கடைசியாகப் பங்கேற்ற பொதுநிகழ்ச்சியில் ரஜினி சொன்ன குட்டிக்கதை ஞாபகம் இருக்கிறதா? “நந்த வம்சத்தால் வாரிசே இல்லாமல் அழிக்கப்பட்ட, மௌரிய வம்சத்தில் தப்பிப் பிழைத்த சிறுவன் சந்திரகுப்தன் தலைமறைவாக வாழ்ந்தான். நந்த வம்சத்தால் அவமானப்படுத்தப்பட்டு அவர்களது ஆட்சியை வீழ்த்துவதே லட்சியம் என்று சாணக்கியர் சூளுரைத்திருப்பதை அறிந்து, அவரிடம் போய் உதவி கேட்டான் சந்திரகுப்தன். ‘அரசியல் என்றால் என்ன, ராஜாவாக வேண்டும் என்றால் யாரையெல்லாம் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், யாரையெல்லாம் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், யார் பேச்சைக் கேட்க வேண்டும்’ என்று ஆலோசனை சொன்ன சாணக்கியர், ‘திடீரென நீ மக்கள் முன் தோன்றக் கூடாது. நீ உயிரோடு இருக்கும் தகவலை முதலில் மக்களிடம் பரப்புவோம், பிறகு அவரை அங்கே பார்த்தேன்.. இங்கே பார்த்தேன்.. சும்மா இந்திரன் மாதிரி ஜொலிக்கிறார் என்று பரப்புவோம். ஏனென்றால், செய்திகள்தான் அரசியலுக்கு முக்கியம். மக்கள் உன் வரவை எதிர்பார்க்கிறார்களா என்று தெரிந்துகொண்டு சரியான நேரத்தில் போக வேண்டும்’ என்றார்.
சொன்னபடியே, ‘இதோ சந்திரகுப்தன் வரத் தயாராக இருக்கிறான், உங்கள் முன் தோன்றப்போகிறான், ஆனால் நந்த வம்சத்தினர் அவனைக் கொல்லக் காத்திருக்கிறார்கள். அவன் வர வேண்டும் என்றால் நீங்கள் லட்சக்கணக்கில் திரண்டு பாதுகாக்க வேண்டும். செய்வீர்களா?’ என்று எழுச்சியை ஏற்படுத்திவிட்டு, சந்திரகுப்தனைக் களத்தில் இறக்கினார் சாணக்கியர். அப்படித்தான் நானும். என் அரசியல் பிரவேசத்துக்கு ஒரு புள்ளி வைத்திருக்கிறேன். அது சுழலாக, புயலாக மாறி, சுனாமியாக கரையைக் கடக்கும்போது இந்த ரஜினிகாந்த் களத்துக்கு வருவான்” என்பதே அந்தப் பேச்சின் சாரம். சொன்னபடியே, ரொம்பவே காத்திருந்து சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் குதித்து தன் ரசிகர்களின் 25 வருட எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறார் ரஜினி.
ரஜினிக்கு அரசியலைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றி என்ன தெரியும் என்று பேசுபவர்கள் கொஞ்சம் நிதானமாக யோசிக்க வேண்டும். தமிழ் மக்களின் ரசனை என்ன, எதைச் சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை எந்தத் தயாரிப்பாளரையும்விட நன்கறிந்தவர் ரஜினி. கடந்த 25 ஆண்டுகளாகவே இதற்கான முஸ்தீபுகளையும் அவர் கட்டமைத்துவந்திருக்கிறார்.
ரஜினியின் முஸ்தீபுகள்
1991-ல் ஜெயலலிதாவை வீட்டுக்கே போய் வாழ்த்திவிட்டுவந்தவர், பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நடந்த பாராட்டு விழாவில், ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, “ஃபிலிம் சிட்டிக்கு சிவாஜி சார் பெயரை வைத்து மரியாதை பண்ணாம விட்டுட்டாலும், இப்ப அதைச் சரியா செஞ்சிட்டீங்க” என்று பேசினார் ரஜினி. 1994-ல் உருவான திரைப்பட நகருக்கு ஜெயலலிதா தன்னுடைய பெயரையே சூட்டியிருந்தார் என்ற வரலாறு தெரிந்தவர்களுக்கு, ரஜினியின் பேச்சு எத்தகைய ‘குத்து’ என்பது புரிந்திருக்கும். அடுத்து, ‘பாட்ஷா’ வெற்றி விழாவில் தமிழக அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டே, “தமிழ்நாட்டில் வெடிகுண்டுக் கலாச்சாரம் ஜாஸ்தியாகிவிட்டது. இதற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” என்றார் ரஜினி. விளைவாக, ஆர்.எம்.வீரப்பன் அமைச்சரவையிலிருந்து மட்டுமின்றி, கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.
உச்சகட்டமாக, 1996 தேர்தலில் திமுக, தமாகா கூட்டணியை ஆதரித்து, ஜெயலலிதாவின் படுதோல்விக்குத் தன்னை ஒரு கருவியாக்கினார் ரஜினி. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியோடு இணைந்து மீட்புப் பணியில் இறங்கியது, காவிரிப் பிரச்சினையில் ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகமும் நெய்வேலிக்குப் போக, இவர் மட்டும் தனியாகப் போராட்டம் நடத்தி மற்றவர்களையும் தன் வழிக்கு வரவைத்தது போன்றவையும்கூட ரஜினியின் அரசியல் செயல்பாடே. பாசத் தலைவனுக்கான பாராட்டு விழாவுக்கு நடிகர்களை மிரட்டி அழைக்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அஜித் பேசிவிட, எழுந்து நின்று கை தட்டி அதை வரவேற்றுத் தன்னுடைய துணிச்சலை வெளிப்படுத்தினார் ரஜினி. ஆனாலும்கூட, அந்த இருபெரும் ஆளுமைகள் முன்னால் அரசியலில் குதித்தால் நாம் காணாமல் போய்விடுவோம் என்பதையும் அறிந்து வைத்திருந்தவர்.
எல்லாம் சரி. ‘1996-ல் கட்சி ஆரம்பித்திருந்தால் கிடைத்திருக்கும் ஆதரவு, 2021ல் கிடைக்குமா?’ என்ற கேள்வியும் இருக்கிறது. ரஜினி ரசிகர்களில் பலர் வாக்குச் சந்தையில் மதிப்பு மிக்கவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஒரு உத்தேசக் கணக்காக வெறித்தனமாக முதல் நாளில் ரஜினியின் படத்தைப் பார்த்துவிடும் தீவிர ரசிகர்களை மட்டும் கணக்கிட்டாலே கணிசமான எண்ணிக்கையை நாம் பார்க்க முடிகிறது. அவரது ‘பேட்ட’ திரைப்படத்தை, தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளே பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் (600 திரையரங்குகளில் தலா 5 காட்சிகள்). இந்த 30 லட்சம் பேரும் தலா ஒருவரை ஓட்டுப் போட வைத்தாலும் பிரச்சாரத்துக்கே போகாமல் 12% வாக்குகளைப் பெற முடியும் என்பது ரஜினியின் கணக்கு. 2006 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு விஜயகாந்த் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 27.64 லட்சம் (8.3%) மட்டுமே என்பது கவனத்துக்குரியது. எனவே, ரஜினியின் அரசியல் வருகையைக் குறைத்து மதிப்பிட முடியாது.
பாஜகவின் ஆளா ரஜினி?
கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவு அரசியல் வெற்றிடத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை. தமிழக முதல்வரையும், துணை முதல்வரையும்கூட ஒரு சாதி, ஒரு வட்டாரத்தின் பிரதிநிதியாகப் பார்க்கிற போக்கு இருக்கிறது. மு.க.ஸ்டாலின் அந்த வரையறைக்குள் வர மாட்டார் என்றாலும், கருணாநிதி அளவுக்கு இன்னும் அவர் உயர்ந்துவிடவில்லை. இந்த இடத்தில் ரஜினிகாந்த் கவர்ச்சிமிக்க தலைவராகப் பரிணமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவர் மீது சாதி, மத, இனரீதியான முத்திரைகளைக் குத்த முடியாது. இந்தக் கருத்தை முதலில் சொன்னது யார் தெரியுமா? தொல்.திருமாவளவன் (2017).
தமிழ்நாட்டில் இப்போது யார் கட்சி தொடங்கினாலும் அவரை பாஜகவின் ‘பி டீம்’ என்றுதான் சொல்வார்கள். இதில் ஆன்மிக அரசியல் பேசும் ரஜினி தப்பிவிட முடியாதுதான். ஆனால், எக்காரணம் கொண்டும் பாஜகவுடன் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அவர். “சாதி, மதம் சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் மன்ற உறுப்பினராகவே சேர முடியாது” என்பது அவரது மக்கள் மன்ற சட்ட திட்டங்களில் ஒன்று. இதைக் கொண்டு ரஜினி நேரடியாக பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று ஊகிக்க முடியும். 1996 தேர்தலில் முதலில் அவர் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கவே முயன்றார். ஆக, திமுக கூட்டணியில் இடம் கிடைக்காத சிறு கட்சிகளும், திமுக, அதிமுகவில் சீட்டும், மரியாதையும் கிடைக்காத பிரபலங்களும்தான் ரஜினியின் இலக்கு. ஏன், ஓ.பன்னீர்செல்வமும் மு.க.அழகிரியும் அவருடைய மனக்கணக்கில் இருக்கலாம். தமிழகத் தேர்தல் களத்தில் பாஜகவால் எதையும் சாதிக்க முடியவில்லைதான். ஆனால் திமுக, அதிமுகவுக்கு அது ஏற்படுத்தியிருக்கும் சேதாரம் கொஞ்சநஞ்சமல்ல. அதுபோலவே, ரஜினியின் அரசியல் வருகை திமுக, அதிமுக இரு கட்சிகளின் செல்வாக்குக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
ரஜினி மக்கள் மன்றத்தை 2018 ஜனவரி 1 அன்று தொடங்கினார் ரஜினி. கூடவே, மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும், இளைஞரணி, மகளிரணி உட்பட 9 சார்பு அணி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டார்கள். அடுத்து ஒவ்வொரு கிளைக்கும் 20 பேர் கொண்ட பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டார்கள். ஒருபக்கம் போருக்குத் தயாராகச் சொன்ன ரஜினி, கூடவே மக்கள் மன்றத்தினர் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய 35 பக்கக் கையேட்டையும் கொடுத்தார். கூடவே, விதிமுறைகளை மீறியதாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரை ஜெயலலிதா பாணியில் தடாலடியாக நீக்கினார் ரஜினி. ஒவ்வொரு ஊரிலும் நிறைய கோஷ்டிகள் இருக்கின்றன. ஆனாலும், ரஜினி என்கிற பெயர் எல்லா ஓட்டைகளையும் அடைக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்களே இருக்கின்றன. எப்படியும் மாற்றத்தை எதிர்நோக்கும் ஒரு ஆவல் கணிசமான மக்களிடம் இருக்கின்றன. எனவேதான், யார் கட்சி தொடங்கினாலும் 8 – 10% வாக்கு வாங்குகிறார்கள். ‘ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். மோசமான உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காகக் களம் காண்கிறேன்’ என்கிற ரஜினியின் வசனம் கண்டிப்பாக எடுபடும் என்று நம்புகிறார்கள் ரசிகர்கள். எப்படி விஜயகாந்த் கட்சி தொடங்கியதும், மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் வந்தாரோ, பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ நடத்தியபோது பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வந்தார்களோ, அப்படி ரஜினியும் கட்சி தொடங்கிய மறுநாளே ஆட்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் மன்ற நிர்வாகிகளிடம் இருக்கிறது. “தலைவரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்; களத்தில் பாருங்கள் வேலையை” என்று சொல்கிறார்கள்.
பார்க்கலாம். ரஜினி இன்னொரு எம்ஜிஆரா அல்லது சிவாஜியா என்று!
- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago