தனித்துவம் மிக்க கலை ஆளுமையோடு நவீனக் கலையைத் தமிழகத்தில் கட்டமைத்த மூன்று ஆதர்ச சக்திகள்: தேவி பிரசாத் ராய் சௌத்ரி, கே.சி.எஸ்.பணிக்கர், எஸ்.தனபால். இந்த மூன்று முன்னோடி மேதைகளிடமும் ஒருசேரப் பயின்று வெளிப்பட்ட மிக முக்கியமான படைப்பாளி எல்.முனுசாமி. அவர் தம் கோடுகளிலும் வண்ணங்களிலும் தொடர்ந்து சற்றும் அயராது பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றுக்கு ஒரு மாயத்தன்மையை அளித்தவர். இவருடைய நவீனப் புனைவுகள் கவித்துவப் பேரழகுடன் முற்றிலும் தன்வயமான உள்ளார்ந்த தகிப்புகளை வெகு உக்கிரத்துடன் வெளிப்படுத்தின.
1927-ல் சென்னையில் நகை வேலைசெய்யும் குடும்பத்தில் முனுசாமி பிறந்தார். தலைமுறை தலைமுறையாகக் கைவினைஞர்களாக வாழ்ந்த குடும்பப் பாரம்பரியம் இவருடையது. சென்னை கலை மற்றும் கைவினைப் பள்ளியில் சேர்வது என்பது சிறு வயது முதலே இவருடைய கனவாக இருந்துவந்தது. எனினும், குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இளம் வயதிலேயே இவர் ஒரு சாதாரண வேலைக்குச் செல்லும்படி ஆனது. அப்போதும் அவர் தொடர்ந்து வரைந்துகொண்டிருந்தார்.
ஓவியத்தை முறையாகக் கற்றுக்கொள்வதற்கு ஒரு பயிற்சியாளரின் தேவையை அப்போது அவர் உணரத் தொடங்கியிருந்தார். அந்தச் சமயத்தில், இயல்பிலேயே இதமும் உத்வேகமும் தரக்கூடிய ஆசானும் படைப்பாளியுமான தனபாலின் அறிமுகம் கிட்டியதுதான் அவர் வாழ்வைத் திசை மாற்றியது. இந்த அறிமுகத்துக்குப் பின் அவருடைய சூழலும் மனவெளியும் ஒளிரத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, 1948-ல் சென்னை கலை மற்றும் கைவினைப் பள்ளியில் மாணவராகச் சேர்ந்தார். “என் வாழ்வின் முதல் ஆசிரியரான தனபால்தான் என்னுள்ளிருந்த கலைஞனை அன்போடு அரவணைத்து வளரச் செய்தவர்” என்கிறார் முனுசாமி. 1953-ல் தன் ஓவியப் படிப்பை முடித்த இவர், 1958-ல் அந்தக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தன்னுடைய உத்வேகமிக்க ஆசிரியர் பணியின் மூலம் பல இளம் கலைஞர்களை உருவாக்கிய அவர், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி சில ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்தார்.
எந்த ஒரு தீர்க்கமான இளம் படைப்பாளியைப் போலவே முனுசாமியும் ஆரம்பக் காலத்தில் யதார்த்தமான புனைவுகளை உருவாக்கினார். அதையடுத்து, சர்வதேசப் படைப்பாளிகளின் புனைவுகளிலிருந்து தாக்கங்கள் பெறத் தொடங்கினார். குறிப்பாக, தோற்றங்களை அல்ல; தோற்றங்களில் உறைந்திருக்கும் சாரத்தை அகப்படுத்துவதே கலை என்ற இம்பிரஸனிஸ்ட்டுகளின் கலை மனோபாவம் அவரை வெகுவாக ஈர்த்தது. தன் உள்முகம் நோக்கித் தன் பார்வையைத் திருப்பினார். அதனூடான தொடர் பயணத்தில் அவருக்கே உரித்தான ஒரு மனப்பதிவை அவருடைய கலை ஏற்றது. இந்தப் பயணத்தின் விரிந்த கோலமாக அரூப ஓவியங்களில் அவர் பயணம் தொடர்ந்தது. அழுத்தமான அகன்ற கோடுகளும், அடர்த்தியான பட்டைத் தீற்றல்களாய் வண்ணங்களும் அமைந்து, உள்முகமான அகவுலகின் உக்கிரம் இவர் படைப்புகளில் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.
அறுபதுகளின் தொடக்கத்தில் இவர் மேற்கொண்ட வெளிப்பாட்டுரீதியான பரிசோதனைகளுக்கு உதாரணமாக மனித உருவத்தை இவர் அணுகிய விதத்தை எடுத்துக்கொள்ளலாம். மனித உருவப் படத்தைப் பொறுத்தவரை, அது ஒருவிதக் கட்டுப்பாட்டை முன்மொழிகிறது. அதன் வரையறை தீர்மானமானது; கோடுகள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வரையறைக்குள் அந்த உருவத்தை வடிவமைக்க வேண்டும். முனுசாமி, மனித உருவத்தை ஒரே சமயத்தில் நிஜமானதாகவும், மாயத்தன்மை கொண்டதாகவும் உருவாக்கும் எண்ணம் கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்டார். இம்பிரஸனிச பாணியை அவர் கைக்கொண்டபோதும், உள்ளும் புறமுமான உடல் வெளியினூடாகக் கூட்டுமெய்மையைக் கட்டமைத்தார். இதன் மூலம் இவருடைய மனித உருவ மாடல்கள், நிர்ணயிக்கப்பட்ட உடல் கட்டமைப்புகளிலிருந்து விடுபட்டனர். இவருடைய சுயமான படைப்பாக்கங்களாக மாடல்கள் உருமாற்றம் கொண்டனர். வெளியீட்டுத்தன்மைகளில் புதிய வெளிச்சம் இவருக்குக் கிடைத்தது. இவ்வாறாக விரிந்து செழித்த பயணம் இவருடையது. அன்று அரூப வெளிப்பாட்டு ஓவியப் படைப்பாக்கங்களில் ஈடுபட்டவர்கள் எல்.முனுசாமியும் எஸ்.முருகேசனுமே.
மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்த எல்.முனுசாமிக்கு சிறு வயதில் அம்மாவின் அரவணைப்பு கிடைக்கவில்லை. பிற்காலத்தில் அவர் மிகவும் நேசித்த மனைவியும் எதிர்பாராமல் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். எல்.முனுசாமியை நிலைகுலையச்செய்த இந்த இழப்புக்குப் பின் ‘பெண்’ என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய ஓவிய வரிசை மிக முக்கியமானது. வாழ்வின் மிகப் பெரிய சக்தியாகப் பெண்ணை அவர் உணர்ந்திருந்தார். இதற்குப் பின்னரே கறுப்பு வண்ணத்தை அவர் தன் ஓவியங்களில் அதிகமும் பயன்படுத்தத் தொடங்கினார். குறுக்கும் நெடுக்குமான, பட்டையான கறுப்புத் தீட்டல்கள் ஆழ்ந்த தொனியுடன் அவர் படைப்புகளில் இடம்பெற்றன. வண்ணமயமான நிலக் காட்சிப் பதிவை உருவாக்கும்போதுகூட கறுப்பு வண்ணம் ஊடாடிச் செல்கிறது. பெண் உருவங்களில் ஊடாடிய இப்பயணத்தின்போதுதான் உருவங்களைக் கடந்த அரூப வெளியை இவர் கண்டறிந்தார்.
தேசியத்தன்மையோடு கூடிய கலை என்பது ஒரு நோக்கமாகவும் செயல்திட்டமாகவும் முன்வைக்கப்பட்ட அக்காலகட்டத்தில், தனதான உலகை நேர்மையோடும் தீவிரத்தோடும் கலை மனோபாவத்தோடும் ஒரு படைப்பாளி சிருஷ்டிக்கும்போது, அது தன்னளவில் அவனுடையதாகவும், அதே சமயம் தேசத்தினுடையதாகவும், அதே கணம் சர்வதேசத்துக்கும் சொந்தமானதாக ஒரு கலைப் படைப்பு விகாசம் பெறும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டவர் முனுசாமி. ‘எனக்கென்று எந்த அடையாளமும் இல்லை. நான் உலகளாவிய மனிதன்; நான் கலைஞன்’ என்ற கர்வம் அவரிடமிருந்தது.
சாந்தமான சுபாவமும், ஒதுங்கியிருக்கும் மனோபாவமும் கொண்டிருந்த முனுசாமி, தன் கொந்தளிப்புகளையும் துக்கங்களையும் சந்தோஷங்களையும் இழப்புகளையும் படைப்பின் வழியாகவே கடந்துகொண்டிருந்தார். முற்றிலும் தன்வயமான உலகில் சதா இயங்கிய படைப்பாளி. தன் ஆயிரக்கணக்கான படைப்புகளோடு மிகத் தனிமையான, தன் கலைக்கு மட்டுமே கடமைப்பட்ட ஒரு வாழ்வை வாழ்ந்துவந்தார்.
நவம்பர் 3 அன்று 93-வது வயதில் காலமானார். நிறை வாழ்வு வாழ்ந்த இப்பெரும் கலைஞனின் மரணம்கூட, இவருடைய சுபாவமான தனிமை வாழ்வின் காரணமாக கலை உலகம் அறியாது போய்விட்டது. ஒரு மாதத்துக்குப் பின், டிசம்பர் 3 அன்று அவருடைய குடும்பத்தார் ‘தி இந்து’ நாளிதழுக்குத் தந்த இரங்கல் தகவலிலிருந்தே மரணச் செய்தியைக் கலை உலகம் அறிந்தது. சர்வதேசத் தரமும் உலகளாவிய கலைப் பார்வையும் கொண்ட பெரும் கலைஞனின் மரணம் அறியப்படாத நிகழ்வாகிவிட்டது. கடும் துயரமான காலமிது.
- சி.மோகன், ‘கமலி’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago