நேருவின் குடும்பத்தை நிலைகுலையச் செய்யும் துயரம் நிகழ்ந்திருக்கிறது. சோனியா காந்தி, ‘ஈடுசெய்ய முடியாத இழப்பு’ என்று அகமது படேலின் இழப்பைக் குறிப்பிட்டார். அவர் மட்டும் இல்லை, காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலானோர் அப்படிக் குறிப்பிட்டார்கள். இந்தச் சொற்களுக்கு எல்லா வகையிலும் நியாயம் சேர்க்கக் கூடியவர்தான் கட்சியினரால் ‘ஏபி’ என்றழைக்கப்பட்ட அகமது படேல். காங்கிரஸின் முதல் குடும்பத்துக்குத் தனிப்பட்டரீதியிலும், கட்சியின் தலைமைக்கு அலுவல்ரீதியிலும் எல்லாமுமாக இருந்தவர் அகமது படேல். மூத்த பத்திரிகையாளர் ஹரீஸ் கரே குறிப்பிட்டிருப்பதுபோல, அகமது படேலோடு சோனியா காந்தியின் யுகம் கட்சியில் முடிவுக்கு வருகிறது என்று சொல்வதற்கு எல்லா முகாந்திரங்களும் இருக்கின்றன.
காங்கிரஸில் ஒரு சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் என்ற இடத்திலிருந்து நிழல் பிரதமர் என்ற இடம் வரை நகர்ந்தவர் அகமது படேல். பலர் முதல்வர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவும், அமைச்சர்கள் ஆக்கப்படவும் அவர் காரணமாக இருந்திருக்கிறார். இரு தசாப்தங்களில் காங்கிரஸின் எல்லா சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியலிலும் அவருடைய கைங்கர்யம் இருந்தது. அமைச்சர் பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் பதவி வரை அவர் விரும்பினால் எட்டிவிடக் கூடிய தொலைவிலேயே இருந்தன. மறையும் வரை சோனியா, ராகுலுக்கு அடுத்தபடியாகக் கட்சியில் அதிகாரம் மிக்கவர் அவரே. மூன்று முறை மக்களவைக்கும், ஐந்து முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றாலும், அமைச்சர் பதவியைக்கூட ஏற்றவர் இல்லை. எந்த இடத்திலும் தன்னை மையப்படுத்திக்கொள்வதையோ, தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொள்வதையோ, தனக்கென்று குடும்ப வாரிசுகளை உருவாக்குவதையோ செய்யாதவர் அகமது படேல்.
பரூச் டூ டெல்லி
1976-ல் குஜராத்தின் பரூச் உள்ளாட்சித் தேர்தல் பணியிலிருந்து தொடங்கியது அகமது படேலின் அரசியல் வாழ்வு. படிப்படியாக மேலேறி வந்தார். இந்திரா குஜராத்தில் காங்கிரஸின் இளம் நடசத்திரங்களில் ஒருவராக அவரை மதித்தார். 1985-ல் பிரதமர் ராஜீவ் கட்சியின் நாடாளுமன்றச் செயலராக நியமித்த பிறகு டெல்லி அரசியலின் குறிப்பிடத்தக்க முகங்களில் ஒன்றானார் அகமது படேல். ஆனால், ‘நேரு குடும்பத்தின் விசுவாசமிக்க தொண்டர்’ என்றே தன்னுடைய அடையாளத்தை அவர் அமைத்துக்கொண்டார். எல்லோரையும் சந்திப்பார், எல்லோருக்கும் காது கொடுப்பார் என்றாலும், அகமது படேலின் வாயிலிருந்து எந்த விஷயத்தையும் வாங்குவது கடினம். பத்திரிகையாளர்களையே பேசவிட்டு விஷயங்களைச் சேகரிக்கக் கூடியவர் அவர்.
ராஜீவ் மரணத்துக்குப் பிறகு, அரசியலிலிருந்து முற்றிலுமாகத் தன்னுடைய குடும்பத்தை விலக்கி வைத்துக்கொண்டிருந்த சோனியா, அதே சமயத்தில் தன்னைச் சுற்றிலும் நடந்துகொண்டிருக்கும் விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டிய சூழலிலும் இருந்தார். குழந்தைகள் பெரியவர்கள் அல்ல. பிரதமர் ராவுக்கும் அவருக்குமான உறவும் சுமுகமாக இல்லை. ராவ் அரசு சோனியாவை வேவு பார்த்துவந்ததை டெல்லி பத்திரிகைகள் எழுதிய காலம் இது. கட்சியில் ராவுக்கு எதிரான தலைவர்கள் சோனியாவைச் சந்தித்து, அவரை அரசியலுக்குள் இழுக்க முயன்றுகொண்டிருந்தனர்; அவர் பிடிகொடுக்க மறுத்தபோது அவரைப் பற்றி மோசமான செய்திகளைப் பரப்பினர். இப்படிப்பட்ட சூழலில் அகமது படேல் மிகுந்த நம்பகமான ஒரு குடும்ப நண்பராக அவருக்கு இருந்தார்.
ராஜீவ் குடும்பத்தின் தினசரி நிர்வாகத்தையும்கூட சமயங்களில் நிர்வகிப்பவராக இருந்தார் அகமது படேல். ராகுலும் பிரியங்காவும் படித்த இடங்களுக்குச் சென்று அவரே பார்த்துவந்தார். சோனியா குடும்பத்துக்குக் கொடுத்துவந்த முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த அவர், ராவுக்கும் சோனியாவுக்கும் இடையில் உறவு மோசம் அடையாமல் தடுப்பவராகவும் இருந்தார். 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது ராவுக்குப் பெரும் சவாலாகக் கட்சியில் உருவெடுத்தது. அர்ஜூன் சிங், நட்வர் சிங், எம்.எல்.படேதார், ஷிவ் ஷங்கர், ஷீலா தீக்ஷித் என்று ராவுக்கு எதிரான பலரும் ராவைக் கீழே இறக்க ஒன்றிணைந்தனர்.
ஒரு இஸ்லாமியரான அகமது படேலை பாபர் மசூதி இடிப்பு கடும் கொந்தளிப்பில் தள்ளும்; அவர் மனது வைத்தால் சோனியாவை அரசியலுக்குள் இழுத்து பிரதமர் ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தோடு அவரை அணுகினர். நாடு ஏற்கெனவே மதவாத சக்திகளால் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பிரிவினை நடந்தால் அதைவிடவும் மோசம் ஏதும் இல்லை என்று சொன்ன அகமது படேல் அந்த முயற்சிகளுக்கு எதிராக நின்றார். மேலும், சோனியா இந்த எதிர்ப் பணியில் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.
கட்சியின் பாதுகாவலர்
1996 தோல்விக்குப் பின் ராவும், அடுத்துவந்த சீதாராம் கேசரியும் எடுத்த அடுத்தடுத்த முடிவுகள் காங்கிரஸைப் பெரும் குழிக்குள் தள்ளின. சோனியா அப்போது தலைவர் பொறுப்பேற்காதிருந்தால் கட்சியைக் காப்பாற்றிட முடியாது என்ற சூழல் உருவானபோது சோனியா அரசியல் களம் நோக்கி வர உற்ற துணையாக இருந்தவரும் அகமது படேல்தான். 1998-க்குப் பின் சோனியாவின் அரசியல் வியூகங்களை வகுத்துவந்தவர் அவரே. 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது பிரதமர் மன்மோகன் சிங் – காங்கிரஸ் தலைவர் சோனியா இருவருக்கும் இடையில் கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையிலான பாலமாகச் செயல்பட்டதோடு, அரசுக்குக் கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் வரும் சவால்களை எதிர்கொள்பவராகவும் அகமது படேல் இருந்திருக்கிறார்.
மன்மோகன் சிங் ஆட்சியில் சில காலம் அவருடைய செய்தித் தொடர்பாளராகவும் ஊடக ஆலோசகராகவும் பணியாற்றிய சஞ்சய பாரு எழுதிய ‘தற்செயல் பிரதமர்’ என்ற நூல், அகமது படேலின் முக்கியத்துவத்தையும் பேசுகிறது. காங்கிரஸின் பிரதான குழுவானது வாரம் ஒரு முறை அந்தக் காலகட்டத்தில் கலந்தாலோசிப்பது வழக்கமாக இருந்தது. ஐவர் அடங்கிய அந்தக் குழுவில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, அர்ஜுன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் அகமது படேலும் இடம்பெற்றிருந்தார். கூட்டங்களில் பேசப்படும் விஷயங்களைத் தவிர்த்து சோனியா தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பும் செய்திகள் தொலைபேசி வழியாகவோ அல்லது அகமது படேலின் வழியாகவோ மட்டுமே பிரதமரைச் சென்றடைந்தன என்கிறார் சஞ்சய பாரு. பிரதமர் கையெழுத்திட்டு இறுதிசெய்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பவிருந்த அமைச்சரவைப் பட்டியலில் வெண்ணிற மையைப் பயன்படுத்தித் திருத்தும் அளவுக்கு அதிகாரமும் இணக்கமான உறவும் அவரிடம் இருந்தது. ஆனால், எல்லோரிடத்திலும் பணிவே அவருடைய அடையாளமாக இருந்தது.
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் விளைவாக அரசுக்கு ஆதரவு தந்துகொண்டிருந்த இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொள்ளும்போது முலாயம் சிங்குடன் பேசுபவராக அவர் இருந்தார்; நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் பாஜக திணறடிக்கும்போது அந்தச் சவாலை சமாளிக்க ஜேட்லியுடன் பேசுபவராகவும் அவர் இருந்தார்; காங்கிரஸில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்டு மன வருத்தத்தோடு திரும்புபவரைத் தேற்றி அவருக்குத் தக்க சமயத்தில் வேறு ஒரு வாய்ப்பையும் வழங்குபவராக்கவும் அவரே இருந்தார். எல்லோருமே அவருடைய நட்பார்ந்த அணுகுமுறையை மதித்தனர்.
அடுத்த தலைவர் யார்?
டெல்லி அரசியலின் வழக்கமான அணுகுமுறை மோடி-ஷா வருகைக்குப் பின் மாறியபோது காங்கிரஸின் அணுகுமுறையையும் அதற்கேற்றபடி மாற்றினார் அகமது படேல். எலியும் பூனையுமான லாலுவையும் நிதீஷையும் முந்தைய பிஹார் தேர்தலில் காங்கிரஸ் ஒரு கூட்டணிக்குள் கொண்டுவந்ததிலும், மஹாராஷ்டிரத்தில் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக சிவசேனாவுடன் காங்கிரஸ் உருவாக்கிக்கொண்ட கூட்டணியையும் சில உதாரணங்களாகச் சொல்லலாம். அகமது படேலை வீழ்த்துவது சோனியாவை வீழ்த்துவதற்கு சமம் என்பதை உணர்ந்திருந்தது பாஜக. அதனாலேயே குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்க வியூகம் அமைத்தது. சோனியா ஒரு படையையே குஜராத்துக்கு அனுப்பிவைத்தார். நள்ளிரவில் பெரும் பரபரப்பிடையே அகமது படேல் வென்றதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.
ராகுல் தலைவராகப் பதவியேற்றதும் கட்சிக்குள் உருவெடுத்த ‘மூத்தோர் - இளையோர்’ தலைமுறைப் பிரச்சினையின் மையமாகவும் பேசப்பட்டார் அகமது படேல். உடல்நலம் குன்றிய சோனியா தன்னை நோக்கிப் புகாருடன் வந்த மூத்த தலைவர்களுடைய பிரச்சினைகளை அகமது படேல் வழியாகவே கேட்டறிந்தார்; அவர் முன்மொழிந்த தீர்வுகளையே பரிந்துரைத்தார். இப்போது அகமது படேல் மறைந்துவிட்ட நிலையில், சோனியா உடல்நலமும் குன்றியிருக்கும் சூழலில் அவர் இனியும் தலைவர் பதவியில் தொடர்வது சிரமம் என்றாகிவிட்டது. காங்கிரஸ் முழுநேரத் தலைவரை உறுதியாகத் தேடுகிறது. ராகுல் பதவியேற்கவோ, முற்றிலுமாக ஒதுங்கவோ நேரம் வந்துவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago