மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சேர்க்க வேண்டும் என்கிற குரல் மாணவர்கள் நலன் சார்ந்து ஒலித்துவருகிறது. இந்தக் கோரிக்கை ஏற்கப்படுமானால், தமிழகப் பொதுப்பள்ளி முறையிலேயே பெரிய மாற்றங்கள் உண்டாகும். இதற்கு அரசு உதவி பெறும் பள்ளிகளின் வரலாறும், அவற்றின் இன்றைய நிலையும் பேசப்பட வேண்டியதாகிறது.
பள்ளிகளின் வரலாறு
ஆங்கிலேயர் வருகைக்கு முன் கல்வி என்பது பெருமளவில் உயர் சாதியினருக்கும், உயர் வர்க்கத்தினருக்குமானதாக இருந்ததை நாம் அறிவோம். விதிவிலக்குகள் உண்டு என்றாலும், கல்வியை இந்தியாவில் ஜனநாயகப்படுத்தியது ஆங்கிலேய ஆட்சிதான். இந்தியாவில் முறையான பள்ளிக் கல்வியைக் கற்பிப்பதற்காக நவீன பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. 1715-ல் சென்னையில் தொடங்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் பள்ளி, 1762-ல் திருச்சியில் தொடங்கப்பட்ட பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, 1819-ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்ட ஸ்காட் கிறிஸ்டியன் பள்ளி ஆகியவற்றை இதற்கான முன்னோடி உதாரணங்களாகச் சொல்லலாம். 1826-ல்தான் சென்னை மாகாண ஆளுநர் சர் தாமஸ் மன்ரோ பொது போதனை வாரியத்தை அமைத்தார். இதுவே பள்ளிக் கல்வித் துறை உருவாகக் காரணமாக அமைந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆங்கிலக் கல்விச் சட்டம் 1835-ன்படி தென்னிந்தியா முழுவதும் சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 1,57,644 மாணவர்கள், 4,023 மாணவிகளுடன் 11,758 பள்ளிகள் செயல்பட்டுவந்தன.
புதிய பள்ளிகளை உருவாக்குவது, ஏற்கெனவே உள்ள பள்ளிகளை வளர்த்தெடுப்பது என்ற இலக்கோடு நடந்த செயல்பாட்டுக்கு 1871-ல் புதிய ஊட்டச்சத்து கிடைத்தது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகள் தொடங்குவதற்கும், அதற்கான மானியத்தை அரசிடமிருந்து பெறுவதற்கும் வழிவகுக்கப்பட்டதுதான் அது. இந்தியாவில் பொதுப் பள்ளிகள் எனும் பார்வை இதற்குப் பின்னரே பரவலானது.
தொடக்கக் காலத்தில் பள்ளிகள் தொடங்கப்பட்டதில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்களிப்பு முக்கியமானது. தொடர்ந்து விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுந்த தேசிய உணர்வின் காரணமாக இந்துக்களும் முஸ்லிம்களும் பள்ளிகளைத் தொடங்கினர். இதேபோல, தத்தமது சமூகங்களின் முன்னேற்றத்துக்காக வெவ்வேறு சமூகங்கள் சார்பில் பள்ளிகள் தொடங்கப்படுவதும் அடுத்த போக்காக உருவெடுத்தது. சிறிய அளவிலான கட்டணங்களைப் பெறுவது அல்லது எளியோருக்குக் கட்டணச் சலுகை வழங்குவது அல்லது கட்டணமே இல்லாமல் இயங்குவது என்று பல முறைகளில் இயங்கிய இத்தகு பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட இன்று அரசுப் பள்ளிகள் சேவையாற்றும் அதே எளியோருக்கே சேவை ஆற்றிவந்தன. இங்கே புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், 1911-ல் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முதன்முறையாக நடைபெற்றபோது நேரடி அரசுப் பள்ளி என்று எதுவுமே இல்லை; அனைத்தும் இப்படியான பள்ளிகளே.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
ஆக, இப்படியான பள்ளிகள்தான் பிற்காலத்தில் நாம் அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று குறிப்பிடும் தொகுப்பில் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. நம் ஆட்சியாளர்கள் இந்தப் பள்ளிகளின் முக்கியத்துவத்தைச் சரியாகவே உணர்ந்திருந்தனர். மக்களுக்குக் கல்வியறிவூட்டும் அரசின் மிக முக்கியக் கடமையைத் தாமாக முன்வந்து வழங்கியதையும், தமது நிலத்தையும் உடைமைகளையும் பொதுக் கல்விக்காக அர்ப்பணித்ததையும் அங்கீகரிக்கும் விதமாகவே அரசு நிதி உதவி வழங்கும் அடிப்படை உருவானது. அதனாலேயே இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட நிதியுதவியை வழங்கிய அரசு, அங்கு பயிலும் மாணவர்களையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையாக நடத்தியது. அரசு அளிக்கும் மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், உதவித்தொகை என அத்தனை சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கப்பட்டுவருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசுப் பள்ளிகள் 37,431. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகள் 3,054. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 3,054. அவற்றில் மேல்நிலைப் பள்ளிகள் 1,218. அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அவற்றில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளிலேயே படிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் 7.5% இடஒதுக்கீடானது அரசுப் பள்ளிகளோடு நிறுத்தப்பட்டுவிடக் கூடாது; அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்திவருவது மிக்க நியாயமானது. ஆனால், இந்தக் கோரிக்கைக்கு மாணவர்கள் நலன் தாண்டி பள்ளிகள் மேம்பாடு சார்ந்தும் ஒரு நியாயம் கற்பிக்கலாம்.
காலத் தேய்மானம்
தமிழ்நாடு முழுவதுமே அரசுப் பள்ளிகளைப் போலவே கடந்த காலங்களை ஒப்பிட அரசு உதவி பெறும் பள்ளிகளும் தங்களுடைய பழைய செல்வாக்கை இழந்திருக்கின்றன; தனியார் பள்ளிகள் மீதான மோகம் என்பது பெற்றோர்கள் மீது இந்தப் பள்ளிகள் சொல்லும் காரணம் என்றால், கல்வித் தரம் குறைந்துவருகிறது என்பது இந்தப் பள்ளிகள் மீது பெற்றோர்கள் சொல்லும் காரணமாக இருக்கிறது.
மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சமூகத்தின் செல்வாக்கு மிக்கவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்துவிடும்போது, அரசுப் பள்ளிகளைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளும் எளிய குடும்பத்தார் குழந்தைகளே அதிகம் படிக்கும் பள்ளிகள் ஆகிவிடுகின்றன. விளைவாக, பள்ளிகளோ ஆசிரியர்களோ தங்கள் செயல்பாட்டில் சறுக்கும்போது அவர்களோடு பேசுவதற்கான இடத்தில் செல்வாக்கு மிக்க பெற்றோர்கள் இருப்பதில்லை. மேலும், படிப்பில் முன்னிலையில் இருக்கும் மாணவர்களைத் தனியார் பள்ளிகள் ஈர்த்துவிடுவதால், அரசுப் பள்ளிகளைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பெருமளவில் அடுத்தடுத்த நிலை மாணவர்களே அதிகம் இருக்கின்றனர். பல தரப்பு மாணவர்களும் கலந்து பயிலும்போது ஏற்படும் கூட்டு முன்னேற்றத்தில் இது பெரிய சறுக்கல் ஆகிவிடுகிறது.
இத்தகு சூழலில் புதிதாக தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் ‘7.5% இடஒதுக்கீடு’ மாணவர்களுக்கு மட்டும் அல்லாது, தமிழக அரசுப் பள்ளிகளின் போக்கிலும் ஒரு மாற்றத்தை உருவாக்கும். அடுத்து வரும் ஆண்டுகளில் செல்வாக்குள்ள பெற்றோரும், படிப்பில் முன்னிலையில் உள்ள மாணவர்களும் அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்ப இந்த இடஒதுக்கீடு ஓர் ஈர்ப்பு மையமாக அமையும். அப்படி அமையும்போது பள்ளி நிர்வாகங்களும் ஆசிரியர்களும் கூடுதல் பொறுப்புணர்வுடன் பணியாற்றும் சூழல் உருவாகும். விளைவாக, அரசுப் பள்ளிகள் தம்முடைய கடந்த பொற்காலத்துக்குத் திரும்பலாம். இப்படியான சூழல் மாற்றம் வெறுமனே அரசுப் பள்ளிகளோடு நின்றுவிடக் கூடாது; அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கும் இந்த 7.5% இடஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் அரசு இணைக்க வேண்டும். கூடவே, இனி வரும் எந்த விஷயத்திலும் அரசுப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இடையே பாகுபாடு ஏதும் நிலவாமல் பார்த்துக்கொள்வதையும், தொடர்ந்தும் அரசின் எல்லா உயர்கல்வி நிறுவனங்களிலுமே அரசு - அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குக் குறிப்பிடத்தக்க இடஒதுக்கீடு வழங்கும் போக்கைத் தொடர்வதையும் தமிழக அரசு முன்னெடுக்குமானால், அது பொதுப் பள்ளிமுறையில் வியத்தகு மாற்றத்தை உண்டாக்கும்.
- எஸ்.அன்பரசு, பள்ளி ஆசிரியர்.
தொடர்புக்கு: anbuhereforu@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago