்கப்படவில்லை.
மழைநீர் வடிகால் வடிவமைப்பாளர்கள், ஒரு நகரில் பெய்கிற மழையின் அளவை வைத்துப் பத்தாண்டு மழை, ஐம்பதாண்டு மழை, நூறாண்டு மழை என்று மதிப்பிடுவார்கள். ஐம்பதாண்டு மழை என்பது ஒரு நகரில் ஐம்பது ஆண்டுகளில் பெய்வதற்குச் சாத்தியமுள்ள அதிகபட்ச மழை. ஐம்பதாண்டு மழை என்பது ஐம்பதாண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும் என்பதில்லை. அதனினும் குறைந்த இடைவெளியிலும் வரக்கூடும். ஒரு நகரின் மழைநீர் வடிகால்களை வடிவமைக்கும்போது அது எத்தனையாண்டு மழையைக் கடத்த வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக ஹாங்காங் நகரின் சாலையோர வடிகால்கள் ஐம்பதாண்டு மழைக்காக வடிவமைக்கப்பட்டவை. அதாவது ஹாங்காங்கில் உள்ள ஒரு சாலையோர வடிகால், அதற்கு நீர் வரத்தைக் கொண்டுவரக்கூடிய பரப்பெங்கும் ஐம்பதாண்டுகளில் பெய்வதற்குச் சாத்தியமுள்ள அதிகபட்ச மழை பெய்யும்போது சேகரமாகும் அனைத்து நீரையும் கடத்திவிடும். அதற்கும் அதிகமான மழை பொழிந்தால் அப்போது சாலையில் நீர் தேங்கவே செய்யும். அதுவும் சில மணி நேரங்களில் வடிந்துவிடும். ஏனெனில், ஹாங்காங்கின் பிரதான வாய்க்கால்கள் இருநூறாண்டு வெள்ளத்தைக் கடத்திவிடக்கூடியவை.
ஒருங்கிணைந்த வடிகால் திட்டம்
சென்னையில் நகரம் முழுமைக்குமான ஓர் ஒருங்கிணைந்த வடிகால் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள வடிகால்கள், ஒருங்கிணைந்த வடிவமைப்பின்படி தேவைப்படும் இடங்களில் பெரிதாக்கப்படவேண்டும். வடிகால்கள் இல்லாத இடங்களில் அவை கட்டப்பட வேண்டும். வடிகால்கள் பிரதான வாய்க்கால்களோடும், வாய்க்கால்கள் ஆற்றோடும் இணைக்கப்பட வேண்டும். இரண்டாவதாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் வரத்து வாய்க்கால்களிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். மூன்றாவதாக, மழைநீர் வடிகால்களும் ஏரிகளும் தூர்வாரப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
நான்காவதாக, வெள்ளச் சமவெளிகள் விடுவிக்கப்பட வேண்டும். வெள்ளச் சமவெளி என்பது நீர் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் ஆறு தன் கரைகளைத் தாண்டியும் ஓடுகிற வெளி. அடையாறு, கூவம் ஆறுகளில் இப்படியான பகுதிகள் விடுவிக்கப்பட வேண்டும். முடிச்சூர், வரதராஜபுரம் குடியிருப்புகள் வயல்வெளிகளிலும் வெள்ளச் சமவெளிகளிலும் கட்டப்பட்டவை என்கிறார்கள். இங்கேயும் வெள்ளச் சமவெளிகள் விடுவிக்கப்பட வேண்டும். அல்லது பெருமழைக் காலங்களில் இந்தக் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் வராமல், வடிகால் சுரங்கங்களைக் கட்டலாம்; அவை உபரி நீரைப் பிரதான வாய்க்கால்களுக்குக் கடத்திவிடும்.
பேரிடர்களைக் கணிப்பதிலும் எச்சரிப்பதிலும் மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் கணிசமான முன்னேற்றம் இருக்கிறது. அதே போல, பேரிடரை எதிர்கொள்ளத்தக்க மழைநீர் வடிகால்களையும் உருவாக்க வேண்டும்.
உலர்ந்த தமிழர்
பாரதியாரின் ‘மழை’ கவிதையில் சில வரிகள் இவை: ‘‘மழை பெய்கிறது/ ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது/ தமிழ் மக்கள் ஈரத்திலே நிற்கிறார்கள்/ ஈரத்திலே உட்காருகிறார்கள்/ ஈரத்திலேயே நடக்கிறார்கள்/ ஈரத்திலேயே படுக்கிறார்கள்/ ஈரத்திலேயே சமையல்/ ஈரத்திலேயே உணவு/ உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான்."
தமிழர்கள் மழையோடும் அதன் அசௌகரியங்களோடும் சமரசம் செய்துகொண்டு வாழ்கிறார்களே என்கிற ஆதங்கத்தில்தான் பாரதி இவ்விதம் எழுதியிருக்க வேண்டும். பாரதி இப்படி எழுதியும் நூறாண்டுகளாகிவிட்டது. நாம் மழையிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் அவசியமானதாகும். புதிய பகுதிகளில் குடியிருப்புகள் உருவாகும்போது சாலை, மின்சாரம், குடிநீர், கழிவுநீர் முதலியவற்றுடன் மழைநீர் வடிகால்களும் அமைக்கப்பட வேண்டும். அதுவே நல்ல நகரமைப்பின் அடையாளமாக இருக்கும். அங்கே உலர்ந்த தமிழர்கள் வாழ்வார்கள்.
- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago